இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பான செய்திகள் – 11.05.2022

எந்த அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை; இந்திய துருப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன என்பதும் பொய்!
எந்தவொரு அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லையெனவும் இந்தியா அதன் துருப்புகளை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி உள்ளிட்ட சிலர் திருகோணமலை துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது.
இலங்கையில் அரசியலமைப்பை நிலைநாட்டும் வகையில் இந்தியா தனது இராணுவத்தை அனுப்ப வேண்டுமென இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய எதிர்ப்பு சக்திகள் மக்களின் ஆத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிப்பதாகவும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் குறித்த விடயங்கள் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தல்கள் வருமாறு,
1. குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது.
இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கின்றது.
2.இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஊகங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றாக மறுக்கின்றது.
இவ்வாறான செய்திகளும் நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா பூரணமாக ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நேற்றைய தினம் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலையில்; நிலைமை சீரானதும் அவர் விரும்பும் இடத்திற்கு செல்லலாம்!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இன்று (11.05.2022) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கமல் குணரத்ன இதனை தெரிவித்தார்.
நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர், தாம் விரும்பும் இடத்திற்கு அவர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் என, கமல் குணரத்ன இதன்போது தெரிவித்தார்.
நாட்டின் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுவது கடமையாகும். மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, இருந்த நிலைமையை கருத்திற் கொண்டு அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தனது இராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் திருகோணமலை கடற்படை முகாமில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்றையதினம் அப்பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற பொருளாதார நிலை, ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்று கூடிய ஶ்ரீ.ல.பொ.பெரமுன கட்சி ஆதரவாளர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததைத் தொடர்ந்து, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் விளைவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திங்களன்று பதவியை இராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இச்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பு வெளியிட்டிருந்தது.
அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தாவிடின் பதவி விலகுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக செயற்படுத்தப்படாவிடின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமரோ, நிதியமைச்சரோ இல்லை, நாடாளுமன்றம் செயற்படாத நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மாத்திரம் உள்ள ஒரு செயலிழந்த நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலையான அரசாங்கமொன்று விரைவில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இது 225 மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் முக்கிய பொறுப்பு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறந்த முறையில் பேணக்கூடிய அரசாங்கமொன்றை நியமிப்பது இன்றியமையாதது என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்தில் இவ்வாறான ஸ்திரமான நிலைமையை ஏற்படுத்த முடியாவிட்டால் நாடு மேலும் சீர்குலையும் என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் 10 மணித்தியாலங்களுக்கு மேலான மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படாவிட்டால் தாம் பதவியில் இருந்து விலகுவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் இன்று (11.05.2022) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்தனர்.
மே மாதம் 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மே மாதம் 9 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என பொலிஸார் அறிவித்தனர்.
அவ்வாறு பொதுமக்கள் ஒன்றுகூடுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியை தவிர, வீதிகள், ரயில் பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் தங்குவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.