இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!
-மாவலியான்
1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தையும் ஊடகங்களில் ஒப்பிட்டு எழுதும் விபரீதமொன்று நிகழ்ந்து வருகின்றது. அன்று ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராகவே ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இன்றோ, ஏகாதிபத்திய சக்திகள் இலங்கையைத் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவே இளைஞர்களைத் தூண்டி விட்டிருக்கின்றனர். அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இலங்கையில் ஆட்சியிலமர்வதற்காக தற்போதைய போராட்டத்தை ஆதரிக்கின்றனர். இந்த உண்மையைத் தெரியாமல் இரண்டு போராட்டங்களையும் பலர் ஒப்பிட்டு வருகின்றனர்.
1953 ஆம் ஆண்டு ஹர்த்தால் பற்றிய பூரண விளக்கத்தினை அறிந்து கொள்வதற்காக, ‘வானவில்’ இதழ் 104 இல் வெளிவந்த இக்ககட்டுரையை பிரசுரம் செய்கின்றோம்.
இலங்கை 1948 பெப்ருவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கையின் முதலாளித்துவ சுதேச ஆட்சியாளர்களுக்கு எதிராக காலத்துக்குக் காலம் பல மக்கள் போராட்டங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.
அத்தகைய போராட்டங்களில் மிகப் பெரியதும், இலங்கையின் வரலாற்றில் தீர்க்கமான தாக்கத்தை விளைவித்ததுமான போராட்டம் என்றால், அது 1953 ஓகஸ்ட் 12ஆம் திகதி நடைபெற்ற மாபெரும் ஹர்த்தால் போராட்டமே.
இந்தப் போராட்டம் நடைபெற்ற நேரத்தில் இலங்கையின் ஆட்சிபீடத்தில் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு வீற்றிருந்தது. அந்த அரசில் பிற்காலத்தில் (1977 – 1990) இலங்கையின் அரைச் சர்வாதிகாரியாக கோலோச்சிய அமெரிக்க விசுவாசியும், கடைந்தெடுத்த வலதுசாரிப் பிற்கோக்குவாதியுமான ‘குள்ளநரி’ ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிதியமைச்சராகப் பதவி வகித்தார்.
அன்றைய காலகட்டத்தில் உலக முதலாளித்துவ அமைப்பு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க. ஆட்சிக்கும் ‘சீக்கு’ பிடித்துக் கொண்டது.
தனது அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை வேறு வழிகளில் தீர்ப்பதற்கு வழிதேட விரும்பாத நிதியமைச்சர் ஜே.ஆர்., பொதுமக்களின் மேல் பாரத்தைச் சுமத்துவதன் மூலம் தமது அரசைக் காப்பாற்ற எத்தனித்தார்.
அதன்படி, அதுவரையில் மானிய விலையில் பொதுமக்களுக்கு 25 சதத்துக்கு வழங்கி வந்த அரிசியின் விலையை மும்மடங்காக்கி 75 சதமாக்கினார்.
சீனியின் விலையும் அதிகரிக்கப்பட்டது.
தபால் மற்றும் புகையிரதக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன.
பாடசாலைப் பிள்ளைகளுக்கு மதிய உணவாக வழங்கப்பட்டு வந்த பணிஸ் நிறுத்தப்பட்டது.
இவை தவிர பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல சமூக நலத்திட்டங்களையும் ஐ.தே.க. அரசு நிறுத்தியது.
இதனால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதுடன், அவர்கள் அரசு மீது கடும் கோபம் கொண்டனர்.
இன்று இருப்பது போல அன்றைய காலகட்டத்தில் ஐ.தே.க. போன்ற கட்சிகளுக்கு தொழிற்சங்கள் எவையும் இருக்கவில்லை. அதேநேரத்தில், லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகளிடம் அமைப்பு ரீதியாகத் திரண்ட தொழிலாளி வர்க்கத்தின் பலம் இருந்தது.
எனவே, ஐ.தே.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதென இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்தன. அந்த முடிவின்படி 1953 ஓகஸ்ட் 12ஆம் திகதியை அவர்கள் போராட்ட தினமாக, அரசுக்கு எதிரான ஹர்த்தால் தினமாக, அதாவது பொது வேலைநிறுத்த தினமாக அறிவித்தன.
இந்தப் போராட்டத்துக்காக நாடு முழுவதும் பிரச்சாரத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இடதுசாரிகளால் தலைமைதாங்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், ஐ.தே.கவிலிருந்து விலகி வந்து 1951இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவால் ஆரம்பிக்கப்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்கவில்லை. அதேபோல, தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியும் பங்கேற்கவில்லை.
ஆனாலும், ஹர்த்தாலுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வந்தது. இந்த ஆதரவைக் கண்டு ஒதுங்கி நிற்க விரும்பாத பண்டாரநாயக்க, கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஹர்த்தாலுக்கு ஆதரவாக உரையாற்றினார். அதேபோல, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் கு.வன்னியசிங்கம் பங்குபற்றி உரையாற்றினார். மலையகத்தைப் பொறுத்தவரை எஸ்.தொண்டமான் தலைமையிலிருந்த மிகப்பெரிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஹர்த்தாலில் நேரடியாகப் பங்குபற்றாதபோதும் தனது ஆதரவைத் தெரிவித்தது.
இடதுசாரித் தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று 1953 ஓகஸ்ட் 12ஆம் திகதி நாடு முழுவதும் வெற்றிகரமான பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. அரசாங்க காரியாலயங்கள் எதுவும் இயங்கவில்லை. தொழிலாளர்கள் தமது வேலைத்தலங்களுக்குச் செல்லவில்லை. பஸ் – புகையிரதச் சேவைகள் நடைபெறவில்லை. மாணவர்கள் எவரும் பாடசாலைக்குச் செல்லவில்லை. கடைகள் திறக்கப்படவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்றாலும், தலைநகர் கொழும்பு அமைந்திருக்கும் மேல் மாகாணம், தென் மாகாணம், சப்ரகமுக மாகாணம் என்பனவற்றிலேயே முழு வீச்சுடன் போராட்டம் நடைபெற்றது.
மக்கள் எழுச்சி இவ்வளவு வலுவாக இருக்கும் என எதிர்பார்க்காத அரசாங்கம் செய்வதறியாது திகைத்துப் போனது. ‘இலங்கையில் இடதுசாரிகள் கிளர்ச்சி மூலம் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்’ என்ற சாரப்பட சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
செய்வதறியாது திகைத்த அரசாங்கம் பிற்பகலில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்ததுடன், சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ‘கலகக்காரர்களை’ சுடும் அதிகாரமும் பொலிசாருக்கு வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தை பொலிசார் பயன்படுத்தியதால் அவர்களது துப்பாக்கிச்சூட்டில் சுமார் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதேவேளையில், இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த இடதுசாரித் தலைவர்களும் அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது அறியாது குழம்பிப் போயினர். அதனால் அவர்கள் போராட்டத்தை ஒருநாளுடன் நிறுத்திக் கொண்டனர்.
ஆனாலும் இந்தப் போராட்டத்தின் வீச்சு எவ்வளவுக்கு இருந்ததென்றால், அரசாங்கம் தனது மந்திரிசபைக் கூட்டத்தை வழமையான இடத்தில் நடத்தப் பயந்து கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற HMS Newfoundland என்ற பிரித்தானிய யுத்தக் கப்பலில் நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக நிலைகுலைந்து போயிருந்த பிரதமர் டட்லி சேனநாயக்க இரண்டு மாதங்கள் கழித்து ஒக்ரோபரில் பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். தான் இனி அரசியலில் நீடிக்க விரும்பவில்லை என்றும், பௌத்த துறவியாகப் போகப்போவதாகவும் அறிவித்தார். (ஆனால் பின்னர் மீண்டும் அரசியலுக்கு வந்து 1965 பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமராகவும் பதவி வகித்தார்)
அவரது இடத்தில் டட்லியின் நெருங்கிய உறவினரான சேர்.ஜோன் கொத்தலாவல பிரதமராகப் பதவி ஏற்றார்.
1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால் போராட்டம் இலங்கையின் இடதுசாரிகளுக்கும், அதேபோல வலதுசாரிகளுக்கும் நிறைந்த படிப்பினைகளை வழங்கியது. குறிப்பாக இடதுசாரிகளுக்கு அது மிகப் பெறுமதியான படிப்பினைகளை வழங்கிச் சென்றது.
அதாவது, இடதுசாரிகளின் மத்தியில் ஏற்பட்டிருந்த பிளவு, புரட்சிகரமான வேலைத்திட்டங்கள் இல்லாமை, தலைமையின் உறுதியற்ற தன்மை போன்ற விடயங்கள்தான் அந்தப் போராட்டம் தோல்வியடையக் காரணமாயிற்று என்பது நிரூபணமானது. இருந்தும் அதன் பின்னரும் இடதுசாரி இயக்கம் பல கூறுகளாகப் பிளவுபட்டே வந்துள்ளது. அதன் தொhடர்ச்சியாகவே இலங்கையில் இன்று இடதுசாரி இயக்கம் மிகவும் பலவீனமாக இருக்கின்றது. அதன் காரணமாகவே அந்த இயக்கம் இன்று முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் செல்ல வேண்டிய நிலையையும் உருவாக்கியுள்ளது.
இந்தப் போராட்டத்தால் உண்மையில் பயனடைந்தது பண்டாரநாயக்க தலைமைதாங்கிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியே. இலங்கை தேசிய முதலாளித்துவத்தின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொடங்கப்பட்ட அக்கட்சி, ஹர்த்தால் போராட்டத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்தி 1956 பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அதன் வெற்றிக்கு கட்சிக்கு தலைமைதாங்கிய பண்டாரநாயக்கவின் நுண்ணறிவும் ஒரு காரணம்.
1953 ஓகஸ்ட் 12 மாபெரும் ஹர்த்தால் போராட்டம் நடைபெற்று 66 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. அந்தப் போராட்டம் எந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக நடத்தப்பட்டதோ, அந்தக் கட்சியே இன்றும் ஆட்சியில் உள்ளது. அதுமட்டுமின்றி, அந்தக் கட்சி 1953இல் இருந்ததைவிட மிகவும் மோசமான நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளது.
அதேநேரத்தில், இலங்கையின் ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கமும், அதன் நேசசக்திகளான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் ஒற்றுமையின்றியும், செயற்பாடுகள் இன்றியும் நலிவடைந்து கிடக்கின்றன.
1953 ஹர்த்தால் போராட்டத்தின்போது இலங்கையின் தொழிலாளி வர்க்கமும், பொதுமக்களும் வெளிப்படுத்திய உணர்வுகள் காலத்தால் அழியாதவை. அந்த உணர்வுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதும், பிற்போக்கு சக்திகள் தலைமையிலான சிங்கள – தமிழ் – முஸ்லீம் ஏகாதிபத்திய சார்பு சக்திகளைத் தோற்கடித்து, இலங்கையில் உண்மையான ஒரு முற்போக்கு அரசாங்கத்தை நிறுவுவதுமே நமக்கு முன்னால் உள்ள இன்றைய கடமையாகும்.
–வானவில் இதழ் 104, ஆவணி 2019