புதிய பல்துருவ உலகத்தின் ஒரு துருவமாகிறது ரஷ்யா! – பகுதி 4
–பாஸ்கர் செல்வராஜ்
கொரோனா கால பொருளாதார பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தடுக்க ஆறு ட்ரில்லியன் (trillion) டொலரை வெளியிட்டு அமெரிக்கா அதைச் சமாளித்தாலும் அதனால் உருவான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வட்டி விகிதத்தை வேகமாக அல்லது அதிக அளவு உயர்த்தாமல் இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எரிபொருள் உற்பத்தியைப் பெருக்கி அதை உற்பத்தி செய்யும் நாடுகள் டொலர் கடன் பத்திரங்களின் கையிருப்பை கூட்ட வைக்க அவர்களின் தலைமையான ரஷ்யாவைத் தாக்கி விழவைக்க உக்ரைன் போரைத் தொடங்கியது அமெரிக்கா. அதில் ரஷ்யா வெற்றி பெற்று தனது ஐரோப்பிய எரிபொருள் சந்தையையும் கட்டுக்குள் கொண்டுவந்து இவர்களின் நோக்கத்தில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது.
பொருளாதாரப் போரையும் வென்ற ரஷ்யா!
தோல்வியை ஒப்புக்கொண்டு சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளாமல் இவர்கள் போரை நீட்டித்து இழப்பை அதிகரித்து ரஷ்யாவை பலகீனமாக்கி வெல்லும் உத்தியை கையில் எடுத்திருக்கிறார்கள். உக்ரைன் என்ற நாட்டையே இல்லாமல் செய்து ஒற்றைத்துருவ (Unipolar) டொலர் கட்டமைப்பை உடைக்கும் வேலையைச் செய்து தனது பதிலடியை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது ரஷ்யா. முதல்கட்ட போரில் இராணுவ – நாசிசமயமான உக்ரைனை அதிலிருந்து நீக்கம் செய்து இராணுவ ரீதியாகவும் ஐரோப்பிய சந்தையைத் தக்கவைத்து பொருளாதார ரீதியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ரஷ்யாவின் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு இறக்குமதி அனைத்தையும் ஐரோப்பாவில் தடை செய்யப் போகிறோம் என்றவர்கள், இப்போது நிலக்கரி இறக்குமதியை மட்டும்தான் நிறுத்தி இருக்கிறார்கள். ரஷ்ய எரிபொருள் தடை ஜெர்மனியில் பணவீக்கம், வேலைவாய்ப்பிழப்பு, பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும் எனக் கூறி மற்றவற்றை தடைசெய்ய மறுத்துவிட்டது.
முதலில் புட்டினின் ரூபிள் வர்த்தகப் பரிவர்த்தனை ஆணையை ஏற்க மாட்டோம் என்றார்கள் ஐரோப்பியர்கள். நாங்கள் யாருக்கும் இலவசமாகப் பொருட்களை கொடுப்பதில்லை என ரஷ்யா அறிவித்தது. ஐரோப்பியக் கூட்டமைப்பின் பல நாடுகளும் ஒவ்வொருவராக நாங்கள் ரூபிள் பரிவர்த்தனை செய்ய மாட்டோம் என அறிவித்தார்கள். பின்பு நீங்கள் சந்தையிலோ, எங்களிடமோ ரூபிளை வாங்குவது பொருளாதாரத் தடையை மீறும் செயல் எனக் கருதினால் நீங்கள் எந்த நாணயத்தில் வேண்டுமானாலும் பணத்தை செலுத்துங்கள்; நாங்கள் ரூபிளில் மாற்றிக்கொள்கிறோம்; இரண்டும் ஒன்றுதான். ஆனால், பணம் எங்கள் நாட்டில் இருக்கும் வங்கியில்தான் செலுத்த வேண்டும் எனக் கொஞ்சம் இறங்கி வந்தது ரஷ்யா. அப்படியான பரிவர்த்தனையில் ஈடுபடலாம் என்று இப்போது ஒப்புதல் வழங்கி இருக்கிறது ஐரோப்பிய கூட்டமைப்பு.
போரை நீட்டித்தால் டொலரை உடைப்போம்!
ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் ஏற்கனவே ரூபிள் வர்த்தகத்தில் பரிவர்த்தனை செய்துவிட்டதாக செய்தி வருகிறது. மேலும் பத்து நாடுகள் வங்கிக் கணக்கை திறந்துவிட்டார்களாம். அடம்பிடித்த இத்தாலியும், பல்கேரியாவும் இப்போது வரிசையில்போய் நிற்கப் போவதாகச் சொல்லி விட்டார்கள். எஞ்சியிருக்கும் போலந்தின் வீராப்பும் ஜெர்மனி வழியாக எரிவாயுவை வாங்கப் போவதாக வந்த அறிவிப்பில் பல்லிளிக்கிறது. இதன்மூலம் குறுகிய கால நோக்கமான ஐரோப்பியச் சந்தையை தக்கவைத்துக் கொண்டதோடு நீண்டகால நோக்கமான ஒற்றைத்துருவ டொலர் மேலாதிக்கத்தையும் உடைத்து இருக்கிறது ரஷ்யா. நீண்ட காலத்துக்குப் போரை இழுத்து எங்களின் இழப்பைக் கூட்டினால் இதற்கு உறுதுணையாக நிற்கும் உக்ரைனின் தேசியத்தையும் ரஷ்யாவை உடைக்கத் துடிக்கும் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ டொலர் மேலாதிக்கத்தையும் உடைப்போம் எனச் சொல்லாமல் சொல்கிறது ரஷ்யா.
ரஷ்யாவுடனான உறவை சீனா கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியபோது “புலியின் கழுத்தில் மணி கட்டியவர்கள்தான் அதைக் கழற்ற வேண்டும்” என்றார் சீனாவின் ஜி ஜின்பிங். அதாவது போருக்கு காரணமானவர்கள்தான் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார். ஒருபடி மேலே சென்று மணியைக் கட்டியவர்களின் கையையே கடிக்க ஆரம்பித்திருக்கிறது ரஷ்யக் கரடி. ரூபிள் பரிவர்த்தனைக்கு ஐரோப்பியர்களை ஒப்புக்கொள்ள வைத்ததன் மூலம் அந்த உடைக்க முடியாத ஒற்றைத்துருவ டொலர் பூனைக்கு மணியைக் கட்டி உடையச் செய்து பல்துருவ உலகத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கி வைத்தது மட்டுமல்ல; அதில் தன்னை தவிர்க்க இயலாத ஒரு துருவமாகவும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. ரூபிளின் மதிப்பை தங்கத்துடனும் தன்னிடம் உள்ள எரிபொருள், உலோக சரக்குகளுடன் இணைத்து கடன் பண நிதிய கட்டமைப்பில் இருந்து முந்தைய பொருட்களின் மதிப்பைத் தெரிவிக்கும் சரக்குப் பண நிதிய கட்டமைப்பை நோக்கிய மாற்றத்தை (Debt money to Commodity money) தொடங்கி வைத்திருக்கிறது. பணத்தின் மதிப்பை “சந்தை” தீர்மானிக்கும் முறையை மாற்றி அரசே தீர்மானிக்கும் முறையைக் கொண்டுவந்து நிதி மூலதன கும்பலின் முதுகெலும்பை உடைக்க ஆரம்பித்திருக்கிறது.
அமெரிக்கத் தோல்வி… பங்குச்சந்தை வீழ்ச்சி!
இந்தப் போரில் பல பில்லியன் டொலர் ஆயுதத்தையும், நேட்டோ வீரர்களையும், இடையறாத ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தையும் செய்த அமெரிக்காவுக்குத் தோல்வியை பரிசாகக் கொடுத்திருப்பது மட்டுமல்ல; மென்மேலும் அதிகரித்த பணவீக்கத்தைச் சிறப்புப் பரிசாகக் கொடுத்திருக்கிறது. எந்தப் பணவீக்க பிரச்சினையைத் தீர்க்க போருக்கு சென்றார்களோ, அந்த பிரச்சினை இப்போது பூதாகரமானதாக அவர்களுக்கு மாறியிருக்கிறது. உயர்ந்திருக்கும் எரிபொருள் விலை ரஷ்யாவுக்குச் செல்வ சுரங்கத்தைத் திறந்து விட்டிருக்கிறது. பொறுமையாக வட்டி விகிதத்தை உயர்த்தி தேக்க பணவீக்கத்தைத் தவிர்க்க முயன்ற அமெரிக்கா, வரப்போகும் மத்திய வங்கி கூட்டத்தில் வேகமாக உயர்த்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்தப் போவதாக செய்திகள் வருகின்றன.
அதிகப்படியான பணத்தைச் சந்தையில் கொட்டி அரசின் கடன் பத்திரங்களின் வருமானத்தை இல்லாமல் ஆக்கியதன் விளைவு, அந்தப் பணம் பங்குச் சந்தையில் நுழைந்து நிறுவனங்களின் பங்கு விலைகளை விண்ணை முட்டவைத்து ஒரு குமிழியை உருவாக்கியது; மக்கள் கையில் கொடுத்த பணம் காலியாகி அவர்கள் கடன் அட்டையைத் தேய்க்க ஆரம்பித்துவிட்ட நிலையில் பிரபலமான FAANG (முகநூல், ஆப்பிள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள்) பங்குகள் இதுவரை 30 விழுக்காடு வீழ்ந்திருக்கிறது; அமெரிக்கப் பொருளாதாரம் மந்தத்தை நோக்கிச் செல்லும் நிலையில் இந்த முற்றுருமை நிறுவனங்களின் பங்குகள் மேலும் வீழ்ச்சியடையும்; அது 2000இல் ஏற்பட்ட மந்தத்தின் போதான கடுமையான 80 விழுக்காடு (2000-2002) பங்குச்சந்தை வீழ்ச்சியை ஒத்ததாக இருக்கும் என அமெரிக்காவின் இருண்மையான எதிர்காலத்தை முன்னறிவிக்கிறார், ஏசியா டைம்ஸ் இதழின் ஆசிரியரும் முன்னாள் வங்கியாளரும் குடியரசுக் கட்சி ஆதரவாளருமான டேவிட் பி கோல்டுமேன்.
தயாராகும் சீனா!
கடந்த ஒரு நூற்றாண்டு காணாத மாற்றமாக இதை வர்ணிக்கும் சீனர்கள் ரஷ்யாவின் நகர்வுகளையும் அமெரிக்காவின் எதிர்வினைகளையும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கவனித்து வருகிறார்கள். இந்தப் போரை டொலருக்கும் யூரோவுக்கும் இடையிலானதாகப் பார்க்கிறார் சீனாவின் நகரமய திட்டக்குழு துணைத்தலைவர் சாவ் யான்ஜிங். ஸ்விப்டின் (SWIFT) ஜனவரி புள்ளிவிவரப்படி உலக கொடுப்பனவுத் தீர்வையில் டொலரின் பங்கு 39.92 விழுக்காடு யூரோவின் (EURO) பங்கு 36.56 விழுக்காடு; மங்கிக்கொண்டிருக்கும் டொலருக்கு உண்மையான மாற்று சீனாவின் யுவானல்ல (YUAN) யூரோதான்; இதில் உக்ரைன் பலியாடு; போரின் நோக்கம் ஒரு கல்லில் யூரோ, ரஷ்யா ஆகிய இரு பறவைகளையும் வீழ்த்துவது என அவதானிக்கிறார் அவர். இதில் அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கு மாறாக ரூபிள் சந்தையிடம் இருந்து விடுவித்துக்கொண்டு சரக்குப் பணமாக மாறி தனது மதிப்பைத் திரும்பப் பெற்று ரஷ்யா சுயசார்பை எய்தி பல்துருவத்தில் ஒரு துருவமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என நாம் புரிந்து கொள்ளலாம்.
சீனா இன்னும் டொலரின் ஓர் அங்கம்தான்; அவர்களின் டொலர் மூலதனமின்றி சீனா மந்தத்துக்குச் செல்லும் சீனாவின் பொருட்களின்றி அவர்கள் வாழ முடியாது; ஆகவே இருவரும் பேசி இந்த தொழில்நுட்பப் போரை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என மேலும் அவர் கூறுகிறார். சீனா ஒரு துருவமாக மாற வேண்டுமெனில் அதன் பொருளின்றி வாழ முடியாத சூழலும் அதன் பணத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகளும் தேவை; சீனாவுடன் அப்படியான உறவை ஏற்படுத்த ரஷ்யா விரும்புகிறது. அதை ஈரானுக்கும் விரிவாக்கி சொந்த பணத்தில் வர்த்தகம் செய்யும் உற்பத்தியாளர்களின் கூட்டை ஏற்படுத்த வேண்டும்; இதில் முக்கிய நுகர்வோர்களான தென்னாப்பிரிக்க, பிரேசில், இந்திய நாடுகளை இணைக்க வேண்டும்; இப்போது அமெரிக்க பங்குச் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்ட சீன நிறுவனங்களின் பங்குகள் தொண்ணூறு விழுக்காட்டுக்கும் கீழாகச் சரிந்திருக்கிறது; பணம் பெருகிக்கிடக்கும் இந்தச் சூழலில் உண்மையான சொத்து, இந்த உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள்; அவற்றை சீனா, ரஷ்யாவைப்போல சொந்த நாட்டில் விற்கச் செய்ய வேண்டும் என்கிறார். அவர்கள் நம்மிடம் இருந்து உற்பத்தியை எடுத்துச் செல்ல முற்படும்போது நாம் அவர்களிடம் இருந்து மூலதனத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிறார்.
பல்துருவ உலக உருவாக்கமும் இந்தியாவும்…
அதாவது ரஷ்ய, ஈரானிய எரிபொருளைக் கொண்டு உற்பத்தியாகும் சீனப் பொருட்களை ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாட்டு மக்கள் நுகர்வார்கள். இந்தச் சரக்குகளின் மதிப்பை அந்தந்த நாடுகளின் பணம் தெரிவிக்கும். இவர்களுக்கு இடையிலான சொந்த நாணய பரிவர்த்தனை மேற்கின் டொலர், யூரோவின் ஆதிக்கத்தை உடைக்கும். இந்த நாடுகள் அந்தந்த பகுதியின் துருவமாக இருக்கும். இந்த நாடுகளுக்குள் சுழலும் இந்த மூலதனம் இந்த கண்டங்களின் உழைப்பாளர்கள் உருவாக்கும் செல்வ மதிப்பை உறிஞ்சி, தனக்கான வாடகையை வசூலித்துக் கொள்ளும். அது இந்தப் பகுதியின் சந்தையை ஆதிக்கம் செலுத்தும் பெருநிறுவனங்களின் பங்குகளில் நுழைந்து ஒரு நிதிய சுழற்சியை ஏற்படுத்தும். மேற்கின் கடன் பணத் தேவையை இல்லாமலாக்கும் இந்த சரக்குப்பண நிதிய எதிர்ச்சுழற்சி அவர்களின் தற்போதைய முற்றாதிக்கத்தை உடைத்து அவர்களை மற்றுமொரு துருவமாக தரமிறக்கி இந்த ஒற்றையாதிக்க உலகை பல்துருவ உலகமாக்கும் என இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
சுருக்கமாக காலனியாதிக்க உச்சத்தில் உருவான ஏகாதிபத்தியம் சந்தைப் போட்டியில் இரு உலகப்போர்களை சந்தித்து காலனியாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. உலகை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஆதிக்க நாடுகள், ரஷ்யா தலைமையிலான சோசலிச சுதந்திர நாடுகள் என இரு துருவமாகப் பிரித்தன. பின்பு அமெரிக்காவின் தலைமையிலான ஒற்றை துருவ ஏகாதிபத்தியமாக உச்சத்தை அடைந்து, இப்போது அது உடைவை சந்தித்து அதன் பலன்களை பலரும் பங்கிட்டுக் கொள்ளும், நாடுகளின் சுயசார்பை இறையாண்மையை முன்னிறுத்திய பல்துருவ உலகை நோக்கிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. இரு துருவ உலகில் நடுநிலையை எடுத்த நேரு கால காங்கிரஸ் ஒரு துருவத்துக்கு எதிராக இன்னொரு துருவத்தை நிறுத்தி நால்வர்ண சமூகத்தில் டாட்டா, பிர்லாக்களின் பொருளாதார அடித்தளத்தில் முதல் மூவர்ணத்தின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் இவர்களின் சுயசார்பை எட்டும் அரசியலைச் செய்தது.
யாருடைய சுயசார்புக்கு உழைக்கிறார்கள்?
மேற்குடனான தேனிலவு கால நெருக்கத்தைச் சட்டென உதறிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்த நால்வர்ண சித்தாந்தத்தை முன்னெடுக்கும் ஒன்றிய பாஜக அரசு, இந்த பல்துருவ உலக (MULTIPOLAR WORLD) உருவாக்கத்தின்போது நடுநிலையை அறிவித்து அம்பானி, அதானியின் பொருளாதார அடித்தளத்தில் அதே முதல் மூவர்ண ஆட்சி, நிர்வாகக் கட்டமைப்பில் எதிரெதிர் துருவங்களை ஒன்றுக்கெதிராக மற்றொன்றை நிறுத்தி, இவர்களின் சுயசார்பை அடைய அல்லும்பகலும் அயராது உழைக்கிறது. சாவர்க்கர் வம்சத்திடம் நாம் இதுவரையிலும் கண்டிராத உறுதியையும், எதிர்ப்பையும், மேற்கின் அழுத்தத்தை எதிர்த்து நிற்கும் துணிச்சலையும் கண்டுகொண்டிருக்கிறோம். அன்றைய அங்கொரு கால் இங்கொரு கால் என்றிருந்த காங்கிரஸை விட முற்று முழுதாக மூவர்ணத்தின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்றைய பாஜக தனது சொந்த வர்க்கத்தின் நலனைக் காக்கும் வேட்கையுடன் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது.
உழைக்கும் வேளாண் குடிகளான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பொருளாதார நலனை முன்னிறுத்தி நால்வர்ண சமூக அமைப்பை உடைக்கக் கோரி சமூகநீதி அரசியல் செய்த பெரியார், அம்பேத்கருடன் இணையாமல் சாதி, மதம் கடந்த வர்க்க அரசியல் செய்கிறோம் என்ற போர்வையில் காங்கிரஸுக்கு வால்பிடித்தார்கள் அன்றைய படித்த மூவர்ணத்தால் நிரம்பிய கம்யூனிஸ்டுகள். நால்வர்ண கட்டமைப்பை மயிலிறகால் வருடிக்கொண்டு பழைய பாசத்துடன் நவதாராளவாத ஆதரவு அரசியல் செய்யும் இன்றைய காங்கிரஸும் அன்றைய கம்யூனிஸ்டுகளைப் போலவே ஏகாதிபத்திய ஒற்றை துருவ உலகத்தை மறுத்து சுயசார்பை இறையாண்மையை வலியுறுத்தும் பல்துருவ உலகமாக மாறத் துடிக்கும் இந்தக் காலத்திலும் பாஜகவின் மூவர்ண ஆதிக்க அரசியலுக்கு மறைமுகமாக வால்பிடிக்கும் அரசியலைத்தான் செய்துகொண்டிருக்கிறது.
காங்கிரஸின் தலைமையிலா வெற்றி?
காங்கிரஸின் ப.சிதம்பரம் ரஷ்யாவைக் கண்டிக்க வேண்டும் எனக் கட்டுரை எழுதுகிறார். ஒன்றிய பாஜகவின் நடுநிலை அரசியலை தவறு என விமர்சித்து அமெரிக்க அரசு ஆதரவு ஃபாரின் அப்பையர்ஸ் (FROEIGN AFFAIRS) இதழில் கட்டுரை எழுதுகிறார் சசி தரூர். அரசின் நடுநிலை கொள்கை சரி. ஆனால், டொலர் மைய ஒற்றைத்துருவ உலகில் நாம் பலனடைய இன்னும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன; அவசரப்பட்டு இருதரப்பு நாணய ஒப்பந்தம் அது இது என அவசரம் காட்டாதீர்கள் என ‘தி இந்து’ (THE HINDU) இதழில் எழுதிய கட்டுரையில் அறிவுரை வழங்குகிறார் அறிவும் அனுபவ முதிர்ச்சியும் கொண்ட மன்மோகன் சிங்.
நம்புங்கள்… நால்வர்ண கொள்கையை தனது மூச்சாகக் கொண்ட காந்தி கால காங்கிரஸின் தலைமையில்தான் “சுதந்திரம்” பெற்றோம். கட்சி, ஆட்சி, நிர்வாகம் என அனைத்திலும் முதல் மூவர்ணம் ஆதிக்கம் செலுத்திய நேரு கால காங்கிரஸ் ஆட்சியில்தான் நாம் சோசலிச அரசியலை முன்னெடுத்து “சமத்துவ ஜனநாயக” சமூகம் படைக்க முற்பட்டோம். காலனிய கால எச்சமும், அரை பார்ப்பனிய நவதாராள ஆதரவும் கொண்ட ராகுல் கால காங்கிரஸின் தலைமையில்தான் இந்த முதல் மூவர்ண ஆதிக்கத்கெதிராக இந்து அகண்ட பாரதம் படைக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்த்து… உழைக்கும் வேளாண் குடிகளின் பொருளாதார நலனை முன்னிறுத்திய சமூகநீதி அரசியலை முன்னெடுத்து, 2024 தேர்தலில் வெற்றிபெற்று, நால்வர்ண அசமத்துவ சமூக கட்டமைப்பை உடைத்து, அனைவருக்கும் கட்சி, ஆட்சி, நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்புகளில் வாய்ப்பளிக்கும் இட ஒதுக்கீட்டு சமநீதியை வழங்கி, உண்மையான இறையாண்மையும் சுயசார்பும் கொண்ட இந்திய கூட்டமைப்பை கட்டமைக்கப் போகிறோம்.
முடிவடைந்தது.