யார் இந்த அஃப்ரீன் பாத்திமா?

அஃப்ரீன் பாத்திமா (Afreen Fatima

ஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், சஹாரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ (Prayagraj, Saharanpur, Bijnor, Moradabad, Rampur and Lucknow) ஆகிய 6 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது தொடர்பாக 130-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

குறிப்பாக, பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட வன்முறையை முன்னின்று நடத்தியதாக ‘வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (Welfare party of India) அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஜாவீத் முகமது (Javed Mohammad) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, ஜாவீத் முகமது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், வீட்டில் சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், ஆட்சேபனைக்குரிய கருத்துகள் அடங்கிய போஸ்டர்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

அத்துடன், சனிக்கிழமை (11.06.2022) இரவு ஜாவீத் முகமதுவின் மகளும், சி.ஏ.ஏ (Citizenship Amendment Act – CAA) எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய முகமாக அறியப்பட்டவருமான அஃப்ரீன் பாத்திமாவுக்கு, ‘விதிமுறைகள் மீறி உங்களது வீடு கட்டப்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை உங்களது வீடு இடிக்கப்படும்” என்று உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸும் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அஃப்ரீன் பாத்திமாவின் வீடு ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

பழிவாங்கும் நடவடிக்கையாகவே அஃப்ரீன் பாத்திமாவின் வீட்டை உத்தரப் பிரதேச அரசு இடித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் #StandWithAfreenFatima என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதேவேளையில், அவருக்கு எதிரான கருத்துகளும் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

இதற்கிடையில், அஃப்ரீன் பாத்திமாதான் கலவரங்கள் ஏற்பட அவரது தந்தைக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார் என்று உத்தரப் பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கான எந்த ஆதாரத்தை போலீசார் வெளியிடப்படவில்லை. வலுவான ஆதாரங்கள் கிடைப்பின் அஃப்ரீன் பாத்திமா மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பின்புலத்தில் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் எதிர்ப்பு முகமாக மாறியுள்ள அஃப்ரீன் பாத்திமா குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

ஜே.என்.யூ (Jawaharlal Nehru UniversityJNU) மாணவர்: முன்னாள் ஜே.என்.யூ மாணவரான இவர், அங்கு மாணவ அமைப்பின் கவுன்சிலராக இருந்துள்ளார். மேலும், அலிகார் பல்கலைக்கழகத்தில் (Aligarh University) மாணவப் பிரிவு தலைவராக இருந்திருக்கிறார். தற்போது ‘வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா’வின் மாணவர் பிரிவு தேசியச் செயலாளராக உள்ளார்.

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போதெல்லாம் அஃப்ரீன் பாத்திமா தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்து வருகிறார். சி.ஏ.ஏ-வில் தொடங்கி ஹிஜாப் வரை அவரது எதிர்ப்புக் குரல் தொடர்கிறது.

அஃப்ரீன் பாத்திமாவும், அவரது சகோதரியான சுமையாவும் இணைந்து அலகாபாத் இஸ்லாமிய பெண்களுக்காக பெண்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பில் 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

கைது குறித்து அஃப்ரீன் பாத்திமா கூறும்போது, “அலகாபாத் (Allahabad) காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எனது தந்தை ஜாவீத் முகமது, தாய் பர்வீன் பாத்திமா மற்றும் சகோதரி சுமையா பாத்திமா (Sumaya Fatima) ஆகியோரின் பாதுகாப்பு குறித்து கவலையுடன் இருக்கிறேன். எந்த அறிவிப்பும் இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடைசிவரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோட்வாலி  (Kotwali) காவல் நிலையம் சென்றபோது, எனது குடும்பத்தினர் அங்கு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவும் காவல்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்” என்றார்.

சி.ஏ.ஏ எதிர்ப்பு, ஹிஜாஜ் சர்ச்சை என தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்த அஃப்ரீன் பாத்திமா தற்போது உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசின் புல்டோசர் நடவடிக்கைகளின் காரணமாக ஓர் எதிர்ப்பு முகமாக மாறியிருக்கிறார் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்து தமிழ்
2022.06.13

Tags: