தமிழ் சினிமா சர்வதேச அரங்கில் சாதனை நிகழ்த்துவது எப்போது?

மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்படும் பிற மொழி படங்கள் தமிழ் படங்களுக்கு நிகரான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், ,கே.ஜி.எஃப் – 2 ஆகிய மூன்று படங்களும் தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு சர்வசாதாரணமாக அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தில் வருவாய் ஈட்டியுள்ளது. நேரடி தமிழ் படங்கள்அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டு அதிகபட்ச கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டாலும் 100 கோடி வசூலையும், அதிகபட்ச பார்வையாளர் எண்ணிக்கையையும் எட்டிப் பிடிப்பது கடும் போராட்டமாக இருக்கிறது.
இது தமிழ் சினிமா படைப்பாளிகள், வலைத்தள விமர்சகர்கள், ஊடகங்களில் விவாதங்ககளை ஏற்படுத்தியுள்ளது
இந்த வருடம் ஏப்ரல் 13 அன்று 160 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்திற்கு இசை அனிருத், தயாரிப்பு சன்பிக்சர்ஸ் என எல்லாமே பிரம்மாண்டம்.
தமிழகத்தில் 900 திரையரங்குகள் சராசரியாக தினசரி 3600 காட்சிகள் என பீஸ்ட் திரையிடப்பட்டு ஊக்கமருந்து உதவியுடன் விளையாட்டுவீரன் வென்றதை போல் அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தில் 7 நாட்களில் 95
கோடி ரூபாய் மொத்த வசூலை வருவாயாக தமிழக திரையரங்குகள் மூலம் பெறுவதற்கு மூச்சுத்திணறியது பீஸ்ட் . இதன் மூலம் திரையரங்குகளுக்கு கிடைத்த வருவாய் சுமார் 25 கோடி ரூபாய்.
ஏப்ரல் 14 அன்று வெளியான கன்னட மொழிமாற்று படமான கேஜிஎஃப் படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ரூபாய் பீஸ்ட் படத்துக்கு கிடைத்த அதிக திரையரங்குகள் மண்ணின் மைந்தன், 1 கோடி திரையரங்க பார்வையாளர்களை கொண்ட விஜய் என்கிற எந்தவிதமான சாதகமான அம்சங்கள் கே.ஜி.எஃப் படத்திற்கு இல்லை, என்றாலும் 350 திரைகளில் தினசரி சுமார் 1200க்கும் குறைவான காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட கே.ஜி.எஃப் முதல் வார முடிவில் தமிழ்நாட்டில் 45 கோடி ரூபாய் அளவு மொத்த வருவாயை திரையரங்குகள் மூலம் பெற்றுள்ளது.
இப்படத்தின் மூலம் திரையரங்குகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் 16.20 கோடி ரூபாய் அகில இந்திய அளவில் 720 கோடிக்கு அதிகமாக முதல் வாரத்தில் வசூல் செய்து இந்திய அளவில் இதுவரை நிகழ்த்தப்பட்ட அனைத்து சாதனைகளையும் பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது கேஜிஎஃப். இதுஎப்படி சாத்தியமானது என்கிற
அடிப்படை தரவுகள் புரிந்துகொள்ளாப்படாமலே ஏப்ரல் 14 அன்று கேஜிஎஃப் முதல் காட்சி முடிந்தபின் பீஸ்ட் வேஸ்ட்கேஜிஎஃப் கோல்டு என சமூக வலைதளங்களில் அசுரதனமாக பதிவுகள் வெளியானது.
தமிழ் சினிமா தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் நேரடியாக ஈடுபட தொடங்கியபின் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கான செய்திகளை ஊடகங்களுக்கு முறைப்படி அனுப்புவதில்லை என்பதுடன், பத்திரிகையாளர் சந்திப்பு, அவர்களுக்கான பிரத்யோக காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்து வந்தது. இதனால் பிற ஊடகங்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். அதற்கு முதல் பலிகடாவானது ரஜினிகாந்த் நடிப்பில் 2021 நவம்பரில் வெளியான அண்ணாத்தே படம்.
பிப்ரவரியில் சூர்யா நடித்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் சன்பிக்சர்ஸ் தயாரிப்பு என்றாலும் நடிகர் சூர்யா அப்படம் சம்பந்தமான புரமோஷன் நிகழ்வுகள், தகவல்களை நேரடியாக பத்திரிகையாளர்களுடன் ஒருங்கிணைத்ததால் பத்திரிகையாளர்கள் அப்படத்தின் மீது மென்மையான போக்கை கையாண்டனர். ஆனால் பீஸ்ட் படம் வெளியான பின்பு அந்த படத்தை படைப்பு ரீதியாக விமர்சிப்பதில் சன் பிக்சர்ஸ், நடிகர் விஜய் மீது இருந்த கோபம் அப்பட்டமாக வெளிப்பட்டது. குறைந்தபட்ச நேர்மையும் ஊடகங்களிடம் இல்லாமல்போனது.
அதன் விளைவாக கேஜி எஃப் படத்தின் மீதான அணுகுமுறை மென்மையாக மாறியதுடன் அப்படம் உலகளவில் வசூலில் நிகழ்த்திய சாதனைகள், தமிழகத்தில் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பார்வையாளர்களை படைப்புரீதியாக வெற்றிகொண்டதை மிகைப்படுத்தினார்கள். இதன் காரணமாகவே பீஸ்ட் – கேஜி எஃப் நேரடி மோதல், போட்டி என்கிற செய்திகள் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி பசிக்கு, கச்சாப்பொருளானது.
தமிழகத்தில் ஷேலே, யாதோங்கி பாரத், டைட்டானிக், பூ ஒன்று புயலானது, இது தாண்டா போலீஸ், பாகுபலி, புஷ்பா போன்ற படங்கள் வணிகரீதியாக வசூலை குவித்தபோது அந்தப் படங்கள் வேற்றுமொழி படங்களாக, டப்பிங் படங்களாக இங்குள்ள ஊடகங்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கு தெரியாமல் போனது.

2019ல் பிகில்- கைதி ஒரே நாளில் வெளியானபோது அதனை போட்டியாக இங்கு யாரும் கருதவில்லை அத்தி பூத்தார்போல் இந்தியாவில் சிறுபான்மை சினிமாவாக இருக்கும் கன்னட மொழியில் தயாராகி உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை முதல் வாரத்தில் நிகழ்த்தி இந்திய சினிமாவுக்கும், தங்களது கன்னட சினிமாவுக்கும் கௌரவம் தேடிக் கொடுத்ததை பெருந்தன்மையோடு அங்கீகரிக்கும் போக்கு தமிழ் திரையுலகில் இல்லை என்பதுடன் தமிழன், தமிழ் படத்தை குறைவாக பேசலாமா என மசாலா படம் இயக்கிய பேரரசு அறிக்கை விடுகிறார்.
100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட கேஜிஎஃப் படம் முதல் வாரத்தில் இந்தியாவில்
720 கோடி ரூபாய் வசூல் செய்கிறது. 160 கோடியில் தயாரிக்கப்பட்ட பீஸ்ட் இந்தியா முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்வதற்கு அதிகபட்ச டிக்கெட் கட்டணம், அதிக திரையரங்குகள் என ஊக்கமருந்து தேவைப்படுகிறது/ இதற்கு காரணம் என்ன, அடிப்படை கோளாறு எங்கே உள்ளது என்பதை விவாதப்பொருளாக மாற்ற ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் தயாராக இல்லை என்பது கவலைக்குரியது.
படைப்புரீதியாக பீஸ்ட் – கேஜிஎஃப் இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவில் கூறப்பட்டு வரும் மீட்பர் கதைதான் ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான, சமூக பிரச்சினைகளை பேசிய படங்கள் இல்லை. பார்வையாளனை சிந்திக்க விடாமல் பிரம்மாண்டம், பிரமிப்பான ஆக்க்ஷன் காட்சிகள் மூலம் பரவசபடுத்த முயற்சித்த படங்கள் இதில் கேஜிஎஃப் பார்வையாளனை யோசிக்கவிடாமல் பிரம்மாண்டத்தில் பிரமிப்பை ஏற்படுத்தி கதைக்குள் பயணிக்க வைத்தது.
பீஸ்ட் படத்தை பொறுத்தவரை வழக்கம்போல கதாநாயக பிம்பத்தை முன்னிறுத்தி பிரம்மாண்டம் என படத்தில் காட்டப்பட்டது எல்லாம் பார்வையாளனுக்கு சாதரணமாக தெரிந்ததால் அந்தப்படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இருந்தபோதிலும் பீஸ்ட் படத்தின் வசூல் முதல் ஐந்து நாட்களும் வலிமையாக இருந்தது என்பதை தவிர்க்க முடியாது.விஜய் நடித்த படங்கள் என்றாலே குழந்தைகளும், குடும்பங்களும் கூட்டமாக வருவார்கள் ரிபிட் ஆடியன்ஸ் அதிகமிருக்கும்.
பீஸ்ட் வேஸ்ட், பீஸ்ட் நோ டேஸ்ட் என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வலிமையாக பரப்பபட்டதால் கூடுதல் வசூலும், பார்வையாளர்களையும் பெறமுடியாமல் போனது
இருந்தபோதிலும் அந்தப்படம் வணிகரீதியாகவசூல் சாதனையை நிகழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் அதனை கெளரவமான, நியாயமான வெற்றியாக கருத முடியாது ஓட்டப் பந்தயத்தில் ஊக்கமருந்து சாப்பிட்டு வெற்றிபெறும் வீரனின் நிலைதான் பீஸ்ட் வெற்றியும்.
நீண்ட வருடங்களாகவே ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் இவர்கள் நடித்த படங்கள் சமபலத்துடன் கூடிய போட்டி படங்கள் இல்லாமல் தனித்து, அதிக திரையரங்குகளில் திரையிட்டு துரித உணவு போல் குறுகிய நாட்களில் வசூல் செய்து அதனை சாதனையாக கொண்டாடி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டனர். இதனால் நடிகர் நடிகைகளின் சம்பளம் அதிகரித்தது. தயாரிப்பாளர்களின் வருமானம் அதிகரிக்கவில்லை.
ஒரு திரைப்படத்தின் வெற்றி கதாநாயகர்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை கதை, அதனை பார்வையாளன் சுவராஸ்யமாக பார்க்கும் வகையில் படமாக்க வேண்டும்
அதனை வெகுஜனங்களிடம் சரியாக கொண்டு செல்லும் மார்க்கெட்டிங் யுக்தி பிரதானமானது அதனை ஆர்ஆர்ஆர்,கேஜிஎஃப் போன்ற படங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டார்கள்
இதுபோன்ற வெற்றி அடிக்கடி நடக்காது. எப்போதோ ஒரு முறை கிடைக்கும் வெற்றி. ‘பாகுபலி 2’ படத்தின் வெற்றி போல ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குக் கிடைக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்றுள்ளது. ‘பாகுபலி 2’ படத்தின் வெற்றி போல ‘ராதேஷ்யாம்’ படம் வெற்றிபெறவில்லை
கேஜிஎப்- 2 படத்தை வெறும் 100 கோடி செலவில் இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். அது தமிழ் படங்களில் ஏன் சாத்தியமாகவில்லை என்பதை விவாதத்திற்குட்படுத்த வேண்டும்.
இங்கு ஒரு படத்தின் செலவில் அதிகப்படியான செலவு கதாநயகன் சம்பளமாக போய்விடுகிறது. மற்ற மொழிகளில் எந்த கதாநாயகனும் இந்த அளவிற்கு சம்பளம் வாங்குவதில்லை. அப்படியே வாங்கும் சிலரும், குறிப்பிட்ட தொகையை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். படம் முடிந்து வியாபாரம் ஆன பின்தான் தங்களது மீதி சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் படத்தின் தயாரிப்பு செலவில் வட்டி என்பது கூடுதல் சுமையாக இல்லாமல் போவதால் தயாரிப்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.

கதாநாயகனை போன்று கதையும் முக்கியம் என்பதில் உறுதியாக செயல்பட முடிகிறது இயக்குநரின் விருப்பபடி நடிகர்கள் செயல்படுகின்றனர். அதனால்தான் பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை தயாரிக்க முடிந்திருக்கிறது தெலுங்கு திரையுலகில். தற்போது கன்னட திரையுலகம் கேஜி எஃப் படம் மூலம் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தியா முழுவதும் இது போன்ற வெற்றிப்படங்களில் பணியாற்றுபவர்கள் தமிழ் சினிமா கலைஞர்கள் தான் பிரதானமாக உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாக்கள் அவர்களது மாநிலங்களில் திரைப்பட தயாரிப்பை விரிவுபடுத்தி சர்வதேச சினிமாவில் வணிகரீதியாக மட்டுமின்றி படைப்புரீதியாகவும் தங்கள் மொழி சினிமாவை சாதனைப் பட்டியலில் இடம் பெற வைத்துவிட்டார்கள்.
இந்திய சினிமாவில் இரண்டாம் இடம் தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் இருந்தும் இந்திய அளவில், சர்வதேச அரங்கில் படைப்புரீதியாக, வணிக அடிப்படையில் தமிழ் சினிமா சாதனையை இன்று வரை நிகழ்த்தவில்லை. எப்போது இந்த நிலைமாறும் என்பதே தமிழ் சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.