அரிசி உள்ளிட்ட எந்த பொருளுக்கும் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாகாது
இயற்கை வளங்கள் நிறைந்துள்ள இலங்கை, முகம் கொடுத்திருக்கும் பொருளாதார சவாலின் விளைவாக உணவு நெருக்கடியும் தோற்றம் பெறக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் செயற்கையான உணவு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகிறதா? என்ற ஐயமும் நிலவவே செய்கின்றன. ஏனெனில் அதற்குரிய செயற்பாடுகள் இடம்பெறுவதே இவ்விதமான ஐயப்பாட்டை தோற்றுவித்து இருக்கின்றன.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையினால் நாட்டில் தோற்றும் பெற்றுள்ள பொருாளாதார நெருக்கடியின் காரணமாக எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கலான அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றன. இதன் விளைவாக அனைத்து பொருட்களதும் விலைகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான சூழலில் அரிசிக்கு செயற்கை தட்டுப்பட்டை ஏற்படுத்தும் நோக்கிலான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகவே தெரிவிக்கப்படுகின்றன. இதன் நிமித்தம் சில அரிசி ஆலை உரிமையாளர்களும், வர்த்தகர்களும் நெல்லையும் அரிசியையும் பதுக்கி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரிசிக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் அதன் விலையை விரும்பிய படி அதிகரித்துக் கொள்ளலாம். அதன் ஊடாக உச்ச கொள்ளை இலாபம் அடைந்து கொள்வதை பிரதான நோக்காகக் கொண்டு தான் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது எவ்விதத்திலும் நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ கூடிய காரியம் அல்ல.
என்றாலும் அரிசிக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதனை விலையை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அரிசியையும் நெல்லையும் பதுக்குவது தொடர்பில் தெரிவிக்கப்படுகின்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளும் பொலிஸாரும் திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்து இருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் நெல் என்பன ஆங்காங்கே பெருமளவில் கைப்பற்றப்பட்டுமுள்ளன. அத்துடன் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியின் காரணமாகப் பலவித தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம் கொடுத்துள்ள மக்களை மேலும் நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடும் நடவடிக்கையாகவே இச்செயற்பாடு விளங்குகின்றது. இதனை சில அரிசி ஆலை உரிமையாளர்களும் வர்த்தகர்களும் அறிந்திருந்தும் மேற்கொள்வது பெரும் கவலைக்குரியதாக விளங்குகிறது. இச்செயற்பாடானது, மனிதாபிமானமற்ற நடவடிக்கையாக மாத்திரமல்லாமல் மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாகவும் அமைந்திருக்கின்றது.
இவ்விதமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்நடவடிக்கையானது, இவ்வாறான செயலுடன் சம்பந்தப்பட்டவரும் ஏனையவர்களும் இவ்விதமான செயற்பாடுகளில் ஈடுபடாத வகையில் பாடம் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும். அது தான் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேநேரம் அரிசிக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தவென மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்கும் மற்றொரு நடவடிக்கையை நெல் சந்தைப்படுத்தும் சபை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது, அதற்கேற்ப இச்சபை, தம் வசம் கொண்டிருக்கும் 43 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை அரிசியாக்கி குறைந்த விலையில் சந்தைப்படுத்த உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி சில்வா, ‘ஒரு கிலோ சிகப்பு மற்றும் வெள்ளைப் பச்சை அரிசி ரூ. 197.00 வுக்கும், நாட்டரிசி ரூ.199.00 வுக்கும், சம்பா ரூ. 205.00 வுக்கும், கீரி சம்பா ரூ. 215.00 வுக்கும் ச.தொ.ச, கூட்டுறவு நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் ஊடாக சந்தைப்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.
உணவு நெருக்கடி ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து தெரிவிக்கப்படும் தற்போதைய சூழலில் பாவனையாளர்களுக்கு இது ஆறுதலான செய்தியும், பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையும் ஆகும்.
ஆகவே அரிசி உள்ளிட்ட எந்தவொரு பொருளுக்கும் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கவோ அவ்வாறான முயற்சிகளுக்கு துணை போகவோ கூடாது. அது நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் பாரிய மோசடியாகவும், துரோகமாகவுமே அமையும். அதனால் கொள்ளை இலாபம் பெற்றுக்கொள்வதை விடவும் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவது இன்றியமையாததாகும். இது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும்.