இந்திய இராணுவ வீரர்களை அத்துக் கூலிகளாக்கவே அக்னிபாத்!

-ச.அருணாசலம்

தேசமே தீப்பிடித்து எரிகிறது! அக்னிபாத் (Agni Path) என்பது இந்திய இளைஞர்களை இன்று அக்னி பிழம்பாக மாற்றியுள்ளது! பா.ஜ.க ஆட்சி இராணுவத்திற்கு கன்னாபின்னா என்று அதிக நிதியை ஒதுக்கி, ”ஆயுதங்களுக்கு அதிக நிதியை செலவழிப்போம். ஆனால், அர்ப்பணிப்போடு இராணுவத்திற்கு வரும் வீர்களை அத்துக் கூலிகளாக நடத்துவோம்” என்கிறார்கள்!

பீகாரில் தொடங்கி உ.பி.ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சசல் பிரதேசம், தெலுங்கானா என அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் குதித்துள்ளனர். ஏராளமான ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது, வன்முறையும், போலீஸ் தடியடியும் தொடர்கிறது.

காரணம், புதிதாக மோடி அரசு அறிவித்த அக்னி பாதை (அக்னி பாத்) அக்னி வீர்ர்கள் (அக்னி வீர்) திட்டங்கள்தான் . இந்திய இராணுவத்திற்கு – இந்தியத் தரைப்படை கடற்படை  விமானப்படை  ஆகிய முப்படைகளுக்கும் ஆள் எடுக்கும் திட்டத்தில் பெரும் மாற்றங்கள் கொண்டுவந்து மோடி அரசு மேற்கூறிய புதிய நாமகரணங்களை சூட்டி இராணுவத்தில் சேர்வது என்ற இளைஞர்களின் கனவை தகர்த்துள்ளனர்.

வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் பயங்கரமாக வளர்ந்துள்ள இன்றைய நிலையில் இராணுவத்தில் சேர்வது என்பது கண்ணியத்தையும், கவுரவத்தையும் ஒருங்கே அளிக்கும் பாதையாகும் . எண்ணற்ற ஏழை விவசாயிகள் நிறைந்த இந்நாட்டில் பள்ளிப்படிப்பை முடித்த ஏழை இளைஞர் பட்டாளத்திற்கு வாழ்க்கை உத்தரவாதத்தை வழங்குவதாகும் .

இராணுவத்தில் சேர கட் ஆப் மார்க்குகள், நீட் தடைகள் ஏதுமில்லை! தங்களது உடற்பயிற்சி, உடற் கட்டமைப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் இராணுவத்தில் சேருவதன் மூலம் ஒரு வருமானத்தையும், பெருமையையும்  இதுவரை இராணுவப்பணி வழங்கி வந்துள்ளது.

அக்கினிப் பாதை என்பது 17.4 வயது முதல் 21 வயது நிரம்பிய இளைஞர்களை ஆண்டு தோறும் 30,000 முதல் 45,000 யான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு ஆறு மாத பயிற்சிக்குப் பின்னர் அவர்களில் பெரும்பாலான 75% வீர்ர்களை நான்காவது ஆண்டு முடிவில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்களாம் . அவர்களுக்கு அதற்கு மேல் இராணுவத்தில் பணிபுரிய அனுமதி இல்லை. மேலும், பென்ஷன்  ஓய்வூதியம் எதுவும் கிடையாது.

நான்காண்டு பணி முடிவில்  அவர்களுக்கு 11.7 லட்ச ரூபாய் வழங்கப்படுமாம்! இதை வைத்துக்கொண்டு அந்த அக்கினி வீர்ர்கள் தங்களது புதிய வாழ்க்கையை 22-25 வயதுகளில் தொடங்க வேண்டும் என்று மோடி அரசு விரும்புகிறது.

சுருங்கக்கூறின் அக்னி பாதை இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் முறையை  காண்ட்ராக்ட் முறையாக மாற்றி உள்ளது. இதன் மூலம் பணி உத்திரவாதம்  தடுக்கப்பட்டு ‘இராணுவ வீரன்’என்ற பெருமையும் மதிப்பும் வீர்ர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாட்டுற்காகவும் சக  மக்களுகளுக்காகவும் உயிரை பணயம் வைத்து போராடும் குணத்தை கேள்விக் குறியாக்குகிறது.

இதனால் நான்காண்டுகள் தற்காலிகமாக அக்னி வீர்ர்களாக இருந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பபட்டவுடன் கயிறு அறுந்த  பட்டமாக  ஆக்கப்பட்டு விடுவர் . அதிருப்தியும் எதிர்காலம் பற்றிய அச்சமுமே அவர்களிடம் மிஞ்சும் , பெருமையும் மிடுக்கும் மங்கி உரிய மண வாழ்வு கூட கிட்டாதவர்களாக மாற வாய்ப்புகள் அதிகமுள்ளன.

நம் கண்முன்னே முன்னாள் இராணுவ வீர்ர்கள் ஒரு கீழ்நிலை செக்யூரிட்டி வேலையிலோ அல்லது வாயிற் காவலர்களாகவோ அல்லது ஆட்டோ ஓட்டுநராகவோ அல்லது ஓட்டுனர்களாகவோ பணியாற்றி சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளதை காண்கிறோம் . பல வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் கதியே இவ்வாறென்றால் ஆறு மாத பயிற்சியில் நான்காண்டுகள் பணியாற்றி ராணுவ சம்பந்த்தை அறுத்து அனுப்பப்படுபவர்கள் கதி என்ன என்று சிந்தித்தன் விளைவுதான் இன்றைய இளைஞர்களின் அக்னி பாதைக்கெதிரான போராட்டம். இந்திய பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தில் ஓய்வூதிய தொகையின் பங்கு பெருமளவு உள்ளது! என்பது கவலை கொள்ளத்தக்க ஒரு விஷயம் என்றாலும் அதற்கு மாற்றாக அக்னி பாதை என்பது அரைவேக்காட்டுதனம் என பல்வேறு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் வெளிப்படையாக கூறுகின்றனர்.

ஒரு நாடு இராணுவத்திற்கும், இராணுவத்திற்கும் செய்யப்படும் செலவு அந்நாட்டின் பாதுகாப்பையும் அவசியத்தையும் பொறுத்ததே ஒழிய நிதி பரிபாலனத்தை பொறுத்த விஷயமல்ல என்று முன்னாள் தலைமை தளபதி குறிப்பிட்டுள்ளார் .

ஒரே ரேங் ஒரே பென்ஷன் One Rank One Pension என்பதில் தொடங்கி ஓய்வு பெற்ற இராணுவத்தினரின் ஓய்வூதியம் வரை பல சிக்கல்கள் ஒன்றிய அரசிற்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இருந்தாலும் இதை நிதி சம்பந்தப்பட்டதாக மட்டும் நினைக்காமல் மாண்பு சம்பந்தப்பட்ட விஷயமாக அணுக வேண்டும்.

எந்தவித கலந்தாலோசிப்பும் இன்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவு இந்திய இராணுவம் மற்றும் இராணுவத்தினரின் பெருமையையே குலைப்பதாக உள்ளது என்று எதிர்கட்சிகள் மோடி அரசை கண்டிக்கின்றன.

ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும்  அக்னி வீரர்களில் 25 சதவிகித்த்தினர் மட்டுமே நிரந்தர இராணுவ பணிக்கு தொடர்ந்து இருத்தப்படுவர் என்ற நிலையில் கழட்டிவிடப்பட்ட 75 சதவிகித வீர்ர்களும் துணுக்குற்றவர்களாக, மனம் வெதும்பியவர்களாக மனநிறைவின்றி மீண்டும் இச்சமுதாயத்தில் நுழைவது என்பது பெருத்த அவமானமாகும் .

இதன் விளைவு ஏற்கனவே சாதி மத குழு போன்ற அடையாளங்கள் விரிந்து பரஸ்பர மதிப்பிளந்த ஒருங்கிணைப்பு இல்லாத இன்றைய இந்திய சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பயங்கரமாயிருக்கும் .

ஆயுதங்கள் கையாளத்தெரிந்த அதே சமயம் விரக்தி அடைந்த இளைஞர் கூட்டம் பணம் படைத்தவர்களுக்கோ, சாதீய வெறியர்களுக்கோ மத வெறியர்களுக்கோ அல்லது மாறுபட்ட கௌரவங்களை தூக்கிப்பிடிக்கும் வல்லானுக்கோ ஏவல் செய்யும் கூலிப்படையாக மாறுவது சாத்தியம் மட்டுமல்ல நாளைய நிகழ்வாகவும் அமையும் .

இராணுவத்துறையின் செலவினத்தில் கிட்டத்தட்ட 54% ராணுவத்தினரின் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதிய நிவாரணங்களுக்குமாக நடப்பு நிதி ஆண்டில் செலவிடப்படுகிறது. 1,19,696கோடி ரூ. ஓய்வூதியங்களுக்காகவும்,1,63,453 கோடி ரூ. ஊதியங்களுக்காகவும் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய செலவினங்களை கட்டுப்படுத்தி தளவாடங்களின் உற்பத்திக்கும், கொள்முதலுக்கும் அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கம் இந்த மாற்றங்களின் பின்னணியில் உள்ளன. ஆனால், இராணுவத் தளவாடங்களை இயக்கும் மனிதர்களின் வேலைக்கும்,வாழ்வுக்கும் உத்திரவாதம் இல்லை என்றால், எப்படி அர்ப்பணிப்புள்ள இராணுவத்தை கட்டமைக்க முடியும்?

பென்ஷன் சுமையிலிருந்து விடுபட காண்டராக்ட் முறையில் இராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் அக்னிப்பாதை முறை இராணுவத்தினரின் பெருமையையும், மாண்பையும் குலைப்பதாக உள்ளது.

நாட்டில் உள்ள யதார்த்த நிலைகளையும், பிராந்திய வேறுபாடுகளையும் கணக்கில் கொண்டு சகோதரத்துவத்தையும் பெருமையும் கணக்கில் எடுத்து கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக மலபார் ரெஜிமென்ட், பீகார் ரெஜிமென்ட்,கூர்க்கா ரெஜிமென்ட், மெட்ராஸ் ரெஜிமென்ட் ராஜ்புட் ரெஜிமென்ட் என படைப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு போற்றி வளர்க்கப்பட்டு வந்த நிலையை இந்த அக்னி பாத் முற்றிலுமாக நிராகரிக்கிறது.

செழுமையாக ஒற்றுமையையும் உயர்ந்த நோக்கங்களயும் சகோதரத்துவத்தையும் வேற்றுமைகளுக்கிடையிலும் தூக்கிப்பிடிக்கும் இன்றைய பல்வேறு ரெஜிமென்ட் முறையை மாற்ற கூடாது அது தேவையற்ற சீர்குலைப்பு வேலை என்று ஓய்வு பெற்ற  இராணுவத் தளபதிகள் கூறுகின்றனர்.

ஆயுத பயிற்சிக்காலம் ஆறு மாதங்களும் பின்னர் விடுமுறைகள், விடுப்புகள் போக பணிபுரியும் 30 மாத காலத்தில் அக்னி வீர்ர்கள் எத்தகைய பயிற்சியை பெற்று சிறப்பாக பணியாற்ற முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இன்றைய தொழில் நுட்பம் வளர்ந்த சூழலில் குறைந்தது ஐந்து வருடங்கள் முப்படைகளிலும் கையாளப்படும் தளவாடங்கள், சாதனங்களுடன் பயின்றால் தான் அதில் தெளிவும் மேலாதிக்கமும் கிடைக்கும் என்கின்றனர்

இது தவிர மாநிலங்கள்வாரியாக  இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் முறையை இந்த புதிய திட்டம் நிராகரிக்கிறது. பல்வேறு பிரிவுகளையும் மொழி மற்றும் பழக்க வழக்கங்களையும் கொண்ட பரந்து விரிந்த இந்தியாவில் சமநிலையை கருத்தில் கொண்டு மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடுகள் மூலம் பணியெடுப்பு 1966 முதல் நடைபெற்று வருகிறது. இதை இப்பொழுது காற்றில் பறக்க விடுவதன் மூலம் சமநிலை குலையும் அபாயமுள்ளது.

இந்த திட்டத்தின் ஆதிமூலம் வேறு யாருமல்ல , மறைந்த முன்னாள் முப்படை தலைமை தளபதி CDS  பிபின் ராவத் அவர்கள்தான் . சீனத்திலும் இஸ்ரேல் நாட்டிலும் உள்ள இத்தகைய ஆள் எடுக்கும் முறையை இந்தியாவிலும் கொண்டு வருவது இந்தியாவிற்கு நல்லதல்ல! இந்தியா ஒரே மொழி ஒரே கலாச்சாரம் கொண்ட ஒரே தேசமல்ல, மாறாக பல்வேறு இன மக்களை பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரமுடைய மக்களை, பல்வேறு மாறுபட்ட நிலங்களை கொண்ட நாடு இந்தியா என்ற உண்மைகளை – மறந்துவிடுகிறார்கள்!

ஆனால், பாஜக நினைப்பு  இந்தியாவின் நினைப்பு  அல்ல என்ற குரலின் வெளிப்பாடே இன்றைய இளைஞர்களின் போராட்டம். எந்த வகையில் நோக்கினாலும் நிதி சேமிப்பு , ஒற்றுமை, ஒருங்கிணைப்பு உயர்ந்த தரம் என எந்த வகையிலும் உதவாத இந்த அக்னி பாத் திட்டம் பிரச்சினைகளை மேலும் பெருக்குகிறதே ஒழிய குறைக்கவில்லை.

சமூக பொருளாதார வளரச்சி மேம்படவும் வேலையில்லாத திண்டாட்டம் குறையவும் ஆவன செய்யாமல் செருப்புக்கு தக்க காலை வெட்டும் பாதையாக அக்னி பாதை உள்ளது.

எந்த கலந்தாலோசனையுமின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு தொடர்ந்து பல்வேறு தரப்பு மக்களையும் இத்திட்டத்திற்கெதிராக ஒன்றிணைய வைத்துள்ளது.

2013ம் ஆண்டு செப்டம்பர் 15ல் ஹரியானாவில் உள்ள ரேவாரி நகரில் நடந்த முன்னாள் இராணுவத்தினர் மாநாட்டில் கலந்து கொண்டு அன்றைய பாஜ கட்சியின் பிரதமர் வேட்பாளராக பேசிய மோடி, ஒரே ரேங் ஒரே பென்ஷன் OROP  என்ற கொள்கையையும், கோரிக்கையையும் ஆதரித்து கவிதை மழை பொழிந்தார் .

இன்று ஒன்பது ஆண்டுகள் கழித்து அக்னி பாத் திட்டத்தின் மூலம் ‘நோ ரேங், நோ பென்ஷன்’ என்ற NRNP என அதலபாதாளத்திற்கு வசனமெழுதியுள்ளார்!

Tags: