கியூபாவின் தடுப்பூசியை வாங்குங்கள்

கியூபாவுடனான ஒத்துழைப்பை அதிகரித்து அவர்கள் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளை வாங்கி உலகளவில் விநியோகிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அவரது கட்சியான ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அயன்னா பிரஸ்லே (Ayanna Pressley) மற்றும் ஸ்டீவ் கோஹன் (Steve Cohen) தலைமையிலான 26 பேர் கொண்ட குழு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான இருதரப்பு மருத்துவ ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ள அவர்கள், பயணம் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புதல் ஆகிய இரண்டிலும் தடைகளை தளர்த்தியுள்ளதற்கு ஜோ பைடனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அத்தகைய நடவடிக்கை இரு தரப்பு உறவுகளுக்கு மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் அக்கடிதத்தில்,  “சர்வதேச அளவில் அனைத்துப்பகுதி மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி கிடைத்திட வேண்டும். இதை உத்தரவாதப்படுத்துவதில் கவனம் தேவை. அவ்வாறு கவனம் செலுத்த அமெரிக்க அரசு போட்டுள்ள தடைகள் குறுக்கே வராமல் இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆதரவு ஆகியவற்றை கியூபா மூலமாக செய்ய முடியும்” என்று எழுதியுள்ளனர்.

குறைந்தவிலை :  தரமான தடுப்பூசி

உலகம் முழுவதும் குறைந்த விலையிலான தடுப்பூசி என்பதோடு, மிகவும் தரமான தடுப்பூசிகளை விநியோகிக்க ஜோ பைடன் நிர்வாகத்திற்கு கியூபாவின் தடுப்பூசிகள் உதவிகரமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், “கியூபா மீது போடப்பட்டுள்ள தடைகள் நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் கூட கியூபாவுக்கு தடைக்கற்கன் உள்ளன. எந்தெந்த நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கவில்லையோ அவர்களுக்காக தயாரித்து, விநியோகிக்க கியூபாவைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவின் தடைகள் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன” என்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் அரசு என்ற பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குமாறும் அந்த 26 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இத்தகைய நடவடிக்கை கியூபாவுடனான மருத்துவ ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளனர். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைப் பிறநாடுகள் வாங்குவதில் சிரமங்களை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, நிதி நிறுவனங்கள் மூலமாகப் பரிவர்த்தனை மேற்கொள்வதில் ஏராளமான தடைகள் போடப்பட்டுள்ளன. இதை நீக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் ஜோ பைடனிடம் கேட்கிறார்கள்.

தடைகளை மீறி சாதனை

அமெரிக்காவின் தடைகளை மீறி சொந்த நாட்டு மக்களில் 90 விழுக்காட்டிற்கும் மேலானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தி கியூபா சாதித்துள்ளது. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் மற்ற நாடுகளில் தொடங்கும் முன்பே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகளை அனைத்து கியூப மருத்துவ ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் இருந்த தடைகளால், சிறிது தாமதப்பட்டாலும் மற்ற நாடுகள் தடுப்பூசிகளைச் செலுத்தத் தொடங்கியபோது, கியூபாவும் தொடங்கி விட்டது.  கோவிட் தொற்றை எதிர்கொள்வதில் நெருக்கடி இருக்கிறது என்று பல நாடுகள் குரல் கொடுத்தன. பெரிய நாடுகள் தங்களுக்கே நெருக்கடி இருக்கிறது என்று விலகிக் கொண்ட நிலையில், 42 நாடுகளுக்குத் தங்கள் மருத்துவர்களை கியூபா அனுப்பியது. பல குழுக்களாக சென்ற இவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான சிகிச்சைகளை அங்கேயே தங்கியிருந்து வழங்கினர். கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவிட 59 நாடுகளில் சுமார் 28 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கியூபாவில் இருந்து சென்று முகாமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கியூபாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் உலக சுகாதாரக்கழகம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. கியூபாவின் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உலக சுகாதாரக் கழகத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் பாராட்டு தெரிவித்திருந்தாலும், தடுப்பூசிகளை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்த அங்கீகாரம் வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோ பைடனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

Tags: