ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த 5 புகைப்படங்களையும் புரிந்துகொள்வது எப்படி?
“எங்கோ, நம்பமுடியாத ஒன்று நாம் அறியக் காத்திருக்கிறது” – இது பிரபல வானியல் அறிஞரான கார்ல் சாகனின் வார்த்தைகள். இதனை குறிப்பிட்டுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த அரிய புகைப்படங்களை நாசா உலகுக்குப் பகிர்ந்தது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத பரந்து விரிந்திருக்கும் விண்வெளியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் நாம் அறிந்துகொள்ள என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
SMACS 0723: விண்வெளியில் ஒரு சிறு விண்மீன் திரள்களை (galaxies) இப்படம் குறிக்கிறது. அதாவது, உங்கள் கை நிறைய மணல்துகள்களை வைத்திருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துகள் அளவுதான் இந்த விண்மீன் திரள்களின் கூட்டம். இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய துகளைத்தான் இப்படம் குறிக்கிறது. இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் நமது பிரபஞ்சம் எவ்வளவு பெரியதென்று..
இந்தப் படத்தை நீங்கள் கவனமாக பார்த்தால், விண்மீன் திரள்களை தெளிவாகக் காணலாம். சில விண்மீன் திரள்களின் ஈர்ப்பு விசையால் சிதைக்கப்பட்டிருப்பதால் அவை நீண்டு காணப்படுகின்றன. சில வட்டவடிவில் காணப்படுகின்றன. இதில் ஆங்காங்கே நட்சத்திரங்களும் மின்னுகின்றன.
The Southern Ring Nebula – தெற்கு வளைய நெபுலா: இது விண்வெளியில் தெற்குப் பகுதியில் வளைய வடிவத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இது தெற்கு வளைய நெபுலா (The Southern Ring Nebula ) என்று அழைக்கப்படுகிறது. நெபுலா என்பதற்கு புகை அல்லது பனிமூட்டம் என்று பொருள்.
ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த நெபுலாவை பார்க்கும்போது, அவை ஒளிரும் மேகங்கள் போன்று தெரியும். ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ள தெற்கு வளைய நெபுலா ஜெல்லி மீன் போன்று காணப்படுகின்றது. ஹைட்ரஜன் நிறைந்துள்ள நெபுலாக்கள்தான் விண்வெளியில் நட்சத்திரங்கள் தோன்றும் இடங்களாக உள்ளன. நெபுலாக்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் மிகுந்த வெப்பத்தை கொண்டவை. இது பூமியிலிருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன (1 ஒளி ஆண்டு = 9.5 டிரில்லியன் கிமீ).
ஸ்டிபன்ஸ் குவின்டெட் – Stephan’s quintet: இப்படத்தில் ஐந்து விண்மீன் திரள்கள் (5 galaxies) உள்ளன. அதாவது நமது சூரியக் குடும்பத்தை போன்று ஐந்து விண்மீன் திரள்கள் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த விண்மீன் திரள்களை எட்வர்ட் ஸ்டீபன் என்பவர் 1877-ஆம் ஆண்டு கண்டறிந்தார். அதனால் இந்த விண்மீன் திரள்கள் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இதில் ’quintet’ என்பது 5 என்ற எண்ணிக்கையை குறிக்கும். நிறைய விண்மீன் திரள்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருந்ததை அப்போதுதான் விஞ்ஞானிகள் கண்டனர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி Stephan’s quintet -ஐ தெளிவாக படப்பிடித்து அனுப்பியுள்ளது. இதில் ரெண்டு விண்மீன் திரள்கள் ஒன்றோடொன்று பிணைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் விண்மீன்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை அறியலாம். மேலும் அப்பகுதியில் உள்ள கருத்துளைகளை அறிந்து கொள்ளவும் இந்தப் படம் உதவுகிறது. ஸ்டிபன்ஸ் குவின்டெட் பூமியிலிருந்து 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.
கரினா நெபுலா – Carina Nebula: கரினா நெபுலா பொதுவாக மலை பள்ளத்தாக்குகள் போன்று காணப்படும். இதன் பின்பகுதியில் நீல நிற வானம் தெளிவாக தெரியும்.
இவை பூமியிலிருந்து 7,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. இவை வாயுகளாலும், தூசுகளாலும் ஆனது. நமது சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வளி மணடத்தில்தான் இவையும் அமைந்துள்ளன. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கரினா நெபுலாவை துல்லியமாக படம்பிடித்துள்ளது. அதில் அமைந்துள்ள நட்சத்திரங்களும் இப்படத்தில் தெளிவாக தெரிகின்றன. கரினா நெபுலாவின் முனைகளில் அமைந்துள்ள ’NGC 3324’ என்ற விண்மீன் கூட்டமும் இப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது.
வெளிகோள் – WASP-96 b: இந்த வெளிகோள். 2014-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. விண்வெளியில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.இது பூமியிலிருந்து சுமார் 1,150 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த வெளிகோள் வியாழன் கோளின் நிறையில் பாதி நிறையைக் கொண்டது. இது, அதன் நட்சத்திரத்தை முழுமையாக சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 3.4 நாட்கள். இந்த கோளின் வெப்பநிலை 1000 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். மேலும் இந்த கோளில் வாயுக்கள் நிரம்பியுள்ளன.
இந்த வெளிக்கோளின் வளிமண்டத்தில் உள்ள நீராவி அளவு, கர்பன் அளவையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கணக்கிட்டு அனுப்பியுள்ளது.
நமது சூரிய குடும்பம் இருக்கும் பால் வளிமண்டலத்தில் மட்டும் சுமார் 5,000 புறக்கோள்கள் வரை உள்ளன.
விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றி விமர்சனங்களுக்கு மத்தியில் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் படங்கள் பெரும் வரலாற்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளன. ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி எடுத்த புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல.. அவை கடந்த காலத்தை சேர்ந்தவை. உங்களுக்கு குழப்பாக இருக்கலாம் விண்வெளியில் தொலைவை, ஒளி ஆண்டுகளில்தான் கணக்கிடுறோம். எப்போதோ பயணம் செய்த ஒளி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் காண நேர்ந்த கணத்தில்தான் இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கும்போது அவை கடந்த காலத்தை சேர்ந்தவைத்தான்.
பிரபஞ்சம் இந்த நொடியில்கூட, தனது எல்லையை அதிகரித்துக் கொண்டே சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் லட்சக்கணக்கான கிரகங்கள், விண்மீன்கள் இருக்கலாம்.. இன்னமும் பல அதிசயங்களை காண இருக்கிறோம்.. ஏன் பிரபஞ்சம் எப்போது, எப்படி உருவானது என்ற புதிருக்கும் கூட விடை கிடைக்கலாம்.. காத்திருப்போம்..! ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அடுத்த புகைப்படங்களுக்காக..!
தொகுப்பு: இந்து குணசேகர்