எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல்

வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் டோக்கன் முறை போன்றவை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது என்றும் அன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற நெரிசல் ஏற்படக்கூடிய வகையில் ஒன்று கூட வேண்டாம் என்றும் வலுச்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அன்றைய தினம் முதல் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர கியூஆர் (QR) முறைமை அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சு நேற்று (30.07.2022) வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,
சட்ட விரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை 0742123123 என்ற வட்சப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும் அவர்கள் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டால், அவர்களின் கியூஆர் குறியீடு செல்லுபடி அற்றதாக்கப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
செஸ்ஸி எண்ணின் (Chassis Numbers) மூலம் கியூ.ஆர் முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகனங்கள் வாகன ஆண்டு வருமான அனுமதிப்பத்திர இலக்கத்தைக் கொண்டு பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து ஓட்டோக்களும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்கு ஒதுக்கப்படும் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் விவரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தேவைப்படும் உபகரணங்களின் உரிமையாளர்கள் தங்களது பிரதேச செயலகத்தில் எரிபொருளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நிரப்பு நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதே வேளையில், பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு, அவற்றின் வழித்தட அனுமதி மற்றும் பயணித்த கிலோமீற்றர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை போக்குவரத்து சேவைகள், ஊழியர் போக்குவரத்து, கைத்தொழில்கள், சுற்றுலா தொடர்பான வாகனங்கள், அம்பியூலன்ஸ்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட சேவைகளுக்கு தேவையான அனைத்து எரிபொருளையும் போக்குவரத்து சபை டிப்போ வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அம்பியூலன்ஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், அவற்றுக்கு வரையறையற்ற எரிபொருள் வழங்கவும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பதுக்கலை கட்டுப்படுத்துமா ‘National Fuel Pass’?
–றிஸ்வான் சேகு முகைதீன்

உலகின் முதலாவது நாடாக எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு QR தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இலங்கை!
4ஆவது அடிப்படை தேவை போக்குவரத்து!
மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து என்கின்ற ஒன்று இடம்பிடித்து வருகின்றது என்பதை அறிய வைத்துள்ள காலம் இதுவாகும். ‘அது இன்றி அனைத்தும் ஸ்தம்பிதம்’ என்கின்ற நிலை உருவாகியுள்ளது. அந்த அது, மறைமுகமாக போக்குவரத்து என்கின்ற ஒன்றாக இருந்தபோதிலும் நேரடியாக எரிபொருள் நெருக்கடி என்பதாக உள்ளது. ஏன், மாணவர்களின் கல்வியை தீர்மானிக்கும் காரணியாக இந்த எரிபொருள் நெருக்கடி அமையமென நாம் எதிர்பார்த்திருக்கமாட்டோம்.
பொருளாதார நெருக்கடி
நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது என்பதை சிறு பிள்ளை கூட அறியும். காரணம், எம்மைச் சுற்றி நடக்கின்ற, வழக்கத்திற்கு மாறாக, நாம் இதுவரை எதிர் கண்டிராத பல்வேறு விடயங்களே அவற்றை அவர்களுக்கு கூறியிருக்கும். இது எங்கு, எப்போது, எப்படி ஆரம்பித்தது? எனும் கேள்விகளுக்கு விடை தேடும் முன்னே அடுத்தடுத்து நாம் பல்வேறு நடைமுறைச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகவும் அதற்கான தீர்வை கண்டறிய வேண்டியவர்களாக மாறியுள்ளோம். அவ்வாறான ஒன்றே இந்த ‘தேசிய எரிபொருள் அட்டை’ – National Fuel Pass.
சீரான எரிபொருள் பங்கீடு
எரிபொருள் தட்டுப்பாடு என்கின்ற ஒன்றைச் சுற்றி உருவான கறுப்புச் சந்தை, பதுக்கல் போன்ற விடயங்களை தடுத்து, நாட்டின் எரிபொருள் தேவையை உரிய வகையில் பூர்த்தி செய்வதற்காக, எரிபொருளை உரிய வகையில் பங்கிட எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் இறுதி வடிவமாக இந்த QR முறையிலான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
QR Code
fuelpass.gov.lk தளம் ஊடாக வாகன விபரங்களை வழங்கி, பதிவு செய்து இறுதியில் கிடைக்கும் ஒரு கறுப்பு நிற சதுர வடிவான அமைப்பே QR Code ஆகும். Quick Response Code (மிக விரைவாக பதிலளிக்கும் குறியீடு) என விரிவாக்கம் கொண்ட இது, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட, தரவுகளை கெமராவின் மூலம் உணரக்கூடிய சாதனங்களால் ஒரு சில நொடிகளில் தரவுகளை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
எனவே பல்வேறு தகவல்கள் அடங்கிய ஒரு QR குறியீட்டிலிருந்து சில நொடிகளில் அதிலுள்ள தகவலை பெறுவதனை அடிப்படையாகக் கொண்டு, ஒதுக்கிடப்பட்ட எரிபொருள் விநியோகத்தின் போது வாகன விபரங்களை பதிவதற்கும், அவற்றை கணனிமயப்படுத்துவதற்கும் எடுக்கும் நேரத்தை, குறைக்க இம்முறை பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு தற்போது உங்களுக்கு வழங்கப்படும் QR குறியீட்டில் வாகன இலக்கமும் உங்களுக்கான பிரத்தியேக குறியீடொன்றுமே அடங்கின்றன. அவை உங்கள் QR குறியீட்டின் மேல், கீழ் பகுதியில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். அத்துடன் ஒரு QR Reader செயலியின் மூலம் உங்கள் கையடக்கத் தொலைபேசி கெமரா ஊடாக நீங்கள் அத்தகவலை அறியலாம்.
ஆக மொதத்தில் தகவலை இலகுவாக பதிவு செய்வதனை அடிப்படையாகக் கொண்டு, நேர விரயத்தை தவிர்க்க QR முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் ஒரு நபர் பல முறை எரிபொருளை பெறுவது இலகுவாக அடையாளம் காணப்பட்டு தடுக்கப்படுகின்றது.
ஒதுக்கீடு/ கோட்டா
ஒவ்வொரு வாகனத்திற்கும் வாராந்தம் எவ்வளவு எரிபொருள் விநியோகிக்கப்படும் என்பது இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் வாகனம் ஒரு மோட்டார் சைக்கிளாயின் நிர்ணயிக்கப்பட்ட 4 லீற்றர் பெற்றோலை நீங்கள் ஒரு வாரத்திற்கு பெற முடியும். ஒரு எரிபொருள் நிலையத்தில் நீங்கள் QR குறியீட்டின் மூலம் எரிபொருள் பெறும் வேளையில், நீங்கள் பெறும் எரிபொருள் கணனிமயப்படுத்தப்படும். குறிப்பாக மேற்படி 4 லீற்றர் பெற்றோலில் 2 லீற்றர்களை பெறுவீர்களாயின் அதில் நீங்கள் 2 லீற்றர்கள் பெற்றமை பதியப்படுவதோடு, எஞ்சிய 2 லீற்றரை அவ்வாரத்தின் மற்றுமொரு நாளில் நீங்கள் பெற முடியும். இதனை பரீட்சிக்க, fuelpass.gov.lk தளத்தில் Login என்பதை கிளிக் செய்து, உங்கள் கையடக்க தொலைபேசி இலக்கத்தை வழங்கி அதற்கு கிடைக்கும் OTP யினை உள்ளீடு செய்வதன் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்.

முறை புதிது; பழக்கப்பட்ட ஒன்றே
குறிப்பாக இந்த QR குறியீட்டு எரிபொருள் ஒதுக்கீட்டு முறையானது, ஏற்கனவே 90களில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய போசனத்திற்காக அரசாங்க்தினால் வழங்கப்பட்ட கூப்பன் முறை போன்றதே. அதனையும் தாண்டி அதற்கு முற்பட்ட காலத்தில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட முத்திரை முறையும் இது போன்றதே. இதனை தற்போதைய இள வயதினர் தங்கள் பெற்றோர்கள், மூத்தவர்களிடையே கேட்டால் அவர்கள் அதனை விளக்குவார்கள்.
நடைமுறை/ சிக்கல்
ஒரு புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்படும் போது வழக்கமாக எழும் சில பிரச்சினைகள் இந்த QR முறை அறிமுகப்படுத்தப்பட்டபோதும் எழுந்தன. ICTA (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்) மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொகுதியானது, நேரடியாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள தரவுத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் வாகன பதிவு தகவலை வழங்கும்போது வாகன அடிச்சட்ட இலக்கங்கள் (Chassis No) உரிய முறையில் பதியப்படாமை உள்ளிட்ட பிரச்சினை எழுந்தன. அதற்கு மாற்று வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திர இலக்கத்தை பயன்படுத்த வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தூரப் பயணம்
இது தவிர தமது சொந்த தேவைக்காக, அலுவலக தேவைக்காக தனிப்பட்ட வாகனங்களில் தூர பயணம் மேற்கொள்பவர்கள் தமது ஒதுக்கீட்டிற்கு அதிகமான எரிபொருளை பெறுவதிலும் ஒரு சிக்கல் காணப்படுகின்றது. இதற்கு மாற்றுத் தீர்வாக பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதே ஒரே வழியாக காணப்படுகின்றது. ஆயினும் இதற்கான மாற்று வழிகள் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள்
தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடியில் தனிப்பட்ட நபர்கள், தமது அடையாள அட்டை இலக்கம் மூலம் தம்மிடமுள்ள ஒரு வாகனத்தை மாத்திரம் பதிவு செய்து எரிபொருளை பெற்று தமது அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி வழங்கப்பட்டுள்ளது. இது சிலருக்கு எரிச்சலூட்டும் ஒன்றாக இருந்தபோதிலும், நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அனைவருக்கும் சமத்துவ வசதி, சமமான பங்கீட்டை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவது குடிமக்களின் கடமையாகும்.
ஸ்மார்ட் தொலைபேசிகளின் அவசியம்
QR குறியீட்டை பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்கும், அதன் பின்னர் குறித்த குறியீட்டை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பிப்பதற்கும் ஒரு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி இருப்பது அவசியமாகின்றது. ஆயினும், இதற்காக ஒரு தடவை மாத்திரம் மேற்கொள்ளும் பதிவை, எந்தவொரு ஸ்மார்ட்போனிலும், இணைய வசதி கொண்ட சாதனங்களிலும் மேற்கொள்ள முடியுமென்பது சிக்கலை ஏற்படுத்தாது. அதே போன்றே இறுதியில் பெறப்படும் QR குறியீட்டை அட்டையாக அச்சிட்டு பத்தோடு பதினொன்றாவது அட்டையாக பணப்பையினுள் வைத்திருக்க முடியுமென்பதும் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமைகின்றது.
வர்த்தக வாகனங்கள் BRN மூலம் பதிவு
இருப்பினும் வர்த்தக நிறுவனங்களுக்கு மாத்திரம் இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு உரித்தான ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கு தற்போது வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அடையாள அட்டை கோரப்படும் இடத்தில், வர்த்தக நிறுவன பதிவு இலக்கத்தை (Business Registration Number-BRN) தெரிவு செய்து உள்ளீடு செய்வதன் மூலம் இதற்கான பதிவை மேற்கொள்ளலாம்.
ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்
எரிபொருள் விநியோக ஒதுக்கீட்டிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எது வரை தொடரும்?
எரிபொருள் தட்டுப்பாட்டுக்காக தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்முறையை அமுல்படுத்தி அரசாங்கம் இறுதி வரை எம்மை இதற்குள்ளேயே பழக்கப்படுத்தப் போகிறதா எனும் கேள்விக்கு, போதிய அந்நியச் செலாவணி கிடைக்கும் வரை, நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் வரை, நாட்டிற்கு விடிவு காலம் ஏற்படும் வரை இதுவே கதியாக இருக்கலாம் என்பது பதிலாக அமையப் போகின்றது.
முறையான பொதுப் போக்குவரத்தும் ஒரு வழி
இந்த இக்கட்டான நிலையை எரிபொருள் ஒதுக்கீட்டின் மூலம் மாத்திரம் தான் தீர்க்கலாமா? திட்டமிட்ட பொதுப் போக்குவரத்து முறையை ஏற்படுத்துவதன் மூலமும் மாற்று வழியாக இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கலாம். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் கூட பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள். ஒரு சில வீதிகளில் எவ்வித வாகன நடமாட்டமும் இல்லை என்பதோடு, அவ்வீதிகளில் அவர்கள் சாரி சாரியாக நடந்தே செல்கிறார்கள். அதற்கு அவர்களது பொதுப் போக்குவரத்து வசதியே காரணமாகும்.
அவ்வாறான திட்டமிட்ட வழிகளை உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்த இதுவே சந்தர்ப்பமாகும். தினமும் விரயமாகும் எரிபொருளுக்காக வெளிநாடுகளில் கடன்படுவதிலும் பார்க்க, இதற்காக கடன்படுவது நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் எரிபொருளுக்காக நமது நாடு செலவிடும் அந்நியச் செலாவணியை மீதப்படுத்தலாம் என்பது இதன் மற்றொரு நன்மையாக காணப்படுகின்றது.

உலகின் முதலாவது நாடு?
கொவிட் தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட முடக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டுள்ளதோடு, இதன் காரணமாக அந்நாடுகள் எரிபொருள் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்து வருகின்றன. அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் போன்ற வளர்ந்த நாடுகளிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவ்வாறான நாடுகள் ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை அறிவித்துள்ள போதிலும், இவ்வாறு QR குறியீடு போன்ற திட்டங்களை அமுல்படுத்தவில்லை என்றே அறிய முடிகின்றது.
குறித்த ஒதுக்கீட்டு முறைக்கு கட்டுப்படாமல், பதுக்கலையும், முறைகேடுகளையும் மேற்கொள்பவர்களைக் கட்டுப்படுத்தவே QR முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்பது ஒரு புறம் உண்மையான காரணமாக இருந்தபோதிலும், உலகின் முதன் முறையாக தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எரிபொருள் ஒதுக்கீட்டை மேற்கொள்ளும் நாடாக இலங்கை தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளப் போகின்றது என்பதை மறுபுறம் கொண்டாட முடியாமல் உள்ளது.
வீதிகளில் ஓடிய வாகனங்கள் வீதியோரத்தில் வரிசைகளில் ஓய்வெடுக்கும் காலம் கடந்து செல்ல, இலங்கைக்கு விடிவு காலத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பத்தை, ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நாடு முழுவதும் அமுல்படுத்தவுள்ள இந்த தேசிய எரிபொருள் அட்டை வழங்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்!