நெருக்கடி நீங்கும் வரை மக்கள் பொறுமை காப்பது அவசியம்!
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட கியூவரிசைகள் பெருமளவில் இப்போது குறைந்து விட்டன. பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் ஓரிரு நிமிடங்களிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடிகின்றது. சில பிரதேசங்களில் சிறிய தூர கியூவரிசையே காண முடிகின்றது. டீசல் பெறுவதற்காக வாகனங்கள் சிறிய தூர கியூவரிசையிலேயே காத்து நிற்கின்றன. நெடுநேரம் காத்து நிற்க வேண்டிய தேவை தற்போது கிடையாது.
மோட்டார் சைக்கிள்களும், முச்சக்கர வண்டிகளும் பெற்றோல் பெறுவதற்காக நாட்கணக்கில் கியூவரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்றதும் பெற்றோலை பெற்றுக் கொண்டு திரும்பிவிட முடிவதாக மோட்டார் சைக்கிளோட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அனைத்து வாகனங்களுக்கும் வாரத்தில் ஒருதடவை, குறிப்பிட்ட அளவு எரிபொருள் மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றது.
அவ்வாறு வழங்கப்படுகின்ற எரிபொருளானது தங்களது தேவைக்குப் போதுமானதாக இல்லையென்று சில தரப்பினர் புகார் கூறுகின்றனர். இன்றைய QR code முறைமையானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், வழங்கப்படுகின்ற எரிபொருளின் அளவு போதாமலுள்ளதென்ற புகார் மாத்திரமே சில தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றது.
வாரமொரு தடவை தங்களுக்கு வழங்கப்படுகின்ற ஐந்து லீற்றர் பெற்றோல் அன்றாட தொழிலை நடத்துவதற்குப் போதாமல் உள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் இரவுபகலாக ஆட்டோக்களை செலுத்தியே தங்களது தொழிலை மேற்கொள்கின்றனர். வாரமொரு தடவை வழங்கப்படுகின்ற ஐந்து லீற்றர் எரிபொருளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரமே தொழில் செய்ய முடியுமென்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் இவ்வாறு கூறுவதில் நியாயம் இல்லாமலில்லை. முச்சக்கரவண்டி வைத்திருப்போரின் அன்றாட தொழிலுக்கு பெற்றோல் அவசிய தேவையாகும். எனவே தங்களுக்கான வாராந்த பெற்றோலின் அளவு அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே அவர்களது கோரிக்ைகயாகும். இதே போன்றுதான் நகர்ப்பகுதிகளில் வீட்டுக்கு வீடு உணவு விநியோகம் நடத்துகின்ற தொழிலாளர்களுக்கும் வாராந்தம் கிடைக்கின்ற நான்கு லீற்றர் பெற்றோல் போதாமல் உள்ளது.
மக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகள் மற்றும் பொருட்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற லொறிகளுக்கும் தற்போது வாராந்தம் வழங்கப்படுகின்ற டீசல் போதாமல் உள்ளதாக குறை கூறப்படுகின்றது. இவர்கள் அத்தனை பேரும் கூறுகின்ற புகார்களில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் எமது நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமையில், இக்ேகாரிக்ைகயை உடனடியாகப் பூர்த்தி செய்வதென்பது இயலாத காரியமாகவே உள்ளது.
இலங்கையில் உள்நாட்டு வருமானம் மோசமாக வீழ்ச்சியடைந்து விட்டது. அந்நிய செலாவணி வருமானமும் பெருவீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டது. எனவே மோசமான டொலர் பற்றாக்குறை நிலவுகின்றது. நாட்டின் தேவைக்குப் போதுமான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதென்பது இலகுவான காரியம் அல்ல. தேவைக்ேகற்ப எரிபொருளை நாம் பெற்றுக் கொள்வதற்கு சில காலம் பொறுத்திருக்க வேண்டியுள்ளது. அதுவரை மக்கள் பொறுமை காப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR code முறைமையின்படி, மக்களுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படுகின்ற எரிபொருளானது அவரவர் தேவைக்குப் போதுமானதாக இல்லையென்பது அரசுக்குப் புரிகின்றது. ஆனால் ஒவ்வொருவருக்கும் வாராந்தம் குறிப்பிட்ட அளவு எரிபொருள் தவறாமல் கிடைக்கக் கூடியதாக உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாட்கணக்கில் காத்திருந்தோ, முட்டிமோதிக் கொண்டோ எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவலநிலைமை தற்போது இல்லையென்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேசமயம் எரிபொருள் விநியோகத்தில் நிலவிய முறைகேடும் தற்போது குறிப்பிடும்படியாக இல்லை. பெற்றோலை முறைகேடாகப் பெற்று, திருட்டு வியாபாரம் நடத்துவதற்கு QR code முறைமை முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஒரு லீற்றர் பெற்றோலை மூவாயிரம் ரூபா கொடுத்து கள்ளச்சந்தையில் பெற்றுக் கொள்ள வேண்டிய அநீதி இப்போது இல்லை. நாட்கணக்கில் கியூவரிசையில் நிற்பதற்கான திராணி உள்ளவர்களால் மாத்திரமே எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்ற கட்டாயமும் தற்போது கிடையாது. தேவைக்குப் போதுமானதாக உள்ளதோ இல்லையோ, வாராந்தம் குறிப்பிட்ட அளவு எரிபொருளை குளறுபடிகளின்றி பெற்றுக் கொள்ளக் கூடியதொரு நிம்மதி தற்போது ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் நிலவுகின்ற அத்தனை நெருக்கடிகளும் ஒரேநாளில் நீங்கி விடுமென மக்கள் எவரும் எதிர்பார்ப்பது தவறு. நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் நீண்ட காலமாக நிலவிய தவறுகளின் பலாபலன்களே இன்றைய நெருக்கடியாகும். அந்நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவதற்கும் சில காலம் தேவையென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவரை பொறுமையுடன் காத்திருப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை.
-தினகரன் ஆசிரியர் தலையங்கம்
08.08.2022