காந்தி கொலையும், பிராமணப் பத்திரிகைகளும்!

சாவித்திரி கண்ணன்

ன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்சும், இந்து மகாசபை போன்ற இயக்கங்களும் வேரூன்றி, விருட்சமாக வளர்ந்து, இந்த நாட்டையே தங்கள் பிடிக்குள் வைத்திருக்கின்றன என்றால், அதற்கு இந்த பிராமண இதழ்கள் மறைமுகமாக எப்படி பங்களித்தன என்பதை காந்தி கொலையின் போது இவர்கள் எழுதிய தலையங்கங்களே சாட்சியாகும்!

23.08.2022 அன்று ‘இந்து தமிழ் திசை’யில் காந்தி இறந்த போது வெளியான அன்றைய இந்து தலையங்கத்தை தமிழில் மொழி பெயர்த்து ஆவணப் பதிவாக வெளியிட்டு உள்ளனர்.

அந்த தலையங்கம் இப்படித் தான் ஆரம்பிக்கிறது;

”தேசப் பிதா மகாத்மா காந்தியடிகளை அறிவற்ற ஒருவர் புது தில்லியில் வெள்ளிக்கிழமை படுகொலை செய்துவிட்டார்…”

இந்த நீண்ட நெடிய தலையங்கத்தில் காந்தியின் அருமை, பெருமைகள் பற்றி உருக்கமாக விளக்கப்பட்டு உள்ளது. ஆனால், காந்தியைக் கொன்றவரின் பெயர் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் கூட எங்கும் இல்லை.

சமீபத்தில் எழுத்தாளரும், விஞ்ஞானியுமான நண்பர் அமலன் ஸ்டேன்லியிடம் உரையாடிய போது, காந்தியை பற்றிய பேச்சு வந்தது.

”எனக்கு ரொம்ப காலமாகவே காந்தியைக் கொன்றது ஒரு இந்து என்பதே தெரியாது! தீடீரென்று ஒரு நாள் காந்தியைக் கொன்றவர் இந்து என்பதை அறிய வந்த போது அதிர்ந்து போனேன்…” என்றார்.

இந்து மட்டுமல்ல, இந்து போல மற்ற பிரபலமான பத்திரிகைகளான கல்கி, ஆனந்த விகடன் போன்றவை கூட இந்த மாதிரியே கோட்சேவின் பெயரைத் தவிர்த்துள்ளன… என்பதை நண்பர் கடற்கரை மத்த விலாச அங்கதம் ‘காந்தி படுகொலை பத்திரிகை பதிவுகள்’ எனத் தொகுத்து எழுதியுள்ளதில் வெளிப்பட்டு உள்ளது.

நாதுராம் விநாயக் கோட்சே என்ற பெயரே அவர் இந்து என்பதை காட்டிக் கொடுத்திருக்கும். மேலும், இம் மாதிரியாக பெயர் வைப்பவர்கள் சித்பவன் பிராமணர்கள் தான் என்பதும் மக்களுக்கு தெரியும். ஆகவே, தான் அன்றைய பிரபல பிராமண பத்திரிகைகள் மிகக் கவனமாக காந்தியைக் கொன்ற நபரின் பெயரைக் கூட மறைத்து விட்டனரோ..என்று யோசிக்கத் தோன்றுகிறது.

கோட்சே காந்தியைக் கொல்வதில் தொடர் முயற்சிகள் செய்த வண்ணம் இருந்தார்! கொலைக்கு சில நாட்கள் முன்பாகக் கூட அவர் காந்தி மீது குண்டை வீசியதில் அது குறி தப்பியது. அதில் அவர் முன்பே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் மூலமாக பரவலாக அறியப்பட்டவர், இந்து மகா சபையின் முக்கியஸ்தர்களில் ஒருவர், ‘இந்து ராஷ்டிரா தள்’ என்ற இதழை நடத்தியதோடு, அதன் ஆசிரியருமாக இருந்தவர். ”காந்தி கொல்லப்பட வேண்டியவர்” என பகிரங்கமாக எழுதியும், பேசியும் வந்தவர். காந்தியின் மீதான அவரது கொலை முயற்சிகளும், அதில் அவர் சாதாரணமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதும் இரண்டு முறை நடந்துள்ளது என்பது கவனத்திற்கு உரியது.

அப்போது கல்கியில் வந்த தலையங்கம் ( 01.2.1948 தேதி போட்டு காந்தி கொல்லப்படுவதற்கு சற்று முன்பே வெளியானது) எழுதியுள்ளதாவது;

சென்ற புதன் கிழமையன்று காந்தி மகாத்மா பிரார்த்தனை நடத்திக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவன் அவர் மீது வெடிகுண்டை வீசினானாம். குண்டு வெடித்ததாம். காந்திக்கு யாதொரு ஆபத்தும் ஏற்படவில்லையாம்… ‘தம் மீது குண்டு வீசிய அந்த இளைஞனை ஒன்றும் செய்ய வேண்டாம்’ என்று காந்திஜி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது ஏசு நாதரின் அரிய கருணைச் செயலை நமக்கு ஞாபகப்படுத்துகிறது..’’ என கல்கி தலையங்கம் தீட்டி உள்ளது.

காந்தி ஒரு மகான். ஆகவே, அவர் தன்னை கொல்ல வந்தவனை ‘ஒன்றும் செய்ய வேண்டாம்’ எனக் கூறுவது ஆச்சரியமல்ல. ஆனால், பத்திரிகை ஆசிரியரான கல்கி என்ன எழுதி இருக்க வேண்டும்..?  ”காந்தியை கொல்ல முயன்றவர் இன்ன இயக்கதைச் சேர்ந்தவர் எனத் தெரிய வருகிறது. அந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கோட்சே என்ற நபரை தீவிரமாக விசாரித்து மீண்டும் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்றல்லவா எழுதி இருக்க வேண்டும்…? மேலும் காந்தியை கொல்ல முயன்ற கோட்சே குறித்த செய்திகள் பரவலாக நாளிதழ்களில் வந்துள்ள நிலைமையில், ‘யாரோ ஒருவன்’ என கல்கி எழுதியுள்ளார் என்பதும் கவனத்திற்கு உரியது.

எஸ்.எஸ்.வாசனின் ஆனந்த விகடன் மேற்படி இதழ்களைக் காட்டிலும் கொஞ்சம் தேவலாம். இந்த இதழிலும் கோட்சே பெயரை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளனர். அதே சமயம் ஒரு தனி மனிதன், இந்து மூர்க்கன் எனக் கூறியுள்ளனர். கோட்சே தொடர்பிலான இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ் தொடர்புகள் தொடர்பாக பேச்சு, மூச்சே இல்லை.

ஏன் இதை சொல்ல நேர்கிறது என்றால், அன்றே ஆர்.எஸ்.எஸ். இந்து மகா சபை குறித்த உண்மை தகவல்கள் மக்களுக்கு சரியாக – காந்தி கொலையுண்ட சரியான அந்த தருணத்தில் – சொல்லப்பட்டு இருந்தால், இந்த இயக்கங்களை வேரோடு வேராக, வேரடி மண்ணுடன் மக்கள் அழித்து துடைத்து எறிந்திருப்பார்கள். அவர்கள் கவனமாக பொத்தி வைத்து காப்பாற்றப்பட்டதால் தான் இன்று இந்த நாடே அவர்கள் பிடியில் சிக்குண்டு உள்ளது. இன்று கோட்சேவுக்கு சிலை வைத்து வணங்குவதும், அவர் நினைவு நாளில் போஸ்டர் அடித்து நினைவு கூர்வதும் எப்படி நடக்க முடிந்திருக்கிறது?

இதையெல்லாம் படிக்கும் போது, ‘எவ்வளவு உயர்ந்த மனிதர்களாக அறியப்பட்டவர்களாலும் அன்று ‘சாதி என்ற சட்டத்தில் இருந்து விலகி பொதுத் தன்மையில் நிற்க முடியவில்லையே…’ என்ற வருத்தம் தான் மிஞ்சுகிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் நாம் இன்றைய நாட்டு நடப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும்’ என்பதற்காகவே இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டி உள்ளேன்.

பிராமணனாக பிறந்தாலும், ‘குற்றம் குற்றமே’ எனச் சொல்பவர்கள் மிகச் சிலரே உள்ளனர்.

Tags: