பொய்களால் பொழுதளக்கும் மோடி அரசு!

-ஆர். எம். பாபு

பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி பாதையில் பயணப்படுவதாக பாஜக அரசு பொய்யான புள்ளி விபரங்களைத் தந்து கொண்டுள்ளது! ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! உண்மையில், அதிகமாக கடன்பட்டு, இந்தியா வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருப்பதை இந்தக் கட்டுரை தோலுரிக்கிறது!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 13, 2022 அன்று, ”அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதைத் தடுப்பது என்ன?” என்று தொழில்துறையினரை கேள்வி கேட்டார்.  இது, முதலீடுகளை கவர்வதில் இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலமாகும்! முதலீட்டாளர்களுக்கு உண்மையான புள்ளி விபரங்கள் சொல்லப்படுவதில்லை! உண்மையின் அடிப்படையில் தான் முதலீடுகளையும் மக்கள் நம்பிக்கையையும் ஈர்க்க முடியும்,

மோடி தலைமையிலான இந்த அரசு பதவி ஏற்றத்தில் இருந்து பொய்களை கட்டவிழ்த்துவிடுவதில் அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை எனும் விதத்தில் செல்வது உலகம் அறிந்த ஒன்று.  சென்ற ஆண்டு கூட நம் இந்திய பிரதமர் மோடி அவர்கள், “இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3 ட்ரில்லியன்  டொலர்களை அடைந்துவிட்டது” பெருமிதத்துடன் கூறினார்.  அதோடு 70 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைய முடியாதபோது கடந்த 5 ஆண்டு காலத்திலேயே இப்படியான வளர்ச்சியை அடைந்ததாகவும் கூறி சிலாகித்தார். ஆனால், அது உண்மையல்ல!

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் நாட்டின் உள்துறை அமைச்சர், ”இந்தியாவின் பொருளாதாரத்தை 5 மில்லியன் தொன் பொருளாதாரமாக மாற்றுவோம்” என்றார்.  உள்துறை அமைச்சருக்கு 5 ட்ரில்லியன் டொலர் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை புரியவைக்க வேண்டிய நிலை இருக்கிறது.

நாட்டின் உயரிய பொறுப்பில் இருப்போர் கொடுக்கும் பொருளாதார கணக்குகள், அறிக்கைகள் மற்றும் புள்ளிவிபரங்கள் பொருளாதாரம் படித்த அறிஞர்களாலும், நிபுணர்களாலும் முதலீட்டாளர்களாலும் மக்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதை உணர்ந்து பேச வேண்டும்.

இந்த பொருளாதார புள்ளி விபரங்கள் என்பது இவர்கள் இதற்கு முன்னர் பேசிய கீழ்க்கண்ட முத்துக்கள் அன்று.

உலக வெப்பமயமாதல் குறித்து விஞ்ஞானிகள் மாநாட்டில் மோடி அவர்கள் பேசியது போன்றோ,முதல் பிளாஸ்டிக் சர்ஜரியே விநாயகரின் முகம் தான் போன்றோ,

விமானத்தின் மூலம் துல்லிய தாக்குதல் நடத்த மேகமூட்டம் ரேடார்க்கு இடைஞ்சலாக இருப்பது போன்றோ,

ஒவ்வொருவருக்கும் கணக்கில் 15 லட்சம் போடும் அளவுக்கு வெளிநாட்டில் கருப்புப்பணம் இருப்பு 1950 லட்சம் கோடிகள் போன்றோ,

1988காலங்களிலே DIGITAL CAMERA, EMAIL ஆகியவை கண்டுபிடிக்காத காலத்திலேயே உபயோகித்ததாக பேசியது போன்றோ

பேசினால் நாம் என்ன பதில் சொல்வது?

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூட NO DATA AVAILABLE என்று NDA அரசை விமர்சித்தார்.  பல தரவுகளை இல்லாமல் செய்வதுவும், இருக்கும் தரவுகளை மாற்றி தருவதிலும் மட்டுமே இந்த அரசாங்கம் காலத்தை செலவிட்டு இருக்கிறது. அது தான் இந்த இக்கட்டான பொருளாதார நிலையை நோக்கி நம் நாட்டை கொண்டு செல்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த அரசு செய்த (சா)வேதனைகளை பட்டியல் இடுகிறேன்.

GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி)

ஏற்கனவே இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) ஐ கணக்கிட இருந்த சூத்திரத்தை அவர்களுக்கு தகுந்தவாறு 2015 லே மோடி அமைச்சரவை மாற்றி அமைத்தார்கள்.  மேலும்  ஜிடிபி வளர்ச்சியைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்ட அடிப்படை ஆண்டை 2011-12 என்று இவர்கள் மாற்றினார்கள். அதன் பின்னர் இவர்கள் வசதிக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியை முகமதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி (NOMINAL GDP) என்றும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (REAL GDP) என்று இரு வேறு குறியீடுகளாக சொல்லி வருகிறார்கள்.  எப்போதும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (REAL GDP) முறை தான் சரியானதாக இருக்கும்.  அதே வேளையில் முகமதிப்பு உள்நாட்டு உற்பத்திக்கும் (NOMINAL GDP) உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான (REAL GDP) வேறுபாடு 5 விழுக்காடு முதல் 7.5 விழுக்காடு என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த மோடி அமைச்சரவை கொடுக்கும் முகமதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள வேறுபாடுகள் 60 விழுக்காடு வரை இருப்பது வேண்டுமென்றே இப்படியான தவறான தகவல்களை தருவதாக தோன்றுகிறது.  இப்படி இவ்வளவு பெரிய வேறுபாடு இருப்பதை உணர்ந்தும் இந்த முகமதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரத்தை மட்டுமே பெருமையாக பேசும் நிலை இருக்கிறது.. சென்ற ஆண்டு கூட பிரதமர் மோடி அவர்கள் ”இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3 ட்ரில்லியன்  டொலர்களை அடைந்துவிட்டது ”என்று இந்த NOMINAL GDP அடிப்படையில் அதாவது, ரூ. 235 லட்சம் கோடி GDP என்பதை டாலரால் (1$ = 75.91) வகுத்து தான் 3 ட்ரில்லியன் டொலர் இலக்கை எட்டி விட்டோம்” என்று மோடியின் அமைச்சரவை தவறாக அறிக்கைகளை விட்டு வந்தது.

கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தரவுகள் வருடாந்திர முகமதிப்பு உள்நாட்டு உற்பத்தி (NOMINAL GDP) (லட்சம் கோடிகளில்), உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (REAL GDP) (லட்சம் கோடிகளில்) மற்றும் இவற்றிற்கு இடையேயான வித்தியாச விகிதாச்சாரம்.

பொருளாதார குறியீடுகள் என்பது நம் உடலின் ECG / PULSE போன்றது. அது இவ்வளவு பெரிய அளவில் மாறுபட்டால் அதற்கான சிகிச்சை தவறாக போய்விடும் என்பது போல பொருளாதாரத்தை சரி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகளும் தவறாகவே தான் ஆகும்.  இந்த வேறுபாடு ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டு வருவது என்பதும் NOMINAL GDP அடிப்படையிலேயே பொருளாதார முடிவுகள் எடுப்பதுவும் நாட்டிற்கு சரியானது அல்ல.

ஆகவே, மோடி அறிவித்தது போல நாம் 3 டிரில்லியன் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை அடையவில்லை. உண்மையான GDP என்பது 1.93 ட்ரில்லியன் டொலர்கள் தான் என்பது மட்டுமல்ல, அந்த இலக்கை 2013-14 லே குறிப்பாக சென்ற காங்கிரஸ் அரசாங்கம் அடைந்து விட்டது.  அதை மீண்டும் இந்த அரசு தட்டு தடுமாறி தொட்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மையான செய்தி.

இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலமான 2013–14 லே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்திய ரூபாய் மதிப்பில் . 98.01 லட்சம் கோடிகளாகவும், அதே அமெரிக்க டொலரில் 1.92 டிரில்லியனாகவும் இருந்தது.

அப்போது நம் ரூபாயின் மதிப்பு டொலர் ஒன்றுக்கு ரூ.50.94 ஆக இருந்தது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்து ரூ. 67.51 ஆக சரிந்தது. இந்த சரிவுக்கு பின்னர்

#  2014-15லே நம் உள்நாட்டு உற்பத்தி 105.27 லட்சம் கோடியாக 2013–14 ஆண்டை விட 7.4 விழுக்காடு இந்திய ருபாய் மதிப்பில் வளர்ச்சியும், அதே டொலர் மதிப்பில் 1.56 ட்ரில்லியன் டொலராக சென்ற ஆண்டை விட குறைந்து 2013–14 ஆண்டை விட -18.95 விழுக்காடு .சரிவையும் சந்தித்தது.

#  2015-16லே நம் உள்நாட்டு உற்பத்தி 113.69 லட்சம் கோடியாக 2014–15 ஆண்டை விட 8.00 விழுக்காடு இந்திய ருபாய் மதிப்பில் வளர்ச்சியும், அதே டொலர் மதிப்பில் 1.71 ட்ரில்லியன் டொலராக 2014–15 ஆண்டை விட 9.79 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது..

#  2016-17லே நம் உள்நாட்டு உற்பத்தி 105.27 லட்சம் கோடியாக 2015–16 ஆண்டை விட 7.4 விழுக்காடு இந்திய ருபாய் மதிப்பில் வளர்ச்சியும், அதே டொலர் மதிப்பில் 1.56 ட்ரில்லியன் டொலராக 2015–16 ஆண்டை விட 10.88 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது.

#  2017-18லே நம் உள்நாட்டு உற்பத்தி 131.44 லட்சம் கோடியாக 2016–17 ஆண்டை விட 6.8 விழுக்காடு இந்திய ருபாய் மதிப்பில் வளர்ச்சியும், அதே டொலர் மதிப்பில் 2.02 ட்ரில்லியன் டாலராக 2016–17 ஆண்டை விட 6.40 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது

#  2018-19லே நம் உள்நாட்டு உற்பத்தி 140.03 லட்சம் கோடியாக 2017–18 ஆண்டை விட 6.5 விழுக்காடு இந்திய ருபாய் மதிப்பில் வளர்ச்சியும், அதே டொலர் மதிப்பில் 2.01 ட்ரில்லியன் டொலராக 2017–18 ஆண்டை விட 0.07 விழுக்காடு .சரிவையும் சந்தித்தது.

#  2019-20லே நம் உள்நாட்டு உற்பத்தி 145.69 லட்சம் கோடியாக 2018–19 ஆண்டை விட 4 விழுக்காடு இந்திய ருபாய் மதிப்பில் வளர்ச்சியும், அதே டொலர் மதிப்பில் 1.93 ட்ரில்லியன் டொலராக 2018–19 ஆண்டை விட -4.23 விழுக்காடு .சரிவையும் சந்தித்தது.

#  2020-21லே நம் உள்நாட்டு உற்பத்தி 135.12 லட்சம் கோடியாக 2019–20 ஆண்டை விட -7.3 விழுக்காடு இந்திய ருபாய் மதிப்பில் சரிவையும், அதே டொலர் மதிப்பில் 1.85 ட்ரில்லியன் டொலராக 2019–20 ஆண்டை விட -4.52 விழுக்காடு .சரிவையும் சந்தித்தது.

#  2021-22லே நம் உள்நாட்டு உற்பத்தி 147.00 லட்சம் கோடியாக 2019–20 ஆண்டை விட 8.8 விழுக்காடு இந்திய ருபாய் மதிப்பில் வளர்ச்சியும், அதே டொலர் மதிப்பில் 1.93 ட்ரில்லியன் டொலராக 2020–21 ஆண்டை விட 4.92 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது!

மேற்கண்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், கடந்த 8 ஆண்டுகளில் இந்திய ரூபாய் மதிப்பில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 5.3 விழுக்காடு வளர்ச்சியும், அதே அமெரிக்க டொலர் மதிப்பில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.50 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே எட்டி இருக்கிறது.  இந்த 8 ஆண்டுகளில் வளர்ச்சியே இல்லாமல் இருப்பதற்கு இந்த அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும், தவறான திட்டங்களும் தான் காரணம்.

பொதுவாக இந்த ஆளும் அரசுகள், தங்களது உள்நாட்டு வளர்ச்சியை காட்டுவதற்கு என்று சில நேரங்களில் இந்திய ரூபாயின் மதிப்பை குறைப்பது பண வீக்கத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கையின் மூலம் இப்படியான பொருளாதார வளர்ச்சியை காட்டிக் கொண்டு வருகிறார்கள்.   இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு வளர்ச்சிகளை செய்ததாகவும், புள்ளி விபரங்களை திருத்தியும் வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் காட்டும் வளர்ச்சி என்பது என்ன என்று இங்கே ஒரு விவசாயி மொழியில் நாம் காண முடியும்.

விவசாயியின் தோட்டத்தில் சென்ற வருடம் 2020-21 லே 25 மூடை நெல் உற்பத்தி செய்தேன். மூடை ரூ. 1,500/- வீதம் விற்றார்.  இந்த வருடம் 2021-2022 லே 20 மூடை உற்பத்தி வந்தது. மூடை ரூ. 1,950/- வீதம் விற்றார்.

அந்த விவசாயி “சென்ற வருடத்தை விட இந்த வருடம் மகசூல் குறைவு” என்பார்.  அப்படி தான் நாம் அனைவரும் சொல்வோம்.. இன்னும் விபரம் அறிந்தோர் 20% உற்பத்தி குறைந்துவிட்டது என்பார்கள்.

இந்த ஆட்சியாளர்களை பொறுத்தவரை இதை வளர்ச்சி என்கிறார்கள்.. ரூபாயின் மதிப்பை குறைத்துக்கொண்டும், பணவீக்கத்தை அதிகப்படுத்தி விலைவாசியை ஏற்றிக்கொண்டும் அதை வளர்ச்சி என்றே சொல்வார்கள்.

இப்படியான தவறான கணக்கீடுகளை இட்டு, தவறான புள்ளிவிபரங்களை கொடுத்து வருவதால் தான் முதலீட்டாளர்களை இந்த அரசால் கவர முடியாமல், உள்ளது.

முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, அனைவருமே எதிர்பார்ப்பது உண்மையான வளர்ச்சியையும் உண்மையான தரவுகளை மட்டுமே தவிர பொய்யான தரவுகளை அல்ல!

இந்திய அரசின் கடன்

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களின் கடன், 2014 முதல் 2022 வரை நாம் பார்த்தோமேயானால் கடன் இரண்டு மடங்கை தாண்டி நிற்கிறது.  குறிப்பாக அனைத்து மாநிலங்களின் மொத்த கடன் மார்ச்-2014 அன்று 24.71 லட்சம் கோடிகளாக இருந்த கடன், மார்ச்-2022 அன்று 69.47 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது.

மாநில அரசின் கடன்

மாநிலங்கள் இந்த நிதி நெருக்கடியில் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அடிப்படை காரணம் சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பங்கு, மானியங்கள் ஆகியவற்றை வழங்காததும், ஒன்றிய அரசின் முறையற்ற பொருளாதார கொள்கைகளும் தான் காரணம்.

ஒன்றிய அரசின் கடன்

ஒன்றிய அரசின் கடன் சுமையை கணக்கில் கொண்டால் அது 2014 லே 53.11 லட்சம் கோடியாக இருந்த கடன் 2022 லே 128 லட்சம் கோடியாக ஏறக்குறைய மூன்று மடங்கை நோக்கி அதிகரித்து இருக்கிறது.

தவறான நிர்வாகத்தினாலும், தவறான பொருளாதார கொள்கைகளாலும் ஒன்றிய அரசு தானும் கெட்டு, மாநில அரசுகளையும் கெடுத்து இருக்கிறது.  ஆக மொத்தத்தில், மாநில அரசுகளின் கடன் சுமையும், ஒன்றிய அரசின் கடன் சுமையும் சேர்ந்து 1.81 லட்சம் கோடி கடன் சுமை இருக்கிறது.  இதற்கான வருடா வருடம் கட்ட வேண்டிய வட்டியும் அதிகரித்துக் கொண்டே செல்வது நாட்டின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக அமையும்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் இவர்கள் மிச்சப்படுத்தியதாக சொன்ன தரவுகள் உங்கள் பார்வைக்கு.  இவர்கள் மிச்சப்படுத்தியத்தை விட ஊதாரித்தனமாக செலவு செய்து இந்த நாட்டை நாசமாக்கி இருக்கிறார்கள் என்பது புலப்படும்.

#  எல்லாரும் வங்கியில் கணக்கு துவங்குங்கள்.. இதன் மூலம் மட்டுமே கேஸ் மானியம் விநியோகிக்கப்படும். இந்த திட்டத்தால் அரசுக்கு வருடத்திற்கு 2 லட்சம் கோடி மிச்சமானது என்று அறிவித்தார்கள்.  கடையிசியில் அந்த மானியம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, *இன்று வரை இந்த அரசாங்கம் மக்களிடம் வரியாக புடுங்கிய பணம் மட்டும் 29.௦௦ லட்சம் கோடிகள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த பெட்ரோல் மூலம் மட்டும் ஈட்டினார்கள்.  எங்கே போனது?*

#  ஆதார் கார்டு ரேஷன் கார்டு இணைக்கவேண்டும்.. இணைப்பதால் ஊழல் ஒழிக்கப்படும். அதன் மூலம் வருடம் 5 லட்சம் கோடி மிச்சம் என்றார்கள்.  ஏழாண்டுகளில் 35 லட்சம் கோடி வரை வரவு வந்திருக்க வேண்டும்.  எங்கே அந்த பணம்?

#  மக்களின் உழைப்பால் சேர்த்த பொதுத்துறைகளை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அந்த பணம் எல்லாம் எங்கே போனது?

#  காங்கிரஸ் காலத்தில் ரிசர்வ் வங்கியில் இருந்த இருப்பு 3 லட்சம் கோடிகளையும் தடவி வழித்து நக்கிவிட்டார்கள். அந்த பணம் எங்கே போனது?

அதானிக்கும், அம்பானிக்கும் மட்டும் இது வரை 12 லட்சம் கோடி ருபாய் கடன் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.

இப்படி இந்த அரசாங்கம் எந்த வழியிலும், வகையிலும் கணக்கு சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதாரத்தில் குருட்டுத்தனமாக நடந்து கொண்டு இருக்கிறது  நாடு மிக ஆபத்தான ஒரு பொருளாதார நிலையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை நாம் தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது.

ஆம். இந்த எட்டு ஆண்டு காலங்களில் எதையும் செய்யவில்லை என்று முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் “உற்பத்தி சார்ந்த மானியம்” PRODUCTION LINKED INCENTIVE பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

உண்மையான பிரச்சனை என்னவென்றால், அரசாங்கம் இன்னும் குறுக்குவழிகளை மட்டுமே யோசித்து வருகிறது.. மனித மூலதன முதலீட்டை மேம்படுத்துதல், நியாயமான முறையில் நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை உருவாக்குதல், சுங்கவரி மற்றும் வரிகளை தொடர்ந்து மறுசீரமைப்பதை நிறுத்துதல் போன்ற நீண்ட கால திட்டங்களில் கவனம் செலுத்தாதது உற்பத்தியாளர்கள் முதலீடு செய்யவும், உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் உதவாது.

இனியாவது இந்த அரசாங்கம் தவறான புள்ளிவிபரங்களை வெளியிட்டு அதில் பெருமிதம் கொள்வதிலும், மக்களை திசை திருப்பும் செயல்களை மட்டும் யோசித்து வருவதை கைவிட்டு ஆக்க பூர்வமான திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு வசதி, வரி குறைப்பு, பணவீக்கம் குறைப்பு போன்றவற்றில் முழு கவனம் செலுத்தி நாட்டின் மொத்த உற்பத்தியை பெருக்குவதோடு கடன் சுமையை குறைப்பதோடு, மாநிலங்களின் நம்பிக்கையை பெறும் விதத்தில் நடக்கவேண்டும்,

Tags: