பிரித்தானியாவின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராகிறார் ரிஷி சுனக்!

வினோத் அருளப்பன்

பிரித்தானியாவின் அரசமுடியை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் போலவே பிரித்தானியா பிரதமர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷி சுனக் (Rishi Sunak).

பிரித்தானியாவின் வரலாற்றில், அந்நாட்டின் பிரதானமான கன்சர்வேடிவ் கட்சி, முதல் முறையாக வெள்ளையர் அல்லாத பிரதமரைத் தேர்ந்தெடுக்க காரணம், இங்கிலாந்து மக்களுக்கு ரிஷியின் மீது இருக்கும் நம்பிக்கையும் ஆதரவுமே.

நிதியமைச்சர் பதவி விலகல்!

கடந்த ஜூலை மாதம் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையை விட்டு நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் விலகும்போது, அவர் சொன்ன காரணம் “பிரதமர் ஜான்சனின் பொருளாதார கொள்கைகள், தன்னுடைய பொருளாதார கொள்கைகளுக்கு நேர்மாறாக இருக்கிறது. அவற்றால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீரமைக்க முடியாது”. என்றார்.

அந்த நொடி முதல், தங்களின் குரலும் ரிஷியின் குரலும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை உணர்ந்த இங்கிலாந்து மக்கள், ரிஷி க்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்..

போரிஸ், லிஸ் ராஜினாமா!

அவரை தொடர்ந்து பல அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையை விட்டு வெளியேறினர். இறுதியாக போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

இதை தொடர்ந்து ரிஷி பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனாலும் கன்சர்வேடிவ் கட்சியின் உள் அரசியல் காரணமாக லிஸ் டிரஸ் (Liz Truss) மற்றும் ரிஷி சூனக் இடையேயான போட்டியில் லிஸ்சை பிரதமராக கட்சியின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

அப்படியிருந்தும் இங்கிலாந்தை ஆட்டிவரும் பொருளாதார நெருக்கடி, லிஸ்சின் பிரதமர் நாற்காலியையும் ஆட்டியது. விளைவு, பதவியேற்று 45 வது நாள், தனது அதிகாரப்பூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் தெருவின் வாசலில், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை முன்னேற்ற திட்டங்கள் இல்லாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டு, ராஜினாமா செய்வதாக அறிவித்தார் லிஸ்.

மீண்டும் போட்டி!

இது ரிஷி சுனக் ‘சுட்டிக்காட்டிய’ தவறான பொருளாதாரக்கொள்கைகள் குறித்த பேச்சுகள் சரி தான் என்ற கருத்து மக்களிடையே மீண்டும் எழுந்தது. இதுவே ரிஷி மீதான நம்பகத்தன்மை மக்களிடம் மீண்டும் அதிகரித்து அவருக்கு ஆதரவும் பெருகியது.

எனினும் அவருக்கு போட்டியாக பென்னி மார்டண்ட் (Penny Mordaunt) மற்றும் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ஆகியோரும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.

பெரும்பான்மை ஆதரவு!

அதனைதொடர்ந்து இன்று நடைபெற்ற தேர்தலில், பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட ரிஷிக்கு 142 எம்பிக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் பென்னி மோர்ட்டான்ட்டுக்கு 30 க்கும் குறைவான எம்பிக்களே ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து பென்னி போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதனால், கடந்த முறை போன்று கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்கும் இறுதி சுற்று வரை செல்லாமல், நேரடியாக எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமராக தேர்வாகியுள்ளார் ரிஷி சுனக்.

இதன்மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர், வெள்ளையர் அல்லாத ஒருவர் முதன்முறையாக பிரித்தானியா மக்களின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

‘இன்போசிஸ்’ (Infosys) தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷிதா மூர்த்தியின் கணவர் தான் ரிஷி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: