ரிஷி சுனக் தேர்வு: மாலனுக்கு ஒரு பதில்!

-சமஸ்

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி மூத்த பத்திரிக்கையாளர் மாலன் உள்ளிட்ட சிலர் இது ஏதோ இந்தியாவுக்கான வெற்றி என்பதுபோல கொண்டாட்டத் தொனியில் குறிப்புகளை எழுதி இருந்தனர். 

வெளிநாட்டு பூர்விகம் கொண்டவரை பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுப்பது அந்நாட்டு மக்களின் ஜனநாயக பண்பைக் காட்டுகிறது. இதில் இந்தியர்கள் குதிக்க என்ன இருக்கிறது? சொந்த நாட்டிலேயே ஒரு முஸ்லிம் தலித் அல்லது இந்தி பேசாதவர்களை நம் நாடு எந்த இடத்தில் வைத்திருக்கிறது? அவர்களால் இந்திய பிரதமராவதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சோனியா பிரதமர் ஆகக் கூடாது என்ற சொன்ன வாய்கள்தான் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் ஆனதைக் கொண்டாடுகின்றன. இது நம்முடைய இரட்டைத்தனம் இல்லையா என்று கேட்டிருந்தேன்.

பல நூற்றுக்கணக்கானவரால் நேற்று பகிரப்பட்டு அந்தப் பதிவு பெரிய வைரலானது. அது சம்பந்தமாக எழுந்த ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “என் வாரிசு என்று காந்தியால் அறிவிக்கப்பட்ட ராஜாஜி காங்கிரஸ் தலைவராகவோ பிரதமராகவோ ஆக முடியாததற்கு அவருக்கு இந்தி பேச தெரியாது என்பதும் முக்கியமான ஒரு காரணம்” என்று சொல்லி இருந்தேன். 

மாலன் இதற்கு இன்று எதிர்வினையாற்றி இருக்கிறார். சோனியாவை வழக்கம்போல தாக்கியிருக்கும் அவர், தலித்துகள் முஸ்லிம்கள் சம்பந்தமான என்னுடைய கேள்வியைத் தவிர்த்திருக்கிறார். இந்தி சம்பந்தமான என்  குற்றச்சாட்டுக்கு, “இந்தி பேசாத எத்தனையோ பேர் காங்கிரஸ் தலைவர்களாக ஆகியிருக்கின்றனர்” என்று அன்னிபெசன்டையும் காமராஜரையும் உதாரணமாகச் சொல்லி வழக்கை முடித்திருக்கிறார்.

என்னுடைய அடிப்படைக் கேள்வி சுதந்திர இந்தியாவின் பிரதமர் பதவி தொடர்பானது. காங்கிரஸ் தலைவர் பதவி ராஜாஜி விவகாரத்தில் ஒரு கூடுதல் உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வளவுதான். அதிலுமேகூட மாலன் சுட்டும் அன்னிபெசன்ட், காமராஜர் உதாரணங்கள் சரியானவை அல்ல.

அன்னிபெசன்ட் காங்கிரஸ் தலைவராக இருந்தது 1917இல். காந்தி 1920இல் இந்திய அரசியலின் மையத்துக்கு வந்து காங்கிரஸ் ஒரு பெரும் வெகுஜன அமைப்பு ஆவதற்கு முன்பு; அதாவது, மேட்டுக்குடிகளின்  கட்சியாக மட்டுமே அது இருந்த நாட்களில். மேலும், அன்றைய இந்தியாவானது இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருந்தது என்பதையும், ஒப்பீட்டளவில் இந்துக்கள், இந்தி பேசுவோர் பிரதிநிதித்துவம் அன்று குறைவு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ராஜாஜியின் காங்கிரஸ் காலகட்டம் 1950களுக்கு முற்பட்டது. இருந்தும் ராஜாஜியால் ஏன் காங்கிரஸ் தலைவராகக்கூட முடியவில்லை என்றால், வெளிப்படையாகத் தெற்குக்கான  நியாயத்தை முதன்மைப்படுத்தியவர் அவர். சித்தாந்த ரீதியான அவருடைய எல்லா பார்வைகளிலும் இது பிரதிபலித்தது. “பாகிஸ்தான் போகட்டும்” என்பதோ “காஷ்மீரைப் பிரித்துக் கொடுத்திடலாம்” என்பதோ செல்வாக்கு மிக்க வட இந்திய தலைவர்களிடம் இருந்து அவ்வளவு வெளிப்படையாக வரக்கூடிய வார்த்தைகள் அல்ல. 

காமராஜர் 1963இல் தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். அடிப்படையில் அது நேருவைக் காப்பதற்கான திட்டம் – கே பிளான். பெரியார் குறிப்பிட்டபடி காமராஜர் மேற்கொண்ட அரசியல் தற்கொலை அது. 

இயல்பான தலைவர் தேர்வு அல்ல. பதிலீடு.  காமராஜர் பிரதமர்களை உருவாக்கினார் என்று நமக்கு நாமே ஆறுதல் அடைந்துகொள்வதற்குப் பதிலாக ‘காமராஜரால் ஏன் பிரதமராக முடியவில்லை?’ என்று கேள்வி எழுப்பிக்கொண்டால் இந்தி ஆதிக்கத்தின் முகம் வெளிப்படும்.

மாலன் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் தம்முடைய நம்பிக்கைகளுக்கு ஏற்ப வரலாற்றை வளைப்பதற்குப் பதிலாக சமகால உண்மைகளுக்கு முகம் கொடுப்பது பத்திரிகையாளர்களிடம் ஒரு சமூகம் எதிர்பார்க்கக்கூடிய அடிப்படை விழுமியம் ஆகும்.

என் கேள்வி எளிமையானது. ஒரு தலித் அல்லது ஒரு முஸ்லிம் அல்லது இந்தி தெரியாத ஒரு சிக்கிமியர் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் நம் நாட்டின் பிரதமராகும் சாத்தியம் அவருக்கு வெகுஜன அரசியலில் இருக்கிறதா? அப்படி இல்லை என்பதுதான் நிதர்சனம் என்றால், இவ்வளவு பெரும்பான்மைவாதத்தில் ஊறியிருக்கும் நாம் பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ மிகச் சிறுபான்மையினரான ரிஷி, கமலாவின் தேர்வை முன்வைத்து இந்திய பெருமை பேச என்ன இருக்கிறது?

நாம் கொண்டாட ஏதும் உண்டா?

-சமஸ்

பிரிட்டனை பிரதமராக ரிஷி சுனக் நல்லபடி ஆளட்டும், வாழ்த்துகள்! 

இந்த நேரத்தில் மறைமுகமாக எம்பிக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பிரதமர் பதவியில் அமரும் இந்திய, இந்துப் பின்னணியைக் கொண்ட ரிஷி சுனக்கை மட்டும் அல்ல; நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லண்டன் மேயர் பதவிக்கும் ஒரு வெளிநாட்டு பூர்வீகர் – பாகிஸ்தானைப் பின்புலமாகக் கொண்ட முஸ்லிம் சாதிக் கானை – பிரிடிஷார் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்  என்பதையும் நினைவில் கொள்வோம்.

இந்தியர்களுக்கு இதில் உள்ள சேதி என்ன? வெளியிலிருந்து வருவோரையும்கூட ஒரு சமூகம் எந்த அளவுக்கு அரவணைக்கிறது, மதிப்பளிக்கிறது, பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதுதான்! 

இன்று ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக ஆவதையும், நேற்று கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் ஆனதையும் கொண்டாடும் அதே வாய்கள்தான் கடந்த காலத்தில் சோனியா இந்திய பிரதமர் ஆவதை எதிர்த்து சுதேசி எதிர் விதேசி நியாயம் பேசிப் புறந்தள்ளின என்பதை மறக்க முடியுமா? இது தற்செயலா அல்லது இந்தியர்களுக்கே உரிய இரட்டை நாக்கின் இயல்பா?

அட, வெளிநாட்டுப் பின்னணி கொண்ட சோனியா இருக்கட்டும், இந்தியாவுக்குள்ளேயே பிறந்த முஸ்லிம்கள், தலித்துகள் என்றைக்கு இந்த நாட்டில் பிரதமராக முடியும்? இந்தி தெரிந்திராத ஒரு காஷ்மீரியோ, சிக்கிமியரோ பிரதமர் பதவியைக் கற்பனை செய்ய முடியுமா?

பெருமை கொள்ள ஏதும் இல்லை… 75 ஆண்டு கால சுதந்திரத்தில், ஒரு ஜனநாயக நாட்டின் சொந்த மக்கள் இடையே இன்னமும் இவ்வளவு பாகுபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் வைத்திருக்கும் நாம் இதுகுறித்து வெட்கப்பட வேண்டும்; நமக்கு நாமே சுய பரிசீலனைக்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும்!

Tags: