மீண்டும் பிரேசில் ஜனாதிபதியானார் லூலா டி சில்வா
பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூலா டி சில்வா (Luiz Inácio Lula da Silva) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில், வலதுசாரி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி பொல்சோனாரோ (Jair Bolsonaro) , இடதுசாரி வேட்பாளர் லூலா டி சில்வா உள்பட 11 பேர் போட்டியிட்டனர்.
இதில், லூலா டி சில்வா 47.9 சதவிகித வாக்குகளும், பொல்சோனாரோ 43.6 சதவிகித வாக்குகளும் பெற்றனர். பிரேசில் அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் முதல் இரு இடங்களைப் பெற்றவர்கள் இரண்டாம் சுற்று தேர்தலில் போட்டியிடுவர்.
அதன்படி, இரண்டாவது சுற்று தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து எண்ணப்பட்ட வாக்குகளில், வெற்றிக்கு தேவையான 50 சதவிகிதத்தை லூலா பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பதிவான வாக்குகளில், லூலா 50.9 சதவிகித வாக்குகளும், பொல்சோனாரோ 49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மூன்றாவது முறையாக இடதுசாரி கட்சியின் தலைவர் லூலா டி சில்வா ஜனாதிபதியாவது உறுதியாகியுள்ளது. உலக நாட்டு தலைவர்கள் பலரும் லூலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யூனியன் தலைவராக இருந்த லுலா டி சில்வா பிரேசிலின் அதிபராக 2003 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தவர். இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போல்சோனாரோவை வெற்றிகொண்டு மூன்றாவது முறையாக தற்போது லுலா டி சில்வா அதிபராகிறார்.
பிரேசிலில் ’வறுமையை ஒழிப்பேன்’ என்ற தீவிர பிரச்சாரத்தின் விளைவாக இந்த வெற்றியை லுலா டி சில்வா பெற்றிருக்கிறார். மாறாக, பொல்சோனாரா ’கடவுள் குடும்பம் நாடு’ என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தோல்வி அடைந்திருக்கிறார். வெற்றி பெற்ற லுலா டி சில்வாவுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.