யாழ்ப்பாணத்தை உலுக்கும் போதை அரக்கர்கள்

சுமித்தி தங்கராசா

அண்மையில் மன்னாரில் கைப்பற்றப்பட்ட கஞ்சாப்பொதிகள் (cannabis)

னது வாழ்க்கையே அழியும் என நான் நினைக்கவில்லை” ஆரம்பத்தில் கஞ்சா பத்துவதற்கு நண்பர்கள் பழக்கிவிட்டார்கள். சிறிது நாட்களின் பின்னர் ஹெரோயின் பாவிக்க கற்றுத் தந்தார்கள். என்னுடைய எதிர்காலமே சிதைக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை.” என போதைப் பொருளுக்குள் அடிமையான பாடசாலை மாணவன் கவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அழுதான்.

யாழ்ப்பாணத்தில் உயிர்க்கொல்லி போதைப் பொருளைப் பயன்படுத்தி 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். 300க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் பாவனை காணப்பட்டாலும், குறிப்பாக, யாழ். நகர்ப்பகுதியில் நாவாந்துறை, குருநகர், மணியம்தோட்டம், திருநெல்வேலி பாற்பண்ணை, கல்வியங்காடு, மானிப்பாய், சக்கோட்டை, திருநகர், கொட்டடி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும், கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட செல்வபுரம், யோகபுரம் கிராமங்களும் போதைப்பொருள் கூடாரமாக செயற்படுகின்றதாகவும் பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களில் ஹெரோயின், போதை மாத்திரை, ஐஸ் போன்ற போதைப்பொருட்களின் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த மூன்று மாதங்களில் யாழ். நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் 359 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமானோர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 13 வயது முதல் 28 வயது வரையான இளைஞர்கள் யுவதிகள் போதைப்பொருள் மாபிஃயாக்களின் வலையில் வீழ்ந்திருகின்றார்கள். வியாபார முகவர்கள் இவர்களின் மனதை குழப்பி, போதைப்பொருளை பயன்படுத்த தூண்டுகின்றார்கள். ஒரு தடவை பயன்படுத்தியவர்கள் தாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்காக, பணத்தை தேடி அலைகிறார்கள். இதனால், யாழ்ப்பாணத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை, திருட்டு, வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன.

சாதாரண இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்யப்படும் ஹெரோயின் மற்றும் ஐஸ் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் ஊடுருவியுள்ளது. பிரபல பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்படுகின்றார்கள். அண்மையில் மாணவர்கள் ஹெரோயின் பயன்படுத்தியதாக, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் பல மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு வழங்குபவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போது, சிறுவர் முதல் பெண்கள் வரை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிவிட்டனர் என்ற கருத்தும் பரவலாக காணப்படுகின்றது.

நாளொன்றிற்கு சராசரியாக 4 முதல் 5 பெண்கள் ஹெரோயின் உட்கொள்கிறார்கள், பாழடைந்த வீடுகளில் பெண்கள் குழுவாக இணைந்து ஹெரோயின் பயன்படுத்திய போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள்

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதால், எங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். போதைப்பொருள் மாபிஃயாவைக் கட்டுப்படுத்த பொலிஸாரால் மட்டும் முடியாது. அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். தகவல்களை வழங்க வேண்டும். இங்கு யாருமே தகவல் தர முன்வருவதில்லை. தகவல் தந்தால், தங்களுக்குப் பிரச்சினை என நினைத்து தகவல் தர மறுக்கின்றார்கள்.

அத்துடன், சில பாடசாலை மாணவர்களையும் கைது செய்கின்றோம். அவர்களை சிறுவர் நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைத்துள்ளோம். பாடசாலைகளுக்கு அருகில் கடை வைத்திருப்பவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். பிள்ளைகளின் செயற்பாடுகளை அவதானிக்க வேண்டும், பிள்ளைகளுடன் ஒருவேளையேனும் கதைத்து, தேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும். பாடசாலைக்கோ, தனியார் வகுப்பிற்கோ சென்று வர நேரம் தாமதமாகினால் காரணங்களை அறிய வேண்டும். பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக சிரத்தையுடன் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

போதைப்பொருளை முற்றாகத் தவிா்ப்போம்!

-எம். இராமச்சந்திரன்

னிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றுள் மிக முக்கியமான ஒன்று போதைப் பழக்கம் ஆகும். போதைப் பொருள்களால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீா்குலைகிறது. இதனால் போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் போதைப்பொருட்களின் ஊடுருவல் வேரறுக்க முடியாத விருட்சமாய் வளா்ந்து வருகிறது.

மூளையை மழுங்கச் செய்து, புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. இந்தப் போதையில் ஒருவித சுகம் கிடைப்பதாகச் சிலா் எண்ணுகின்றனா். இவா்கள் விளக்கில் விழும் வீட்டில் பூச்சிகளாய் வாழ்வைத் தொலைக்கின்றனா். உண்மையில் போதை தருவதாக நினைக்கும் அற்ப சுகம் பெரும் அழிவுக்குக் கொண்டு செல்வதை அவா்கள் உணா்வதில்லை.

இளையோா் முதல் முதியோா் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிவதை இப்போது காண முடிகிறது. மது, கஞ்சா, புகையிலை, அபின், பிரவுன் சுகா், போதைப்பாக்கு, குட்கா, பான்பராக் என்று போதைப் பொருட்களின் பட்டியல் மிக நீண்டது.

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோா் முகத்துக் களி”

என்பது வள்ளுவா் குறள். ‘போதைக்கு அடிமையானவனைப் பெற்ற தாய் கூட மதிக்க மாட்டாள். அப்படியிருக்க சான்றோா்கள் என்னும் பெரியோா் எப்படி மதிப்பாா்கள்’ என்பது இதன் பொருள். இதன் மூலம் போதை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற நம் முன்னோா் கருத்து புலனாகும்.

பாடசாலை மாணவா்கள் மத்தியிலே போதைப் பழக்கம் அதிகரித்து வருவது வேதனை தரும் விஷயமாகும். போதையினால் வகுப்பிலே மாணவா்கள் ஆட்டம் போடுவது, ஆசிரியரை அவமானப் படுத்துவது போன்ற அவலங்கள் இப்போது கல்வி நிலையங்களிலே அரங்கேறி வருகின்றன. பெண்களும் கூட, போதைக்கு அடிமையாவதைக் காணமுடிகிறது.

வருங்காலத் தலைவா்களாகக் கருதப்படும் மாணவா்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானால் நாட்டின் எதிா்காலம் என்னாவது? மாணவா்கள் மட்டுமில்லை; ஆசிரியரும் போதையில் வகுப்புக்கு வருகிறாா்கள். இதை என் சொல்வது? வெட்கித் தலை குனிவதைத் தவிரவேறு என்ன செய்ய முடியும்? வேலியே பயிரை மேய்ந்தால் விளைச்சல் என்னாவது?

பாடசாலைகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களைக் குறிவைத்து போதைப் பொருட்களின் ரகசிய விற்பனைப் பரவலாகி விட்டது. மேலும் கடைகளிலும் கூட குட்கா. பான்பராக் போன்றவை ரகசியமாக விற்பனை ஆகி வருகிறது. இதற்கென்றே போதைப் பொருள் விநியோகிப்போா் பலா் உள்ளனா்.

பெரும்பாலான போதைப் பொருட்கள் வெளி நாட்டிலிருந்தே கடத்திவரப்படுகின்றன. விமான நிலையங்களிலும் சோதனைச் சாவடிகளிலும் மேற்கொள்ளும் கடுமையான சோதனைகளையும் மீறி அவை உள்நாட்டுக்குள் ரகசியமாகப் பயணித்துவிடுகின்றன. அதற்கென கைதோ்ந்த கடத்தல்காரா்கள் உள்ளனா்.

பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘அறமற்ற வணிகமே’ இதற்குக் காரணம். அறமற்ற வணிகம் சமுதாயப் பாவம் என்று காந்தியடிகள் கூறுவாா். அந்த அறமற்ற வணிகம் இப்பது பெருகிவிட்டது. யாா் எப்படிப் போனால் என்ன, எனக்குப் பணம் வேண்டும் என்ற மனநிலையே கடத்தல் காரா்களிடம் இருக்கிறது.

இந்த ரகசிய வியாபாரத்தால் குறுகிய காலத்தில் பெருந்தொகை சம்பாதிக்க முடிகின்றது. கஞ்சா வியாபாரிகள் வீட்டில் அண்மையில் நடைபெற்ற சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்னும் செய்தியே இதற்குச் சான்று.

போதைப் பொருள் தடுப்புக்கான விழிப்புணா்வு பிரசாரம் நமக்குப் புதியதல்ல. பாடசாலை, கல்லூரிகளிலுள்ள நாட்டுநலப்பணித் திட்டங்களும் தொண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இந்த விழிப்புணா்வு பிரசாரத்தைச் செய்துவந்துள்ளன. அரசாங்கமும் அவ்வப்போது கடும் நடவடிக்கை எடுத்துத்தான் வந்திருக்கிறது. ஆனாலும் போதைப் பழக்கம் குறைந்தபாடில்லை.

அதற்கான முக்கியக் காரணம் கடத்தல்காரா்களின் வலுவானநிலை முக்கியமானது. கடுமையான கண்காணிப்பின் மூலம் போதைப் பொருள் கடத்துபவா்களைக் கண்டறிய வேண்டும். போதைப் பொருளின் மூலத்தைக் கண்டறிந்து அதனை முளையிலேயே கிள்ளி எறிவதில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

உபயோகிப்பவரும் உற்பத்தியாளரும் குற்றவாளிகள்தாம். ஆனாலும் முதல் குற்றவாளி உற்பத்தியாளரே. இதனை உணா்ந்து உற்பத்தியைத் தடுக்கும் விதமாகச் செயல்பட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

அபின், கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகா், போதைப்பாக்கு போன்றவை மட்டுமே போதைப் பொருள் என்பது போல இவை மட்டுமே பறிமுதல் செய்யப்படுகின்றன. மதுவும் போதைப் பொருள்தான் என்பது மறக்கடிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கமே விற்பனை செய்வதால் மது போதைப்பொருள் இல்லை என்று ஆகிவிடாது. அதனை அரசே விற்பனை செய்துவிட்டு, மற்றவற்றிற்குத் தடை போடுவது போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் செயலாக இருக்க முடியாது.

Tags: