மோடி அரசாங்கம் இந்தியாவை உலகில் பசி-பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது

ஒக்ரோபர் 13 அன்று 2022ஆம் ஆண்டுக்கான உலகப் பசி-பட்டினி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், உலகில் பசி-பட்டினி நிறைந்த நாடுகளில் சென்ற ஆண்டு 101ஆவது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 107ஆவது இடத்திற்குச் சரிந்திருக்கிறது. இந்த அட்டவணையானது மக்களின் பசி-பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மை நிலைமைகளைக் காட்டக்கூடிய ஒன்றாகும். இந்த அட்டவணையின்படி இந்தியா, அதன் அண்டை நாடுகளில் உள்ள மக்களின் நிலைமைகளை விட மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் உலகில் கீழ்நிலையில் உள்ள பல நாட்டு மக்களின் வாழ்நிலைமைகளை விட இந்தியாவில் மக்களின் வாழ்நிலைமைகள் மோசமாக இருக்கின்றன. உலகப் பசி-பட்டினி அட்டவணையில், தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவைவிட மோசமாகவுள்ள ஒரேயொரு நாடு யுத்தத்தால் சின்னாபின்னமாகியுள்ள ஆப்கானிஸ்தான் மட்டுமேயாகும்.
உலகில் மிகவும் அதிக அளவில் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியுள்ள நாடாகவும், உணவுப் பாதுகாப்பில்லாத மக்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை ஸ்தாபனத்தின் மதிப்பீடானது, இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் 22 கோடிக்கும் மேலான மக்கள் தொடர் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருப்பதாகவும், 62 கோடிக்கும் மேலான மக்கள் அரைப்பட்டினி நிலைக்கும் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. உலக அளவில் பார்த்தோமானால், உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் தொடர் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள் மற்றும் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பசி-பட்டினி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை நிலை ஏற்படக் காரணம் மோடி அரசாங்கத்தின் கேடு பயக்கும் கொள்கைகளேயாகும். 2016இல் பணமதிப்பிழப்பு அறிவித்ததிலிருந்து 2020இல் கோவிட் பெருந்தொற்றின்போது சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட காலம் வரையிலும் மோடி அரசாங்கம், மக்களின் வாழ்வாதாரங்களின் மீது ஏற்படுத்திய கொடூரமான தாக்குதல்கள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவைகளாகும்.
மக்களின் துன்ப துயரங்களைச் சுட்டிக்காட்டி அறிக்கைகள் எதுவும் வெளிவருமானால், இந்தியாவின் சித்திரத்தைச் சீர்குலைப்பதற்காகவே இவ்வாறு அறிக்கைகள் வெளியாகியிருக்கிறது என்று கூறி, இந்த அரசாங்கம் உடனடியாக அதனை மறுப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. இப்போது ஐ.நா.மன்றத்தின் உலகப் பசி-பட்டினி அட்டவணை வெளியாகியுள்ள சமயத்திலும் அரசாங்கம் அதேபோன்றே செயல்பட்டிருக்கிறது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பின்மை மிக மோசமான அளவிற்குச் சென்றிருப்பதை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அதனைச் சரி செய்திட நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், அதனை ஏற்க மறுத்து, பசி-பட்டினி குறித்து “பிழையான கருத்து” என்று கூறியிருக்கிறது.
இந்தியாவில் வறுமையோ, பசி-பட்டினிக் கொடுமையோ இல்லை என்று உலகம் நம்ப வேண்டும் என்று பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் விரும்புகிறது. மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்தே, வறுமையை மதிப்பீடு செய்வதற்காக, அதிகாரபூர்வ வறுமைக்கோட்டை வரையறுக்கும் வேலையை கைவிட்டு விட்டது. மக்களின் உண்மையான வாழ்நிலைமை குறித்து தரவுகள் தயாரிக்கும் வேலையை கைவிட்டுவிட்டது அல்லது அவ்வாறு தரவுகள் தயாரிக்கப்பட்டாலும் அதனை வெளியிட அனுமதிப்பதில்லை.
நாட்டில் ஏழை மக்கள் படும் துன்ப துயரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டவரக் கூடாது என்பதற்காகவே மோடி அரசாங்கம் அதிகாரபூர்வ தரவுகளில் அனைத்துவிதமான தில்லுமுல்லு வேலைகளிலும் இறங்கி இருக்கிறது. உலக சுகாதார ஸ்தாபனம், இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 47 லட்சம் பேர் இறந்ததாக மதிப்பிட்டுள்ள அதே சமயத்தில், மோடி அரசாங்கமோ இவ்வாறு கணக்கெடுத்திருப்பது பிழையானது என்று கூறியிருக்கிறது. மாறாக, அரசின் மதிப்பீட்டின்படி இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைத்து அளிக்கப்பட்டது. சமீபத்தில் அரசாங்கம் அளித்த மாதிரி பதிவு முறை தரவு (Sample Registration System data), கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அநேகமாக அதீத இறப்புகள் இல்லை என்கிறது.
இதேபோன்றே, தொழிலாளர் தரப்பு ஆய்வறிக்கைகளும் (official periodic labour force surveys), கோவிட் சமூக முடக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும் வேலையின்மையில் உயர்வு இல்லை என்றே காட்டுகிறது. வறுமையை மதிப்பீடு செய்வதிலும் கூட, புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள பலபரிமாணங்கள் வறுமை அட்டவணை (Multidimensional Poverty Index) என்னும் புதிய அட்டவணை, இந்தியாவில் வறுமை நிலை முக்கியமற்ற நிலைக்கு (insignificant level) வீழ்ச்சியடைந்துவிட்டது என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், நாட்டிலுள்ள புள்ளிவிவர முறையே, அரசுக்காக பிரச்சாரம் செய்திடும் கருவியாக மாற்றப்பட்டுவிட்டது. நாடு ‘சொர்க்க பூமி’யாக விளங்குகிறது என்று காட்டுவதற்கு எதுவெல்லாம் ஆதாரமாக இருக்குமோ அது மட்டுமே அரசுத்தரப்பில் வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் வறுமை மற்றும் பசி-பட்டினிக் கொடுமை தொடர்பாக மதிப்பிடும் மிகவும் முக்கியமான தரவு, தேசிய மாதிரி சர்வே அலுவலகம் நடத்திடும் தேசிய நுகர்வு செலவின ஆய்வுகளேயாகும். முன்னெப்போதும் இல்லாத விதத்தில் மோடி அரசாங்கம் 2017-18இல் இது தயாரித்த ஆய்வறிக்கையை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. அதன்பின்னர் நுகர்வு செலவினம் குறித்து ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவே இல்லை.

சமீப காலங்களில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியும் கோடிக்கணக்கான மக்களை வறுமை நிலைக்கும், உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கும் தள்ளியுள்ள நிலையில், பொது விநியோக முறையை விரிவுபடுத்த வேண்டும், அது மிகவும் முக்கியமாகும் என்பதை மோடி அரசாங்கம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், சென்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அரசாங்கம் கிராமப்புற மக்களில் குறைந்தபட்சம் 75 விழுக்காட்டினருக்கும், நகர்ப்புற மக்களில் 50 விழுக்காட்டினருக்கும் மான்ய விலையில் உணவு தானியங்களை அளித்திட வேண்டும் என்பது அரசமைப்புச்சட்ட விதியாகும். சென்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு ஏற்கனவே 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்து 2021இல் எடுத்திருக்க வேண்டிய மக்கள் கணக்கெடுப்பு இன்னமும் தொடங்கப்படவே இல்லை. இவ்வாறு கணக்கெடுப்பு நடத்தாததால், 12 கோடி பேர் இச்சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படாமல் இருக்கின்றனர்.
நிலைமைகளை மேலும் மோசமாக்கும் விஷயம் என்னவென்றால், ஆதார் பதிவு செய்கிறோம் என்ற பெயரிலும், டிஜிடல் செய்கிறோம் என்ற பெயரிலும் 4.4 கோடிக்கும் மேலான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் இது மிகவும் தீவிரமாகச் செய்யப்பட்டிருக்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்படுவோர், 2011இல் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை நினைவுகூர்வது பயன் அளித்திடும். எனினும், ஏழை மக்களின் ரேஷன் கார்டுகள் மிகப் பெரிய அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய இடத்தில் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயர்களை ஆட்சியாளர்கள் சேர்த்துள்ளார்கள். இவ்வாறு சேர்க்கப்பட்டதற்கு எவ்விதமான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
கோவிட் நெருக்கடி ஏற்பட்ட சமயத்திலும்கூட, அரசாங்கம் தன்னுடைய கையிருப்பில் 10 கோடி டன்களுக்கும் மேலான உணவு தானியங்களை இருப்பு வைத்திருந்த போதிலும் கூட, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இருந்து வந்த பயனாளர்களுக்கு மட்டுமே உணவு தான்யங்களை விநியோகம் செய்தது. பொருளாதார நெருக்கடியால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட, பல லட்சக்கணக்கான மக்களுக்கு மான்ய விலையில் உணவு தானியங்களை அளித்திடுவதற்கான முயற்சி எதையும் எடுத்திடவில்லை. பொது விநியோக முறையை நாடு முழுவதற்கும் அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திரும்பத் திரும்பக் கோரி வந்தது. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் பல லட்சம் பேர்களாக அதிகரித்த நிலையில் இது அவசியம் தேவைப்பட்டது. ஆயினும் உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழிந்த உணவு தானியங்களைப் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திறந்த விடாமல், பொது விநியோக முறையை விரிவுபடுத்தாமல், ‘ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு’ என்னும் திட்டத்தைக் கொண்டுவருவோம் என்று கூறிக்கொண்டிருந்தது.

சமீப ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரித்து, உயர் பணவீக்கம் ஏற்பட்டிருப்பதால், உணவுப் பாதுகாப்பின்மையும், பசி-பட்டினி நிலைமையும் அதிகரித்திருக்கின்றன. 2022இல் பல மாதங்களில் இதே கால கட்டத்தில் சென்ற 2021இல் இருந்த விலைவாசிகளை விட உணவுப் பொருள்களின் விலைகள் 7-9 விழுக்காடு அதிகரித்திருந்தன. இந்தக் காலகட்டத்தில் மோடி அரசாங்கம் எரிபொருள் மீது கடுமையாக வரி விதித்தது. இவ்வாறு எரிபொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால்தான் உணவு உட்பட அனைத்தின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன. மேலும் ஒன்றிய அரசாங்கம் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலமாக சாமானிய மக்கள் மீதும், சிறிய உற்பத்தியாளர்கள் மீதும் வரிச் சுமையைக் கடுமையாக ஏற்றி இருக்கிறது. இவ்வாறு வசூலிக்கும் ஜிஎஸ்டி வரிகளில் நியாயமாக மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய பங்கையும் அளிப்பதில்லை. பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை அளிப்பதுடன் அவற்றின் கடன்களையும் தள்ளுபடி செய்யும் அதே சமயத்தில், சாமானிய மக்கள், அவர்கள் வாங்கும் பொருள்கள் மீதும் வரி விதிக்கிறது. பொருளாதாரத் தாராளமயத்தின் காரணமாக உரங்கள், சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள் முதலியனவற்றிற்கு இறக்குமதியையே அதிகம் சார்ந்திருப்பதால், சமீப ஆண்டுகளில் இந்தப் பொருள்களின் விலைகள் உலக அளவிலான பண வீக்கத்திற்குக் காரணமாக அமைந்தன.
புள்ளி விவரங்களைக் காட்டி நாட்டின் உழைக்கும் மக்களை முட்டாள்களாக்கிட முடியாது. இந்த அரசாங்கத்தின் கேடுபயக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களை எப்போதும் மக்கள் மறக்கமாட்டார்கள். வேலையின்மை, வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை இன்றைய தினம் எரியும் பிரச்சனைகளாக மாறி இருக்கின்றன. இத்தகைய மக்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களுக்கு இந்த அரசாங்கத்தைப் பதில் சொல்ல வைத்திடுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் நாட்டிலுள்ள அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது மக்களை அணிதிரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டிருக்கிறது.
மூலம்: Modi led BJP Govt Has Made India The Hunger Hotspot of the World
தமிழில்: ச.வீரமணி