எகிப்து – ஷரம் எல் ஷேக் ‘கோப் 27’ மாநாட்டின் முக்கியத்துவம்
-எஸ்.சந்திரசேகர்
இந்த 2022இல் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியது. ஜப்பானில் அடுத்தடுத்துக் கடுமையான புயல்கள். ஐரோப்பாவில் 500 ஆண்டுகள் இல்லாத வறட்சி. பிலிப்பைன்ஸில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான புயல்கள். கலிஃபோர்னியாவின் காட்டுத் தீ ஏற்படுத்திய சேதம் மிக அதிகம். நீளமாகப் பட்டியல் இடலாம். இவை அனைத்தும் வழக்கமான இயற்கைச் சீற்றங்கள் என்று எளிதில் கடந்து போக முடியாது. ஏனென்றால், இவை அனைத்துக்கும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றமும் ஒரு காரணம் என்பதை உறுதியான தரவுகள் சொல்கின்றன.
சென்ற 10 ஆண்டுகளில் மட்டுமே இந்த மாதிரியான இயற்கைச் சீற்றங்களின் தீவிரமும் அதன் விளைவான அடுக்கு நிகழ்வுகளும் மிக வேகமாக அதிகரித்துள்ளன. இதே நிலை தொடர்ந்தால் 2050 வாக்கில் உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் சுமார் ரூ.18,98,05,200,00,00,000 ($23 டிரில்லியன்) அளவுக்குப் பொருளாதாரச் சேதமும் இதற்கு இணையாக மனித உயிரிழப்பும் இருக்கும் என்று கூறுகிறது உலகப் பொருளாதார மன்றத்தின் ஆய்வறிக்கை.
இதற்கு என்ன காரணம்?
18ஆம் நூற்றாண்டிலிருந்து தொழில் புரட்சியின் காரணமாக நிலக்கரியின் பயன்பாடு அதிகரித்தது. மேலும், 20ஆம் நூற்றாண்டிலிருந்து கச்சா எண்ணெய் பயன்பாடும் அதிகரித்தது. இவை இரண்டுக்கும் புதைபடிவ எரிசக்தி என்று பெயர். இந்தப் புதைபடிவ எரிசக்தியைப் பயன்படுத்தும்போது இதிலிருந்து வெளிப்படும் பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தை வெப்பப்படுத்துகின்றன. இதன் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றமானது, இயற்கைச் சீற்றங்கள் உண்டாக்கும் சேதத்தை அதிகமாக்குகின்றது. 1988இல் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டுக் குழு (IPCC) ஏற்படுத்தப்பட்டது. புவி வெப்பமாதலால் உலகில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் குறித்து அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அதன் மதிப்பீடு, தாக்கம், அதற்கான தீர்வுகள் போன்றவற்றைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதுடன், எச்சரிக்கை செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
இதன்படி முதன்முதலாக 1990இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின் விளைவாக ஐநா அவையின் கீழ் காலநிலை மாற்றத்துக்கான சர்வதேச ஒப்பந்தம் (United Nations Framework Convention on Climate Change) 1992இல் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட 1997 கியோட்டோ (Kyoto) ஒப்பந்தத்தின்படி, 2005 தொடங்கி 2012க்குள் முன்னேறிய நாடுகள் 1990இல் வெளியிட்ட பசுங்குடில் வாயுக்களின் அளவிலிருந்து 5% குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிறுவப்பட்டது. அதன்படி பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் தங்களின் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் குறைத்துள்ளன. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் சில இந்தப் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் குறைப்பதற்கான கடமையைக் கை கழுவிவிட்டன.
இந்நிலையில் 2009இல் சீனா பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதில் முதல் இடத்தைப் பிடித்தது. அதுவரை அமெரிக்காதான் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தது. இந்தத் தருணத்தில் 2009இல் கோப்பென்ஹேகன் (Copenhagen) நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றத்துக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டில் (COP 15) கேப்பென்ஹேகன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
முதலாவது, 1997இல் கையொப்பம் இட்டு 2005இல் நடைமுறைப்படுத்தப்பட்ட கியோட்டோ ஒப்பந்தத்தை 2012க்குப் பிறகும் தொடர்வது என்பது. இரண்டாவது, வளர்ந்த நாடுகளின் பங்களிப்பில் ‘பசுமை காலநிலைக்கான நிதி’ (Green climate Fund) என்று அழைக்கப்படும், காலநிலை மாற்றத்தைத் தடுக்க உதவும் சர்வதேச நிதி அமைப்பை உருவாக்குவது. அதன்படி வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பில்லியன் டொலர் அளவுக்கு நிதியை இந்த அமைப்புக்கு வழங்க வேண்டும். இந்த நிதியை வளரும் நாடுகளும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும், தங்களின் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் குறைக்கவும் பயன்படுத்திக்கொள்ளும். மூன்றாவதாக, புவியின் சராசரி வெப்பநிலையைத் தொழில் புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட – அதாவது, 1.5 டிகிரி செல்சியஸுக்கு (1.5 °C) – மிகாமல் இருக்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
நாடுகளுக்கான இலக்கு
இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் வளரும் நாடுகளும் தங்களின் பசுங்குடில் வாயுக்களின் அளவைப் பெரும் அளவில் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது இந்தியா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்தியாவின் வாதம், வளரும் நாடுகளின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. பசுங்குடில் வாயுக்களின் அளவைப் பெரும் அளவில் குறைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முக்கியமான மூன்று காரணங்களுக்காக இந்தியா முதலில் நிராகரித்தது.
முதலாவதாக, பொருளாதார வளர்ச்சியில் பிரதிநிதித்துவம். அதாவது, சுமார் 250 ஆண்டுகள் தொடர்ந்து புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்தியதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளும் இதர மேற்கத்திய நாடுகளும் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் கடந்த சில தசாப்தங்கள் மட்டுமே புதைபடிவ எரிபொருள்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. இதனால் இவர்களால் மேற்கத்திய நாடுகள் அடைந்த அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியவில்லை.
மேலும் இந்தியாவில் மட்டும் சுமார் 30 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இந்த 30 கோடி மக்களின் வறுமையை அகற்ற வேண்டுமென்றால் அவர்களின் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை முதலில் வழங்க வேண்டும். குறிப்பாக, வேலைவாய்ப்புகள், தொழிற்சாலைகள் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும். இதற்கு முதன்மையானது மின்சாரம்.
எரிபொருள் எனும் மூலாதாரம்
இந்தியா போன்ற வளரும் நாடுகள் நிலக்கரியைக் கொண்டே தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். ஏனென்றால், சூரிய ஒளி அல்லது காற்றாலை மின்சாரம் போன்ற மாற்று எரிசக்தியை தயாரிக்க அதிக முதலீடுகளும் முன்னேறிய தொழில்நுட்பங்களும் தேவைப்படும். இந்தியா போன்ற வளரும் நாடுகளால் இந்த மாதிரியான எரிசக்தி வளங்களை எளிதில் ஏற்படுத்த முடியாது. அதற்கான பொருளாதார வசதியோ தொழில்நுட்ப வசதியோ நம்மிடம் போதிய அளவுக்கு இல்லை.
இரண்டாவதாக, தனிநபர் பசுங்குடில் வாயு வெளியீடு. அதாவது, ஒரு தனிநபரால் ஒரு ஆண்டுக்குள் வெளியிடப்படும் பசுங்குடில் வாயுவின் அளவு. இந்த அளவு ஒவ்வொரு நாட்டுக்கும் இடையே மாறுபடும். 2009இல் உலக சராசரி தனிநபர் பசுங்குடில் வாயு வெளியீடு சுமார் 4.1 மெட்ரிக் தொன்னாக இருந்தது. சீனாவின் அளவு உலக சராசரியை ஒட்டி இருந்தது. அதேசமயம் மேற்கத்திய நாடுகளின் தனிநபர் பசுங்குடில் வாயு வெளியீடு சுமார் 20 மெட்ரிக் தொன் அளவைவிட அதிகமாக இருந்தது. ஆனால், இந்தியாவின் தனிநபர் வெளியீடு 1.4 மெட்ரிக் தொன் மட்டுமே. இவ்வளவு குறைவான தனிநபர் பசுங்குடில் வாயு வெளியீடு இருந்தும் பசுங்குடில் வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவதாக இருப்பதற்கு நம் நாட்டின் மக்கள்தொகை மட்டுமே காரணம்.
மூன்றாவது, மனிதவள மேம்பாடு. அதாவது, ஐநா அவையினால் வெளியிடப்படும் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு பட்டியலில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன. இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் அளவுக்கு மனித வளத்தில் இந்திய மேம்பட வேண்டும் என்றால் தனிநபர் எரிசக்தி நுகர்வு அதிகப்படுத்தப்பட வேண்டும். அதாவது, ஒரு தனிநபர் ஒரு ஆண்டுக்கு 4 தொன் கச்சா எண்ணெய்க்கு இணையான எரிசக்தியைப் பயன்படுத்தினால் மட்டுமே மனித வளக் குறியீட்டில் 0.9க்கு மேல் பெற்று, வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேர முடியும்.
ஆனால் இந்தியாவின் தனிநபர் எரிசக்தி நுகர்வு ஆண்டுக்கு 1.88 தொன் கச்சா எண்ணெய்க்கு இணையான எரிசக்தி மட்டுமே. எனவே, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்திய போன்ற வளரும் நாடுகள் பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைக்க முடியாத சூழ்நிலையில் தற்போது உள்ளன.
இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் கடந்த 250 ஆண்டுகளில் தங்குதடையில்லாமல் புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்திவரும் சில மேற்கத்திய நாடுகள் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டைக் குறைப்பதற்கான சில சர்வதேச ஒப்பந்தங்களையே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்று இந்தியா போன்ற வளரும் நாடுகளை அந்த நாடுகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.
முந்தைய மாநாடுகளின் அனுபவம்
பாரீஸ் நகரில் 2015இல் நடைபெற்ற காலநிலை மாற்றத்துக்கான 21வது உச்சி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சர்வதேச ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இது காலநிலை மாற்றத்துக்கான பாரீஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. இதன்படி முதலாவதாக, உலக சராசரி வெப்பநிலை அதிகரிப்பைத் தொழில் புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட 1.5 அல்லது 2 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
இதற்காகக் காலநிலை மாற்றத்துக்கான ஐநா அவையின் சர்வதேச ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளும் தனித்தனியே இலக்குகளை நிர்ணயித்து அடைய வேண்டும் என்று ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ‘ஐஎன்டிசி’ (INDC- Intended Nationally Determined Contribution) என்று அழைக்கப்பட்டது. பாரீஸ் ஒப்பந்தத்துக்கும் முந்தைய ஒப்பந்தங்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. உதாரணமாக, கியோட்டோ ஒப்பந்தத்தின்படி வளர்ந்த நாடுகள் மட்டும் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டைக் கட்டாயமாகக் வெளியீட்டைக் குறைக்க வேண்டும். ஆனால், பாரீஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தன்முனைப்பாகப் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வேண்டும்.
இதேபோல, அனைத்து உறுப்பு நாடுகளும் அவர்கள் நிர்ணயித்த இலக்கை எவ்வளவு அடைந்துள்ளார்கள் என்பதை அறிவதற்காக உலக அளவில் இருப்புக் கணக்கெடுப்பு நடத்தப்படும். காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு நாடும் தன்முனைப்பாக தீர்மானித்த இலக்குகளைக் கட்டாயமாக அடைய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை.
அடுத்ததாக, காலநிலை மாற்றத்துக்கான பாரீஸ் ஒப்பந்தத்தின்படி இந்த நூற்றாண்டின் பாதியில் கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியீடு நிகர பூஜ்யமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை எட்டுவதற்குப் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்களின் கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியீட்டை 2030க்குள் நிகர பூஜ்யத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். சீனா ஏற்கெனவே நிகர பூஜ்யம் அல்லது கார்பன் சமநிலைமையை 2060க்குள் அடைந்துவிடுவோம் என்று கூறியுள்ளது.
இந்தியா 2070ஆம் ஆண்டை இலக்காக வைத்துள்ளது. அமெரிக்கா 2050ஆம் ஆண்டை கார்பன் சமநிலை ஆண்டாக அறிவித்துள்ளது. அதிக அளவில் பசுங்குடில் வாயுக்கள் வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்த மூன்று நாடுகளும் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து மொத்த கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியீட்டில் 52% பங்களிக்கின்றன. ஆனால், கடந்த 250 ஆண்டுகளாக வெளியிடப்பட்ட ஒட்டுமொத்த கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியீட்டில் இந்தியாவின் பங்கு வெறும் 4% மட்டுமே.
கொரோனா சுட்டிய அவசியம்
2019 இறுதியில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. அதன் பின்பு 2021இல் பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் காலநிலை மாற்றத்துக்கான ஐநா ஒப்பந்தத்தின் 26வது மாநாடு (COP 26) நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த மாநாட்டில் புதைபடிவ எரிபொருள்களுக்கு வழங்கப்படும் மானியங்களைக் குறைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. நிலக்கரிப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கும்படி இந்த மாநாட்டில் ஒப்பந்தம் தயாரானது. ஆனால், இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று நிலக்கரிப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக நிலக்கரிப் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது நடைபெற்றுவரும் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிவாயுவைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஆகவே, ஐரோப்பிய நாடுகள் தங்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்கு மீண்டும் நிலக்கரியைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையில் சற்று தேக்கம் ஏற்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
2021இல் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் 6வது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி இதுவரை மொத்தமாக 2,390 ஜிகா தொன் கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியிடப்பட்டுள்ளது. இதனால் உலக சராசரி வெப்பநிலையானது தற்போது 1.1 டிகிரி செல்சியஸ் (1.1 °C) அளவுக்கு உயந்துள்ளது. இதை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் (1.5 °C)கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இனி வரும் ஆண்டுகளில் மொத்தமாக 500 ஜிகா தொன் அளவு கார்பன் டை ஆக்சைடு (CO2) மட்டுமே வெளியிடப்பட வேண்டும். இதற்கு கார்பன் பட்ஜெட் என்று பெயர்.
தற்போதைய நிலை தொடர்ந்தால் இன்னும் 6 அல்லது 8 ஆண்டுகளில் இந்த 500 ஜிகா தொன் அளவு கார்பன் டை ஆக்சைடு (CO2) அளவை நாம் தாண்டிவிடுவோம். அப்படி நடந்தால் மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத, மனிதர்களால் எதிர்கொள்ள முடியாத, பெரும் பேரழிவுகள் தினந்தோறும் ஏற்படும்; மனிதர்களும் உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற இயற்கைச் சூழலை மீட்டெடுக்க முடியாத நிலையை இந்தப் புவிக்கோள் அடைந்துவிடும்.
இந்த நிலையில்தான் எகிப்தின் ஷரம் எல் ஷேக் (Sharm el-Sheikh) நகரில் ஐநா அவையினால் நடத்தப்படும் உலகக் காலநிலை மாற்றத்துக்கான உச்சி மாநாடு (UNFCCC- COP 27) முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யா – உக்ரைன் போர், உலகப் பொருளாதார மந்தநிலை, கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய நிலை போன்ற பல்வேறு அரசியல், பொருளாதாரக் காரணங்களால் இந்த உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இதில் கீழ்க்காணும் பல்வேறு விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் கடுமையான உறுதிப்பாட்டை எடுத்தல்.
- காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புக்கும் சேதத்துக்கும் உரிய இழப்பீட்டை வளர்ந்த நாடுகள் வழங்கும் விதமாக முடிவெடுத்தல்.
- காலநிலை மாற்றத்துக்கு ஏற்றாற்போல் வளரும் நாடுகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளும் தங்களைத் தகவமைத்துக்கொள்ளுதல்,
- இதற்கெல்லாம் பரிகாரமாக வளர்ந்த நாடுகள் தாங்கள் ஏற்கனவே உறுதியளித்ததுபோல சுமார் 100 பில்லியன் டொலர் நிதி உதவியை வளரும் நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அளிக்க வேண்டும்.
இலக்குகளில் எவ்வளவு சாத்தியம் ஆகும் என்பது தெரியவில்லை. ஆனால், மனித சமூகத்தைக் காப்பாற்றக் கிடைத்த முக்கியமான வாய்ப்புகளுள் ஒன்றாக இந்த மாநாட்டை உலக நாடுகள் கருத வேண்டும். இல்லையென்றாலும், இயற்கைச் சூழல் தன்னைத்தானே சமநிலைப்படுத்திக்கொள்ளும். ஆனால், அதற்குள் எவ்வளவு சேதமும் இழப்பும் ஏற்பட்டிருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது!