நவம்பர் புரட்சியும் அதில் பெண்களின் பங்கும்

– ஜெயதி கோஷ் (Jeyati Ghosh)

ஷ்யப் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் இல்லாமல் ரஷ்யப் புரட்சி கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. பிப்ரவரி புரட்சி (உண்மையில் அது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெகுஎழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் “ரொட்டி வேண்டும், அமைதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் மேற்கொண்ட பிரம்மாண்டமான பேரணியுடன்தான் துவங்கியது. இயக்கத்திற்குள் பல்வேறு சமூகத்திலிருந்தும் பெண்களை அணிதிரட்டிக் கொண்டுவருவதற்கு இப்பேரணி ஓர் உந்துசக்தியாகத் திகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக 1917இன் முந்தைய மாதங்களில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி வீழ்வதற்கும், பின்னர் அமைந்த ஒழுங்கற்ற மற்றும் தாறுமாறான கெரன்சி அரசாங்கமும் அதற்குப் பின்னர் போல்ஷ்விக் புரட்சி நவம்பரிலும் ஏற்படுவதற்கும் இட்டுச் சென்றது.

பெண்கள் அரசியலில் தலையிடுவது என்பது புதிது. எனவே எதிர்பாராததும் கூட. புரட்சிக்கு முந்தைய ரஷ்யா என்பது ஓர் ஆணாதிக்க, ஒரு வகையான நிலப்பிரபுத்துவ சமுதாயமேயாகும். புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் பெண்களின் நிலைமை என்பது இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்ததைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. உரிமைகள் ஏதுமற்று, சமூகக் கட்டுப்பாடுகள் மிகுந்தவர்களாகவே அவர்கள் இருந்துவந்தார்கள். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகம் எதிலும் அவர்கள் இருக்க முடியாது. உண்மையில் சமூகத்தின் முன் எந்தக் கருத்தையும் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையும் கிடையாது. பொதுவாக வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமே அவர்கள் இருத்தி வைக்கப்பட்டார்கள். மிகவும் கீழான நிலையிலும் இழிந்த நிலையிலும் அவர்கள் வாழ்க்கை இருந்து வந்தது. அவர்களுக்கு சொத்துரிமை கிடையாது. பொதுவாக அவர்களால் சுயமாகச் சம்பாதித்திட முடியாது. 19வது நூற்றாண்டின் முடிவில் ரஷ்யப் பெண்களில் 13 சதவீதத்தினர் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

எனினும், 19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில், நகரப் பகுதிகளில் தொழிற்சாலைகள் விரிவுபடுத்தப்பட்ட சமயத்தில், ஏழைப் பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் கிராமப்புறங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இப்பணிகளை மேற்கொண்ட இளம்பெண்களாக இருந்தார்கள். அவர்களின் வேலை தன்மை என்பது மிகவும் கடினமானதாகும். அவர்களுக்கு அளித்த ஊதியம் என்பதும் மிகவும் சொற்பம். ஆயினும், தங்களாலும் வீட்டிற்கு வெளியே வந்து, வேலைகளைச் செய்ய முடியும் என்பதையும், வீடுகளில் எவ்வித வருமானமும் இல்லாது எவரையாவது “சார்ந்திருப்பவர்களாக” இருந்ததைவிட, ஓரளவுக்கு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பதையும் அவர்களுக்கு அது அளித்தது.

முதல் பெண் புரட்சியாளர்கள்

அதே சமயத்தில், 1860இன் பிந்தைய ஆண்டுகளிலிருந்து, 1870 வரை, உயர் மற்றும் நடுத்தர வர்க்கப்பெண்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அன்றைக்கிருந்த சமூக அரசியல் ஆண்களுக்கு மட்டுமே இருந்த நிலைமைகளிலிருந்து தங்களுக்கும் நிவாரணம் கோரி உயர்குடி குடும்பங்களிலிருந்த படித்த பெண்கள் அப்போது துளிர்விட்ட சமூக ஜனநாயக இயக்கங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். பெண்களின் கல்வி மற்றும் பெண்களுக்கான வாக்குரிமைக்கான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டதுடன் சமூக மாற்றத்திற்கான கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. இவை, “பெண்களின் பிரச்சனைகள்” குறித்து அதிகக் கவனம் செலுத்தவும் இட்டுச் சென்றது.

வெரா ஜாசுலிச் (Vera Zasulich), மரியா ஸ்பிரிடோனோவா (Maria Spiridonova) மற்றும் வெரா ஃபிக்னர் (Vera Figner) ஆகியோர் ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர அனுமதிக்காததால், வெளிநாடுகளில் உயர்கல்வியைக் கற்றவர்கள். இவர்கள் பின்னர் புரட்சியாளர்களாக மாறினார்கள். வெரா பிக்னர், ஒரு புரட்சியாளரின் நினைவுக்குறிப்புகள் (Memoirs of a Revolutionist) என்ற பெயரில் ஒரு சுயசரிதையை எழுதியிருக்கிறார். நரோட்னயா வோல்யா (Narodnaya Volya) என்னும் பயங்கரவாதக் குழுவில் உறுப்பினராக இருந்த இவர், 1881இல் ஜார் மன்னனான அலெக்சாண்டர் 2 கொல்லப்பட்டதை ஆரவாரத்துடன் வரவேற்றிருக்கிறார்.

காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா (Catherine Breshkovskaya) போன்ற இதரர்களும் அராஜகவாதி (anarchist) பீட்டர் குரோபோட்கின் (Peter Kropotkin) என்பவரின் செல்வாக்கினால் நரோத்னிக்குகளாக மாறினார்கள். காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா அரசியல் மாற்றம் அமைதி வழியிலேயே வர வேண்டும் என்று கூறிவந்தபோதிலும், ஜாரிஸ்ட் ரஷ்யாவில் சைபீரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். இவர் பின்னர் போல்ஷ்விக் ஆட்சிக்காலத்தின்போது போல்ஷ்விக் ஆட்சியைக் கடுமையாக எதிர்த்ததால், பிரேக் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். எனினும் மிகவும் கொந்தளிப்பாக இருந்த அன்றைய ரஷ்யாவில் காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா மற்றும் இதர நரோத்னிக் பெண்கள், பெண்களின் மனோபாவம் மற்றும் அபிலாசைகளை மாற்றியமைத்ததில் முக்கிய பங்களித்தவர்கள் ஆவார்கள்.

நடேஷ்தா குரூப்ஸ்காயா (Nadezhda Krupskaya) (லெனின் மனைவி), அலெக்சாண்ட்ரா கொலண்டாய் (Alexandra Kollontai), யெலினா ஸ்டாசோவா(Yelena Stassova), இனெஸ்ஸா ஆர்மந்த் (Inessa Armand) மற்றும் கொங்கோரிடியா சமியோலோவா (Konkordia Samiolova) போன்ற பலர் பெண் சமத்துவத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு, போல்ஷ்விக் தலைமையின் மிக முக்கியமான தலைவர்களாக உருவானார்கள். 1917 புரட்சிக்கு முந்தைய பத்தாண்டுகள் என்பது இத்தகைய போர்க்குணம் மிக்க பெண்களுக்கும் பெண்ணியவாதிகளான “பூர்ஷ்வா பெண்களுக்கும்” இடையேயான பதட்டத்துடனே காணப்பட்டது. ஏனெனில் “பூர்ஷ்வா பெண்கள்”, போல்ஷ்விக்குகளைக் கண்டு அஞ்சினார்கள். போல்ஷ்விக் பெண்களோ, பெண் விடுதலைக்கான போராட்டம் என்பது வர்க்கப் போராட்டத்தைவிட தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்திடுமோ என்று அஞ்சினார்கள். போல்ஷ்விக் பெண்கள் மத்தியில், “பெண்கள் பிரச்சனை” என்பது, ஜாரிஸ்ட் ரஷ்யாவைத் தூக்கி எறிவது என்கிற தொழிலாளர் வர்க்கத்திற்கான லட்சியங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதிலும், சோசலிசத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இதன்மூலம் மட்டுமே பாலின சமத்துவத்தைக் கொண்டுவர முடியும் என அவர்கள் நம்பினார்கள். உண்மையில், 1914இல் போல்ஷ்விக் பெண்கள் உழைக்கும் பெண்கள் என்று பொருள்படும் ரபோட்னிட்சா (Rabotnitsa) என்னும் ஏட்டைக் கொண்டு வந்தார்கள். இதில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக “பெண்ணியப் பிரச்சனைகளைத்“ தவிர்த்தார்கள். ஆயினும் இந்த ஏடு ஏழு இதழ்கள்தான் வெளிவந்தது. பின்னர் புரட்சிக்குப்பின்னர்தான் இது மீண்டும் வெளிவந்தது.

ஆயினும் இந்தத் தலைவர்கள் எல்லாரும் புரட்சிக்கு இட்டுச்சென்ற மாபெரும் மக்கள் எழுச்சியில் பங்கேற்ற வீரப்பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவேயாகும். அலெக்சாண்ட்ரா கொலண்டாய் இவ்வீராங்கனைகளைப் பற்றி தன் நினைவுக்குறிப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

“ஒருவர் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தோமானால், ஒக்ரோபர் புரட்சியில் பங்கேற்ற பெண்களை உன்னிப்பாகப்பார்த்தார்களென்றால், அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் வறிய நிலையில் வாழ்பவர்களாக, பட்டினி கிடந்து வருபவர்களாக இருப்பதைப் பார்க்க முடியும். …அவர்கள் தலையில் குளிருக்காக அணிந்திருக்கும் குல்லாய்கள் கிழிந்து காணப்படுவதைக் காண முடியும். (பலருக்கு அதற்குக்கூட வழியில்லாமல் சிவப்புக் கைக்குட்டையை அணிந்திருப்பார்கள்.) கிழிந்த ஆடைகள், ஒட்டுப்போட்ட குளிர்கால ஜாக்கெட், …இளம் பெண்கள் மற்றும் வயதான பெண்கள், பெண் தொழிலாளர்கள் மற்றும் வீரர்களின் மனைவிமார்கள், விவசாயப் பெண்கள், நகர்ப்புறங்களிலிருந்து வந்துள்ள குடும்பத் தலைவிகள் எனப் பார்க்க முடியும். அந்தக் காலத்தில், மிகவும் அபூர்வமாகத்தான், அலுவலக ஊழியர்களும், வேலை பார்க்கும் பெண்களும், படித்த பெண்களும், நாரீமணிகளும் பங்கேற்றார்கள். ஆனால் பின்னர், அக்டோபர் புரட்சியின்போது செங்கொடியை ஏந்தி வந்த அறிவுஜீவிகளில் – ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக் கழக இளம் மாணவிகள், பெண் மருத்துவர்கள் — மிகவும் உற்சாகத்துடன், சுயநலமின்றி, அதே சமயத்தில் லட்சிய வேட்கையோடு கலந்துகொண்டார்கள். அவர்கள் எங்கே அனுப்பப்பட்டார்களோ, அங்கே சென்றார்கள். போர்முனைக்குச் செல்ல வேண்டும் என்கிறீர்களா? வீரர்களின் தொப்பியை அணிந்துகொண்டு, செஞ்சேனை வீரர்களாக மாறினார்கள். அவர்கள் கைகளில் சிவப்புப் பட்டையை அணிவிப்பீர்களேயானால், பின்னர் அவர்கள் போர்முனையில் காயம்பட்டுக் கிடக்கும் செஞ்சேனை வீரர்களுக்கு முதலதவி செய்திட விரைந்து சென்றார்கள். படைகளின் தகவல் தொடர்பு மையங்களில் பணியாற்றினார்கள். இவ்வளவையும் மிகவும் உற்சாகத்துடனும், விரைவில் பெருஞ்சிறப்புவாய்ந்தவை நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் செய்தார்கள். நாங்கள் அனைவருமே புரட்சியை மேற்கொண்டுள்ள வர்க்க சக்கரத்தின் ஒரு சிறிய பல் என்ற உணர்வுடன் இருந்தோம்.”

இத்தகைய குறிப்பிடத்தக்க பெண்களின் படைதான் 1917இல் நடைபெற்ற மக்கள் எழுச்சியின்போது மாபெரும் தாக்கத்தை அளித்தது. ஜூலையில் பெண்களுக்கு வாக்குரிமையும், பொது நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் நவம்பரில் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, வாக்களித்தவர்களில் பல பகுதிகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாகும். போல்ஷ்விக்குகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், புரட்சியின் சமத்துவ சிந்தனைகள், தவிர்க்கமுடியாத விதத்தில், புதிதாகத் துளிர்விட்ட சோவியத் அரசின் மனோபாவம் மற்றும் கொள்கைகளில் பெண்களுக்கான முக்கியத்துவத்துடன், அவர்களுக்கு சமூகத்தில் இருந்துவந்த ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையிலிருந்து விடுதலை அளிக்கக்கூடியதாக வளர்ந்தது.

பூர்ஷ்வா தலைமையானது, சோசலிசத்தின் கீழ் பெண்களின் விடுதலைக்கான அவசியத் தேவையை தெள்ளத்தெளிவாக அங்கீகரித்தது. மாமேதை லெனின் இதுகுறித்துக் கூறியதாவது: “மனிதகுலத்தின் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்கள், முதலாளித்துவத்தின் கீழ் இரட்டிப்பு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். உழைக்கும் பெண்களும், விவசாயப் பெண்களும் மூலதனத்தால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கும் மேலாக, பல முன்னேறிய பூர்ஷ்வா குடியரசு நாடுகளில்கூட, பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான உரிமைகள் மறுக்கப்பட்டே இருந்துவருகிறார்கள். அங்கேயுள்ள சட்டங்கள் பெண்களுக்கு ஆண்களுக்கிணையாக உரிமைகளை வழங்கிடவில்லை. இரண்டாவதாக, (இதுதான் மிகவும் முக்கியமானது) அவர்கள் வீட்டுவேலைகளுடன் பிணைக்கப்பட்டு (“household bondage”) இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து வீட்டு அடிமைகளாக (“household slaves”) இருந்து வருகிறார்கள். மிகவும் அழுக்கடைந்த சமையலறைகளில் திரும்பத்திரும்ப அரைத்தமாவையே அரைத்திடும் விதத்தில் உற்சாகமற்ற வேலைகளை, கடினமான வேலைகளை அதீதமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.”

Alexandra Kollontai

பெண்களின் உரிமைகளை அரசு அங்கீகரித்தது

பெண்கள் பெரும் எண்ணிக்கையில் ஊதியத்துடன் வேலை பார்க்க வந்ததானது இத்தகைய அடிமைத்தளையிலிருந்து பெண்களை விடுவித்திட உதவியதைப் பார்க்க முடிந்தது. பெண்களின் பொருளாதார சுயாட்சியை வலுப்படுத்தும் விதத்தில் எண்ணற்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சொத்து உறவுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திருமணத்திற்குப்பின்னர் பெண்கள் இயங்குவதிலிருந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. நிலம் வைத்துக் கொள்வதற்கும், ஆண் – பெண் இருவருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. குடும்பப் பொறுப்புகளிலும் பாலின சமத்துவத்துடன் செயல்பட்டனர். புதிய சட்டங்களின் மூலமாக சமூக மாற்றங்களும் கட்டாயப்படுத்தப்பட்டன. மதச்சார்பற்ற முறையிலேயே திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. விவாகரத்து எளிதாக்கப்பட்டது. பெண்கள் கருத்தடை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மணமான பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும், மணமாகாத பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் இடையே சட்டபூர்வமாக எந்தப் பாகுபாடும் கிடையாது. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மருத்துவ விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவமனைகளில் அதிக அளவில் மகப்பேறு வார்டுகள் அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் பெண்களின் வாழ்க்கையில் மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தன. அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் வேறெந்த நாட்டிலும் இந்த அளவிற்குப் பெண்களுக்கு உரிமைகளோ அங்கீகாரமோ அளிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது.

புரட்சிக்குப் பிந்தைய பத்தாண்டுகளில் பெண்கள் பலமுனைகளிலும் முன்னேறினார்கள். புதிதாக விடுதலை பெற்ற பெண்கள் மத்தியிலிருந்து படைப்பிலக்கியவாதிகள் உருவானார்கள். தங்களுக்குக் கிடைத்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் பல துறைகளிலும் தங்கள் சொந்த முயற்சிகள் மற்றும் அரசியல் ஈடுபாட்டுடன் முன்னேறினார்கள்.

சோவியத் யூனியன் சிதைந்தபிறது, சோசலிச அமைப்பில் கிடைத்த பயன்கள் பல பெண்களிடமிருந்து பறிபோயின. அவர்கள் பெற்று வந்த ஊதியமும் சந்தைப் பொருளாதார சமூகத்தில் மிகமோசமான அளவிற்குக் குறைந்தது.

கடந்த நூறாண்டு கால அனுபவம் காட்டுவது என்னவெனில், பாலின சமத்துவத்தை நோக்கி முன்னேறுவது என்பது, அதன்மூலம் பெண்கள் விடுதலை பெற்று, அதிகாரம் படைத்தவர்களாக மாறுவது என்பது, ஒரு நீண்ட நெடிய சிக்கலான மற்றும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பாதையாகும் என்பதேயாகும். முன்னேறிய சமூகத்திலேயே கூட இத்தகைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். ஆனாலும், ரஷ்யப் புரட்சிக்குப்பின்னர் பெண்கள் அடைந்த முன்னேற்றங்கள் என்பதும் அவர்கள் படைத்த சாதனைகள் என்பதும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதுடன் நம் போராட்டப் பாதையில் நமக்கு என்றென்றும் ஒளிவிளக்காக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை.

மூலம்: Road to emancipation

தமிழில்:ச.வீரமணி

Tags: