முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் – லிங் சொங்ரியன்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற வகையில் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் மற்றும் ஏனைய வசதிகள் காணப்படுகின்ற போதும், முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் என வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் சொங்ரியன் (Lin Songtiyan) தெரிவித்தார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷன்ஹோங் உடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை அண்மையில் (15.11.2022) பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சீன விசேட பிரதிநிதி லிங் சொங்ரியன் இதனைத் தெரிவித்தார்.
தேவையான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, முதலீட்டுக்கு நட்பான சூழல் உருவாக்கப்பட்டால் ஹம்பாந்தோட்டடை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஏனயை பொருளாதார வலயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு சீனா அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் நீண்டகால நட்பு நாடாக சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பாராட்டிய சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
அத்துடன், வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் சொங்ரியன் இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் விசேட கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கை விளங்குவதற்குத் தேவையான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொழில்துறை மற்றும் விவசாயத்துறையில் மேம்படுத்துவதற்குத் தேவையான திறமைமிக்க இளைஞர் சமுதாயம் போன்ற வளங்களை இலங்கை கொண்டிருப்பதாக பாராளுமன்ற நட்புறவு சங்கத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இலங்கை சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
லிங் கொங்ரியன் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
இதன் பின்னர் இக்குழுவினர் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டிருந்ததுடன், சபாநாயகரின் கலரியிலிருந்து சிறிது நேரம் சபை அமர்வுகளையும் பார்வையிட்டனர்.