ஈழத்து இலக்கிய உலகில் எக்காலமும் பேசவல்ல நாமம் லெனின் மதிவானம்

-மு.நித்தியானந்தன்

லையக இலக்கியத்தின் பச்சை இளங்குருத்து வாடிப்போய் விட்டது. விமர்சன உலகின் ஊற்றின் ஓட்டம் வற்றி நின்ற துயர் இது. வசீகரமான – வாஞ்சை கொஞ்சும் புன்னகை, கம்பீரமான தோற்றம், உயர்ந்த மிடுக்கு. சிந்தனையிலும் செயலிலும் அந்த உயரம் தெரியும். அந்த இளம்பிள்ளை இவ்வளவு துரித கதியில் மீளாத் துயிலை அணைத்துக் கொண்டுவிடும் என்று நான் நினைத்திருக்கவில்லை.

நேசம் நிறைந்த நெஞ்சினனாய், சூழவும் குழுமி நிற்கும் நண்பர் குழாத்துடன் ஹற்றனில் எங்களை வரவேற்று, விருந்தோம்பிய விசால மனம் அவருடையது. மல்லியப்புசந்தி திலகர், மணிவண்ணன் என்று ஆற்றல்மிகு ஆளுமைகள் அவருக்கு என்றும் பக்கபலமாய் நின்றனர்.

இனிய துணைவி, மகன், பாசமிக்க நண்பர்கள், இலக்கிய நேசர்கள், அரசியலில் சகபயணிகள் என்று எல்லோரையும் ஏங்க வைத்து சென்று விட்ட இளைய மகன் அவர்.

உயர் கல்வித்தகைமைகள், பெரும் பதவிகள், இலக்கியத்தவிசின் உன்னத பீடம், சான்றோர் நட்பு என்று அனைத்தையும் இத்தனை வயதிற்குள் அள்ளிக்குவித்த வேகத்தை வாழ்க்கை ஓட்டத்திலும் காட்டியிருக்க வேண்டுமா? என்று மனம் அலை மோதுகிறது.

பல்கலைக்கழகங்களில் முழுநேர உள்வாரி மாணவராகவே பயின்று முதல் ஆண்டுப்பரீட்சையிலேயே தேற முடியாமல், ஒருமாதிரி ஒப்பேற்றி ஒரு பட்டத்தைப் பெறப் பாடாய்ப்படும் சூழலில், இளங்கலைமாணி, முதுகலைமாணிப்பட்டங்கள் எல்லாவற்றையுமே வெளிவாரிமாணவராகவே பயின்று தன் ஆற்றலின் மேன்மை காட்டியவர் லெனின் மதிவானம். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா, தேசியக் கல்வி நிறுவகத்தின் பட்டமேற் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என்று தன் உயர்கல்விப்பாதையை உறுதியான கற்பாறைகளால் நிர்மாணித்தவர். இராஜரீகத் துறையிலும் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தையும் பெற்று கல்விவானில் சிறகடித்துப்பறந்த இராஜாளிப்பறவை அது.

அரசின் உயர் பதவிகளை வெகு இலகுவாக சுவீகரிக்கும் ஆற்றல் அவர் கைவசமிருந்தது. பாடசாலை ஆசிரியராகத் தொடங்கி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக உயர்ந்து, கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக சிகரம் தொட்ட பெருமகன். அவன் தொட்ட துறை எல்லாம் துலங்கியது. கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூலாக்கத்தில் நவீனத்தைப் புகுத்தியவன். வழக்கொழிந்துபோன வழக்குகள் தன் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, மணித்துளிக் கணக்கில் அதனை நேர்செய்தவன்.

ஹற்றன் -டிக்கோயாவில் 2015 ஆம் ஆண்டு எனது ‘கூலித்தமிழ்’ நூலின் வெளியீட்டு நிகழ்வினை மணிவண்ணனுடன் இணைந்து ஒழுங்கு செய்து, காலைப்பொழுதில் மண்டபம் நிறைந்த கூட்டத்தைச் சேர்த்து, நிறைவு செய்ததில் அந்த இளைஞனின் தலைமைத்துவம் தெரிந்தது. அந்த நிகழ்வில் லெனின் மதிவானம் ஆற்றிய உரையினைச் செவிமடுத்தபோது, ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளராக அவர் மெருகேறியிருப்பதனை உணர்ந்தேன்.

மார்க்ஸிய சித்தாந்தத்தில் சமூகத்தை, அரசியலை, இலக்கியத்தை மதிப்பிடும் புதியதலைமுறைக் குருத்து அவர். மார்க்ஸிய ஒளிதீபம் ஏந்தி நின்றவன் சூறைக்காற்றில் மோதிய தீபமாய் அணைந்து போய்விட்ட துயரம் எளிதில் தீராது. நினைவில் ஓயாது.

பேராசிரியர் க.கைலாசபதியை அவர் பிரத்தியட்சமாய்க் கண்டதில்லை. அவருக்குத் தன்னை ஏகலைவனாய் வரித்துக்கொண்ட பேரபிமானி லெனின் மதிவானம். அவரிடம் நேராய்ப் பாடம் கேட்டவர்கள் கணக்கற்றோர். கால்நூற்றாண்டு கால பல்கலைக்கழக வாழ்வில் அவரிடம் பயின்று கல்விப்புலத்தில் பிரகாசித்தோர் பலருண்டு. ஆனால், ‘பேராசிரியர். க.கைலாசபதி: சமூக மாற்றத்துக்கான இயங்காற்றல்’ என்ற நூலைத்தர லெனின் மதிவானத்தால்தான் முடிந்தது.

கைலாசபதி அவர்களின் அரசியல் தளத்திலிருந்து இலக்கிய மதிப்பீடுகளை, சமூக அணுகுமுறையைப் புரிந்து, அந்த வழிகாட்டலில் தனது விமர்சனப்பாதையைச் செதுக்கிக் கொண்டவர் லெனின் மதிவானம். வெற்றுப் பிரசங்கியாக இல்லாமல், மக்கள் மத்தியில் அவர் தொடர்ந்து இயங்கியதை நானறிவேன்.

‘நிருவாகப்பணியும் வேறு சில கடப்பாடுகளும் தன் நேரத்தையெல்லாம் தமதாக்கிக் கொள்ளும் நிலையில் நூல் எழுதுவதற்குத் தேவையான அவகாசமின்றி ஏங்கும்’ பொழுதிலும் எழுத்தைத் தெய்வமாய்த் தொழுதேத்தும் கொள்கையினன் லெனின் மதிவானம்.

உலகில் எந்த விஷயத்தையும் மலையகம் என்ற சாணைக்கல்லில் உரசிப்பார்த்து விளக்கம் காணும் பக்குவம் நிறைந்தவர்.’லெனின் மதிவானத்தின் எந்தவொரு தேடலும் மலையக மக்களின் அசைவியக்கம்- விடுதலை என்பன சார்ந்ததாகவே அமைவது இயல்பு.

குறைந்த வயதிற்குள் அவர் எழுதி விட்டுச் சென்றிருக்கும் ‘மலேசியத் தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள்’ (2007), ‘மலையகம் தேசியம் சர்வதேசியம்’ (2010), ‘ உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல்'(2010), ‘பேராசிரியர்.க.கைலாசபதி: சமூக மாற்றத்துக்கான இயங்காற்றல்’ (2011), ‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ (மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கிவரை) (2012) ஆகிய நூல்கள் அவரின் பெயரை ஈழத்து இலக்கிய உலகில் என்றும் பேச வல்லன.

Tags: