ஆர் எஸ் எஸ், ஏன் நேருவை வெறுக்கிறது?
– பினோஜ் நாயர் (Binoj Nair)
ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஏன் நேரு எட்டிக் காயாக கசக்கிறார்? ஏன் நேருவிற்கு எதிரான அவதூறுகளை அவர்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். காந்தியைக் கொன்றவர்கள், காந்தியின் சீடரை எப்படி அணுகினர்? ஆர்.எஸ்.எஸை நேரு எப்படி மதிப்பீடு செய்திருந்தார்? நேருவின் இறப்பிற்கு என்ன காரணம்?
இந்தியா விடுதலை அடைந்த நாளுக்கு மறுநாள், முதல் பிரதம அமைச்சராக நேரு பதவி ஏற்றுக்கொண்டார். மதவாதத்திற்கும் பிரிவினை வாதத்திற்கும் எதிரான தனது தீர்க்கமான முடிவை அவர் நாட்டுக்குத் தெரிவித்தார். “குறும்பு செய்பவர்களும் தொல்லை தருபவர்களும் நமது எதிரிகள். அவர்களை ஒரு தீவிரத்தோடுதான் கையாளவேண்டியிருக்கிறது”.
தேசத்தந்தை காந்தியின் படுகொலை, இந்து அடிப்படைவாதிகளின்மேல் அவரது ஐயங்களை ஆழப்படுத்தியிருந்தது. இந்து ராஷ்ட்டிரத்தை நிறுவும் அவர்களது வெளிப்படையான இலக்கைத்தாண்டி, இந்து மஹாசபா, ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் உள்நோக்கத்தை நேரு ஐயுற்றார். மதச்சார்பின்மைக்கும் ஜனநாயக மதிப்பீடுகளுக்கும் எதிரான கொடுஞ்செயலாகவே, மகாத்மாவின் கொலையை நேரு பார்த்தார். அதனை ஓர் எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளுமாறு, மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதங்களில், அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
ஏதேனும் ஒரு சதியின் மூலம் அதிகாரத்தை, சங்பரிவார் அமைப்பு கைப்பற்றக்கூடும் என்கிற ஆழமான அச்சவுணர்வு அவரது எச்சரிக்கைக்குப் பின்னால் இருந்தது. ‘கற்றறிந்த மனிதனின் உள்ளுணர்வின் எதிர்வினையாக’, அவர் பல்லாயிரக்கணக்கான ஆர் எஸ் எஸ் தொண்டர்களைக் கைது செய்ததோடு, அவ்வியக்கத்தைத் தடையும் செய்தார்.
காந்தி இறந்து ஐந்து நாள்களுக்குப் பின்னால், நேருவின் அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டது. ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் வன்முறை, தீவைத்தல், கொள்ளை, ஆயுதங்களைச் சேகரித்தல், பொய்ப்பரப்புரை போன்ற அநாகரிக செயல்களை அவ்வறிக்கை கண்டித்திருந்தது. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அச்சுறுத்தல்களை, வெளிப்படைத்தன்மையற்ற அதன் செயல்பாடுகளை, நேருவின் கடிதங்கள் வெளிச்சமிட்டுக் காட்டின. சத்யாகிரஹம் என்கிற பெயரில், அவர்கள் திட்டமிட்ட இரட்டைவேடச் செயல்களை, நேரு மாநில முதல்வர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். ‘பொதுவெளியில் வெளியுலகிற்குக் காட்டப்படும் அவர்களின் புனித பிம்பச் செயல்பாடுகள், அந்தரங்கத்தில் முற்றிலும் நேரெதிராக இருப்பதாக’, அவர்களின் செயல்பாடுகளை நேரு சாடினார். ”அவர்களது உண்மையான பண்பு, நாஜிப்படையின் மோசமான செயல்களை ஒத்தது” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்துத்துவ அடிப்படைவாதிகளை வழிநடத்தும் சங்பரிவாரும், நேருவை ஐயத்துடனும் நம்பிக்கையின்றியுமே பார்த்தது. மற்ற காங்கிரஸ் தலைவர்களைப் போலவே நேருவும் மத அடிப்படைவாதத்துக்கு எதிரானவர் என்றே அவர்கள் முழுமையாக நம்பினர். அரை நூற்றாண்டுக்கும் மேலாக, அதிகாரத்தின் தாழ்வாரத்திலிருந்து அவர்களை விலக்கியே வைத்திருந்தன. இந்து ராஷ்ட்டிரம் என்கிற அவர்களது பளபளக்கும் கனவுகளை, ஜனநாயகத்தின் வழிமுறையில் நேரு, புதைகுழியிலேயே தள்ளியிருந்தார்.
அதேநேரம், நாட்டின் சிறுபான்மை மக்களுடன் அவர் தொடர்ந்து உரையாடினார். வலிமை பொருந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைக்க உதவியதன் மூலம், பெரும்பான்மையோரின் தேசம் என்கிற அவர்களது நீர்க்குமிழிகளை, நேரு உடைத்தெறிந்தார்.
காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, ஆர் எஸ் எஸ்காரர்கள் வெட்கமின்றி நேருவுடன் நட்பு கொள்ள முயன்றனர். அவர்களது தலைவர் கோல்வால்கர் பதின்மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு சாகாக்களுக்கு அறிவுறுத்தினார். பிர்லா பவனில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தமது வருத்தத்தைத் தெரிவிக்குமாறு லாலா ஹன்ஸ்ராஜ் குப்தாவையும், வசந்த்ராவ் ஓக்கேவையும் தனது ‘அப்பாவி நாடகத்தின்’ ஒரு பகுதியாக அனுப்பிவைத்தார்.
அப்போது நேரு அம்ரித்சரில் இருந்தார். தங்களது உண்மையான நிறத்தை மறைத்துக் கொண்டு, அவர்கள் நடத்திய நாடகம் பிரதமரிடம் பலிக்கவில்லை. அவர்களது எல்லாக் கோரிக்கைகளையும் நிராகரித்த நேரு, தேசத் தந்தையின் படுகொலைக்கு ஆர் எஸ் எஸ்ஸே பொறுப்பேற்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறினார்.
ஆர் எஸ் எஸ் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, பிரதமரை தீன்மூர்த்தி பவனில் கோல்வால்கர் சந்தித்தார். அதற்கு அடுத்த மாதம் அரசுமுறைப் பயணமாக, நேரு அமெரிக்கா சென்றார். அச்சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இந்துத்துவப் பரப்புரையாளர்கள், ஆர் எஸ் எஸின் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்வதற்கு வழிவகுத்தனர்.
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், அவர்கள் கட்சிக்குள் நுழைவதை எதிர்த்து, துளியும் கருணையின்றி, காங்கிரசின் கதவுகளை மூடினார் நேரு.
ஆர் எஸ் எஸுக்கு உண்டான காயங்கள் ஆற்றமுடியாதவையாக இருந்தன. நேருவின் மீதான அவர்களின் வெறுப்பு, வளர்ந்துகொண்டே போனது. காங்கிரஸிற்குள் அவர்களை நுழையவிடாமல் செய்ததன் மூலம், அரசு அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பை, அவர்களிடமிருந்து பறித்தார் நேரு.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆர் எஸ் எஸ்காரர்களை அதிகாரத்திற்கு வர விடாமல், விரக்தியிலும் பாதுகாப்பின்மையிலும் தவிக்க வைத்தது நேருவின் ஆளுமை. அவமானம் நிறைந்த தனது கடந்த காலத்தின் வலிகளை மறக்கவே, அவர்கள் நேருவைப் பழிக்கின்றனர். தொடர்ந்து அவர்மீது பொய்களைப் பரப்புகின்றனர். உண்மைக்கு மாறான கதைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.
1962- ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பாக்கி, நேருவை துரோகி என்றது ஆர் எஸ் எஸ். தன்னால் நேருவை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆர் எஸ் எஸ், சமூகத்திடையே அவரைப் பற்றிய பொய்யான தகவல்களை, கட்டுக் கதைகளை பரப்பத் தொடங்கியது. இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கு, சீனாவுக்கு நேரு உதவினார் என்பது போன்ற பொய்களை அவர்கள் பரப்பினர். தற்போதுமே கூட நேருவின் முன்னோர்களையும், அவரது சந்ததியினரையும் யூடுயூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் எல்லையின்றி அவர்கள் தூற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆர் எஸ் எஸ்காரரும் இதை ஒரு குடிசைத் தொழில் போலவே அண்மைக்காலத்தில் செய்து வருகின்றனர்.
ஆர் எஸ் எஸ்காரர்களின் எல்லா அவதூறுகளையும் தாண்டி, நேருவின் புகழ், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர்ந்தே நிற்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா விடுதலைபெற்ற ஆரம்ப நாள்களில், ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, ஜனநாயகத்தைக் கட்டிக்காத்த நேருவை, அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஜனநாயகப் பண்புகளைத் தொடர்ந்து அவர் தனது வாழ்நாள் முழுக்கப் பின்பற்றினார். அவற்றைப் போற்றிக் காப்பதற்கு அவர் அமைதி வழிகளையே நாடினார்.
‘அமைதி வழியில்லை, எனில் அது ஜனநாயகமில்லை’ என்கிற அறச்சிந்தனையை அவர் தனது செயல்களில் வெளிப்படுத்தினார். இந்த அறச்சிந்தனையே, சீனாவின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக, அவரைத் தோற்கடித்திருக்கக் கூடும்; தீர்க்கமான முடிவெடுக்க முடியாதவர்போல, உலகிற்கு அது அவரைக் காட்டியிருக்கக் கூடும். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, அதற்கு முக்கியமான காரணம் சீனாவின் துரோகமே என்று அவரது மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தன்னைப் பற்றிய விமர்சனங்களை நேரு திறந்த மனதுடன் எதிர்கொண்டார். எதிர்கட்சியினருடன் விருப்பத்துடன் அவர் உரையாடினார்.
சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களும், இந்துத்துவப் புரளி பேசுபவர்களும் நேரு மறைந்த போது ராஜ்யசபை உறுப்பினராக இருந்த வாஜ்பாய் எழுதிய இரங்கல் குறிப்பைப் படித்து உணர்வது நல்லது.
“இந்திய அன்னை துயருற்றிருக்கிறாள் இன்று!- அவள்
தனது பெருமைக்குரிய இளவரசனை இழந்து விட்டாள்.
மனித குலம் துயரத்திலிருக்கிறது! இன்று -அது
தன் பக்தனை இழந்து விட்டது.
அமைதி துயருற்றிருக்கிறது! இன்று – அதன்
காவலன் இனி இல்லை.
எளியோர் தமது அடைக்கலத்தை இழந்துவிட்டனர்!
எளிய மனிதன் தனது கண்களின் ஒளியை இழந்துவிட்டான்.
திரை இறங்கிவிட்டது.
உலக அரங்கின் தலைசிறந்த நாயகன், தனது
இறுதிப் பகுதியை அரங்கேற்றிவிட்டு விடை பெற்று விட்டார்.
சூரியன் மறைந்து விட்டது! இனி நாம் நட்சத்திரங்களின்
வெளிச்சத்தைக் கொண்டே நமது பாதையைத் தேட வேண்டும்.”
இன்றைய பிரதமர் மோடியும் அவரது நண்பர்களும் வாஜ்பாயின் இவ் வரிகளை ஒருமுறையேனும் படிக்கமாட்டார்களா?
மூலம்: Nehru and RSS
தமிழ் மொழிபெயர்ப்பு: முனைவர் தயாநிதி