‘நெருக்கடி எங்களுக்கு; இலாபம் உங்களுக்கா?’ – ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரைன் விவகாரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தடைகளால் கடுமையான நெருக்கடியை ஐரோப்பிய ஒன்றியம் சந்திக்கும் வேளையில், பெரும் இலாபத்தை அமெரிக்கா ஈட்டுகிறது என்று ஒன்றியத்தின் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின் போக்கு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி தெரிவித்து வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா போடச் சொன்ன அனைத்துத் தடைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு சொல்லாமல் நடைமுறைப்படுத்தியது. இந்தத் தடைகளால் ஐரோப்பிய நாடுகள்தான் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒரு அதிகாரி, “இந்தப் போரால் ஒரு நாடு இலாபத்தை பெருமளவில் ஈட்டுகிறது என்றால் அது அமெரிக்காவாகத்தான் இருக்கிறது. அதிகமான அளவு எரிவாயுவைக் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். அதோடு ஆயுதங்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் இலாபத்தையே குறியாகக் கொண்டு இயங்குகின்றன. கடினமான நேரத்தில் நட்பு பாராட்ட மறுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். மக்ரோன் மட்டுமில்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக உள்ள பல நாடுகள் இந்தக் கருத்தைப் பிரதிபலித்து வருகின்றன. பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு பிரிட்டன் போன்ற நாடுகள் இரகசியமாக அதை மீறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது நடவடிக்கை எடுத்தவுடன் ரஷ்யாவின் மேல் பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்தது. அந்தத் தடைகளை அப்படியே ஐரோப்பிய ஒன்றியமும் வழிமொழிந்தது. எரிவாயுக்காக ரஷ்யாவையே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நம்பியிருந்தன. தடைகள் விதிக்கப்பட்டதால் ரஷ்யாவிடமிருந்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அமெரிக்க நிறுவனங்களை நம்பியிருக்கிறார்கள். அந்த நிறுவனங்களோ, நெருக்கடியான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு கடுமையான விலையேற்றத்தைச் செய்திருக்கின்றன. அதிகமான விலை கொடுத்து வாங்கி விநியோகிப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, “உக்ரைன் விவகாரத்தில் எங்களைத் தனிமைப்படுத்த முயல்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிக்கான கடும் விலையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதுதான் சுமத்தப்படுகிறது. அந்நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளின் பிழைகளால் குடிமக்கள் சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் ஆயுதங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை விநியோகிப்பதன் மூலம் பெரும் இலாபத்தை ஈட்டி வருகின்றன. இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க நிறுவனங்கள் கொள்ளை இலாபத்தை ஈட்டுகின்றனவா என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கேட்டபோது, “அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று மழுப்பலாகப் பதிலளித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள நிலவரம் குறித்துப் பேசிய அதிகாரி ஒருவர், “நாம் ஒரு வரலாற்றுத் தருணத்தில் இருக்கிறோம். பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மக்களின் கருத்து மாறிக் கொண்டிருக்கிறது என்பதை அமெரிக்கா உணர வேண்டும்” என்று கூறியுள்ளார். அமெரிக்க இராணுவமோ, ஆயுத உற்பத்தி நிறுவனங்களுடன் பெரும் ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது.