உலகப் பதிப்புத் துறையின் எதிர்காலமாக மாறுமா சென்னை?
– ஆழி செந்தில்நாதன்
“ஓர் ஆட்சியாளர் மனம் வைத்தால், எந்த நிர்வாகச் சிக்கலும் வெற்று வார்த்தைகளும் இல்லாமல் எதையும் செய்துமுடிக்க முடியும் என்பதுதான் (இந்தக் கண்காட்சியினூடாக) நான் அடையும் முடிவு” என்று சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் மலேசியா சார்பில் கலந்துகொண்ட ஹசன் ஹஸ்ரி தன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியப் பதிப்புத் துறையில் மிக முக்கியப் பிரமுகராக விளங்கும் ஹசன், மலேசியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளுக்கு நூல்களைப் பெறுவதற்காக சென்னை சர்வதேசப் புத்தக் கண்காட்சியில் கலந்துகொண்டார். பல்வேறு உலகப் புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வதே வேலையாகக் கொண்டிருப்பவர் அவர். ‘புக்கானமிக்ஸ் ஏஷியா’ என்கிற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஹசனின் இந்தச் சொற்கள் மிகையானவை அல்ல.
முதல் வெற்றி: தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முயற்சியால் மிகக் குறைந்த கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், உலகப் பதிப்புத் துறையின் கவனத்தையும் இந்தியப் பதிப்புத் துறையையும் திரும்பிப் பார்க்கவைத்துவிட்டது, சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி. தமிழை உலகுக்கும் உலகைத் தமிழுக்கும் கொண்டுசெல்லும் முயற்சியில் முதல் வெற்றியைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது.
தமிழை உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்லும் மொழிபெயர்ப்பு மானியத்தின் மூலமாகத் தமிழ் மொழிக்கான மிகப் பெரிய சேவையும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கண்காட்சியின் அழகையும் வசதிகளையும் கண்டு மயங்காதவர்கள் யாருமில்லை. மூன்று நாட்களில் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமான அதிசயத்தை வியக்காதவர்கள் யாருமில்லை. ஆனால், உலகமும் இந்தியாவும் இந்த நிகழ்வை எப்படிப் பார்த்தது என்பதைப் பற்றி நாம் பேசியாக வேண்டும்.
உலகப் பதிப்புத் துறையின் உறுதிமொழி: 30 நாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பதிப்புத் துறை விருந்தினர்கள் வெறுமனே வணிகர்கள் மட்டுமல்ல. அவர்கள் உலகப் பதிப்புத் துறையின் முன்னணி சக்திகள். பல்வேறு நாடுகளில் இயங்கும் பதிப்பாளர் சங்கங்களின் உலகளாவியக் கூட்டமைப்பான சர்வதேசப் பதிப்பாளர்கள் கூட்டமைப்பின் (International Publishers Association) துணைத் தலைவரும் ஜார்ஜியாவைச் சேர்ந்த இன்டலக்ட்டி பதிப்பகத்தின் தலைவருமான குவான்த்சா ஜபாவா, கண்காட்சி அரங்குக்கு நுழையும் முன்னரே அசந்துபோய்விட்டார்.
கிட்டத்தட்ட உலகின் மிகப் பெரிய செஃல்பி ஸ்டேண்ட் போலவே ஆகிவிட்ட சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் முகப்பில் பல்வேறு நூல்களின் அட்டைகள், பல்வேறு மொழிகளில் மிகப் பெரிய அளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில் ஓர் அட்டைப்படம் அவர் பதிப்பகம் வெளியிட்டிருந்த ஜார்ஜிய நூலினுடையது. மூன்று நாட்களாக மும்முரமாகச்செயல்பட்டுக்கொண்டிருந்த குவான்த்சா, கண்காட்சி குறித்து ஒரு காணொளியைத் தயாரித்தார். அது ஜார்ஜிய நாட்டின் பொதுத் தொலைக்காட்சியான ‘1 டிவி’யில் முழுமையான செய்தித் தொகுப்பாக வெளியானது.
“புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் வருங்கால நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் என் ஆதரவை வழங்குவேன்” என்று குவான்த்சா உறுதிகூறினார். அது அவருடைய உறுதிமொழி மட்டுமல்ல, உலகப் பதிப்புத் துறையின் உறுதிமொழியும்கூட!
தூதுவர்களான விருந்தினர்கள்: பிரான்ஸின் மிக முக்கியப் பதிப்பு அமைப்பான காலிமாரின் பிரதிநிதியாக வந்திருந்த ஜூடித் ரோசன்விக், “முதல் நிகழ்வே மிக அற்புதம்” என்று வர்ணித்தார். அந்த உற்சாகத்தை இத்தாலி விருந்தினரிடமும் பார்க்க முடிந்தது. “நான் 30 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டேன்…
இந்தக் கண்காட்சி என்னுடைய அதீத எதிர்பார்ப்புகளையும் தாண்டிச் சென்றுவிட்டது” என்று கூறினார், இத்தாலிய அறிவியல் புனைகதை பதிப்பகமான ‘பியூச்சர் பிக்சன்’ அமைப்பின் பிரான்சிஸ்கோ வெர்சோ. “இரண்டாம் நாளே என்னுடைய எல்லாபிசினஸ் கார்டுகளும் தீர்ந்துபோய்விட்டன. எதிர்காலம் இருப்பது இங்கேதான்” என்று அவர் சமூக ஊடகங்களில் எழுதினார்.
“சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் முதல் ஆண்டிலேயே பங்குபெறும் வாய்ப்பும், அதன் பதிப்பாளர் மாநாட்டில் உலகெங்கும் இருந்து வந்திருந்த என் நண்பர்களோடு கலந்துகொள்ளும் வாய்ப்பும் அமைந்தது அதிர்ஷ்டம்தான்” என்று பப்ளிஷர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் அமைப்பின் தலைவரும் டெல்லியைச் சேர்ந்த பதிப்பாளருமான பிரசாந்த பதக் கூறினார். அத்துடன், “உங்கள் எல்லோரையும் போலவே நானும் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் பரப்புரைத் தூதுவராக மாறிவிட்டேன்” என்றும் விடைபெறும்போது சக பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமாகச் செய்தி அனுப்பினார்.
டெல்லியிலிருந்து வெளிவரும் ‘ஆல் அபவுட் புக் பப்ளிஷிங்’ (All About Book Publishing) பத்திரிகையின் ஆசிரியர் ஸ்வேதா குரானா, “சிறந்த ஏற்பாடுகளுக்காக முழு மதிப்பெண்களை வழங்குவேன்” என மகிழ்ந்தார். மத்திய அரசின் கேபக்சில் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் நரேஷ் குமார் சூடானி, “உலகெங்கும் செல்லும் தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று உறுதியளித்தார். அனைத்திந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் அரோரா, பப்ளிஷர்ஸ் எக்ஸ்சேஞ்சின் நீதா குப்தா உள்ளிட்டவர்கள் நமது தூதுவர்களாகவே விடைபெற்றிருக்கிறார்கள்.
சென்னை மீதான எதிர்பார்ப்பு: இந்தியப் பதிப்பாளர்களின் கூட்டமைப்பின் (The Federation of Indian Publishers) கெளரவ இணைச் செயலர் பிரணவ் குப்தா மேலும் ஒருபடி மேலே சென்று பேசினார். யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுக்கு ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து அதை உலகப் புத்தகத் தலைநகராக அறிவித்துப் பல செயல்பாடுகளை முன்னெடுக்கும்.
இந்த ஆண்டு அந்தப் பெருமையை கானாவின் தலைநகரான அக்ரா பெற்றுள்ளது. இந்நிலையில், “2025இல் சென்னையை உலகப் புத்தகத் தலைநகராக அறிவிக்கும்படி யுனெஸ்கோவைக் கோரிக்கை விடுக்க வேண்டும். அது உலகளவில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி, சென்னையை உயர்த்தும்” என்று அவர் குறிப்பிட்டார். முதல் நிகழ்விலேயே இப்படி ஒரு நம்பிக்கையைத் தந்திருக்கிறது சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி!
உலகமும் இந்தியாவும் கண்ட இந்த அற்புதமான தொடக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரிடம்தான் இருக்கிறது. சொல்லப்போனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது. இந்த நிகழ்வின் தாக்கம் இனிமேல்தான் தெரியும்.
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் நூல்களாக மாறி, தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் உள்ள புத்தகக் கண்காட்சிகளிலும் கடைகளிலும் கிடைக்கும்போது, அந்தப் புதிய மாற்றம் புலப்படும். உலகின் முக்கிய மொழிகளில் தமிழ்நாட்டு அரசின் நிதி உதவியால் தமிழ் நூல்கள் வெளிவந்து, கண்காணா தேசங்களின் சிறுநகர நூலகங்களின் அலமாரிகளைச் சென்றடையும்போது, அந்தத் தாக்கம் தெரியும்.
ஹசன் ஹஸ்ரி குறிப்பிட்டிருந்த ஒருவரியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: “என் வாழ்வின் பதிவேட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களில் ஒன்றாக இது (CIBF) மாறிவிட்டது” என்று அவர் கூறினார். விருந்தினர்களுக்கே உரிய மிகையான புகழ்ச்சியாக அது இருக்கலாம். ஆனால் அதை மெய்ப்பிப்பதில் தவறில்லையே!
-இந்து தமிழ்
2023.01.23