ஒரு தலைவன், ஒரு பயணம், ஒரு செய்தி
–ப.சிதம்பரம்
அரசியல் (இலாப) குறிக்கோள் ஏதுமில்லாமல் ஒரு தலைவரால் நாடு முழுக்க யாத்திரை (நடைப்பயணம்) மேற்கொள்ள முடியுமா என்று நம்ப முடியாமல் மக்கள் திகைப்பது எனக்குத் தெரியும். வரலாறு இப்படிப் பல யாத்திரைகளைப் பதிவுசெய்து வைத்திருக்கிறது. ஆதி சங்கரர் (பொது ஆண்டு 700, ஆன்மிகம்) மாசேதுங் (1934-35, ராணுவம்), மகாத்மா காந்தி (1930, ஒத்துழையாமை இயக்கம்). மார்ட்டின் லூதர் கிங் (1963, சிவில் உரிமைகள்) அவற்றில் சில.
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது ராகுல் காந்தி மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ யாத்திரை’ 135 நாள்களில் 4,000 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து முடிந்திருக்கும். இதைப் படிப்பவருடைய அரசியல் சார்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் – அரசியல் சார்பே இல்லாவிட்டாலும் – யாத்திரை மேற்கொண்டவருக்கு இலக்கை அடைவதில் தீவிரம், உள்ள உறுதி, உடல் வலிமை ஆகியவை இருக்கின்றன என்பதை மறுக்கவே மாட்டார்கள்.
பா.ஜ.கவுக்கு ஏன் பீதி?
“என்னுடைய யாத்திரைக்கு அரசியல் அல்லது தேர்தல் நோக்கம் எதுவும் கிடையாது; இதன் ஒரே இலட்சியம் அன்பை, தோழமையை, சமூக ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை மக்களிடையே வளர்ப்பது மட்டுமே” என்று ராகுல் காந்தி இந்தப் பயணத்தின்போது பல முறை திரும்பத் திரும்பத் தெளிவுபடுத்திவிட்டார். இதை அரசியல் சார்ந்தது என்றோ தேர்தல் நோக்கம் கொண்டது என்றோ முத்திரை குத்திவிட முடியாது. இதனால்தான் பா.ஜ.கவும் இதர விமர்சகர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த யாத்திரையை விமர்சிக்க, பகுத்தறிவுக்குப் பொருந்தாத காரணங்களை எல்லாம் பா.ஜ.கவினர் முன்வைத்தனர். யாத்திரையை ராகுல் காந்தி பாதியில் கைவிட்டுவிட வேண்டும் என்பதற்காக, ‘யாத்திரையால் கொரோனா வைரஸ் பரவிவிடும்’ என்ற சிறுபிள்ளைத்தனமான காரணத்தைக்கூட ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் முன்வைத்தார்!
ராகுல் காந்தியை யாராலும் தடுக்க முடியவில்லை. விமர்சனங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தார். இந்த யாத்திரை மூலம் அவர் மக்களை நேருக்கு நேர் சந்தித்தார். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அவரைக் காணத் திரண்டனர்.
இந்தியாவில் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் பரவிக்கொண்டிருக்கிறது என்று தான் பேசியது உண்மைதான் என்பதை நேரிலேயே உறுதிப்படுத்திக்கொண்டார். விலைவாசி உயர்வால் எல்லா மக்களும் சுமை தாங்க முடியாமல் முனகிக்கொண்டே இருக்கின்றனர்; வெறுப்பை வளர்ப்பவர்கள் சமூகத்தில் இருக்கின்றனர்; இதற்கு முன்னால் இருந்ததைவிட இந்திய சமூகம் இப்போது மேலும் பிளவுபட்டிருக்கிறது. மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஆழமான பிளவுகள் குறித்து சாலையோரக் கூட்டங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் வேதனை பொங்கப் பேசினார் ராகுல்.
இந்த யாத்திரையின்போது ராகுலுக்குக் கிடைத்த அபரிமிதமான வரவேற்பைக் கண்டு பாரதிய ஜனதா ஏன் இவ்வளவு கலவரப்படுகிறது? சில விஷயங்களை நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும். ராகுல் காந்தியுடன் நான் கன்னியாகுமரி, மைசூரு, டெல்லி ஆகிய இடங்களில் நடந்தேன். எல்லா இடங்களிலும் ஏ-ஏ-ஏ-ஏ-ஏராளமான கூட்டம். எல்லா மாநிலங்களிலும் எல்லா இடங்களிலும் அதுதான் நிலைமை; நான் உடன் செல்லாத ஊர்களில் திரண்ட கூட்டத்தை, காணொலிக் காட்சிகளிலும் புகைப்படங்களிலும் பார்த்தேன். யாரும் எந்த ஊரிலும் இந்த யாத்திரையைக் காண வாருங்கள் என்று பேருந்துகளை ஏற்பாடு செய்து கூட்டிவரவில்லை.
யாத்திரையைக் காண வருவதற்கு யாருக்கும் பணம் தரப்படவில்லை. கூட்டத்தைக் காண வந்தால் உணவுப் பொட்டலம் கிடைக்கும் என்றும் யாரும் கூறவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உடன் நடந்தனர். நடுத்தர வயதினரும் முதியவர்களும் நூற்றுக்கணக்கில் காண வந்தனர். சாலையின் இரு பக்கங்களிலும் திரண்டிருந்தவர்கள் ராகுலைப் பார்த்ததும் கைகளை அசைத்தனர், பூக்களைத் தூவினர், உற்சாகமாகக் குரல் எழுப்பினர், வாழ்த்து முழக்கங்களை இட்டனர். நான் பார்த்த அனைவருமே கையில் மொபைல் போன் வைத்துக்கொண்டு அவருடைய யாத்திரையைப் புகைப்படம் எடுத்தனர்.
திரையுலகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், படித்த அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று பலதரப்பட்டவர்கள் யாத்திரையில் பங்கேற்றனர். இந்த யாத்திரையில் கலந்துகொண்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் என்று நான் கருதுவது சாமானியர்களைத்தான். ராகுல் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்டுக்கொண்டோம், புரிந்துகொண்டுவிட்டோம் என்ற செய்தியைத்தான் அவர்கள் மௌனமாக விட்டுச் சென்றனர். இந்திய சமூகத்தை ஆழமாகப் பிளந்துவிட்டனர், சுற்றுப்புறம் எங்கும் வெறுப்பும் வன்முறையும்தான் நிலவுகிறது – இதற்கு சரியான பதிலடி அன்பையும் தோழமையையும் சமூக ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தழுவுவதே என்பதே அவர்கள் விட்டுச் சென்ற செய்தி.
ஏழைகள் பங்கேற்பு
என் மனதை மிகவும் தொட்டது எதுவென்றால், ராகுல் சென்ற இடமெல்லாம் பெரும் எண்ணிக்கையில் ஏழைகள் வந்திருந்ததுதான். இந்தியாவில் ஏழ்மை அதிகரிக்கவில்லை என்று தொடர்ந்து மறுப்போர் அங்கு வந்திருந்தால், தங்களுடைய கொள்கைகளால் ஏற்பட்ட வறுமையாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் எத்தனை இலட்சம் பேர் மேலும் வறியவர்களாகிவிட்டனர் என்பதை உணர்ந்திருப்பார்கள்.
உலகின் பலபரிமாண ஏழ்மை குறியீட்டெண் 2022 ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த மக்களில் 16% பேர் ஏழைகள் – அதாவது 22.4 கோடிப் பேர் எழைகள். அப்படியென்றால் எஞ்சியவர்கள் பணக்காரர்கள் என்று பொருளில்லை; நகர்ப்புறமாக இருந்தால் மாதம் ரூ.1,286, கிராமப்புறமாக இருந்தால் மாதம் ரூ.1,089 அல்லது அதற்கும் கீழே ஊதியம் பெறுகிறவர்கள்தான் ஏழைகள் என்று அரசின் வரையறை வகுத்து வைத்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி நாட்டில் வேலை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை 8.3%.
ராகுலின் யாத்திரையைப் பார்க்க வந்தவர் ஆயிரக்கணக்கானோர்களில் பாஜகவுக்கோ அல்லது காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கோ கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களாகக்கூட இருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன், ஆனால் அவர்களுடைய முகங்களில் எந்தவிதப் பகையுணர்வும் இல்லை.
பலரும் ஆர்வம் பொங்கவே பார்த்தனர், எல்லோர் கண்களிலும் ‘இனி எதிர்காலம் நன்றாக இருக்கும்’ என்ற நம்பிக்கை ஒளி: இந்த யாத்திரை வளமான எதிர்காலத்துக்கு வழிவகுக்காதா என்ன என்ற கேள்வியும் அந்தப் பார்வைகளில் அடக்கம்.
பா.ஜ.க ஏன் எதிர்க்கிறது?
அன்பையும் சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தும் யாத்திரையை பா.ஜ.க ஏன் இப்படி எதிர்க்கிறது? ‘சப்கா சாத் – சப்கா விகாஸ்’ என்று முழங்கிக்கொண்டே முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தவரையும் திட்டமிட்டு விலக்கிவைத்துவருகிறது பாஜக; ஒன்றிய அமைச்சரவையில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. பாரதிய ஜனதாவுக்கு மக்களவையில் இருக்கும் 303 உறுப்பினர்களிலும் மாநிலங்களவையில் உள்ள 92 உறுப்பினர்களிலும் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒரேயொரு முஸ்லிம்கூட 2023 ஜனவரி 5இல் ஓய்வுபெற்றுவிட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்ட பாஜக ஆதரவாளர்கள் வாய்ப்புகளைத் தேடி அலைகின்றனர்.
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது, மதக் கலப்பு திருமணம், இந்துப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைக் காதலிப்பது (லவ் ஜிகாத்), பசுக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வேன்களில் ஏற்றிச் செல்வது, மாணவர் விடுதிகளில் அசைவு உணவு பரிமாறுவது என்று ஏதாவதொரு காரணத்துக்காக வன்முறையில் இறங்குகின்றனர். அடித்துக் கொல்கின்றனர். கிறிஸ்தவர்களுடைய தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. பெரும்பான்மை – சிறுபான்மைச் சமூகங்கள் சேர்ந்து வாழும் பகுதிகளில் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய வேலை இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டுப்பாருங்கள் – ‘ஐயோ கந்தகக் கிடங்குக்கு காவல் இருப்பதைப் போல உணர்கிறோம்’ என்று புலம்புவார்கள்.
இந்த யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி எப்படிப்பட்டவர்? இந்த அனுபவம் அவர் மீது நிச்சயம் அபார செல்வாக்கு செலுத்தியிருக்கும். ராகுலைப் பற்றி இதுவரை கொண்டிருந்த எண்ணத்தை, நேரில் பார்த்த பிறகு நிச்சயம் மாற்றிக்கொண்டிருப்பார்கள் மக்கள் என்பது எனக்குத் தெரியும். பா.ஜ.கவினர்கூட தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது, அவருடைய விடாமுயற்சி, உடல் – உள்ள வலிமை ஆகியவற்றை தயக்கத்துடன் பாராட்டுகிறார்கள். ஏராளமானவர்கள் (அவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கவில்லை என்று தெரியும்) ‘ராகுலை புதிய வெளிச்சத்தில் பார்ப்பதாக’ என்னிடம் தெரிவித்தார்கள். இந்த யாத்திரை மூலம் ராகுல் தெரிவிக்க விரும்பிய செய்தி, அனைவரையும் ஊடுருவிச் சென்றுவிட்டது என்பது வெளிப்படையான உண்மை.
அனைவருடைய மரியாதைக்கும் உரியவராகிவிட்டார். அவர் மேற்கொண்ட தவம் வெற்றியடைந்துவிட்டது. அவர் சொல்லவந்த விஷயம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவிவிட்டது. இப்போதைக்கு இதுவே போதும் – நல்லது.