மனித உரிமைப் போராளி தோழர் பி.சீனிவாசராவ்

-ஐ.வி.நாகராஜன்

ன்றாக இருந்த சென்னை மாகாணத்தின் தெற்கு கன்னட பகுதியை சேர்ந்த படகராவில் ஒரு நடுத்தர  குடும்பத்தில் பிறந்தவர் தோழர் பி.சீனிவாச ராவ். 1930-ம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை விட்டுவிட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். மக்களை தேசிய இயக்கத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் கம்யூனிஸ்ட் தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே.அய்யங்கார், சி.எஸ். சுப்பிர மணியன் உள்ளிட்டோர் செயல்பட்டார்கள். அவர்களுடன் இணைந்து பி.சீனிவாசராவும் பணியாற்றினார்.

1952 ஏப்ரல்-30 அன்று தலைமறைவாக இருந்த பி.சீனிவாசராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் தஞ்சை மாவட்டத்தில் இயக்கப் பணிகளை பகிரங்கமாக செய்ய ஆரம்பித்தார். தஞ்சை மாவட்டம் முழுவதும் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் தட்டி எழுப்பினார். அன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்த ஒரே நோக்கம் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளிகளையும் ஒன்று திரட்டுவதுதான். நிலப்பிரபுக்களின் நெருக்கடியிலும், பண்ணை யார்களின் தாக்குதலிலும் செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில்தான் தோழர் பி.சீனி வாசராவின் கரம் அவர்களை அரவணைத்தது. உழைப்பாளி மக்களாகிய ஏழை எளிய அடித்தட்டு மக்கள் தங்களின் வேதனைகளை பி.சீனிவாசராவிடம் கொட்டி தீர்த்தனர். அதன் பிறகுதான் பி.சீனிவாசராவ் கிராமம் கிராமமாகச் சென்று அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தை துவக்கினார்.

37 நாட்களும் 600 மைல்களும்

1960-ம்ஆண்டு காங்கிரஸ் அரசு சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்திய நில உச்ச வரம்பு திருத்த சட்டமசோதா நிலப்பிரபுக்களை காப்பாற்றும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து மசோதாவில் திருத்தம் கொண்டுவரக்கோரி பி.சீனிவாசராவ் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழகம் முழுவதும் மக்களிடம் கோரிக்கையை கொண்டு செல்ல மாபெரும் பாதயாத்திரையை மேற்கொண்டது. இந்த இயக்கம்  வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறியது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்போதைய மாநில தலைவராக இருந்த பி.சீனிவாசராவ் தலைமையில் கோவையிலிருந்து ஒரு அணியும் அப்போதைய பொதுச்செயலாளர் தோழர் மணலி கந்தசாமி தலைமையில் மதுரையிலிருந்து ஒரு அணியுமாக இரண்டு பகுதிகளி லிருந்து சென்னை நோக்கி அந்த நடைப்பயண பிரச்சார இயக்கம் புறப்பட்டது. இரண்டு குழுக்களும் 600 மைல் தூரம் 37 நாட்கள் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களிடமும் கிராமங்களிடமும் அழியாத்தடங்களைப் பதித்தது.

நிரம்பி வழிந்த சிறைச் சாலைகள்

நாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15ம் நாளில் இரு குழுக்களும் தங்களின் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு செப்-21-ல் தலை நகர் சென்னை வந்தடைந்தன. நிறைவாக நடைபெற்ற மாபெரும் பேரணி பொதுக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரெழுச்சியோடும், மிகுந்த உற்சாகத்தோடும் பங்கெடுத்தனர். அந்த பொதுக் கூட்டத்தில் மறியல் போராட்டத்திற்கான அறைகூவல் விடப்பட்டது. செப்-15 முதல் 28 வரை தமிழகம் முழுவதும் 15 நாட்கள் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. 16 ஆயிரம் பேர் கைதானார்கள். தஞ்சை மாவட்டத்தில் 8 ஆயிரம் பேர் கைதானார்கள். தமிழகம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களைச் சந்தித்து வந்த பிறகு, ‘என் வாழ்நாளில் இதுபோன்ற எழுச்சியை இதுவரை நான் கண்டதில்லை’ என்று தோழர். பி.சீனி வாசராவ் போராட்டத்தைப் பற்றி குறிப்பிட்டார்.

திருச்சி, வேலூர் சிறைச்சாலைகள் நிரம்பி  வழிந்தன. 2050பேரை வைக்க வேண்டிய திருச்சி சிறையில் 8ஆயிரம் பேரை வைத்தனர். குடிக்கத்தண்ணீர் இல்லை. கழிப்பிடவசதி இல்லை. படுக்க இடம் இல்லை. மழை பெய்து கொண்டேயிருந்தது. சுதந்திர இந்தியாவில் உரிமைக்காக போராடும் போராட்ட வீரர்களை குற்றவாளிகளைப் போல் சிறைக்காவலர்கள் அடக்கி ஒடுக்கினர். இதை எதிர்த்து சிறைச் சாலையிலேயே கிளர்ச்சிகள் வெடித்தன. ஏ.எம்.கோபு, கோ.வீரய்யன்  ஆகியோர் பொறுப்பாக இருந்து செயல்பட்டனர். பிறகு தமிழக அரசு பணிந்தது. செப்-28-ல் மூன்று ஆண்டுகளுக்கு சாகுபடி நிலத்திலிருந்து வெளியேறாமல் இருக்க பாதுகாப்பு கொடுத்தது. இது விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

முள்ளியாற்றங்கரையில்…

தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்திற்கு திட்டமிட்டு மக்களைத் திரட்ட ஓய்வு உறக்கமின்றி உணவிற்கு உரிய நேரம் கூட ஒதுக்காமல் உழைத்திட்ட தோழர்.பி.சீனிவாசராவை 1961-ம் ஆண்டு மரணம் சாய்த்தது.

மக்களிடம் செல்; மக்களிடம் கற்றுக்கொள்; மக்களுக்காக போராடு‘ என்ற மாமேதை லெனின் கூறிய வார்த்தைகளின் பொருள் ஆழத்தை உணர்ந்து மொழி, இனம், மதம், சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சேரியில் வாழும் மக்களுடன் கலந்து அவர்களின் சமூக வளர்ச்சிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை உயர்வுக்கும் போராடினார். சேரி என ஒதுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் அடிமை விலங்கொடித்து வர்க்கப் போராட்டத்தின் வழியாக மனிதன் மனிதனாக வாழ மாற்றத்தை உருவாக்கினார். அவர் இறந்த பின்பு, அவர் எந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடி விடுதலைப் பெற்று தந்தாரோ – அந்த மக்கள் அடர்த்தியாக வாழும் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள முள்ளியாற்றங்கரையில் அவர் விருப்பப்படி அடக்கம் செய்யப்பட்டார். அவரது இறுதி மரியாதையின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி கண்ணீரும் கம்பளையுமாய் கதறி அழுத காட்சி இன்றும் நம் கண்முன் நிழலாடுகிறது. அந்த துயரமான நேரத்தில் மாநிலத் தலைவர்கள் யாருக்கு யார் ஆறுதல் கூறுவது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர். தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் அங்கு திரண்டிருந்தனர். இரங்கல் கூட்டம் இரவு 11.30 மணிக்கு எம்.ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் தோழர்கள் பி.ராமமூர்த்தி, எம்.கல்யாண சுந்தரம், என்.சங்கரய்யா, கே.டி.கே தங்க மணி, பார்வதிகிருஷ்ணன், கே.ரமணி,எம்.காத்தமுத்து, மணலி கந்தசாமி என இன்னும் பலர் இரங்கல் தெரிவித்து பேசினார்கள்.

கண்ணீர்க் கடலில் தலைவர்கள்

பி.ராமமூர்த்தியும் மணலி கந்தசாமியும் பேச முடியாமல் தங்களது இதயத்தில் பொங்கி எழுந்த வேதனையை கண்ணீராய் உதிர்த்தனர். பண்ணை நிலப்பிரபுக்களின் அடிமைகளாக வாழ்ந்த மக்களை தலைநிமிர வைத்து, ‘அடித்தால் திருப்பி அடி!’ என தைரியத்தை ஊட்டி அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய, ஈடு இணையற்ற மாபெரும் தலைவராக பி.சீனிவாசராவ் திகழ்ந்தார். இடதுசாரி இயக்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு 14-11-2009 அன்று திருத்துறைப்பூண்டியில் அவருக்காக நினைவு மணிமண்டபத்தை அமைத்தது. அவருக்காக ஆண்டுதோறும் செப்-30-ம் தேதி அரசு சார்பிலும்  நினைவுதின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அவர் அடக்கம் செய்யப்பட்ட  முள்ளியாற்றாங்கரை சமாதியில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நிறைவாக தெற்கு வீதியில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றுவருகிறது. அவரின் நினைவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெண்கலச்சிலையும் அமைக்கப்பட்டு மக்கள் அவரைப் போற்றி வருகின்றனர்.

பொதுவுடமை இயக்கத்தின் தலைவர் தோழர் பி.சீனிவாசராவ்(பி.எஸ்.ஆர்) பிறந்த தினம் இன்று

ர்நாடகாவில் உள்ள குடகு நாட்டில் பிராமணக் குடும்பத்தில் 1907 ஏப்ரல் 10-ம் தேதி பிறந்து, இளம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்நிய துணி எரிப்புப் போராட்டத்தில் மக்களோடு சேர்ந்து பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். ஆட்சியாளர்களால் தடியாலும், பூட்ஸ் காலாலும் மிருகத்தனமாக தாக்கப்பட்டார். அத்தனை அடி உதைகளையும் நெஞ்சுரத்தோடு எதிர் கொண்டார்.

“நியூ ஏஜ் ” பத்திரிகையில் முழுநேரமாகப் பணிபுரிந்து பொதுவுடமைக் கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை செய்தார்.
தொடக்கத்தில் காங்கிரஸ் தேசியவாதியாக இருந்த பி.எஸ்.ஆர் சிறைக்கு சென்றபோது அங்கே நேதாஜியின் நட்பை பெற்று நெருங்கிய நண்பரானார். காலப்போக்கில் அரசியல் மாறுபாடு கொண்டு கம்யூனிச கொள்கையின்பால் ஈடுபாடு கொண்டார்.

சிறையில் தோழர் ஹைதர்கான் கொடுத்த கார்ல் மார்க்சின் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’-யே, பி.எஸ்.ஆரை தோழர் பி.எஸ்.ஆராக உருமாற்ற அடித்தளமிட்டது.

1936 ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை தமிழ்நாட்டில் உருவாக்கினார். பி.எஸ்.ஆர். ஜீவாவுடன் இணைந்து ‘ஜனசக்தி’ பத்திரிக்கையின் மூலம் அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார். இதன்மூலம் இடதுசாரி அரசியலின்பால் ஈடுபாடு கொண்ட முன்னணி சக்திகளை உருவாக்கினர். இதன் தொடர்ச்சியாக கட்சி முடிவுக்கேற்ப 1942-ம் ஆண்டில் விவசாயிகள் இயக்கத்தின் பொறுப்பாளராக தஞ்சை பகுதிக்கு மாறினார்.

டெல்டா மாவட்டத்தில் கம்யூனிசத்தையும், விவசாய சங்கத்தையும் உருவாக்க கிராமம் கிராமமாகச் சுற்றி அலைந்து பிரச்சாரம் செய்து அயராமல் உழைத்தார்.

அப்போது வயல்களில் கூலி விவசாயிகள், சிறு குறு விவசாயிகள், பண்ணையடிமைகளாய் குறைந்த கூலிக்கு இருப்பதையும் அவர்களின் உழைப்பும், ரத்தமும் உறிஞ்சப்படுவதையும் கண்டு கொதித்தார்.

தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 12 இலட்சம் ஏக்கருக்கு மேல் உள்ள நஞ்சை நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இவை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில பெரும் நிலப்பிரப்புகள், ஆதீனங்கள் கையில் இருந்தன. ஒவ்வொருவருக்கும் குறைந்தது 6,600 ஏக்கர் நிலம் இருந்தது. இவையல்லாமல் தஞ்சை, திருப்பனந்தாள், உத்திரபதி, மன்னார்குடியில் என சுற்றுவட்டாரங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் மடங்களுக்கு சொந்தமாக இருந்தன. இங்கு லட்சக்கணக்கான விவசாயிகளை பண்ணையடிமைகளாக வைத்து கொழுத்தனர் பண்ணை நிலபிரப்புக்கள்.
அதிகாலை 3 மணிக்கு கொம்பு ஊதப்படும். பண்ணையடிமைகள் விழித்துக்கொண்டு நாலரை மணிக்கு ஏர்கட்ட மாட்டை அவிழ்க்க வேண்டும். அதன்பிறகு வயலில் இறங்குபவர்கள் 11 மணிக்கு மேட்டுக்கு(கரை) வர வேண்டும். அங்கு வைத்திருக்கும் கஞ்சியை குடித்துவிட்டு, மாட்டுக்கும் தண்ணீர் காட்டிவிட்டு, மீண்டும் வயலுக்குள் இறங்கி இரவு எட்டு, ஒன்பது மணி வரை உழைக்க வேண்டும்.

இதில் உடல்நிலை சரியில்லை என்றோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பண்ணையடிமைகள் வேலைக்கு வராமல் போனால், அவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் ஈரக்குலையை நடுங்கச் செய்யும்.

ஐந்து பிரி கொண்ட சாட்டையில், பிரியை விலக்கிவிட்டு கூரான கூழாங்கல்லை சொருகி அடிப்பார்கள். சதைகள் பிய்ந்துகொண்டு போகும். ரத்தம் பீறிடும். துடித்து அழுதால் அடி அதிகமாகும். இவ்வளவு அடிபட்டவர்களுக்கு எந்த வைத்தியமுமில்லை. வைக்கோலை கொளுத்தி சாணி உருண்டையைச் சூடு காட்டி ஒத்தடம் கொடுப்பது மட்டுமே வைத்தியம்.

பெண்களும் இதிலிருந்து தப்ப இயலாது. இந்த கொடூரத்தின் உச்சமே ‘சாட்டையடி சாணிப்பால்’. மாட்டு சாணத்தை கரைத்து மாட்டுக்கு மருந்து கொடுக்கும் மூங்கில் குழாயில் நிரப்பி அந்த சாணிப்பாலை பருக செய்வார்கள். ஒற்றைக்காலில் சுடு மணலில் நிற்கும் தண்டனை, இரும்பு கம்பிகளால் அடி என இரக்கமற்ற தண்டனைகள் விதவிதமாக தொடரும்.

பண்ணையடிமை வீட்டு பிள்ளைகள் படிக்கக் கூடாது. அவர்கள் வீட்டு மகன், மகள் திருமணம் நடக்க வேண்டுமென்றாலும் பண்ணையார் அனுமதி கிடைத்தால் மட்டுமே நடக்கும். மாடு வளர்த்தால் முதல் கன்று பண்ணை நிலபிரப்புக்கே. மானுடநேயத்தையே புதைத்து கேலிக்குள்ளாக்கும் இந்த கொடூரங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, விவசாய சங்கங்களை கட்டினார் பி.எஸ்.ஆர். சூரியன் உதிக்கும்முன் வயலுக்கு சென்று மறையும் வரை வேலை செய்யும் உழைப்புச் சுரண்டலை கடுமையாக எதிர்த்தார். தோளிலே போட வேண்டிய துண்டை இடுப்பிலே கட்டி கூனிக்குறுகிப் போவதைக் கண்டு அதிர்ந்து போனார்.

முதலில் விவசாயிகள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களின் நம்பிக்கையை பெற விவசாயிகளோடு சேர்ந்து வயலிலே இணைந்து உழைத்தார். அவர்களின் உணவையே இவரும் உண்டார். அவர்களின் இன்ப துன்பங்களில் எப்போதும் கூடவே இருந்தார்.

களப்பாள் குப்பு, இரணியன், மணலி கந்தசாமி போன்ற தோழர்களை வீறுகொண்டு எழச் செய்தார். திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகளில் இருந்த சாணிப்பால், சவுக்கடி போன்ற வன்முறைக்கு எதிராகக் கடுமையாக போராடினார். “கூலி உயர்வு” கேட்டு முதன்முதலில் விவசாயிகளை பண்ணையார்களுக்கு எதிராகக் கேள்வி கேட்க வைத்தார்.
நீங்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல..ஜாதிய அநீதி அக்கிரமங்களுக்கு அடிபணியாமல் அடித்தால் திருப்பியடியுங்கள் என்று போதித்தார். உங்கள் உரிமைக்காகவும் உங்கள் பங்குகளுக்காக போராடுகள் என்றார். ‘பண்ணையாட்களை சாட்டையால் அடிப்பதை நிறுத்தவேண்டும், சாணிப்பால் கொடுமை அகற்றப்படவேண்டும், முத்திரை மரக்காலில் நெல் அளக்க வேண்டும்’ என்ற மூன்று ஒப்பந்தங்களும் மன்னார்குடியில் ஏற்பட்டு, ஒப்பந்தம் வெற்றி பெற்றது. நிலபிரப்புக்களும் இதை தவிர்க்கமுடியாமல் ஏற்று ‘2 சின்னபடி நெல் கூலி பெண்களுக்கும், 3 சின்ன படி நெல் கூலி ஆண்களுக்கும்’ கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

பி.எஸ்.ஆர் விவசாயப் பிரச்சனைகளில் மட்டுமல்ல, சாதிய,சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக களமாடியவர். 1944 , மே மாதத்தில் விவசாயிகளுக்கான முதல் மாநாடு மன்னார்குடியில் நடந்ததென்றால் மூன்றாவது மாநாடு வத்திராயிருப்பில் நடந்தது. அப்போது நடந்த உழவர் பேரணி, மேலப்பாளையம் தெருவில் புகுந்து, கடந்து, அக்ரகாரத்தில் நுழைக்கிறது. இதைக்கண்டு பதறியடித்து வந்த இன்ஸ்பெக்டரும் அக்ரஹாரவாசிகளும் “இங்கே நுழையக் கூடாது” என்கிறார்கள். பி.எஸ்.ஆரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘எல்லோரும் மனிதர்கள் தான். உழைக்கும் அடித்தட்டு விவசாயிகள் இல்லையேல் இங்கு யாருமே வாழ இயலாது. அவர்களே உலக இயக்கத்துக்கான அச்சாணி’ என வெகுண்டெழுந்தார்.

இறுதியில் சம்மதம் கிடைத்து, அக்ரகாரத்துக்குள்ளும் பேரணி பயணிக்கிறது.
திருத்துறைப்பூண்டி பெரியநாயகி கோயிலில் கோயில் கொடி கட்டிவிட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் 15 நாட்களுக்கு திருத்துறைப்பூண்டி நகரத்துக்குள்ளேயே நுழையக்கூடாது’ என்பது ஊர் வழக்கம். தற்செயலாக நுழைந்த தலித் சீரங்கன் மற்றும் அவர் மனைவியும் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இந்த அநீதியைக் கண்டு பொங்கியெழுந்த பி.எஸ்.ஆர், 500 க்குமேற்பட்ட தலித் மக்களை திரட்டிக்கொண்டு, தேர் வரும்போது நடுரோட்டில் தடுத்து நிறுத்தினார். “எல்லோருக்கும் பொதுவான கடவுளின் தேரைத் தொழ எங்களுக்கு உரிமையில்லையா?” என்று முழங்கினார்கள். வடம் பிடித்து இழுத்தவர்கள் ஓட்டம்பிடித்தனர். பின்பு ஆட்சியர், கண்காணிப்பாளர், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடந்து இறுதியில் தலித் மக்கள் மீதான தடை நீங்கி உரிமைப் போராட்டம் வென்றது. (ஆனால் அதன்பிறகு சாதி இந்துக்களும் ஆன்மீக சாஸ்திர அன்பர்களும் தேரோட்டத்தை நிறுத்திவிட்டு சப்பரம் கட்டி இழுத்து செல்கின்றனர் என்பது தனிக்கதை).

தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவிய இரட்டை குவளை முறையை ஒழித்தார்.
சாதி தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களில் முற்பட்ட, பிற்பட்ட சமூக மக்கள் பெருமளவு பங்கேற்றனர் என்பது கவனிக்கப்படவேண்டியது. இதற்கிடையே நான்காண்டு தலைமறைவு வாழ்க்கையிலும் இருந்தவர், சேலத்தை சேர்ந்த தோழர் நாச்சியாரம்மாளை காதல் திருமணம் செய்தார்.

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் முடிந்த காலக்கட்டத்தில், திருத்துறைப்பூண்டியில் ‘நில வெளியேற்ற எதிர்ப்பு’ மாநாட்டுக்கு 2 இலட்சத்துக்கும் மேலான மக்கள் பங்கேற்றனர். 1952 ல் நடந்த பொதுத்தேர்தலில் தஞ்சை மாவட்டத்தின் 19 சட்டமன்ற தொகுதிகளில் 6 ல் கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு காரணம் அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டுவதில் ஆளுமைமிக்கவராக ‘பி.எஸ்.ஆர்’ இருந்ததேயாகும்..

நிலப்பிரபுத்துவ சாதிய கொடுமைகளுக்கு அஞ்சி வாழ்ந்த மக்கள் அவர்களின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக வாழ்ந்து டெல்டா மண்ணிலே உயிர் விட்டவர் தோழர் பி.எஸ்.ஆர்.

அவரை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு எழுதிய ‘தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு’தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘பி.சீனிவாசராவ் அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த வீரன்! பி.சீனிவாசராவே எழுதிய “கீழ தஞ்சையில் என்ன நடக்கிறது “முதலிய நூல்கள் உதவும்.

Tags: