‘நேட்டோ’ வேண்டவே வேண்டாம்

கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் போர் நெருக்கடியை உருவாக்கி சுமையைப் பிற நாடுகள் மீது சுமத்தும் ‘நேட்டோ'(NATO) இராணுவக் கூட்டணி வேண்டாம் என்ற கருத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. உக்ரைன் நெருக்கடியில், போரை முடிவுக்குக் கொண்டு வரும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ரஷ்யா மீது தடைகளை அமெரிக்கா விதித்தது. அந்தத் தடைகள் அமெரிக்காவுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்தத் தடைகளை அப்படியே ஐரோப்பிய நாடுகளும் விதித்தன. ஆனால், இந்த ஐரோப்பிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய அமெரிக்காவுடனான இராணுவக் கூட்டணி குறித்து பல ஐரோப்பிய நாடுகளில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ‘நேட்டோ’ இராணுவக் கூட்டணியில் இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக சேரவில்லை. அட்லாண்டிக் கடற்பகுதி நாடுகள் என்பதைத் தாண்டி, ஐரோப்பியக் கண்டத்தின் மத்திய, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி நாடுகளையும் இந்த இராணுவக் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அமெரிக்கா முனைந்துள்ளது.

புதிய உறுப்பினராக உக்ரைனை இணைக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன என்ற செய்திதான் ரஷ்யாவை உசுப்பி விட்டது. அதன் விளைவு, ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த நெருக்கடியைப் பற்றி கவலைப்படாமல், பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக ஆக்கும்  வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பின்லாந்துக்கு உறுப்பு  நாடுகள் ஆதரவு தெரிவித்து விட்டன. சுவீடனுக்கு துருக்கி எதிர்ப்பு  தெரிவிக்கிறது. அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டால்தான் புதிதாக உறுப்பு நாடுகளை இணைக்க முடியும். இந்நிலையில் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உறுப்பினராக இல்லாத நாடுகளில் உள்ள மக்களும் நேட்டோவின் விரிவாக்கம், தங்கள் நாடுகளை ஆபத்தான நிலைக்குத் தள்ளுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உறுப்பினராக உள்ள கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் நேட்டோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்கள். இன்னும் துருக்கி ஒப்புதல் அளிக்காததால் சுவீடனால் இணைய முடியவில்லை. இந்நிலையில், சுவீடன் நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்நாட்டின் 17 நகரங்களில் நடைபெற்ற கண்டனப் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினார்கள். நாட்டின் பாரம்பரியமான வெளிநாட்டுக் கொள்கைப் பாதையில் இருந்து விலக வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வலம் வந்தனர்.

பதற்றத்தைத் தூண்டாதீர் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடன் சேர்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, பல நாட்கள் நடைபெறும் போர்ப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். நேட்டோவில் உள்ள பல நாடுகளின் இராணுவ வீரர்கள் சுவீடனில் வந்து இறங்கிவிட்டார்கள். ‘அவுரோரா 23’ (Aurora 23) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில் பல நாடுகளைச் சேர்ந்த 26 ஆயிரம் இராணுவ வீரர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். சுவீடன் வரலாற்றில் இதுதான் இது வரையில் நடைபெற்ற இராணுவப் பயிற்சிகளிலேயே பெரிய பயிற்சி என்று கூறப்படுகிறது.

ஸ்டாக்ஹோம் (Stockholm) நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத் தில் பேசிய நெல்லி புய்க் (Nelly Puig) என்ற ஒருங்கிணைப்பாளர், “நேட்டோ என்பது அமெரிக்காவின் போர் எந்திரம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இது பாதுகாப்புக்கான கூட் டணி என்று அவர்கள் சொல்வது உண்மையல்ல. அமெரிக்காவுக்கு குற்றேவல் பணியைச் செய்யக் கூடிய அமைப்புதான் இந்த நேட்டோ  இராணுவக் கூட்டணி” என்று குற்றம் சாட்டினார். இதில் பேசிய கிறிஸ்டர் ஹோம் (Krister Holm), “இராணுவத்திற்கான ஒதுக்கீடு இரட்டிப்பாகி விடும். சுகாதாரத்திற்கும், கல்விக்குமான ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்து விடும்” என்றார். நேட்டோவில் இணைவதால், அணுஆயுதங்களை வைத்திருக்கும் கிடங்காக சுவீடன் மாறும் ஆபத்து இருப்பதால் போராட்டங்கள் தீவிர மடையும் என்று பல்வேறு அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

Tags: