என்.சி.பி.எச் (NCBH) பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது

என்.சி.பி.எச் (NCBH) பிரச்சனைக்கு சுமமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம்..

ஒரு மாத காலத்திற்கு மேல் இது பெரிதும் பேசப்படும் பொருளாக அமைந்துவிட்டது. கவலையும், கோபமும், வருத்தமும் கொண்டு பல தோழர்கள் நேரிலும் தொலைபேசியிலும், சிலர் சமூக ஊடகங்களிலும் இது பற்றி பேசிக் கொண்டே இருந்தார்கள்.

‘இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடும் சிபிஐ’ என்று திரு ராஜதுரை லாவணியை தொடங்கி வைத்தார். எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்.சி.பி.எச் என்று சாவித்திரி கண்ணன் தொடர்ந்தார். இந்திய கம்யூனிஸ்ட் பதிப்பக சர்ச்சை என்று ஜூனியர் விகடன் கட்டுரை வெளியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரிமையாளர் யார் என பதிலையும் கேள்வியையும் கலந்து கொடுத்தது பிபிசி செய்தி நிறுவனம். நக்கீரனிலும் ஒரு விபரமான கட்டுரை வந்தது. இன்னும் பல இதழ்களில் இருந்து, என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டு கேள்விகள் வந்து கொண்டே இருந்தன.

முதலாவது கட்டுரை வன்மமும், அகங்காரமும், மேட்டிமையும் கலந்து, தன் விருப்பத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறுகளைப் பொழிந்து வந்தது. அந்தத் தலைக்கனமிக்க கட்டுரையையும், எழுதியவரையும், எதிர்வினை ஆற்றிய தமிழ்ச் சமூகம் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்தது.

மற்ற கட்டுரைகளில் சில உண்மைகளையும், அவர்களிடம் சொல்லப்பட்ட சில கற்பனைகளையும், கட்டமைக்கப்பட்ட பொய்களையும் சேர்த்தும் திரித்தும், ஆர்வமூட்டும் முடிச்சுகளுடன் எழுதப்பட்டிருந்தன. ஒரு கட்டுரையை வெளியிட்டால் அதில் கொஞ்சம் சுவாரசியம் இருக்க வேண்டும் என்றுதான் கட்டுரையாளர்கள் நினைப்பார்கள். நல்ல விவரங்களைக் கொண்ட நக்கீரன் கட்டுரையிலும் கூட மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் பொறித்த செங்கொடி இடம் பெற்றிருந்தது.

சில கட்டுரைகளில் கட்சியிடம் கேட்கப்பட்ட கருத்துகளும் இடம் பெற்றிருந்தன. “இது பெரிதுபடுத்த வேண்டிய விஷயம் அல்ல சுமூகமாக தீர்வு காணப்பட்டு விடும்” என்பதையே கட்சி தனது பதிலாக இவற்றில் கூறியிருந்தது.

இதை இந்த அளவுக்கு பொதுவெளியில் விவாதிக்கப்படும் வகையில் வளர்த்திருக்க வேண்டுமா? சுமுகமாக பேசி தேர்வு செய்திருக்கக் கூடாதா என்று தோழர்கள் ஆதங்கப்படுவதில் நியாயம் உள்ளது.

72 ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கப்பட்ட என்.சி.பி.எச் நிறுவனம், நமது முந்தைய தலைமுறையால் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. நமது தலைவர்கள் எத்தகைய பெரும் பங்களிப்பைச் செய்து, இந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்கள் என்ற விபரம், சென்ற கடிதங்களில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. நிறுவனத்தை உருவாக்கினால் அதிலிருந்து இலாபம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாது, ஈட்டப்படும் தொகையை தொகைகளை மீண்டும் மீண்டும் அந்த நிறுவனத்திலேயே முதலீடு செய்ததால் இந்தப் பெரும் வளர்ச்சி கிட்டியது. புத்தகத் தயாரிப்பு, அச்சிடுதல், விநியோகம் மற்றும் விற்பனைக்கான வலைப்பின்னல் அமைப்பு என எல்லாம் அடங்கியதாக தமிழ்நாட்டின் முன்னணி புத்தக நிறுவனமாக என்.சி.பி.எச் உருப்பெற்றது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்தான், என்.சி.பி.எச் நிறுவனத்தின் தலைவர்களாகவும் நிர்வாக இயக்குனர்களாகவும் செயலாளராகவும் பங்குதாரர்களாகவும் இருந்தனர். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மாறும்போது, அல்லது இறந்து விடும் போது அவர்களுக்கு பதிலாக வேறு தோழர்களை கட்சி இயக்குனர்களாக பரிந்துரைத்தது. பங்குகளும் அவர்களது பெயர்களில் பகிர்ந்து வைக்கப்பட்டது. இரண்டரை ஏக்கர் பரப்புள்ள அம்பத்தூர் தலைமை நிலையம், ராயப்பேட்டையில் உள்ள பாவை அச்சகம், பல்வேறு ஊர்களில் உள்ள புத்தக நிலையங்கள் இவற்றையெல்லாம் அரும்பாடு பட்டு உருவாக்கிய நமது தலைவர்கள் யாரும், தமது பங்கை எடுத்துச் சென்றதோ, சொந்தம் கொண்டாடியதோ இல்லை என்பது மட்டுமல்ல, அவ்வாறு அவர்கள் நினைத்தது கூட இல்லை.

புத்தகங்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், சாமானிய குடும்பங்களின் குழந்தைகள் பயில்வதற்கான பள்ளிக்கூடம், மருந்தகங்கள், மருத்துவமனை ஆகியவற்றையும் துணை நிறுவனங்களாக என்சிபிஎச் இயக்குகிறது.

நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த தோழர்கள் தா. பாண்டியன், எம். எஸ். தாவூத் ஆகிய தோழர்கள் இறந்துவிட்டதால், அந்த இடத்துக்கு தோழர்கள் இரா.முத்தரசன், க.சந்தானம் ஆகியோர் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டார்கள். பின்னர்தான், நிறுவனத்தின் தலைவராக இருந்த தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் பெயரில் இருந்த பங்குகள் உட்பட பலரிடமிருந்த பங்குகள் ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

தோழர் இரா. நல்லகண்ணு அவர்களிடமிருந்து எடுத்த பங்குகளை திரும்ப அவருக்கே மாற்றம் செய்யுமாறு நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்த சண்முகம் சரவணன் அவர்களிடம் கட்சி கூறியது. அவரும் அதைச் செய்து தருவதாகவே 16.2.2023ல் உறுதி அளித்தார்.

ஆனால் நாள் கடத்திக் கொண்டு சென்றாரே தவிர ஒப்புக்கொண்டதை செய்யவில்லை. 16.3.2023 அம்பத்தூரில் நடந்த என்சிபிஎச் இயக்குனர் குழு கூட்டத்திலும் இது வலியுறுத்தப்பட்டது. ஆனால் தனக்கு மறுநாள் வரை கால அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்னரும் அவர் எந்த பதிலும் கூறவில்லை. 19.3.2023 அவரது வீட்டுக்கே தோழர்கள் கோ.பழனிச்சாமி, வை.சிவபுண்ணியம் இருவரும் தேடிச்சென்று சந்தித்துப் பேசினர். அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த கட்சியின் மாநிலக் குழு கூட்டத்திற்கு, சண்முகம் சரவணனை அழைத்து வந்தனர். அவர் என்சிபிஎச் கட்சி கிளையின் சார்பில் மாநிலக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்று இருக்கிறார்.

அன்று இரவு செயற்குழு கூட்டத்திற்கு அவரை அழைப்பாளராக அழைத்துப் பேசியபோது, அவரே ஐந்து தோழர்களை இயக்குனர்களாக வைத்துக் கொண்டு, பங்குகளை பகிர்ந்து தரலாம் என்று தெரிவித்தார். கூடுதலாக இரண்டு தோழர்களை சேர்க்கலாமா என்று கேட்டபோது அதையும் ஒத்துக் கொண்டார். அவர்களை இயக்குனர்களாக நியமிப்பதற்கான ஆவணங்களையும் வாங்கிச் சென்றார். ஆனால் அதன் பின் தானே முன்மொழிந்த அந்த ஆலோசனைகளை அமுல் நடத்த மறுத்துவிட்டார்.

அதன் பின்பு 20 ஏப்ரல் 23, 24, 27, 28 ஆகிய திகதிகளில் அவருடன் தொடர்பு கொண்டு பேசிய போது தான் சென்னையில் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். கடைசியில் ஏப்ரல் 27ஆம் திகதி பாலன் இல்லம் வருவதாக உறுதியளித்தார். ஆனால், நிறுவனத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், 15 இயக்குனர்களை தான் நியமித்து விட்டதாகவும் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்ட எழுத்துப்பூர்வமான தகவல் நமக்கு கிடைத்தது.

அதன் பின்னும் சமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு 28.4.2023ஆம் திகதி அன்று கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி ராஜா அவர்களே நேரடியாக அம்பத்தூரில் உள்ள என்சிபிஎச் அலுவலகத்திற்குச் சென்றார். தோழர்கள் இரா.நல்லகண்ணு, கோ.பழனிச்சாமி, வை. சிவபுண்ணியம், டி இராமசாமி இயக்குனர் ஸ்டாலின் குணசேகரன் வழக்கறிஞர் கோ பாண்டியன் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, தெற்கு மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி ஆகியோரும் அவருடன் சென்றனர். அவர்களிடம் 2.5.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்து ஏற்கனவே பேசிய வகையில் தீர்வு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.

ஆனால் 1.5.2023 ஆம் திகதி அன்று அம்பத்தூர் காவல் நிலையத்தில் மேலே குறிப்பிட்ட தோழர்கள் தங்களை அலுவலகத்துக்குள் வந்து மிரட்டியதாக காவல்துறையில் என்.சி.பி.எச் சார்பில் புகார் செய்தார்கள். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, கோ.பழனிச்சாமி, நா.பெரியசாமி, வை.சிவபுண்ணியம், வழக்கறிஞர் கோ.பாண்டியன் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களான இரா முத்தரசன், க.சந்தானம் ஆகியோர் என்.சி.பி.எச் அலுவலகத்துக்குள் நுழையக்கூடாது எனத் தடை உத்தரவும் பெற்றார்கள்.

உள்ளரங்கில் பேசிக் கொண்டிருக்கும்போதே, காவல்துறையில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு, தடை உத்தரவு என பிரச்சனையை அவர்களே பொதுவெளிக்கு கொண்டு சென்றார்கள். இதன் தொடர்ச்சியாக எஸ்.வி.ராஜதுரை கட்டுரை எழுதினார். அதில், மதிப்புமிக்க தலைவர் டி.ராஜா அவர்கள், அலுவலகத்துக்குச் சென்று மிரட்டியதாக மதியிழந்து குற்றம் சாட்டினார்.

பங்குகளை மாற்றுவதில் செய்யப்பட்டிருந்த முறைகேடுகளை நிரூபிக்க தெளிவான ஆவணங்கள் நம்மிடம் இருந்தன. அவற்றை வைத்து நாமும் காவல்துறையில் புகார் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவ்வாறு ஏற்படுத்தியவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்வது தானே சட்டம் விதித்துள்ள நடைமுறை. ஆவணங்களை பரிசீலித்த காவல்துறை, முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து அதற்குரிய பிரிவுகளில் வழக்கு போட்டது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தேடியது. ஆனாலும் கூட, அந்த நிலையிலும் பேசி சுமூக உடன்பாடு காண வேண்டும் என்றே கட்சி விரும்பியது. அதற்கான செயல்பாட்டிலும் ஈடுபட்டது.

இந்த நிலையில் சண்முகம் சரவணன் நேரில் வந்து பேசுவதாக உறுதி அளித்தார். 24.5.2023 அன்று அவரும் அவருடன் மண்டல மேலாளர்களான மதுரை கிருஷ்ணமூர்த்தி, திருச்சி குமார், கோவை ரங்கராஜன், மற்றும் பாவை அச்சகத்தின் மேலாளர் சிவகுமார் ஆகியோர் பாலன் இல்லம் வந்தார்கள். அவர்களோடு பேச கட்சியின் செயற்குழு, தோழர்கள் இரா.முத்தரசன், கே.சுப்பராயன், டி.எம்.மூர்த்தி ஆகியோரை நியமித்தது. மேலே சொல்லப்பட்டவை உட்பட பல்வேறு விஷயங்களை ஆவணச் சான்றுகளோடு தோழர்கள் முன்வைத்து பேசினார்கள்.

நிறைவாக, தான் செய்தது பெரும் தவறு என்பதை சண்முகம் சரவணன் ஒப்புக்கொண்டார். ‘சிலரது தவறான வழிகாட்டுதலின் பேரில் இவ்வாறு நிகழ்ந்து விட்டதாகக்’ கூறி வருத்தம் தெரிவித்தார்.

பொதுவெளியில் இந்த விஷயம் பேசப்பட்டு விட்டதாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்.சி.பி.எச் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்ற விவாதம் முன்வைக்கப்பட்டதாலும், கட்சி அணிகள் கடும் கோபமடைந்திருக்கின்றன. உரிய மாறுதல்களைச் செய்யாமல் பழைய நிலையிலே தொடர்வது சாத்தியமில்லை. அவர் பெயரில் மாற்றப்பட்ட பங்குகள் அனைத்தையும் திரும்பத் தர வேண்டும், இயக்குனர் குழு கூட்டத்தை நடத்தாமல் அவர் நியமித்த ஒன்பது இயக்குனர்களை திரும்பப் பெற வேண்டும் என்ற செயற்குழு முடிவு அவர்களிடம் கூறப்பட்டது.

தனது கருத்துக்களை முன்வைத்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், இறுதியில் கட்சி முடிவை ஏற்பதாக சண்முகம் சரவணன் ஒப்புதல் அளித்தார். இதற்கான ஆவணங்களில் எல்லாம் கையெழுத்திட்டதோடு, அப்போதே இயக்குனர் கூட்டமும் நடத்தப்பட்டு நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது.

என்.சி.பி.எச் நிறுவனத்தின் புதிய தலைவராக த. ஸ்டாலின் குணசேகரன், நிர்வாக இயக்குனராக க. சந்தானம் ஆகியோரை இயக்குனர் குழு கூட்டம் தேர்வு செய்தது. நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் சண்முகம் சரவணன் தொடர்ந்து பணிபுரிவார். நிறுவன மேம்பாட்டுக்காக தனது பங்களிப்பைச் செலுத்துவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. சட்ட ஆலோசகராக கோ.பாண்டியன் செயல்படுவார்.
இந்தச் சுமூகத் தீர்வின் அடிப்படையில் இரு தரப்பிலும் தரப்பட்ட புகார்கள், வழக்குகளை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சி ஒற்றுமையாக நின்று இந்த பதட்டமிக்க பிரச்சனையை எதிர்கொண்டது. தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், நிர்வாக அதிகாரிகள் இன்னும் பலரும் அக்கறையோடு விசாரித்தனர். இதில் தீர்வு காணப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஒத்துழைப்பு செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றி.

தோழமையுடன்
இரா முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

25-05-2023

(வாசகர்களின் தகவல்களுக்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்.வி. ராஜதுரை மற்றும் சாவித்திரி கண்ணன் ஆகியோரின் கட்டுரைகள் கீழே பிரசுரிக்கப்படுகின்றன)

இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடும் சி.பி.ஐ (CPI)!

-எஸ்.வி.ராஜதுரை

மிழகத்தின் மூத்த குடிமக்களிலொருவரும் அனைத்துக் கட்சியினராலும் ( பாஜக வினரும் இதில் இருக்கிறார்கள் என நம்புகிறேன்) மதிக்கப்படுபவருமான தோழர் ஆர். என். நல்லக்கண்ணு (ஆர்.என்.கே.), ஆவடியிலுள்ள காவல் துறை ஆணையரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

அந்தப் புகாரின் உள்ளடக்கம் பற்றி நமக்குத் தெரிவதெல்லாம், தமிழகத்திலுள்ள மிகப் பெரும் புத்தக வெளியீட்டு நிறுவனங்களிலொன்றான நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் மேலாண் இயக்குநர் சண்முகம் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் இருப்பவைதான்.

அதாவது, ஆர்.என்.கேவின் புகாரின் பேரில் (அதன் அடிப்படையில் இதுவரை முதல் தகவல் அறிக்கை எதுவும் காவல் துறையால் தயாரிக்கப்படவில்லை) ஆவடியிலுள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட மேலாண் இயக்குநர் ஊரில் இல்லாததால், அந்த நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பனியாற்றும் இரத்தினசபாபதி அங்கு விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்.

தோழர் ஆர்.என்.கே., அந்த நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளையும் வேறு சிலருடைய பங்குகளையும், மேலாண் இயக்குநர் அச்சுறுத்தியோ, நிர்பந்தம் செய்தோ, அல்லது உண்மைகளைத் திரித்துக் கூறியோ தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக புகார் கொடுத்துள்ளார் என்று அங்கிருந்த காவல் துறை அதிகாரியொருவர் கூறியதை மறுக்கும் வண்ணம், அந்தப் புகாருக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை அந்த விற்பனை மேலாளர் தக்க ஆவணங்களை காட்டி விளக்கிக் கூறியிருக்கிறார்.

ஆனால் 10.5.2023 அன்று காலை 6 மணிக்கு அம்பத்தூரிலுள்ள என்.சி.பி.எச். நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த இரத்தினசபாபதியையும், அந்த நிறுவனத்தின் திண்டுக்கல் கிளை மேலாளர் பண்டரிநாதனையும் மட்டுமின்றி, சண்முகம் சரவணன் வீட்டுக்குச் சென்று அவரது மைத்துனரையும் கைது செய்திருக்கின்றனர் காவல் துறையினர் என்பதையும்,

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 41-A வை மீறும் வகையிலும் முதல் தகவல் அறிக்கை, அரெஸ்ட் மெமோ ஆகிய ஏதுமின்றியும் இந்தக் கைது நடவடிக்கை நடந்திருக்கிறது என்பதையும், அதுமட்டுமின்றி, சண்முகம் சரவணனின் 18 வயது மகனையும் கைது செய்ய முயன்றிருக்கின்றனர் என்பதையும்,

அவன் நேற்று (10.5.2023) லயோலா கல்லூரியில் தேர்வு எழுத வேண்டியிருப்பதாகச் சொன்னவுடன் அவனது ஹால் டிக்கெட்டின் புகைப்படப் பிரதியை எடுத்துக் கொண்டு அவனை விட்டுவிட்டனர் என்பதையும் உயர்நீதி மன்றத்தில் சண்முகம் சரவணன் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரத்தினசபாபதியையும் மற்ற இருவரையும் மாலை 7 மணிவரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்த காவல் துறையினர் அவர்களிடம் முதல் தகவல் அறிக்கை எதனையும் தரவில்லை.

அவர்களைப் பார்க்கச் சென்ற வழக்குரைஞரிடமும்கூட இரத்தினசபாபதி மீது புகார் கொடுத்தவர் யார், அவரது தகுதி என்ன, அந்தப் புகார் மனுவில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைக் காவல் துறையினர் தெரிவிக்கவில்லை.

ஆனால், இரத்தினசபாபதியுடன் கைது செய்யப்பட்ட மற்ற இருவரையும் விடுவித்துவிட்டு இரத்தினசபாபதியை மட்டும் ரிமாண்ட் செய்ய சம்பந்தப்பட்ட நீதிபதியின் வீட்டுக்கு நேற்று பின்னிரவு 12.45 மணி போல அழைத்துச் சென்று ரிமாண்ட் செய்ய உத்தரவு பெற்றனர். அந்த இரவில் ரிமாண்ட் செய்யும் அளவிற்கு அவர் தீவிரவாதியா தேசத்துரோகம் செய்தவரா? அவ்வளவு அவசரம் ஏன்?. என்கிற கேள்வி எழுகிறது.

இவை ஒருபுறமிருக்க , சில நாள்களுக்கு முன் சீருடை அணியாத காவல் துறையினர் அதி காலையில் சரவணன் சண்முகம் இல்லாத சமயத்தில் அவருடைய வீட்டுக்குச் சென்று, எந்தவிதமான ஆவணங்களும் ( search warrant) இல்லாமல் பெண்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்த அந்த வீட்டு அறைகள் ஒவ்வொன்றையும் சோதனையிட்டுள்ளனர்.

காவல் துறையினர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியிலுள்ள ஒரு கட்சி என்ற வகையில் தங்கள் செல்வாக்கையும் தோழர் ஆர்.என்.கேவுக்கு உள்ள நற்பெயரையும் பயன்படுத்தி சி.பி.ஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் காவல் துறைக்கு நிர்பந்தம் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகிக்க வேண்டியுள்ளது.

இந்த ஊகம் எனக்குத் தோன்றியதற்குக் காரணம் உயர் நீதி மன்றம் முத்தரசன் மற்றும் ஐவர் என்.சி.பி.எச்.நிறுவன விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று இடைக்கால ஆணை பிறப்பித்திருப்பதுதான். முத்தரசனும் பிற ஐந்து பேரில் இருவரும் என்.சி.பிஎச். நிறுவனத்தின் இயக்குநர்கள் என்றாலும் முத்தரசனுக்கு அந்த நிறுவனத்தில் எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் ஒருவருக்கு மட்டும் 200 பங்குகளிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்த நிறுவனத்தைப் பற்றிய சில உண்மைகளைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1951ஆம் ஆண்டு அந்த நிறுவனம் ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஜாம்பவான்களாக இருந்த தோழர்கள் ப.சீனிவாச ராவ், ப.ஜீவானந்தம், மணலி கந்தசாமி, எம்.ஆர்.வெங்கட்ராமன், வி.பி.சிந்தன் ஆகியோரின் சிறு முதலீட்டைக் கொண்டு நிறுவப்பட்டதாகும். அதன் நோக்கம் கம்யூனிஸ்ட் கருத்துகளைப் பரப்புவதற்கான நூல்களை வெளியிடுவதே.

ஆனால் கட்சி இரண்டாக உடைந்ததும் தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமனும் வி.பி.சிந்தனும் என்.சி.பி.எச். நிறுவனத்தில் இருக்கவில்லை. எனவே அதில் முழுக்க முழுக்க சோவியத் ஆதரவு நிலைப்பட்டை மேற்கொண்ட சிபிஐயைச் சேர்ந்த இயக்குநர்களே நியமிக்கப்பட்டனர். அந்த நிறுவனம் சிபிஐக்கு சொந்தமானதோ அல்லது அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியதோ அல்ல.

அந்த நிறுவனம் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தார்மிகரீதியாகத் தொடர்புடையது என்ற அளவிலேயே சி.பி.ஐக்கு அதில் செல்வாக்கு இருந்ததேயன்றி வேறு எந்தக் காரணமும் இல்லை. நியாயமாகப் பார்த்தால் சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களும்கூட இயக்குநர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சோவியத் யூனியனிலிருந்து இலவசமாக அனுப்பப்பட்ட புத்தகங்களை விற்பதன் மூலமே அந்த நிறுவனத்தின் வருவாயில் பெரும்பகுதி இருந்து வந்தது. சோவியத் யூனியன் தகர்ந்து விழுந்தவுடன் கம்யூனிஸ்ட் அல்லாத நூல்களையும் பல்வேறு அறிஞர்களின் நூல்களையும் வெளியிட்டு வந்ததன் மூலமே அந்த நிறுவனம் தாக்குப் பிடித்துவந்தது.

தோழர் ஆர்.என்.கே.வால் மேலாண் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிறகு ஆயுள்காலத்திற்கும் அந்தப் பதவியை வகிக்கும்படி செய்யப்பட்ட சண்முகம் சரவணன் அந்த நிறுவனத்திற்கு ஏறத்தாழ பத்து கிளைகளை உருவாக்கியதுடன் கட்டடங்கள் முதலிய சொத்துகளையும் சேர்த்து கொடுத்திருக்கிறார்.

ஏறத்தாழ 400 பேர் பணியாற்றும் அந்த நிறுவனத்தில் கோவிட்-9 தொற்று நோய்க்காலத்தில் வணிகம் தொய்வடைந்திருந்த நிலையிலும்கூட அனைத்து ஊழியர்களுக்கும் முழு ஊதியம் தரப்பட்டது, எழுத்தாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு ஆண்டு தோறும் உரிமத் தொகைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்து ஒப்பந்தம் பெற்று பாட நூல்கள் அச்சடித்து வெளியிடுவது, கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் புத்தக விற்பனை அதிகரித்தது. விறபனையை அதிகரிக்கச் செய்வதில் இரத்தினசபாபதிக்கும் முக்கியப் பாத்திரம் உள்ளது. இவற்றை நடுநிலையாளர்கள் அனைவரும் அறிவர்.

நல்ல ஆதாயம் ஈட்டும் அந்த நிறுவனத்தை கட்சியைச் சேர்ந்த சில சுயநலமிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகள் செய்து வந்ததாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் பரவிவந்தன.

அந்த சுயநலமிகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரைக் கைக்குள் போட்டுக் கொண்டு தங்கள் திட்டத்தை நிறைவேற்ற முயன்றனர் என்றும், பணக் கையாடல் போன்ற குற்ற நடவடிக்கைகளுக்காக மேலாண் இயக்குநரால் தண்டிக்கப்பட்ட சிலரைப் பாதுகாப்பதற்காகப் பல முயற்சிகளைச் செய்து வந்தனர் என்ற வதந்திகளும் பரவி வந்தன.

அந்தச் சூழ்நிலையில்தான் என்.சி.பி.எச். அலுவலகத்தில் நுழைவதற்கு உரிமை உள்ள முத்தரசனும் வேறு ஓரிருவரையும் தவிர அந்த நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாத கட்சிக்காரர்கள் அங்கு சென்று சண்முகம் சரவணன் தன் பங்குகளைக் கட்சிக்காரர்களுக்கு மாற்றித் தரவேண்டும் என்ற மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிலொருவர் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா.

இதில் வேடிக்கை என்னவென்றால் தோழர் நல்லகண்னுவின் பங்குகள் இரண்டாண்டுகளுக்கு முன்பே சண்முகம் சரவணனுக்கு முறைப்படி மாற்றப்பட்டன என்பதும், ஆனால் அந்த இரண்டாண்டுக் காலத்தில் தோழர் நல்லக்கண்ணு எந்த மோசடிப் புகாரையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், அந்தப் பங்குகள் சரவணன் சண்முகத்திற்கு மாற்றிக் கொடுத்ததுடன் அவரை ஆயுள்கால மேலாண் இயக்குராக நியமிக்க தன்னுடைய ஒப்புதலைத் தந்துள்ளதுடன், பிற இயக்குநர்களின் ஒப்புதலையும் பங்குதாரர்களின் வருடாந்திரப் பொதுக்குழுவின் ஒப்புதலையும் பெற்றுத் தந்திருக்கிறார் என்பதாகும்.

அந்த நிறுவனத்தின் சட்டதிட்டத்தின்படி இயக்குநர்கள் கூறும் ஆலோசனைகளும் தீர்மானங்களும் பங்குதாரர்களின் பொதுக் குழுக் கூட்டத்தால் ஒப்புதல் தரப்பட வேண்டும். அதன் பிறகுதான் அவை நடைமுறைக்கு வரும். அந்த நிறுவனத்தில் மிக அதிகமான பங்குகளை வைத்திருக்கும் சண்முகம் சரவணனால் அந்த தீர்மானங்களை நிராகரிக்க முடியும்.

தங்கள் கட்சிக்கான ஒரு பத்திரிகையைகூட நடத்த இயலாதவர்களும் முறையான கல்விப் படிப்போ அல்லது ஆழமான புத்தகப் படிப்போ இல்லாதவர்களுமானவர்களின் கைகளுக்கு என்.சி.பி.எச்.நிறுவனம் சென்றுவிட்டால், அது விரைவில் சீரழிந்து சின்னாபின்னமாகி விடும் என்பது நிச்சயம்.

எனவே சட்டப்படி அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு உரிமை கொண்டாட முடியாதவர்கள், காவல் துறையை அணுகியிருக்கின்றனர்.

சில நாள்களுக்கு முன் இரத்தினசபாபதியை ஆவடியிலுள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்திலுள்ள ஆய்வாளரொருவர், தானே முன்வந்து இரத்தினசபாபதியையும் சண்முகம் சரவணனையும் தோழர் ஆர்.என்.கே.வின் வீட்டுக்கு அழைத்துச் சென்று நிறுவனத்தின் பங்குகளை கட்சிக்காரர்களுக்கும் சரவணன் சண்முகம் முதலிய நிர்வாகிகளுக்கும் சரிபாதியாகப் பிரித்துத் தர ஏற்பாடு செய்வதாகக் கூறியதாகவும் அந்த யோசனையை மேலாண் இயக்குநரைக் கலந்தாலோசிக்காமால் ஏற்றுக்கொள்ள இரத்தினசபாபதி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகுதான் அவரைக் கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. திமுகவுடன் தோழமை கொண்டுள்ள கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் சிபிஐ கட்சித் தலைவர்கள் சிலர் காவல் துறையினர் மீது நிர்பந்தம் கொடுத்து என்.சி.பி.எச். நிறுவனத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்வதையும்,

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரது நூல்களும் பெரியார் பற்றிய நூல்களும்கூட இப்போதுள்ள மேலாண் இயக்குநரின் முன்முயற்சியாலேயே வெளியிடப்பட்டுள்ளன என்பதையும் காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். எனவே தோழமைக் கட்சிகள் தங்களுக்குள்ள செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் அவர் முற்றுப் புள்ளிவைக்க வேண்டும்.

சொத்து சம்பந்தமான சிவில் வழக்குகளில் காவல் துறையினர் தலையிடக்கூடாது, அதை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள்தான் கையாள வேண்டும் என்பது காவல் துறையினருக்கும் தெரியும்.

ஆனால், ஆளும் கட்சியின் தோழமைக் கட்சியின் நிர்பந்தத்திற்கு உட்பட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை அவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும் தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையின் மீது நிர்பந்தம் செய்ததற்கும் மேற்சொன்ன அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கும் தோழர் ஆர்.என்.கே. தார்மிகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனித உரிமைகளுக்குக் குரல்கொடுக்க வேண்டிய ஒரு கம்யூனிஸ்ட் செய்கின்ற வேலையா இது என்று அவர் தன்னைத்தானேயும் கட்சிக்காரர்களையும் கேட்க வேண்டும். அவர் கொடுத்த புகாரில் உண்மை இருக்கலாம். ஆனால் அதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட அதர்மச் செயல்களுக்காக அவர் வெட்கப்பட வேண்டும்.

எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்.சி.பி.ஹெச் (NCBH)?

-சாவித்திரி கண்ணன்

புத்தக வாசிப்பை பட்டி தொட்டியெங்கும் முதன்முதலாக பரப்பிய 72 ஆண்டுகள் பாரம்பரியமிக்க என்.சி.பி.ஹெச் நிறுவனம் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து ஒரு சில தனி நபர்களால் களவாடப்பட்டிருக்கிறது. பல சர்ச்சைகள், சட்டச் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் என்.சி.பி.ஹெச்சில் என்ன நடந்தது?

ஏழைத் தொழிலாளிகள் மற்றும் கூலி விவசாயிகளின் கட்சியாக அன்று அறியப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக வந்து கொண்டிருந்த ஜனசக்தியின் கிளை நிறுவனமாக முதலில் ஜனசக்தி பிரசுராலயம் என்றும் ஆங்கிலத்தில் பீப்பிள் புக் ஹவுஸ் என்ற பெயரிலும் 1951 வாக்கில் உருவானது. இதற்கு கட்சி தான் முதலீடு செய்து வி.சீனிவாசராவ், ஜீவா, மணலி கந்தசாமி, எம்.ஆர்.வெங்கட்ராமன், வி.பிசிந்தன் போன்றோரை பங்குதார்களாக அறிவித்தது. சில ஆண்டுகளில் சோவியத் யூனியன் உதவி செய்ய முன் வந்தது. எனவே, அந்த உதவியை ஒரு கட்சிக்கு செய்ய முடியாது என்பதால் பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றப்பட்டது! இதன் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் யாவருமே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.வி.சுந்தரம், மோகன் குமாரமங்களம், பாலதண்டாயுதம், பா.மாணிக்கம், ராதாகிருஷண மூர்த்தி.. போன்ற பலர் இதன் பொறுப்பில் மகத்தான பங்களிப்பு தந்துள்ளனர். ஊழியர்களுமே கட்சி குடும்பத்து பிள்ளைகள் தாம்!

அந்த நாட்களில் சோவியத் யூனியனின் மிகத்தரமான ஆனால், மிகவிலை குறைந்த புத்தகங்கள் 70 சதவிகித தள்ளுபடிக்கு என்.சி.பி.ஹெச்சுக்கு தரப்பட்டன! அனுப்பும் செலவும் அவர்களுடையது தான். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை மட்டுமே பத்து லட்சம் பிரதிகள் விற்பனையான காலகட்டம் அது. கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற லட்சிய தாகம் தான் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்த தோழர்களை அன்று இரவு, பகல் பாராமல் வேலை பார்க்க வைத்தது. என்.சி.பி.ஹெச் வருமானத்தில் எப்போதாவது கட்சிக்கு நிதி உதவியாக ஐம்பதாயிரம், ஒரு லட்சம் தருவார்கள். பல இடங்களில் நிறுவனத்திற்கு சொத்து வாங்கப்பட்டது. அம்பத்தூரில் சேவை நோக்கத்தோடு மருத்துவமனை, பள்ளிக் கூடம் போன்றவை கட்டப்பட்டன. இவை எல்லாமே மிக குறைந்த லாபத்தை என்.சி.பி.ஹெச் ஈட்டிய காலத்தில் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சோவியத் யூனியன் சிதைவுக்கு பிறகு, சோவியத் புத்தகங்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப பல்வேறு வியாபார உத்திகள் வகுக்கப்பட்டு பல தரப்பட்ட புத்தகங்கள் போடத் தொடங்கினர். அப்போதே கொள்கையில் இருந்து சற்று விலகுவதாகப் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன! பேராசிரியர் நா.வானமாமலை என்.சி.பி.ஹெச் பொறுப்பில் இருந்து விலகினார்.

அதே சமயம் இந்த காலகட்டத்தில் அம்பேத்காரின் ஆக்கங்கள் பலவும் அச்சிடப்பட்டன. என்.சி.பி.ஹெச்சின் துணை நிறுவனங்களாக பாவை பிரிண்டர்ஸ், தாமரை பதிப்பகம், அறிவு பதிப்பகம்.. போன்றவை உருவாக்கப்பட்டன! பள்ளிக் கல்வித் துறையின் புத்தகங்கள் அச்சடித்தனர். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிடம் நிறைய ஆர்டர் பெற்றனர். வங்கிகளில் கூட பிரிண்டிங் ஆர்டர் பெற்றனர். ஆரம்ப காலத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை..என இருந்தது பத்து கிளைகளாக விரிவாக்கம் பெற்றது.

இன்றைக்கும் பதிப்பகத் துறையில் கோலோச்சும் ஆர்.எஸ்.சண்முகத்தின் செண்பகா பதிப்பகம், லட்சுமணனின் ஏகம் பதிப்பகம், என்.கே.கிருஷ்ணமூர்த்தியின் ராஜ்குமார் பப்ளிகேஷன்ஸ், ஜெயக்குமாரின் அருணா பப்ளிகேஷன்ஸ், ஆவுடையப்பனின் ஏ.எம்.புக் ஹவுஸ்..போன்ற பத்துக்கு மேற்பட்ட பதிப்பகங்கள் என்.சி.பிஹெச்சில் உழைத்து, களைத்து வெளியேறியவர்களால் ஆரம்பிக்கப்பட்டவையே! இது ஒரு வகையில் தனிப்பட்டவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, திறமை இவற்றை அங்கீகரித்து பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை தரத் தவறியதன் விளைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நிறுவனத்தின் உழைப்புக்கு அடிநாதமாக உள்ள உழைப்பாளிகளுக்கு அதன் லாபத்தில் உரிய பங்கை தராமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு என்றும் சொல்லலாம்.

இன்றைய சண்முக சரவணனுக்கு முன்னோடியாக துரைராஜ் என்பவர் செயல்பட்டார். அவர் நிறைய ஊழல் செய்தார் என புகார் பட்டியல் தந்து தான் தஞ்சை கிளை மேலாளராக இருந்த சண்முக சரவணன் சென்னைக்கு வந்து போகும் போதெல்லாம் தா.பாண்டியனின் குட்புக்கில் இடம் பெற்றார்.

தா. பாண்டியன் அவர்களால் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டவர் தான் இந்த சண்முகச் சரவணனும், இரத்தினசபாபதியும் மற்றும் சிலரும்! இவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருந்தனர். இதைத் தொடர்ந்து ஏற்கனவே பல புகார்களுக்கு ஆளாகியுள்ள சண்முக சரவணனுக்கு சொந்த சாதிப் பற்று காரணமாக தா.பாண்டியன் முக்கிய இயக்குனர் பதவி தந்துள்ளார் என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்தன! இயக்குனர் பதவிக்கு வந்த சரவணனை மேனேஜிங் டைரக்டராகவும் பதவி உயர்வு தந்தனர்.

என்.சி.பி.ஹெச்சில் சுமார் 400 ஊழியர்கள் உள்ளனர். பதவிக்கு வந்ததும் சண்முக சரவணன் செய்த காரியம் ஊழியர்களின் சாதி குறித்த விபரங்களை அவர்களிடமே கேட்டு பெற்றது தான்! இவ்வாறு அறிந்து கொண்ட பிறகு ஏராளமானோர் குறிப்பாக பல காலம் நேர்மையாக பணியாற்றியோர் வேலையில் இருந்து விலக்கப்பட்டனர். ”இதையல்லாம் தா.பாண்டியன் கவனத்திற்கு கொண்டு வந்த போது, அவர் சண்முக சரவணன் பக்கமே உறுதியாக நின்றார்” என்று விரக்தியடைந்து வெளியேறிய சிலர் கூறுகின்றனர்.

என்.சி.பிஹெச் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனம். ஆகவே, அதை தனி நபர்கள் உரிமை கோருவதை அனுமதிக்க முடியாது என இன்று கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள்! இது நூறு சதவிகித உண்மை தான்! ஆனால், இந்த நிறுவனத்தின் மீது எந்த வகையிலும் ஈடுபாடு காட்டாமல், கண்காணிப்போ, வழி நடத்தலோ இல்லாமல் தொடர்ந்து கட்சித் தலைமை எப்படி அம்னீஷியா மோடுக்கு போனது என்பது தான் பலரும் வைக்கின்ற கேள்வியாகும்.

பின் வரும் கேள்விகளுக்கு கட்சி என்ன விடை சொல்லப் போகிறது?

# இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது இருந்த அரசியல் சூழல்கள் காரணமாக இது பிரைவேட் லிமிடெட் ஆக உருவாக்கப்பட்டாலும், பிற்பாடு இதை கட்சி சார்ந்த ஒரு அறக்கட்டளையாக அல்லது கூட்டுறவு நிறுவனமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது ஏன்?

# குறிப்பிட்ட ஒரு சாதியின் ஆதிக்கம் பொதுவுடமை இயக்கத்தின் நிறுவனத்தில் கோலோச்ச அனுமதித்தது எப்படி?

# கொள்கைக்கு மாறான வகையில் குப்பையான படைப்புகளையும் வணிக நோக்கத்திற்காக பதிப்பித்த போது அனுமதித்தது எப்படி?

# நூலக ஆர்டர்கள் பெறுவதற்கு பல லட்சங்கள் அதிகாரிகளுக்கு கையூட்டு தரப்பட்டதாக கணக்கு எழுதிய போது, இந்த அணுகுமுறையை பொதுவுடமை இயக்கத் தலைமை கண்டித்து நல்வழிப்படுத்த தவறியது ஏன்? இது தமிழக பதிப்பு துறையில் என்.சி.பி.ஹெச் மீதுள்ள மரியாதையை தரைமட்டம் ஆக்கியதா? இல்லையா?

# எழுத்தாளர்கள் சிலர், ”உரிய சன்மானமோ, ராயல்டியோ வழங்கவில்லை” என புகார் எழுப்பிய போதும், வெளி நிறுவனங்களின் புத்தகத்தை விற்ற பிறகு பணம் தராமல் ஏமாற்றுவது குறித்தோவான புகார்கள் நீண்டகாலமாக என்.சி.பி.ஹெச் மீது இருப்பதை ஏன் முற்றிலுமாக களையவில்லை?

# பாட்டாளி தலைவர்களால் அடித்தளமிடப்பட்டு, சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை, முற்போக்கு இலக்கியங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல நூற்றுக்கணக்கான தோழர்களின் அர்ப்பணிப்பால் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் தனி ஒருவரின் சம்பளம் ஒன்றரை லட்சம் என்பது எப்படி ஏற்கப்பட்டது? உழைக்கும் பல தோழர்களின் சம்பளத்திற்கும், சண்முக சரவணனின் சம்பளத்திற்கும் மலைக்கும், மடுவிற்குமான வித்தியாசம் இருக்கிறதென்றால், இது எப்படி சாத்தியமாயிற்று?

# முதலாளித்துவ நிறுவன எம்.டிக்களை போல விலை உயர்ந்த கார்கள், கிளை நிறுவனங்களுக்கு செல்வதற்கே விமானப் பயணம், தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல், மது விருந்துகள்.. இன்னும் சில ஒழுக்க கேடுகள்..ஒரு தனி நபரால் அனுபவிக்க முடிந்திருக்கிறது என்றால், இதையெல்லாம் கண்டும், காணாமல் உங்களை கடந்து போக வைத்தது எது?

# வயது முதியவரை – எந்த ஒரு நிர்வாகத்தையும் கையாள முடியாத நிலையில் உள்ளவரை – பற்பல முறைகள் சண்முக சரவணனின் பித்தலாட்டங்கள் தொடர்பானவற்றை கவனப்படுத்திய போதிலும் வாளாவிருந்த பெரியவர் நல்லகண்ணுவை – தொடர்ந்து என்.சி.பி.ஹெச்சின் சேர்மனாக ஏன் வைத்திருந்தார்கள்! அல்லது தன்னால் ஒரு சிறிதும், நிர்வகிக்கவோ, கவனம் செலுத்தவோ இயலாத ஒரு பதவியில் அவரும் ஏன் தொடர்ந்தார் என்பதற்கெல்லாம் விடை தெரியவில்லை.

# சண்முகம் சரவணன் தொடர்ந்து நல்லகண்ணுவின் தொடர்பில் இருந்துள்ளார். தா. பாண்டியன் தாவூத் ஆகியோர் மறைவுக்கு பிறகு அவர்களது பங்குகளை தனக்கு மாற்றியுள்ளார். நல்லகண்ணுவும் தன் பங்குகளை இரண்டாண்டுக்கு முன்பே சண்முக சரவணனுக்கு எழுதி தந்துள்ளார். சண்முக சரவணன் தொடர்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக கண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ அல்லது கட்சித் தலைமை கவனத்திற்கேனும் கொண்டு செல்லவோ அவர் முயற்சிக்கவே இல்லை! இதை எப்படி புரிந்து கொள்வது?

# கட்சியின் முக்கிய தலைவர்களான முத்தரசன், வீரசேனன், சந்தானம், முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, தற்போதைய எம்.பி.சுப்பராயன், ஸ்டாலின் குணசேகரன்,.. என இத்தனை இயக்குனர்கள் இருந்தும் கடந்த நான்கைந்து வருடங்களாக ஒரு தனி நபர் கட்சி ஸ்தாபனத்தை படிப்படியாக – அதுவும் சட்ட பூர்வமாக – விழுங்கி கொண்டிருப்பதை எப்படி கவனிக்காமல் போயினர்?

தற்போதைய நிலவரப்படி சண்முக சரவணனிடம் பெரும் அளவிலான பங்குகள் சட்டபூர்வமாக உள்ளன! இந்த கிரிமினல் பேர்வழி தற்போது தலைமறைவாகி உள்ளார். நீதிமன்றத்தில், ‘கட்சியின்  முக்கியஸ்தர்கள் யாரும் என்.சி.பி.ஹெச்சிற்குள் நுழையக் கூடாது’ என தடை உத்தரவும் வாங்கியுள்ளார்!

இந்த சண்முகம் சரவணன் தான் சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா, நல்லகண்ணு, முத்தரசன், பழனிசாமி,ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட 15 பேர் என்.சி.பி.ஹெச் அம்பத்தூர் அலுவலகத்திற்கு வந்த போது, ”சந்தேகமில்லாமல் இது கட்சி சொத்து தான்! நான் எப்படி அபகரிக்க முடியும்? இரண்டே நாள் டயம் தாங்க, வியாழன் மாலை தோழர் நல்லகண்ணு வீடு வந்து என்  ஷேர்களையெல்லாம் கட்சி பொறுப்பாளர்கள் பெயருக்கு மாற்றித் தந்து விடுகிறேன்’’ என வாக்குறுதி தந்துள்ளார். அனைவருமே அந்த வாக்குறுதியை நம்பி ஏமாந்துள்ளனர். ஆயினும், எத்தனை நாள் தலைமறைவாக இருக்க முடியும் சண்முக சரவணனால்?

எத்தனையெத்தனையோ தன்னலமற்ற பல நூறு தோழர்களின் கடும் உழைப்பால், அர்ப்பணிப்பால் உருவாக்கப்பட்ட சுமார் 700 கோடி பெறுமானமுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்தை ஒரு தனி நபர் கபளீகரம் செய்துவிட முடியுமா என்ன? பார்ப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

Tags: