புதிய இந்திய பாராளுமன்ற கட்டடத்தின் நோக்கம் என்ன?
–ச. அருணாசலம்
அழகிய பாராளுமன்ற கட்டிடம் இருக்கும் போது, மிகப் பெரும் செலவில், ஆடம்பரமான புதிய இந்திய பாராளுமன்ற கட்டிடம் எதற்கு? இதன் உள் நோக்கம் என்ன? அதிலும் இதில் குடியரசுத் தலைவருக்கு முக்கியத்துவம் தராதது ஏன்..?
புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற வளாகத்தை வருகிற 28 ந்தேதி – வி.டி.சாவர்க்காரின் பிறந்த தாளான மே 28 ந்தேதி- பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சிகள் இந்த திறப்புவிழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ், இடது சாரிகள், தி.மு.க., திரினாமுல், ஜனதா தல் , ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிர்கட்சிகளும் ஓரணியில் திரண்டு, ” மோடி அரசு ஏற்றகனவே பாராளுமன்ற ஆன்மாவை சாகடித்த நிலையில் இந்த புதிய “கட்டிடத்தை” திறந்து வைப்பதில் எந்த பலனுமில்லை, ஒளியற்ற ஒரு கட்டிடத்திற்கு எந்த சிறப்பும் இல்லை” எனவே இதை-இத்திறப்பு விழாவினை- நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் தங்களது அறிக்கையில் , ” புதிய பாராளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதால் , மோடி அரசு செய்த அக்கிரமங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேசவிடாமல் தடுப்பதும், அவையைவிட்டு வெளியேற்றுவது, சஸ்பென்ட் செய்வது, எதிர்கட்சி உறுப்பினர்களின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது, விவாதம் ஏதுமின்றி மசோதாக்களை நிறைவேற்றுவது போன்ற செயல்களால் நாடாளுமன்ற ஜனநாயக மாண்பையே சிதைத்துவிட்ட மோடி அரசின் எதேச்சதிகார செயல்பாடுகளை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு , பண விரயத்தையும் பொருட்படுத்தாமல் இத்திறப்பு விழாவை சிறப்பிக்க எண்ணியிருந்தோம். ஆனால், கடைந்தெடுத்த கோமாளித்தனமாக நரேந்திர மோடியே இந்த புது பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் என்ற அறிவிப்பு எங்களை திடுக்கிட வைத்தது.
”நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவரும், இந்திய நாட்டு குடியரசின் தலைவருமான குடியரசு தலைவரைக்கொண்டு திறப்பதே சாலச்சிறந்தது. ஆனால் இவ்விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு கூட இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியே ‘அவசர அவசரமாக’ திறந்து வைப்பது பொருத்தமற்றது மட்டுமல்ல ஜனநாயக மாண்பிற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை ஆகும்” என எதிர்கட்சிகள் சாடியுள்ளனர். ஒரு பெண்- அதுவும் பழங்குடி இனத்தை பிரதிபலிப்பவர் – திறந்து வைப்பதை பாஜக அரசு அவமானமாக கருதுகிறதா..? எனில், வெறும் அடையாள அரசியலுக்கு தான் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்கப்பட்டதா?
ஆனால், இந்த விமர்சனங்கெளுக்கெல்லாம் அஞ்சுபவர்களா பாரதிய ஜனதா கட்சியினர்? இந்திரா காந்தி பாராளுமன்ற அனெக்சை திறக்கவில்லையா? ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலக கட்டிடத்தை திறக்கவில்லையா? என்று அரைகுறை உண்மைகளை கூறி எதிர்கட்சிகளை வசை பாடியுள்ளார் மோடியின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி !
ஆனால், இந்த வாதப்பிரதி வாதங்கள் எந்த நியாயமான தீர்வையும் அளிக்கப் போவதில்லை.
இந்திய மக்களாகிய நாம் கேட்க வேண்டிய கேள்வி இது தான்:
தற்போதுள்ள பாராளுமன்ற கட்டடம் இன்னும் நூறாண்டுகளுக்கு மேல் தாங்கும் எனும் போது, எதற்காக இப்பொழுது புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட வேண்டும் ? என்ன தேவை?
இதற்காக ஆகும் செலவு (பணம்) எவ்வளவு? யார் அப்பன் வீட்டு பணத்தினால் இந்த புதிய கட்டிடங்கள் சீரமைப்புகள் நடைபெறுகின்றன? யாரைக்கேட்டு , யாரைக் கலந்தாலோசித்து யாருடைய ஒப்புதலில் இந்த பணவிரயம் நடைபெறுகிறது?
2019 பொதுத்தேர்தலில் நோட் பந்தி, ஜி. எஸ். டி. போன்ற குதர்க்கமான நடவடிக்கைகளால் நாட்டையும் நாட்டு பொருளாதார வலிமையையும் நொறுங்கடித்த மோடி அரசு, ரஃபேல் விமான ஊழலில் ரஞ்சன் கோகோய் உதவியால் தப்பித்து வந்தாலும், புல்வாமா தாக்குதலை முன்னிறுத்தி வெற்றியை பெற்றது, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இந்த வெற்றியினால் தலை-கால் புரியாமல், ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என எடுத்த பல முடிவுகளில் ஒன்றுதான் ‘ சென்டரல் விஸ்தா’ என்ற தில்லி மாநகரின் ராஜபாட்டை என்றழைக்கப்படும் ராஜ் பாத்தை புனரமைத்து, புதிய நாடாளுமன்ற வளாகம், புதிய பிரதமர் அலுவலகம் மற்றும் மாளிகை, துணை குடியரசு தலைவர் மாளிகை கட்டுவதற்கு மோடி முடிவு செய்தார். இயற்கை சூழல்களை அழித்து புதிய கட்டிடம் எழுப்பபட்டுள்ளது.சுற்றுச் சூழல் மதிப்பீடு செய்யவில்லை. செய்தால் இந்த கட்டுமானத்தை அங்கீகரித்திருக்கவே முடியாது! பல சட்டங்கள், நடைமுறைகள் மீறப்பட்டுள்ளது!
யாரையும் கலந்தாலோசிக்காமல், எந்த நகரமைப்பு மற்றும் கட்டிட விற்பன்னர்களை ஆலோசிக்காமல் மோடி எடுத்த முடிவு இது!
இதற்கு நாட்டின் முன்னணி வரலாற்று ஆய்வாளர்கள், கட்டுமான,சிற்ப கலைஞர்கள், சமூக அர்வலர்கள் ஆகியோர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதன் பின்னணி என்ன..?
பிரிட்டிஷ் இந்திய கலையில் புகழ்பெற்றவரான அனிஸ்கபூர் கொந்தளிக்கிறார் ”உலகத்திலேயே அதிக ஆடம்பரமான ஒரு அரசு கட்டுமானத்தை இந்திய அரசு செய்கிறது. இதன் நோக்கம் வேறு ஒன்றுமல்ல, ஒரு ஹிந்து அரசாங்கத்தின் வரலாற்று நினைவாக இந்த பிரமாண்டத்தை கட்டி எழுப்பும் நோக்கம் தான் இந்த கட்டுமானங்கள். ஏதோ திரைமறை வான ரகசியங்களை பாதுகாக்க, மர்ம அறைகளைக் கூட அதற்குள் கட்டுவார்களோ.. என்னவோ.. ஒரு அரசுக்கு மதவெறி பித்து தலைக்கேறினால் என்னவெல்லாம் நடக்குமோ அது தான் தற்போது நடந்து கொண்டுள்ளது…’’ என்கிறார்.
எதிர்கட்சிகளோ, வாக்களித்த மக்களோ ஏன் அவர்களது கட்சியினரோ யார் ஒருவரிடத்தும் கலக்காமல் தான்தோன்றித்தனமான இந்த முடிவிற்கு வடிவம் கோடுத்தவர் குஜராத்தை சேர்ந்த ஒரு (ஆர்கிடெக்ட் ) கட்டிட கலை நிபுணர் பிமல் பட்டேல்.
இத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா? முதலில் ரூ 941 கோடி தான் செலவாகும் என்றனர். ஆனால், தற்போது 21, 400 கோடி ரூபாய்கள் இதற்காக ஒதுக்கப்பட்டது.
யார் வீட்டுப் பணம் இது?
2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு என்ற (அடி முட்டாள் தனமான) நடவடிக்கையால் கோடிக்கணக்கான ஏழை எளியவர்களின் வாழ்க்கை நொறுக்கியடிக்கப்பட்டது,
இந்திய மக்களில் 37 சதவிகிதத்தினர் இன்னும் அரை வயிற்று கஞ்சி இல்லாமல் வறுமைக் கோட்டிற்கும் கீழே உழலுகின்றனர். சிறு, குறுந் தொழில்கள் நசிந்து கொண்டுள்ளன!
இதற்கெல்லாம் உதவ முன்வராத மோடி,
கோவிட் பெருந் தொற்று காலத்தில் மோடி அரசின் மோசமான
முழு அடைப்பினால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உணவின்றி, நீரின்றி கால்கடுக்க உயிர்களையும் பலி கொடுத்து நடந்தார்களே அப்பொழுது இரக்கங்காட்டாத மோடி,
உலகெங்கும் உள்ள அரசுகள் கோவிட் காலத்தில் தன்நாட்டு உழைக்கும் மக்களுக்கு பண உதவி செய்தபோதும்கூட இந்திய உழைப்பாளர்களுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முன் வராத மோடி,
எதிர்கட்சியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மற்றவர்களும், ”இந்த சென்ட்ரல் விஸ்தா என்ற பண விரயத்திட்டத்தை கைவிட்டு பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அந்த நிதியை உபயோகியுங்கள்” என வேண்டுகோள் விடப்பட்டதையும் செவி மடுக்காத மோடி,
தன் சுய விளம்பரத்திற்காகவும், இந்திய மக்களின் நலனைவிட ‘தனது’ நலனை முன்னிறுத்துவதற்காகவும் வானுயர சிலைகள் அமைப்பது, விலை உயர்ந்த விமானங்கள் வாங்குவது தன் பெயர் பொறித்த ஸ்டேடியங்கள் நிறுவுவது, பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்புவது… போன்ற செயல்களை செய்கிறார் .
அந்த காலத்து மன்னர்கள் தங்களது மெய் கீர்த்தியை விட்டுச் சென்றது போல், இன்றைய மோடியும் தன் பெயர் விளம்பும் பலகைகளை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல நினைப்பது மிக கேவலமான செயல்.
இந்திய நாடு ஒரு முடியாட்சியும் அல்ல, மோடி முடி சூடா மன்னருமல்ல !
இந்த சென்ட்ரல் விஸ்தா நிர்மாணத்திற்கு மோடி அரசு கூறும் காரணம்:
இந்த கட்டிடங்கள் யாவும் காலனிய ஆட்சியின் சின்னங்களாக உள்ளன, புதிதாக வளர்ந்துள்ள இன்றைய இந்தியாவின் சின்னங்களாக நமது அடையாளங்கள் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, இக்கட்டடங்களுக்கு வயதாகி விட்டன, எதிர்கால தேவைகளையும் கணக்கில் கொண்டு நாம் புதிய கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும், அவை நில நடுக்கங்களை எதிர் கொள்ளும் விதமாக இருக்க வேண்டுமாம்! இதில் தேவைப்படும் 543 இருக்கைகளுக்கு மாற்றாக 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதன் மர்மம் என்ன?
ஏன் குடியரசு தலைவரை புறக்கணிக்க வேண்டும்? ஏன் எதிர்கட்சிகளை வெறுத்தொதுக்க வேண்டும்? அவர்களது ஆலோசனைகளை புறக்கணிக்க வேண்டும்?
இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களின் நியாயமான கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க மறுக்க என்ன காரணம்?
இதற்கு உச்ச நீதி மன்றமும் துணை போவதாகவே தில்லி வாழ் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர் . பாராளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகை, இந்திய வாயில்(இந்தியா கேட்) வடக்கு மற்றும் தெற்கு வளாகம் (நார்த் பிளாக், சௌத் பிளாக்) ஆகிய புகழ்பெற்ற இந்திய அரசின் அடையாளங்கள் நிரம்பிய தில்லியின ‘லட்யென்ஸ் ஏரியா’ வில் சுமார 86 ஏக்கர் பரப்பளவு இத்திட்டம் மூலம் தலைகீழாக மாற்றப்படுகிறது எனலாம்.
இதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை முழுமையாக கணக்கிடாமல், அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுவது எதிர்த்த பொது நலன் வழக்கில் உச்ச நீதி மன்ற மூவர் அடங்கிய அமர்வு 2:1 என்ற அளவில் சென்ட்ரல் விஸ்தா திட்டத்தை தொடர வழி வகுத்தது. நீதிபதி கான்விலகர், நீதிபதி மகேஸ்வரி திட்டத்தை ஆதரித்தும் நீதிபதி கன்னா வழக்கு தொடுத்தவர்களின் வாதம் சரியானதே என்றும் தீர்ப்பு வழங்கினர்.
இந்திய மக்களுக்கிருந்த கடைசி ஆயுதமும் கை நழுவி போனதால் இத்திட்டம் இன்று உயிர் பெற்றுள்ளது.
ஒரு கட்சியின் விளம்பர வேட்கைக்காக, அகங்காரம் நிறைந்த ஆலாபனைக்காக இந்திய மக்களின் வரிப்பணம் கேட்பாரற்று விரயம் செய்யப்படுவதை யார் தடுப்பது? தேர்தலில் பெற்ற வெற்றி என்ற ஆயுதம் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, குறைகுடங்கள் தளும்புவதை யார் தடுப்பது?
ஜனநாயக மாண்பையும் , அரசியல் சம்பிரதாயங்களையும் மோடியிடம் எதிர்பார்ப்பது எதிர்கட்சிகளின் குற்றமா? அல்லது “அவை” இல்லாமலிருப்பது மோடியின் குற்றமா?