நமது உடல் நலனைப் போன்றுதானே நமது குடியிருப்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்?

நா. மணி

ஜுன் 5 – சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழல் தினத்தின் பொன் விழா ஆண்டு 2023. இதே நாளில், “நமது புவிக் கோளம், அபாய கட்டத்தை அடைந்துள்ளது” என்ற சமீபத்திய ஆய்வறிக்கை முடிவோடும் இணைத்து பார்க்க வேண்டியுள்ளது. இத்தகையதொரு செய்தி நமது காதுகளுக்கு எட்டக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட நாள் தான் ஜுன் 5 ஆம் தேதி சுற்றுச்சூழல் தினம்.

2009 ஆம் ஆண்டு, புவியின் ஒன்பது ஆரோக்கிய குறியீடுகளில் மூன்றில் எல்லை தாண்டி இருக்கிறோம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவித்தது. 2023 ஆம் ஆண்டில் எட்டுக்கு ஏழில் எல்லை மீறி இருக்கிறோம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, உயர்ந்த இனம்,தாழ்ந்த இனம் என்று நம்முள் எத்தனை கற்பிதங்களைக் கொண்டிருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் வாழ கிடைத்த ஒரே குடில் இந்த பூமி.

இதில் ஆனை முதல் அமீபா வரை கோடி கோடி உயிர்ப் பல்வகைமை இருந்தாலும் அதன் ஆகப் பெரிய சக்தியாக வளர்ந்து நிற்கும் மனிதனே புவியின் இந்த ஆரோக்கிய கேட்டுக்கு காரணம். புவியின் அனைத்து உயிரின வாழ்வை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் மற்றும் உயிரிப் பன்மையத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ஆகிய இரண்டும் தான் ஆகப் பெரிய சவால்கள். இந்த சவால்களை உருவாக்கியதும் சந்திக்க வேண்டியதும் செயலாற்ற வேண்டியதும் உலகெங்கும் உள்ள மனிதகுலம் மட்டுமே.

மனிதகுலத்தின் கடமை

உலகெங்கும் உள்ள மனிதகுலம், தங்கள் நாட்டிலும் தங்கள் நாட்டில் உள்ள அரசுகள் தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் வாயிலாகவும் கூட்டாகவும் தனித்தனியாகவும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.‌ இவை அனைத்தும் பெரிய பெரிய சவால்கள். பெரிய பெரிய பணிகள்.

ஆற அமர செய்யலாம் என்பதற்கு நேரமில்லை. இன்றே தொடங்க வேண்டிய பணிகள். அப்படி நினைப்பவர்களுக்கும் செயலாற்ற நினைப்பவர்களுக்கும் கிரேட்டா துன்பர்க் போன்ற சிறுமியர் ஓர் உந்து சக்தி.

கை மீறி செல்லும் சூழலியல் பிரச்சினைகளில் தலையீடு செய்ய, தடுத்து நிறுத்த விளைவோருக்கு கீழ்காணும் வழி முறைகள் சிறந்த வழிகாட்டுதல். சிறந்த கையேடு. இவற்றில் பல நமக்கு நன்கு தெரியும் என்று ஒருவர் கூறலாம். ஆனாலும் இதனை கைக்கொள்ள கோருவது தவிர்த்து வேறு வழிகாட்டுதல் செய்ய இயலாது.

இந்திய அளவில் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள, சுற்றுச்சூழல் கல்வியை அதிகரித்துக் கொள்வது. கூட்டு களச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவது. சூழலியல் பிரச்சினைகளை சரி செய்யும் வரை தொடர்ந்து நிலைத்து நீடித்து செய்வது. நிலைப்புறு நிலையை அடையும் வரை மேற்கொள்வது.

இந்திய சூழலியல் அதன் சவால்கள்

இந்திய சூழலியல் மண்டலங்கள் பன்முகத் தன்மை வாய்ந்தது. நமது உயிரிப் பன்மையம் வளம் நிறைந்தது. இதனை காக்க பண்பட்ட பண்பாட்டு பாரம்பரியம் நம்மிடம் இருந்திருக்கிறது. துரிதமான தொழில்மயம், அடர்த்தியான மக்கள் தொகை வளர்ச்சி. காடுகள் அழிப்பு. பருவநிலை மாற்றம் பல நாடுகளின் சூழல் சமநிலையை கெடுத்ததை போலவே, நம் நாட்டு சூழல் சமநிலையையும் குலைத்து விட்டது.

வனம், வனவிலங்கு, கடற்கரை பிராந்தியங்கள், இயற்கை வள நிர்வாகம் ஆகியவற்றில் சூழலியல் பாதுகாப்பு சூழலியல் மீட்டுருவாக்கம் ஆகிய இரண்டும் முக்கியம். அதி முக்கியத்துவம் குன்றாத வளர்ச்சியை நோக்கி செல்லுதல்.

சுற்றுச்சூழல் காப்பு எப்படி இருக்கலாம்?

குப்பை மேலாண்மை

இந்தியா வேகமாக நகர்மையம் ஆகி வரும் ஓர் நாடு. அதன் ‌தலையாய சூழலியல் கேடுகளில் ஒன்று குப்பை நிர்வாகம். குப்பைகளை குறைத்தல், பிரித்தல், ( Reduce, Re-use, Recycle. என்ற RRR மிக அவசியம் ) மறுசுழற்சி செய்தல் இதில் கவனம் செலுத்துதல் அதி‌முக்கியம் என்கின்றனர்.‌ குப்பைகளை குறைப்பதிலும் சேகரிப்பதிலும் மறுசுழற்சி செய்வதிலும் ஓர் ஒருங்கிணைந்த யுக்தி தொழில்நுட்பம் தேவை. தொடர் தொழில்நுட்ப மேம்பாடு இதில் அவசர அவசியம்.

காற்று மாசடைதல் மற்றும் நீர் மாசுபாடு

இந்த இரண்டு மாசுபாட்டையும் தனித்தனியாக பிரித்து பார்க்க கூடாது. இரண்டும் நேரடியாக மக்களின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. மாசு நீக்கத்தோடு இணைந்த நவீன தொழில் நுட்பம் பெரும் பலன் தரும். சுற்றுச்சூழல் விதிமுறைகளை மேம்படுத்துதல், கண்டிப்பு மிக்கதாக மாற்றுதல், கறாராக பின்பற்றுதல், சுற்றுச்சூழல் விதிகளை மனம் உவந்து ஏற்று நடக்க பயிற்றுவித்தல் அத்தியாவசியம். நமது மகிழ் உந்துகளோ தனிநபர் வாகனங்களோ நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தந்தாலும், எவ்வளவு வசதியாக இருந்தாலும் பொதுப் போக்குவரத்தில் தான் உலகின் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு தேவையான மாற்று உத்திகள் இருக்கிறது என்று புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் கல்வி

சுற்றுச்சூழல் கல்வி பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பாடமாக உள்ளது. இதனை கற்கும் மாணவர்கள். சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் எவ்வளவு தூரம் இதனை உள்வாங்கிக் கொண்டு செயல்படுகின்றனர் என்பது பெரும் கேள்விக் குறி. இந்த நிலை மாற வேண்டும். சுற்றுச்சூழல் கல்வியில் ஆசிரியரிடமும் அதனை கற்பிக்கும் முறைகளிலும் பெரும் மாற்றம் தேவை என்பதற்கு ஓர் எளிய பழைய உதாரணம்.

‘முதல் ஆசிரியர்’ என்பது ரஷ்ய நாவல் ஆசிரியர் அம்னிஷ் வீலி எழுதிய நாவல்களில் ஒன்று. கதை நிகழும் காலம் 1920கள். கதை நாயகன் துய்சேன். லெனினின் ருஷ்ய புரட்சிப் படை சிப்பாய்களில் ஒருவன். புரட்சி வெற்றி பெற்று லெனின் ஆட்சி நிலை பெற்ற பிறகு, தனது புரட்சிப் படை சிப்பாய்களை அழைக்கிறார் லெனின்.

“புரட்சி வென்று விட்டது. பாட்டாளி மக்கள் ஆட்சி மலர்ந்து விட்டது. இனி புரட்சி படை தேவையில்லை. அதிலிருந்து சிப்பாய்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏதுவான பகுதிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுங்கள்” என்கிறார். துய்சேன் ஒரு கிராமத்தை தேர்வு செய்து வருகிறார். அங்கு கைவிடப்பட்டு கிடந்த குதிரை லாயத்தை செப்பனிட்டு பள்ளிக் கூடமாக மாற்றுகிறார். குழந்தைகளுக்கு கல்வி சொல்லிக் கொடுக்க தொடங்குகிறார்.

ஒரு நாள் அப்பகுதியில் பரவலாக இருக்கும் ப்பளார் மரக் கன்றை நடுவதற்கு கொண்டு வருகிறார். குழந்தைகளை அழைக்கிறார். “குழந்தைகளே! இன்று நாம் இந்த மரக் கன்றை பள்ளி வளாகத்தில் நடப்போகிறோம். இந்த மரம் வளர்ந்து பெரிதாகும் போது எப்படி ஊருக்கு நிழல் தந்து பயன் மிகுந்து விளங்குமோ அது போல நானும் இந்த ஊருக்கும் நாட்டு மக்களுக்கும் கல்வி கற்று பயனுள்ள மனிதனாக வாழ்வேன் என்று மனதில் நினைத்து கொண்டே இந்த மரத்தை நடுங்கள் ” என்கிறார்.

இந்த நாவலின் கதை நாயகன் முழுமையான முறையான பள்ளி கல்வி பயிலாதவர். அவரை நூலாசிரியர் அறிமுகம் செய்யும் போது ” துய்சேனுக்கு அந்த மொழியின் எல்லா எழுத்துகளும் முழுமையாக தெரியாது ” என்கிறார். இந்த துய்சேன் போல் நமக்கு சுற்றுச்சூழல் கல்வியை கொடுக்க தெரிந்துள்ளதா? என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும். இன்றுள்ள குழந்தைகளுக்கு ஆபத்தை உணர்த்தும் வகையில் சுற்றுச்சூழல் கல்வியை அளித்தால் ஒவ்வொரு குழந்தையும் கிரேட்டா துன்பர்க் போன்று மாறும்.

சுற்றுச்சூழல் கல்வி குழந்தைகளுக்கு மட்டுமல்ல. சாமான்ய மனிதர்கள் முதல் அறிவுஜீவிகள் வரை அனைவருக்கும் அவசியம். அவரவருக்கு ஏற்ற மருந்தாக சுற்றுச்சூழல் கல்வி தரப்பட வேண்டும்.

நிலைப்புறு வேளாண்மை

பருவநிலை மாற்றத்தால் பரிதவிக்கும் சூழலில் உணவு பாதுகாப்பு மிக மிக முக்கியம். அதனை உத்திரவாதம் செய்தல் வேண்டும். இன்றைய சாகுபடி முறைகள், இரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட பயிர் முறைமைகள், அதன் வழி கிடைக்கும் உணவுகள் அதன் விளைவுகள் பற்றிய தீர்க்கமான பார்வை தேவை. நீர் நிர்வாகம், இயற்கை வழி பண்ணையம், உயிரிப் பன்மையம் பாதுகாப்பு அதற்கான பயிற்சிகள் இப்படி வேளாண்மை துறையில் செறிவான மாற்றங்கள் பல சுற்றுச்சூழலை பாதுகாக்க தேவைப் படுகிறது.

இளைஞர்களின் பங்களிப்பு

புவியை காப்பதில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் இளைஞர் சக்திக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதுவே பேராற்றல். நம்பிக்கை நட்சத்திரம். அவர்களுக்கு தேவையான சூழலியல் கல்வி, சூழலியல் விழிப்புணர்வு அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு மிக மிக முக்கியம். அவர்களை தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டியது அவசர அவசியம். அவர்களின் முயற்சிகளுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும். போதாக்குறைக்கு ஏற்ற வழித் துணையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்ற கல்வி நீண்ட கால திட்டங்கள் தேவை.

பருவநிலை மாற்றம், காற்று மாசடைதல், வேதி உரங்கள் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றால் தண்ணீரில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கலப்பு, நிலத்தடிநீர் மாசுபாடு, தூய நீர் மாசுபாடு இயற்கை வளங்கள் சீரழிந்து வருதல் என எல்லாவற்றிலும் பாதிக்கப்பட்டு புவிக்கோளம் நோயுற்று‌ நலிந்து மெலிந்து கொண்டே வருகிறது. அதில் வாழும் நமக்கு உணர முடியவில்லை. எல்லோரும் உணரும் தருணம் என்று வரும் போது அதனை காக்கவே முடியாத நிலை உருவாகலாம்.

Tags: