பிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர்

சீத்தாராம் யெச்சூரி (Sitaram Yechury)

இன்று ஓகஸ்ட் 5ந் திகதி பிரடெரிக் எங்கெல்ஸ் (Friedrich Engels) அவர்களின் நினைவு தினம்

பிரெடெரிக் எங்கெல்ஸ் உலகத்தின் முதல் மார்க்சியவாதி என அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஒருவேளை எங்கெல்ஸ் இதனை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனாலும், இவ்வாறு முதல் மார்க்சியவாதி என குறிப்பிடுவது, அவரை மார்க்சிற்கு இளைய பங்காளியாக பார்ப்பதாகிறது. இது முற்றிலும் நியாயமற்றதாகும்.

“மார்க்ஸ் என்ன சாதித்தாரோ அதனை  நான் எய்தியிருக்க முடியாது. மார்க்ஸ் நம்மையெல்லாம்விட உயரத்தில் நின்றார். விஷயங்களை மேலும் கூர்மையாகவும், விரிவான அளவிலும், விரைவாகவும் ஆய்ந்தறியும் திறனைப் பெற்றிருந்தார்… அவரில்லையேல், இந்தக் கோட்பாடு இன்றுள்ள நிலையிலிருந்து வெகுதொலைவிலேயே இருந்திருக்கும். எனவேதான், (மார்க்சிய தத்துவம்) சரியானமுறையில் அவர் பெயரைத் தாங்கி இருக்கிறது” என்று எங்கெல்ஸ் ஒருமுறை பேசியிருக்கிறார்.

எனினும், மார்க்சியத்தின் உலகக்கண்ணோட்டத்தை பரிணமிக்கச் செய்வதில், மார்க்சிற்கு இணையான பேராசானாக எங்கெல்ஸ் விளங்கினார் என்பதே உண்மையாகும். எங்கல்சைக் குறித்த மார்க்சின் மதிப்பீட்டையும், மார்க்சிய உலக கண்ணோட்டத்தின் தத்துவார்த்த அடித்தளத்தை விரிவாக்குவதில் அவருக்கு இருந்த சிறப்பான இடத்தையும் புரிந்துகொள்ள மார்க்சும் எங்கெல்ஸும் சந்தித்த காலம் பற்றிய சுருக்கமான விவரிப்பு உதவியாக இருக்கும்.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் கூட்டுச் செயல்பாடு:

‘ரெனிச்சே செய்துங்’ (‘Rheinsche Zeitung’) (ரைன் செய்தித்தாள்) என்னும் இதழிற்கு ஆசிரியராக கார்ல் மார்க்ஸ் செயல்பட்டார். 1843 ஆம் ஆண்டில், பிரஷ்ய நாட்டின் பிற்போக்குவாத அரசாங்கத்தினால் அந்த இதழ் தடை செய்யப்பட்டது. அந்த காலம் அரசுக்கு ஆதரவான பிற்போக்குவாதிகளுக்கும், நிலவுடைமை எதிர்ப்பு சக்திகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்த காலமாகும். எனவே தனது பணியை தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கில், மார்க்ஸ் 1844ஆம் ஆண்டு பாரிசிற்குச் சென்றார். அங்கே டெட்ஸ்-பிரான்சோசிஸ்ட் ஜார்புஸ்சர்’  (`Deutsch-Franzosische Jahrbucher’) என்னும் இதழினைத் தொடங்கினார். அந்த இதழிற்குப் பங்களிப்புச் செய்பவர்களிலேயே மிகவும் இளையவராக இருந்த எங்கெல்ஸ், பிறகு அந்த இதழ் உருவாக்கத்தில் கூட்டாக இயங்கினார்.

அந்த இதழிற்காக தொடக்க காலத்தில் (1844) எங்கெல்ஸ் அனுப்பிய முக்கியமான கட்டுரை ‘அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்திற்கு ஒரு திட்ட வரை ’ (‘Outline of a Critique of Political Economy’) ஆகும். அந்த கட்டுரையில், முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனத்திற்கான கொள்கை அடித்தளத்தை வகுத்தார். உற்பத்தி சக்திகளின் தனியுடைமையில் இருந்து எழக்கூடிய விதிகளில் இருந்துதான், முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து முக்கிய இயல்புகளும் எழுகின்றன என்பதை விளக்கியதுடன், தனிச்சொத்துடைமை ஒழிக்கப்பட்ட சமூகத்திலேயே ஏழ்மை ஒழிக்கப்படும் என்று காட்டினார்.  இது மார்க்சினை மிகவும் கவர்ந்தது. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சினத்தின் வழியாக ஒருவர் வந்தடைந்த அதே முடிவிற்கு, ஹெகலிய தத்துவத்தின் மீதான விமர்சனத்தின் வழியாக வந்து சேர்ந்தார் இன்னொரு சிந்தனையாளர். இதுதான் அவர்களுடைய முழு வாழ்க்கையிலும் நட்பிற்கும், தோழமைக்கும், கூட்டுச் செயல்பாட்டிற்கும் மார்க்சிய உலக பார்வையை பரிணமிக்கச் செய்திடும் இணைந்த பங்களிப்புகளுக்குமான பிணைப்பைக் கொடுப்பதாக அமைந்தது.

எங்கல்சின் முன்னோடிப் படைப்பான ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ என்ற புத்தகம், இங்கிலாந்தில் நடந்துவந்த தொழிற்புரட்சியின் ஆரம்ப  கட்டத்தைப் பற்றிய மார்க்சின் சிந்தனையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது.  எங்கெல்ஸ் தனது குடும்பத்தின் நூற்பாலைத் தொழிலில் நேரம் செலவிட்ட மான்செஸ்டர் நகரம், தொழிற்புரட்சியின் தலைநகரமாக வளர்ந்தது. எங்கெல்ஸ் தன்னுடைய இந்தப்படைப்பில்தான் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைத்தார். தொழிலாளி வர்க்கத்தின் மேம்பாடு என்பது, சுரண்டலுக்கு வழிவகுக்கும் உற்பத்திக்கான பொருளியல் நிலைமைகளை தூக்கியெறியாமல் சாத்தியமில்லை என்ற முடிவிற்கு தனது அடுத்தடுத்த பணிகளின் மூலம் அவர் வந்து சேர்ந்தார்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் இணைந்த படைப்புகள்:

எங்கெல்சும் மார்க்சும் 1842 ஆம் ஆண்டிலேயே ஜெர்மனியில் உள்ள கோலோன் என்ற இடத்தில் சந்தித்துள்ளார்கள். எனினும் இருவரிடமும் இந்த சந்திப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 1844 ஆம் ஆண்டு பாரிசில் சந்தித்தபோது இருவரும் 10 நாட்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்துகொண்டனர். இதில் எங்கெல்ஸ் மீதான மார்க்சின் அபிமானம் வெகுவாக வளர்ந்தது. எங்கெல்சின் தைரியம், அர்ப்பணிப்பு, ஒருமுகச் சிந்தனை மற்றும் அனைத்து தத்துவார்த்தப் பார்வைகளிலும் தன்னோடு ஒத்துப்போகிற தன்மை ஆகியவற்றை மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

1844 ஆம் ஆண்டில்‘புனிதக் குடும்பம் அல்லது விமர்சன ரீதியான விமர்சனத்திற்கு விமர்சனம்’ என்ற நூலை அவர்கள் முதலில் இணைந்து எழுதினார்கள். தத்துவத்திலும், அரசியல் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்திவந்த கருத்துமுதல்வாத சிந்தனைகளை அவர்கள் அந்த நூலின் வழியாக எதிர்த்துப் போரிட்டார்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளோ, மனிதர்களின் உணர்வு நிலையோ, நாயகர்களோ வரலாற்றை உருவாக்குவதில்லை; உழைக்கும்மக்களே தங்கள் உழைப்பின் வழியாகவும், அரசியல் போராட்டங்களின் வழியாகவும் சமுதாயத்தை முன்னோக்கி நகர்த்துகிறார்கள் என்பதை மார்க்சும் எங்கெல்சும் இணைந்து நிறுவினார்கள். தங்களுடைய சொந்த வாழ்க்கை நிலைமைகளுக்கு – முதலாளித்துவ அமைப்பிற்கு – முடிவுகட்டாமல், பாட்டாளிவர்க்கம் தன்னை விடுதலை செய்துகொள்ள முடியாது என்பதை சுட்டிக் காட்டினார்கள். ஒரு வர்க்கமாக, பாட்டாளிகளுக்கான விடுதலை இலக்கு விரித்துரைக்கப்பட்டது. இதுதான் அடுத்தடுத்த அவர்களுடைய படைப்புகளுக்கு அடித்தளத்தை அமைத்தது.

இருப்பினும் தத்துவ தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துமுதல்வாதத்தினை தாக்கி அழிக்க வேண்டுமானால் அதற்கான பொருளியல் அடிப்படைகளை வளர்த்தெடுக்க வேண்டும். இதனை ‘ஜெர்மானிய தத்துவம்’ என்ற கூட்டுப் படைப்பின் வழியாக 1845-46 காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் செய்தார்கள்.  முதன்முறையாக அவர்கள் இருவரும் தங்கள் முதன்மைப் பாத்திரத்தை இணைந்து திட்டமிட்ட வகையிலும், விரிவாகவும் மேற்கொண்டார்கள்.

மார்க்சிய உலக கண்ணோட்டத்தின் உருவாக்கம்:

1843-1845 காலகட்டம் என்பது மார்க்சிய உலகப்பார்வை பரிணமித்த திருப்புமுனைக் காலமாகும். மார்க்சும், எங்கெசும் இணைந்து இயங்கிய இக்காலத்தில்தான் புரட்சிகர ஜனநாயகத்திலிருந்து தொழிலாளி வர்க்கப் புரட்சி நிலைக்கும், ஹெகலிய சிந்தனையின் செல்வாக்கிலிருந்து வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்கும், தத்துவத்திலிருந்து அரசியல் பொருளாதாரத்திற்குமான மாற்றங்கள் அவர்களிடையே நிகழ்ந்தன.

சட்ட விதிகள் குறித்த ஹெகலிய தத்துவத்தை மார்க்ஸ் விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தினார். இதன் முடிவில் அவர் – சட்ட உறவுகளும், அரசியல் அமைப்புகளும்  மனித சிந்தனை அல்லது உணர்வு நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து ஏற்படுகின்றவை அல்ல; அவை வாழ்க்கையின் பொருளியல் நிலைமைகளைப் பொறுத்துத்தான் உருவாகின்றன என்கிற முடிவினை அடைந்தார். ‘குடிமைச் சமூகம்’ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஹெகல். அவர் கருத்துப்படி‘குடிமைச் சமூகம்’ என்பது ‘முழுமையின் விரிவாக்கம்’ காரணமாக எழும் அற்புதத்தில் உருவாகிறது. மார்க்ஸ் இதையும் ஆய்வுக்கு உள்ளாக்கினார். “குடிமைச் சமூகத்தின் உள்ளடக்கக் கூறுகளை அரசியல் பொருளாதாரத்தில்தான் கண்டறிய முடியும்” என்ற முடிவுக்கு வந்தார். இதிலிருந்தே “மனிதர்களின்உணர்வுநிலை அவர்களின் இருப்பை தீர்மானிப்பதில்லை; மாறாக சமூக இருப்பே ஒரு மனிதர்களின் உணர்வுநிலையை தீர்மானிக்கிறது” என்ற இயங்கியல் பொருள்முதல் வாதத்திற்கான மூல ஆதாரக் கருத்து உருவாகியது.

தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகிய இரண்டின் மீதான விமர்சனத்தையும் ஒருங்கே இணைத்து மார்க்சும், எங்கல்சும் உருவாக்கிய புரட்சிகர தத்துவத்தின் வெளிப்பாடாகத்தான் 1848 ஆம் ஆண்டில் அவர்கள் இருவருமே இணைந்து எழுதி வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட‘முதல் அகிலமும்’ அமைந்தன.

எங்கெல்சின் தனித்த பங்களிப்புக்கள்:

எங்கெல்ஸ் தன்னளவில் தனியாகவும் மிக முக்கியமான படைப்புகளை நமக்கு அளித்திருக்கிறார். கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளியல் அடித்தளத்தை ஆய்வு செய்து மூலதனம் நூலை எழுதுவதற்கான ஆய்வுகளில் மூழ்கியிருந்தபோது, எங்கெல்ஸ் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை மனிதர்களின் இதர நடவடிக்கைகளுக்கு விரிவாக்கினார்.

மனிதன்-இயற்கை இடையிலான இயங்கியல் : மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையில் என்றென்றும் நடைபெற்றுவரும் இயங்கியல் நடவடிக்கைகளே, அதாவது, மனிதர்களின் வாழ்க்கையையும், வாழ்நிலைமைகளையும் மேம்படுத்தும் வகையில் இயற்கையை பொருத்தக்கூடிய முயற்சிகளே, இயங்கியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக உள்ளன. மேற்சொன்ன இயங்கியல் நடைமுறையில், மனிதர்கள் இயற்கையைப் பயன்படுத்தி மாற்றியமைக்கும் அதே சமயத்தில், இயற்கையும் மனிதர்கள் மீதும், மனிதகுல வளர்ச்சியின்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களைச் செய்கிறது. இன்று முதலாளித்துவத்தின் அபரிமிதமான இயற்கைச் சுரண்டலின் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றம் போன்ற சிக்கல்களை நாம் இதன் வழியாக புரிந்துகொள்ள முடியும். (அதுபற்றி விரிவாக வேறொரு தருணத்தில் பார்ப்போம்)

டார்வினின் வளர்ச்சியின் தொடர்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டு எங்கெல்ஸ் தனது ‘மனிதக் குரங்கு மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியில் உழைப்பின் பங்களிப்பு’ என்ற கட்டுரையில் இயற்கை – மனிதன் இடையிலான இயங்கியல் எவ்வாறு வடிவம் பெற்றுள்ளது என்பதை விளக்குகிறார். கைகளும், மனித உணர்வுகளும் இன்னபிறவும் உருவானதில் உழைப்பு எப்படி பங்களிப்பைச் செலுத்தியது என்பதையும் அதில் சுட்டிக் காட்டினார். இவை எந்தவிதமான தெய்வீக சக்தியினாலும் உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக, இவற்றின் மூலங்கள் வாழ்க்கையின் பொருளியல் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.  மூளையின் வளர்ச்சியும் அதன் காரணமான அறிவுக் கூர்மையும் எதிர்பாராத விபத்தும் அல்ல; விண்ணிலிருந்து வந்த ஆசீர்வாதமும் அல்ல என நிரூபித்தார். மூளையின்பரிணாம வளர்ச்சி என்பது மனிதன்-இயற்கை இடையிலான இயங்கியலின் நிரந்தரத் தன்மையின் விளைவாகும். மனிதர்கள் நிமிர்ந்து நிற்பதற்கும், இயக்கத்தையும், திறமையையும் விடுவிப்பதற்குமான சூழல் இவ்வாறுதான்உருவானது. இது பரிணாம நிகழ்வில் தாக்கமும் செலுத்தியது. எங்கெல்ஸ் காலத்திலிருந்து வளர்ந்துவரும் இந்த பார்வையும், உணர்வுநிலையும் (Consciousness) மனிதர்களுக்கும் இயற்கைக்குமான இயங்கியலை மேலும் மேலும்தெளிவாக்குகின்றன.

ஓர் எடுத்துக்காட்டைப் பரிசீலித்திடுவோம். அறிவியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், தூக்கம் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் ஏன் தூக்கம் வருகிறது என்றும், நாம் தூங்கும்போது என்ன நடக்கிறது என்றும் ஆராய்ந்து, ஒன்றைக் காட்டி இருக்கிறார்கள். மனிதகுலம் மரபணு அடிப்படையில் தங்களுக்கிடையே பிளவுபட்டிருக்கிறது. இரவில் விரைவில் தூங்கச்செல்வோர், அதிகாலையிலேயே எழுந்துவிடுகின்றனர். தாமதமாகத் தூங்கச் செல்வோர், தாமதமாகத்தான் எழுகின்றனர். முன்னதாகச் தூங்கச் சென்று அதிகாலையில் எழுகிறவர்களை “வானம்பாடிகள்”(“larks”) என்றும் பின் தூங்கி, தாமதமாக எழுகிறவர்களை “ஆந்தைகள்” (“owls”) என்றும் அழைக்கிறார்கள். இவ்வாறாக ‘வானம்பாடிகளாக’ இருக்கும் வகையினரும், ‘ஆந்தைகளாக’ இருக்கும் வகையினரும் ஒவ்வொரு மனித இனத்திலும் தலா 40 சதவீத அளவிற்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தூங்கும் வகை, அவர்களுடைய மரபணுக் குறியீட்டில் பதிக்கப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 20 சதவீதத்தினர் தூங்கும் நேரங்களும் வித்தியாசப்படுகின்றன. இவற்றின் காரணமாக ஒரு நாளில் 24 மணி நேர சுழற்சியில் எப்போதும் சிலர் விழித்த வண்ணமே இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

மனிதகுலம் வளர்ந்தபோது, புராதனப் பொதுவுடைமைச் சமுதாயமாக இருந்த ஆரம்ப காலத்தில் கூட்டமாக வாழ்ந்துவந்த சமயத்தில் (communal living)  தாங்கள் தூங்கும்போது ஆபத்துக்களிலிருந்து காத்துக் கொள்வதற்காக எவரேனும் சிலர் விழித்திருக்க வேண்டியது அவசியமாக மாறியிருந்தது என்பதை இது நிறுவியது. மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையேயான இயங்கியல், 24 மணி நேரமும் யாராவதொருவர் விழிப்போடு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய சூழலின் காரணமாக வெவ்வேறு மனிதர்களுக்கும் வெவ்வேறு மரபணுக் குறியீடுகள் உருவாவதில் தாக்கம் செலுத்தியது. இந்த வகையில்தான் நமது வாழ்வின் பொருளியல் நிலைமைகள் பரிணாமத்தை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன.

இயற்கையின் இங்கியல்: மேலும் இயற்கை மற்றும் அறிவியல் வளர்ச்சி சம்பந்தமாகவும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை எங்கெல்ஸ் ஆராய்ந்தார். அவரின் ஆய்வுகள் வழியாக நமக்கு ஒரு மூலாதார முடிவு கிடைக்கிறது. “இயங்கியல் விதிகளைஇயற்கைக்கு பொருத்துகிற கேள்விக்கே இடமில்லை; ஆனால் இயற்கையிலிருந்து அந்த விதிகளை கண்டுணர்வதும், வெளிப்படுத்துவதும் வேண்டும்”. அறிவியலை, பொருள்முதல்வாத நிலையில் நின்று உள்வாங்கும் இந்த முயற்சியின் வழியாக, அறிவியலே இன்றைப் போல வளர்ச்சியடைந்திருக்காத அந்த சூழலில்,  அவரால், இயக்கவியல் என்பது “இயற்கை, மனித சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் பொதுவான இயக்கம் குறித்த அறிவியல் விதிகளைத் தவிர வேறொன்றுமில்லை” என்ற முடிவிற்கு வர முடிந்தது.

எங்கெல்ஸ் குறிப்பிட்ட அதே விதத்தில், உண்மையாகவே, அறிவியல் மேம்பட்டு முன்னணிக்கு வந்திருக்கும் புதிய கண்டுபிடிப்புகள்,  விண்வெளியை பயன்படுத்துதல் மற்றும் அண்டம் பற்றிய அறிவு தொடங்கி, மரபணுவியல், மரபணு வரைபடவியல் துறைகளில் நடந்திருக்கும் முன்னேற்றங்கள் வரை அனைத்துமே, நமக்கு இயக்கத்தின் பொதுவான விதிகள் குறித்தும், இயற்கையின் வளர்ச்சி குறித்துமான நமது புரிதலை கூடுதலாக்கியுள்ளன.

இயங்கியலும் மானுடவியலும்: வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விதிகளை, தொடக்ககால மனித சமுதாயம் பற்றி அவருடைய காலத்தில் கிடைத்த மானுடவியல் சாட்சியங்களோடு பொருத்துகிற பணியை எங்கெல்ஸ் மேற்கொண்டார்.  தன்னுடைய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ (‘Origins of the Family, Private Property and the State’) என்னும் நூலில், எங்கெல்ஸ் நவீன வர்க்க சமுதாயத்தை பற்றிய கட்டுக்கதைகளைத் தோலுரித்துக் காட்டுகிறார். தனிச்சொத்தின் அடிப்படையிலான வர்க்க உறவுகள் எப்படி குடும்பத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தன என்பதையும், வரலாற்றுரீதியாக ‘பெண் பாலினம்’ எப்படி வீழ்த்தப்பட்டது என்பதையும் –ஒருத்திக்கு ஒருவன் என்பதும், தலைவன் வழி சமூகமும் எப்படி பரிணமித்தன என்பதையும், அதன் தொடர்விளைவாக தோன்றிய பெண் மீதான பாலின ஒடுக்குமுறையையும் விளக்குகிறார்.

வரலாறும் இயங்கியலும்: எங்கெல்ஸ் எழுதிய ஜெர்மனியில்விவசாய புரட்சி’ (1849-50) என்ற நூல்தான்முதன்முதலாக இயங்கியல் பொருள்முதல்வாததத்துவத்தை நேரடியாக பொருத்திஎழுதப்பட்டவரலாற்றுவிவரிப்பாகும்.

இயங்கியலும் தத்துவமும்: குடிமைச்சமூகத்தின்கூறுகளை‘ அதாவது  நவீன சமுதாயத்தின்’ அரசியல் பொருளாதாரத்தை – முதலாளித்துவத்தினை – பகுத்து ஆய்வுசெய்கிற பணியில் ஈடுபட்டிருந்தமார்க்ஸ் தன்னுடைய தலைசிறந்த படைப்பான ‘மூலதனம்’ நூலைஎழுதிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எங்கெல்ஸ்மார்க்சியத்தின் மீது மறுப்பாகஏகன்டூரிங்’ முன்வைத்தபெரும் கோட்பாடு’ என்ற புத்தகத்தின் சித்தாந்தத்தை அடித்து நொறுக்கும் பணியை எடுத்துக்கொண்டார். ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளிடம்டூரிங் கொண்டிருந்த செல்வாக்கினை அகற்றும் விதத்தில் எங்கெல்ஸ் அவருடைய சித்தாந்தத்தினைதோலுரித்துஅம்பலப்படுத்தியதுடன்மார்க்சிய உலக கண்ணோட்டத்தின் அடிப்படை விதிகளை தெளிவாக்கிடும்வகையில்புத்திக் கூர்மையுள்ள தெளிவான வாதங்களைமுன்வைத்தார். டூரிங்கிற்கு மறுப்பு என்னும் அந்த நூல் மார்க்சியத்தின்இயங்கியல் மற்றும் வரலாற்றியல்பொருள்முதல்வாதத்தின் நீடித்து நிலைக்கும் இயல்பினைநிலைநாட்டியது.

மேற்சொன்ன வகையில்அநேகமாக மனித சமுதாயத்தின் நடவடிக்கைகள் அனைத்திலும் தனியாகவும், மார்க்சுடன் இணைந்தும் மூலாதாரமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார் எங்கெல்ஸ். இயற்கை அறிவியல், மானுடவியல், வரலாறு, அரசியல் பொருளாதாரம் மற்றும் தத்துவம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மனிதர்களுக்கும்-இயற்கைக்கும் இடையிலான இயங்கியலை விளக்கியதன் மூலம் எங்கெல்ஸ், புரட்சிகர இயக்கத்தையும் அதன் தத்துவ அடித்தளத்தை வளர்த்தெடுப்பதில் தனித்துவமிக்க பங்களிப்பினை கொடுத்துள்ளார்.

அரசியல் நடவடிக்கை:

இத்தகைய தத்துவ அடித்தளங்களை வளர்த்தெடுத்த அதே சமயத்தில், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் இவ்விரு பேராசான்களும் வெறுமனே சித்தாந்தவாதிகளாக மட்டும் இருந்திடவில்லை. அவர்கள், தங்கள் காலங்களில் நடைபெற்ற தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து இயக்கங்களிலும் சுறுசுறுப்பாகப் பங்கேற்றனர், சமயங்களில், அவற்றுக்குத் தலைமை தாங்கினர், வழிகாட்டினர். ‘லீக் ஆஃப் தி ஜஸ்ட்’ (‘League of the Just’) என்றிருந்த பெயரை மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தி, ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்று மாற்றினார்கள், இக்கட்சியின் திட்டத்தை மார்க்சும் எங்கெல்சும் எழுதினார்கள். ஆரம்ப வரைவை எங்கெல்ஸ் தயாரித்ததாகவும், பின்னர் அதனை இருவரும் சேர்ந்தே மீளவும் தயாரித்ததாகவும் நம்பப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தில்தான் அவர்கள் என்றென்றும் எழுச்சியூட்டும், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; நீங்கள் இழப்பதற்கு, தகர்த்தெறிய வேண்டிய அடிமைச் சங்கிலியை  தவிர  வேறு எதுவுமில்லை,” என்ற அறைகூவலை விடுத்தனர்.

மார்ச்சியத்தை நிறுவிய இவ்விரு பேராசான்களும், வெற்றியை ஈட்டக்கூடிய விதத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு வல்லமையை அளிக்கக்கூடிய ஒரு புரட்சிகர அமைப்பினை கட்டி எழுப்புவதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். இவ்விரு பேராசான்களும் 1864இல், முதல் அகிலம் என்று புகழ்பெற்ற, சர்வதேச உழைக்கும் மக்களின் சங்கத்தை (International Workingmen’s Association) நிறுவியதில் முக்கியமான பங்களிப்பு செலுத்தினர். அப்போது செயல்பட்டுவந்த பல்வேறு இடதுசாரி தொழிலாளர் குழுக்களை ஒரு பொது ஸ்தாபனத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முதல் முயற்சியாகவும், சர்வதேச தொழிலாளர்வர்க்க இயக்கத்தை முன்னெடுப்பதற்கான முதல் நடவடிக்கையாகவும் இது அமைந்திருந்தது.

எனினும், 1871இல் பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்ததை அடுத்து, முதல் அகிலமும் அதனால் காயப்பட்டது. இரண்டாவது அகிலம் நிறுவுவதற்கான காலம் கனிந்த சமயத்தில், அகிலத்தில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் ஸ்தாபனங்கள் மட்டுமே இடம்பெறும் விதத்தில் மாற்றப்பட வேண்டும் என்ற வாதத்தை எங்கெல்ஸ் முன்வைத்தார். ஒவ்வொரு நாட்டின் தொழிலாளி வர்க்கமும் தனக்கான கட்சியை, கம்யூனிஸ்ட் கட்சியை,உருவாக்கிட வேண்டும் என்றார். இரண்டாவது அகிலம், பாட்டாளிவர்க்க அரசியல் கட்சிகளின் அகிலமாக இருந்தது.

அறிவியல்பூர்வமானது, புரட்சிகரமானது:

கறாரான, மிக உயர்ந்த அறிவியல் தன்மையும், புரட்சிகரத்தன்மையும் இணைந்த ஒரே தத்துவமாக இருப்பதுதான் மார்க்சியத்தை நோக்கிய தடையில்லாத ஈர்ப்பை உருவாக்குகிறது என்று லெனின் குறிப்பிட்டார். இந்தச் சேர்மானம் ஏதோ விபத்தாக ஏற்பட்டதல்ல; மார்க்சும் எங்கெல்சும்  தங்கள் வாழ்க்கையில் அறிவியலாளர்களாகவும், புரட்சிகர செயல்பாட்டாளர்களாகவும் பண்புநலன்களை ஒருங்கே கொண்டிருந்த காரணத்தால் இது ஏற்படவில்லை. மாறாக, மார்க்சிய தத்துவமே மேற்சொன்ன இரு அம்சங்களையும் உள்ளார்ந்த விதத்தில் பிரிக்க முடியாத உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. இதுதான் மார்க்சிய படைப்பாக்க அறிவியல்.

மார்க்ஸ் மறைந்த பிறகு, மார்க்சிய உலக கண்ணோட்டத்தின் வளமான சித்தாந்த அடித்தளத்தையும், அதன் வளமான பணிகளையும், எங்கெல்சின் மூலமே அனைத்து நாடுகளின் தொழிலாளி வர்க்கமும், உலகமும் அறிந்து கொண்டார்கள். கணக்கிலடங்கா அளவிற்கு மார்க்ஸ் விட்டுச் சென்றிருந்த குறிப்புகள், எங்கெல்சால் தொகுக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டன. ‘மூலதனம்’ நூலின் இரண்டாவது மூன்றாவது தொகுதிகளை இந்தக் குறிப்புகளைக் கொண்டு, எங்கெல்ஸ்தான் தயாரித்து வெளியிட்டார். ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’க்கான முன்னுரைகளையும் மற்றும் அவர்களின் பணிகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களில் ஏற்பட்டுவந்த வளர்ச்சிப் போக்குகள் குறித்தும், அதனை முன்னெடுத்துச் செல்லவேண்டியதை வலியுறுத்தியும்  எங்கெல்ஸ்தொடர்ந்து எழுதினார்.

லெனின் கூறியது போல, எங்கெல்ஸ் “தொழிலாளர் வர்க்கம் தன்னை அறிந்து கொள்ளவும், தன்னுணர்வோடு இருக்கவும் கற்றுக் கொடுத்தார். அவர் கனவுகளின் இடத்தில் அறிவியலை வைத்தார்.”

தமிழில்: ச. வீரமணி, இரா. சிந்தன்

Tags: