புதிய உறுப்பினர்கள், புதிய நாணயம் விரிவடைந்தது ‘பிரிக்ஸ்’ கூட்டணி
உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு வைத்திருக்கும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர், கூட்டமைப்பில் புதிய நாடுகள் இணைவதை வரவேற்றுள்ளனர். ஓகஸ்ட் 22 முதல் 24 வரை 15 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்கா தலைமையில் நடைபெற்றது. உச்சி மாநாட்டின் முதல் நாள் வர்த்தக மாநாடு நடைபெற்றது. இரண்டாம் நாள் அமர்வில் தலைவர்கள் உரையாற்றினர். கூட்டமைப்பில் புதிய நாடுகளை இணைப்பது, நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது, நீண்டகால சர்வதேச பிரச்சனைகளை அமைதியான முறையில் முடிவிற்கு கொண்டுவருவது, கூட்டமைப்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்த நிலையான வளர்ச்சி உள்ளிட்டவை முக்கிய இடத்தைப் பிடித்தன.
மேலும் தொடர் ஏற்ற இறக்கங்களை கொடுக்கும் டொலருக்கு மாற்று குறித்தும் விவாதிப்பதுடன், ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பிற்கான புதிய நாணயத்தை உருவாக்க வேண்டுமென பிரேசில் ஜனாதிபதி லூலா அழைப்புவிடுத்தார். ‘பிரிக்ஸ்’ நாடுகள் வணிக ஒத்துழைப்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும், பொருளாதாரத்தில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தால் உலகம் பனிப்போர் பதற்றத்தில் இருக்கிறது, எனவே அனைத்து நாடுகளும் அமைதியான வழியிலேயே வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு ‘பிரிக்ஸ்’ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் அல்லது உயர் பிரதிநிதிகளின் கூட்டம் ஆகியவற்றை முறையாக பயன்படுத்தி ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டிற்கு ஆதரவளித்து முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனைகளில் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி தீவிரமான அரசியல் பிரச்சனைகளை தீர்க்க அமைதியான வழியை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஜோகன்னஸ்பர்க் மாநாட்டில், இணையவழியில் இணைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், “மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற வெறியே உக்ரைனின் நெருக்கடிக்கு காரணம்” என்றும் மேலும் அப்போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டி அனைத்து வகையான மேலாதிக்கத்திற்கும் நாங்கள் எதிரானவர்கள் என்று குறிப்பிட்டார். மேலும் மேற்குலக நாடுகள் உக்ரைனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க சதி செய்தனர் என்றும் பின்னர் சதிக்கு உடன்படாததால் கொடூரமான போரை தூண்டிவிட்டு அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என்றும் குற்றம்சாட்டினார்.
ஆப்பிரிக்காவிற்கு உதவி
வரும் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிற்கு விவசாயத்துறையில் அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரேசில் ஜனாதிபதி லூலா தெரிவித்தார். அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் வணிக ரீதியாகவும் இலவசமாகவும் தானியங்களை வழங்க தயாராக இருப்பதாக புட்டின் தெரிவித்தார். மேலும் புர்கினா பாசோ, சோமாலியா, மாலி, சிம்பாப்வே, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் எரித்ரியா ஆகிய ஆறு நாடுகள் 25 முதல் 40 ஆயிரம் தொன்கள் வரை இலவச தானியங்களை பெறும் என்றும் புட்டின் தெரிவித்தார்.
புதிய உறுப்பினர்கள்; புதிய நாணயம்
இறுதி நாள் பிரிக்ஸ் அமர்வில் ஆர்ஜென்ரீனா, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நாடுகள் 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் முழு உறுப்பினர்களாவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் ‘பிரிக்ஸ்’ ஒத்துழைப்புக்கான புதிய தொடக்கப் புள்ளியாக உள்ளது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சக்தியை வலுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கும். ‘பிரிக்ஸ்’ நாடுகள் எதிர்கால வர்த்தகத்தில் “பணம் செலுத்துவதற்கான புதிய நாணயத்தை” உருவாக்குவது குறித்து ஆய்வு செய்வதற்கான தீர்மானத்திற்கும் இம்மாநாடு ஒப்புதல் அளித்துள்ளது.