சிதைக்கப்பட்ட காஷ்மீரின் தலைவிதி என்னாகும்?
-ச.அருணாசலம்
காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டது எப்படி? அந்த ஒப்பந்த ஷரத்துக்கள் கூறுவது என்ன? காஷ்மீர் மக்களின் விருப்பம் அறியப்பட்டதா? குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல காஷ்மீரை கண்டதுண்டமாக்கும் பா.ஜ.கவின் நோக்கங்கள் என்ன? உச்ச நீதி மன்றம் இதில் என்ன தீர்ப்பு தரும்..?
இன்றைய உலகில் மூன்று தேசிய இனங்கள் மட்டும் அரை நூற்றாண்டுகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு,தங்களுக்கென தனி இடமோ, சுதந்திரமான பகுதியோ இன்றி அடக்குமுறைகளையும், துப்பாக்கி குண்டுகளையும், அன்றாடம் எதிர்நோக்கி தங்களது நிச்சயமற்ற வாழ்வை வாழவேண்டிய நிலையில் உள்ளனர் .
அந்த மூன்று தேசிய இனங்கள்; குர்தீஷ் இன மக்கள், பாலஸ்தீன மக்கள், காஷ்மீர் மக்கள் ஆவர்.
குர்தீஷ் இன மக்கள் தங்களுக்கென தனி நாடோ இறையாண்மையுள்ள பிரதேசமோ இன்றி இராக், துருக்கி மற்றும் சிறியா ஆகிய மூன்று நாடுகளின் ராணுவத்தின் பிடியில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் போல் வாழந்து வருகின்றனர்.
பாலஸ்தீன மக்களோ, சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, நாடும் உரிமையும் இழந்து இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் பயங்கர அடக்குமுறைகளுக்கு நடுவே கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக பதட்டத்தில் உள்ளனர்.
காஷ்மீரத்து மக்களோ, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிலும் பிளவுபட்டு தங்களது சுய நிர்ணய உரிமை பறிக்கப்பட்டு துப்பாக்கி முனைகளின் கீழ் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுள்ளனர்.
உலகிலேயே குறுகிய நிலப்பரப்பில் மிக அதிக எண்ணிக்கையில் ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டுள்ள இடம், இந்தியாவில் உள்ள ஜம்மு& காஷ்மீர் மாநிலமாகும். காஷ்மீர் மக்களின் தணியாத அடையாளப் போராட்டம் பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது.
அவர்களது சுய நிர்ணய வேட்கை பல்வேறு அரசுகளின் அதிகாரச் சண்டையில் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்டது .
இந்த நீண்ட வரலாற்றில் காஷ்மீர் மக்களுக்கு உற்ற நண்பர்களாக அன்றைய மகாராஜா ஹரி சிங்கின் மன்னராட்சியோ, பிரிட்டிஷ் அரசோ, மதத்தின் பெயரால் உரிமை கொண்டாடும் பாகிஸ்தான் அரசோ, ஜனநாயகத்தை பேணுவதாக கூறும் இந்திய அரசோ இருக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.
ஏராளமான கனவுகளுடன் இந்தியாவுடன் இணைந்த காஷ்மீரத்து மக்கள் இன்றளவும் அனுபவித்து வரும் கொடுமைகளும், சோதனைகளும் 2019 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி மோடி அரசு அம்மாநிலத்தை இரண்டாக உடைத்தும் சிறப்புத் தகுதியான அரசியல் பிரிவு 370ஐ ரத்து செய்தும் எடுத்த நடவடிக்கையால் புதிய உச்சத்தை தொட்டது.
சுதந்திரத்தை பறி கொடுத்த மக்கள் இச்செயலால் சுய கௌரவத்தையும், தன்மானத்தையும் இழந்ததாக எண்ணினர்.
முழுமையான அடக்குமுறையான ஊரடங்கு சட்டம், இன்டர்நெட் முடக்கம், கைது, சிறை வீட்டுக்காவல் என பல்வேறு கொடுமைகள் மூலம் நசுக்கப்பட்ட காஷ்மீர் மக்களும்,அரசியல் கட்சியினரும் இந்த ஆகஸ்டு 5,2019 மோடி அரசின் – சிறப்பு தகுதி பிரிவு 370ஐ ரத்து செய்வது, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிளந்தது ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .
2019-ல் தொடரப்பட்ட வழக்கு ‘வெற்றிகரமாக ‘ 2023-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐவர் அடங்கிய “பெஞ்ச்” இந்த வழக்கை விசாரிக்கிறது.
இந்நிலையில் இவ்வழக்கின் சாராம்சங்களை அறியும் பொருட்டு அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் இப்பிரச்சினையோடு பின்னிப்பிணைந்த நிகழ்வுகளையும், சந்தர்ப்பங்களையும் உற்று நோக்கினால் தெளிவு பிறக்கும் சிக்கல் விலகும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு தகுதியான அரசியல் பிரிவு 370 நீக்கப்பட்டது முறையான, அரசியல் சாசனத்திற்கு இசைவான நடவடிக்கையா? இல்லையா? என்பதும் , ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிளக்கப்பட்டு இரண்டு யூனியன் பகுதிகளாகப்பட்டு தரம் தாழ்த்தப்பட்டது செல்லுமா? என்பதே இவ்வழக்கில் உள்ள முக்கியமான கேள்விகள். மற்றொரு கேள்வி இந்நடவடிக்கையை ஒன்றிய ஆட்சியாளர்கள் தன்னிச்சையாக எடுத்தது சட்டமாண்புகளுக்கு உட்பட்டதா? என்பதாகும்.
சந்தர்ப்பங்களும் வரலாறும்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு தகுதி? இந்தியாவிற்கு எப்படி இரண்டு கொடிகள்? இந்தியா நாட்டிற்குள் இரண்டு பிரதமர்கள் இருக்க முடியுமா? ஏன் இந்தியாவிலுள்ள மற்ற பகுதியினர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம் வாங்க முடியாது? ஏன் இந்த பாகுபாடு? என்பன போன்ற பல கேள்விகளை பாஜகவினர் எழுப்ப கண்டிருக்கிறோம் .
பிரிட்டிஷ் ராச்சியம் என்பது நேரடியாக பிரிட்டிஷார் ஆட்சி செய்த நிலப்பகுதிகள் மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பின் கீழ் இருந்த மன்னராட்சி பகுதிகள் மற்றும் சுதேச சமஸ்தானங்கள் கொண்டதாகும் .
இந்த ராச்சியம் இந்திய பகுதி பாகிஸ்தான் பகுதி என இரு நாடுகளாக பிரிக்கப்பட்ட பொழுது, சுதேச மன்னர்களுக்கும், சமஸ்தானங்களுக்கும் இந்தியா அல்லது பாகிஸ்தான் என இரண்டில் ஒன்றுடன் இணைந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது.
இது என்னவோ விருப்ப இசைவாக கருதப்பட்டாலும், யாருடைய இசைவு முக்கியத்துவம் பெற்றது? ஆளும் மன்னர்களுடைய இசைவா? அல்லது அங்குள்ள மக்களின் இசைவா?
பாகிஸ்தான் தந்தை என போற்றப்படும் முகம்மது அலி ஜின்னா, ‘ஆளும் மன்னர்களின் விருப்பமே இறுதியானது’ என கொள்கை முடிவெடுத்தார். ஆனால், இங்கு பண்டித ஜவகர் லால் நேரு, ‘மக்களின் விருப்பமே இறுதியாக இருக்க வேண்டும்’ என்று கருத்து கூறினாலும், அன்றைய ஆளும் தரப்பிற்கு ஒரு கொள்கை முடிவு இல்லை என்றே தெரிகிறது.
இந்திய மற்றும் பாகிஸ்தானிய நிலப்பரப்புகளுக்கு இடையில் சிக்கியுள்ள ஜம்மு காஷ்மீர் ராச்சியம் 1947-ல் யாருடன் இணைவது என்பதில் தயங்கியது. அன்றைய மன்னர் ஹரி சிங் தனி நாடாக தொடர விரும்பினார் என்பதே உண்மை.
இதற்கிடையில் 1930 தொடங்கியே ஜம்மு காஷ்மாரில் 90 % சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் இஸ்லாம் மத நம்பிக்கையுள்ளவர்கள். இவர்கள் மன்னராட்சிக்கு எதிராகவும், வாழ்க்கைதர மேம்பாட்டிற்காகவும், உரிமைகளுக்காகவும் முஸ்லீம் மாநாடு என்ற அமைப்பை உருவாக்கி, ஓரணியில் திரண்டு போராடினர் . பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியாக விளங்கிய இந்தக் கட்சித் தலைவர்களில் ஷேக் அப்துல்லாவும் ஒருவர்.
உழுபவனுக்கே நிலம் சொந்தம், தரமான ஊதியம் ஆகிய கோரிக்கைகளையும், நிலச் சீர்திருத்தத்தையும் முஸ்லீம் மாநாடு கட்சி முன்னெடுத்து. ஷேக் அப்தல்லா அக்கட்சியின் தனிப்பெரும் தலைவராக ஓரிரு ஆண்டுகளில் உருவெடுத்தார்! அவரது தலைமையில் முஸ்லீம் மாநாடு கட்சி தனது மத அடையாளத்தை துறந்து, அனைத்து காஷ்மீர் மக்களையும் பிரதிபலிக்கும் விதமாக தேசிய மாநாடு (National Conference) என்று தனது பெயரை மாற்றிக் கொண்டது .
இவர்கள் ஜனநாயகத்தை விரும்பும் தலைவர்களாக மகாத்மா காந்தி, ஜவகர் லால் நேருவை அடையாளப்படுத்தி, இந்திய நாட்டுடன் இணைய விரும்பினர். மத நம்பிக்கையால் பாகிஸ்தானுடன் இணைய இக்கட்சியும் மக்களும் விரும்பவில்லை. காரணம், மத அடிப்படையில் நாடு அமைவதையோ, ஆட்சி நடத்துவதையோ அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணயத்தயங்கிய பொழுது 1947 அக்டோபரில் பாகிஸ்தான் தூண்டுதலில் வட மேற்கு எல்லைப்பகுதி ஆதி குடிகள் (tribes) காஷ்மீர் மீது தாக்குதல்களை நடத்தினர். அவர்களை தன்னால் எதிர் கொள்ள முடியாமல் அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபுவிற்கு உதவி கோரி மன்னர் ஹரி சிங் கடிதம் எழுதினார் .
தனி ராச்சியமாக திகழும் ஜம்மு காஷ்மீர் நாட்டிற்கு இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து ராணுவ உதவி செய்ய இயலாது என்பதை உணர்ந்த மன்னர் ஹரி சிங், 1947 அக்டோபர் 26ல் அனுப்பிய உதவி கோரும் கடிதத்துடன் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம் ஒன்றையும் (Instrument of Accession) அனுப்பி வைத்தார் .
திரை மறைவில், நடந்த விஷயங்களை வி.பி. மேனன் ( அன்றைய இந்திய அரசின் செயலர் ) இவ்வாறு குறிப்பிடுகிறார்.. “இந்தியாவுடன் இணையாமல் இந்திய படைகள் காஷ்மீரத்துக்கள் நுழைய வாய்ப்பில்லை ” என மவுண்ட்பேட்டன் அறிவுறுத்தியதின் பேரில் மகாராஜா ஹரிசிங் காஷ்மீரத்தை இந்தியாவுடன் இணைக்க விரும்பி ஒப்பந்தத்திற்கு இசைந்தார் என்பதே உண்மை.
மகாராஜா இவ்வாறு முடிவெடுக்க, காஷ்மீர் மக்களோ குறிப்பாக ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சியோ, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுடன் நட்பு பாராட்டி புதிய இந்தியாவுடன் கைகோர்க்க தயாராய் இருந்தனர்.
இணைப்பு ஒப்பந்த ஆவணங்களை சில நிபந்தனைகளுடன்தான் மன்னர் ஹரி சிங் அனுப்பினார் அந்த நிபந்தனைகள் (1) காஷ்மீர் ராச்சியம் பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளுக்கு இந்திய ஒன்றியம் தன் கையில் வைத்துக் கொண்டு சட்டமியற்றலாம் (2) இதை தவிர, மற்ற துறைகளில், விவகாரங்களில் காஷ்மீர் மாநில சட்டமன்றமே சட்டங்களை இயற்றி, ஆட்சி நடத்தும்.
(3) இந்த ஒப்பந்த ஷரத்துகளை மாற்றவோ, திருத்தவோ நாளை வரும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உரிமை கிடையாது. நாளை வரும் புதிய அரசியல் சாசனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம் என்று இந்த ஒப்பந்தம் எங்கும் கூறவில்லை.
இதை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு காஷ்மீருக்கு உதவப் படைகளை அனுப்பியது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை முழுமையாக அறியும் வரையில், இந்த இணைப்பை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருதியது. அதே போன்று ஷேக் அப்துல்லா காஷ்மீர் ராச்சியத்தின் இடைக்கால தலைமை பொறுப்பை – இவ்விணைப்பு குறித்து மக்களின் முடிவு அறியப்படும் வரை – தற்காலிகமாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
ஆக, இந்த “இணைப்பு” விஷயத்தில்காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மகாராஜா ஹரி சிங்கின் முடிவும், காஷ்மீர் பெரும்பான்மை மக்களின் தலைவர் ஷேக் அப்துல்லாவின் முடிவும் ஒன்றாக இருந்தன.
இந்திய படைகள் காஷ்மீருக்குள் நுழைந்த பின்னர் காஷ்மீர் ராச்சியத்தில் படை மோதல்களும், ஜம்முவில் பெரிய மதக் கலவரமும் நடைந்தேறின . ஜில்ஜிட் பகுதி பாக்குடன் இயல்பாக சேர்ந்து கொண்டது, பள்ளத்தாக்கின் ஒரு பகுதிவரை பாக் படைகள் முன்னேறி அங்கே நிலை கண்டது அப்பகுதியே ஆசாத் காஷ்மீர் என்றழைக்கப்படுகிறது.
ஆக, காஷ்மீரம் துண்டாடப்பட்டது. இறுதியில் போரை நிறுத்தி பிரச்சினை ஐ.நா. சபைக்கு சென்றது. காஷ்மீர் மக்களின் நிலைபாடு குறித்த பொது வாக்கெடுப்பிற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒத்துக் கொண்டன . ஆனால், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு (Plebiscite) இன்றுவரை நடக்கவில்லை.
காஷ்மீரத்தின் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஷேக் அப்துல்லாவை காஷ்மீர் சார்பாக இந்திய அரசியல் நிர்ணய சபையில் கலந்து கொள்ள மகாராஜா ஹரி சிங் முன் மொழிந்தார் .(16/6/1949)
ஷேக் அப்துல்லாவும் அவரது சகாக்களும் இந்திய அரசியல் நிர்ணய சபை ( Constituent Assembly of India) யில் கலந்து கொண்டனர். விவாதங்கள் நடைபெற்றன.
1949ம் ஆண்டு அக்டோபர், 17 அன்று, இந்திய அரசியல் நிர்ணய சபை அரசியல் பிரிவு 370 ஐ காஷ்மீருக்காக ஏற்படுத்தியது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதியும், உள் நாட்டு சுய ஆட்சியும் (special status and internal autonomy )உறுதி செய்யப்பட்டது. இணைப்பு ஒப்பந்த ஷரத்து கூறிய மூன்று துறைகளான – பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு- ஆகியவை மட்டும் இந்திய ஆளுமைக்கு ஒதுக்கப்பட்டன.
இப் பிரிவை தற்காலிக ஏற்பாடாக அரசியல் சட்டம் அறிவித்தது.
அரசியல் பிரிவு 370 என்ற அம்சத்தின் மூலமாகவே, ஜம்மு காஷ்மீர் இந்தியா நாட்டின் ஒரு பகுதியாக இருக்க முடியும். ஏனெனில், அரசியல் சாசனத்தின் முதல் (1) பிரிவும் ( இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ( India a union of states ) 370 வது பிரிவு மட்டுமே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அப்படியே பொருத்தப்பட்டுள்ளன.
மற்ற பிரிவுகள் எல்லாம், அவ்வப்போது குடியரசு தலைவர் திருத்தங்கள் மற்றும் விதி விலக்குகளுடன்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமல் செய்யப்படும் .
ஏனெனில், அவற்றிற்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் சட்டப்படி மாநில சட்டசபையின் ஒப்புதலும் அங்கீகாரமும் தேவை.
யூனியன் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு துறைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்காக இயற்றப்படும் சட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்த அம்மாநிலத்துடன் கலந்தாலோசித்தே அதை செய்ய வேண்டும்.
அடுத்து இந்த பட்டியல்களில் உள்ள ஏனைய துறைகளை பற்றிய சட்டங்கள் (ஜம்மு காஷ்மீருக்காக) இயற்றும் பொழுது அம்மாநில அரசின் ஒப்புதல் அவசியம்.
இதனால் தான் இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீருக்கு அப்படியே பொருந்தாது. அடுத்தது ஜம்மு காஷ்மீருக்கென தனியாக ஒரு அரசியல் சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் நிர்வாகம் நடைபெறுகிறது.
இறுதியாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை முன் மொழிந்தால், அதனடிப்படையில் குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்து அரசியல் பிரிவு 370 ஐ நீர்த்துப் போக செய்யவும் இந்தப் பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஜம்மு காஷ்மீரத்து அரசியல் நிர்ணய சபை கூடியது. அப்பொழுது இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள எந்த அம்சங்கள் எல்லாம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தும் என வரையறுத்தது. இதனடிப்படையிலேயே 1954-ம் ஆண்டு குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்து, முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு அங்கமாக பாவிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட அரசியல் பிரிவு 370ஐ ரத்து செய்ய எந்த சிபாரிசும் செய்யாமல் தனது ஆயுளை 1957-ல் முடித்து கலைத்துக் கொண்டது .
இதனால், சிறப்பு தகுதிக்கான பிரிவு 370, மாநில அரசியல் நிர்ணய சபையால் ரத்து செய்யப் படவில்லை. இதனால், அது “தற்காலிக” தன்மையிலிருந்து விடுபட்டு “தொடரும் தன்மை” உடையதாக ஆகி விடுகிறது என்பது அரசியல் நோக்கர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களின் கருத்தாகும்.
இந்து வெறியர்களின் அவதூறு பிரச்சாரங்கள்
ஆனால், மன்னராட்சியால் மகிமை பெற்றிருந்த கணிசமான கூட்டமும், இந்து அபிமானிகளும் அவதூறுகளைத் தொடங்கினர் . இந்து மகா சபையினர் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துப் பேசலாயினர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்திற்கு சுய ஆட்சியா? என பாரதிய ஜனசங்கம் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி போர்க் கொடி தூக்கினார்.
இதற்காகவே இவ்விவகாரத்தை கொச்சை படுத்தி ‘ ஒரு நாட்டில் இரண்டு கொடிகளா?,ஒரு தேசத்திற்கு இரண்டு பிரதமர்களா? என்று கேள்வி கேட்டார் . இறுதியில் காஷ்மீரில் மக்களாட்சிக்கு பதிலாக ஹரி சிங்கின் மன்னராட்சியே தொடர வேண்டும்’’ என வற்புறுத்தினார்.
மாநிலத்திற்கென்று தனி கொடிகள் சில மாநிலங்களில் (கர்நாடகம் ) இருந்தாலும், முதன்மை யானது தேசியக் கொடிதான் என பிரதமர் ஜவகர் லால் நேரு நாடாளுமன்றத்தில் கூறினார். ஷேக் அப்துல்லாவும் விளக்கிய பின்னர் இது ஓய்ந்தது.
அதை போன்றே காஷ்மீர் ஆட்சித் தலைவரை பிரதமர் என்றழைப்பது காஷ்மீர் மாநில சட்ட சபையால் 1965-ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனாலும், ஆதிக்க வெறியால் ஜன சங்கத்தினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு தகுதியை (பிரிவு 370) நீக்க வேண்டும் என வாதங்களை முன்வைத்தனர் . இதற்கு காரணம், காஷ்மீர் மாநிலம் இஸ்லாமியர்கள் அறுதிப் பெரும்பான்மையாக இருப்பது ஒன்று தான்.
சிறப்பு தகுதி காஷ்மீருக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கும் மணிப்பூர், நாகாலாந்து, தெலுங்கானா, சிக்கிம் , மிசோரம், அருணாச்சல் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அஸ்ஸாம் ஆகிய 12 மாநிலங்களுக்கு அரசியல் பிரிவு 371 ன் கீழ் சிறப்பு தகுதிகளும், சலுகைகளும் அவரவர்களது தனித்தன்மை தேவைகளுக்கேற்ப வழங்கப்பட்டுள்ளன.
இதையெல்லாம் மறைத்து விட்டு, காஷ்மீருக்கு கொடுக்கப்படும் தகுதியை மட்டுமே பாஜக வும், ஆர்.எஸ். எஸ் கூட்டமும் நீக்க வேண்டும் என பேசுவது மத அடிப்படையினால் மட்டுமே.
பல பத்தாண்டுகளாக இக் கோரிக்கையை பாஜக தூக்கிப் பிடித்தாலும் இது ” பிரச்சனைக்குரிய கோரிக்கை” என அனைத்து கட்சிகளும் ஒதுங்கியிருந்தன. ஏன், பா ஜ கவே ஆட்சியில் அமர்ந்ததும் இப் பிரச்சினையை பல காலம் கிடப்பில் போட்டதை நாடறியும்.
2019-ல் மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தவுடன், தனது கோர முகத்தை காட்டி, இந்த சிறப்பு தகுதியை தடாலடியாக மோடி அரசு ரத்து செய்தது. இதன் மூலம் தங்களது இந்துத்வா மகிமையை உலகிற்கு காட்டினர்.
இதற்கு சில மாதங்கள் முன்பு, இதே பாஜ க தான், மஃப்டி முகமது சயீத்தின் பி.டி.பி கட்சியுடன் இணைந்து, காஷ்மீரில் கூட்டணி ஆட்சி நடத்தியது! அந்த ஆட்சி மோடியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, கவர்னர் ஆட்சியை ஒன்றிய அரசு ஏற்படுத்தி இருந்தது.
2019 ஓகஸ்ட் மாத ஆரம்பித்திலேயே ஊரடங்கு உத்தரவும், இண்டர்நெட் தடையும் ராணுவக் குவிப்பும் காஷ்மீரில் நடந்தது. காஷ்மீர் மக்களும் இந்திய மக்களும் விக்கித்து நின்ற பொழுது, 2019, ஓகஸ்ட் 5ந் திகதி குடியரசு தலைவர் ஓர் ஆணை பிறப்பித்தார் .
இதன்படி இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்துக்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீர் பொருந்தும்;
மேலும், இந்த ஆணை, ”காஷ்மீருக்கு விஷேச அந்தஸ்த்து தந்த 1954ம் வருட அரசியல் சட்ட ஆணையை ஒதுக்கி நீக்கி வைக்கிறது” என அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு ஜம்மு காஷ்மீர் அரசின் ஒப்புதலோடுதான் நிறைவேற்றபட்டதாக கூறுகிறது. மத்திய அரசின் ஏஜெண்டான கவர்னரை மாநிலத் தலைவராக அடையாளப்படுத்தி இதற்கான ஒப்புதலை பெற்று, நியாயப்படுத்திக் கொண்டது.
குடியரசு தலைவரின் ஆகஸ்ட் 5 ஆணை இத்தோடு நில்லாமல் அரசியல் பிரிவு 370 ன் பொருள் விளக்கத்தில் முக்கியமான மாறுதல்களைக் கொண்டு வந்தது. இதற்காக அரசியல் சட்ட பிரிவு 367 ல் சில விளக்கங்களை, மாற்றங்களை இந்த ஆணை சேர்த்தது.
அப்படி கூறப்பட்ட புதிய விளக்கம் என்னவெனில், ‘சதார்-ஐ-ரியாசத்’ எனப்படும் மாநில ஆட்சித் தலைவர் ஜம்மு காஷ்மீரின் கவர்னரைக் குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும்’ என்றது.
மாநில அரசு என்று எங்கெல்லாம் குறிப்பிடப்படுகிறதோ, அங்கெல்லாம் மாநில கவர்னர் என பொருள் கொள்ள வேண்டும்.
இறுதியில் மிக முக்கியமாக , அரசியல் பிரிவு 370(3) ல் குறிக்கப்பட்டுள்ள மாநில அரசியல் நிர்ணய சபை என்ற சொற்றொடர் திருத்தப்பட்டு, அதற்கு பதிலாக மாநில சட்ட மன்றம் என்று மாற்றி அமைத்தது.
ஐம்மு காஷ்மீரை குறுக்கு வழியில் பிளந்தனர்!
அடுத்து , நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கருத்தை கேட்க ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது சட்ட மன்ற உறுப்பினர்களிடத்தில் கேட்பதற்கு பதிலாக நாடாளுமன்றத்திடம் கேட்கிறார்களாம். மாநிலத்தை மறுசீரமைக்க அம்மாநிலத்தின் சட்டசபையின் ஒப்புதல் வேண்டும் என்பது தான் அரசியல் சட்டம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஐம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்டசபை இல்லாத லடாக் என்ற யூனியன் பிரதேசம் என இரண்டாக “மறு சீரமைத்தார்கள்”. இதற்காக அம்மாநில சட்ட மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் வேண்டும் என்பது விதியை புறம் தள்ளி, நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்றினர். என்ன ஒரு பித்தலாட்டம்?
இங்கும் நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீரின் சட்ட மன்றத்திற்கு “பதிலாக” செயலாற்றியது. ஜம்மு காஷ்மீர் மாநில சட்ட மன்றமோ, மாநில அரசியல் நிர்ணய சபைக்கு “பதிலாக” செயலாற்றுவதாக ஒன்றிய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இறுதியாக இந்த கூத்துகளுக்கெல்லாம் முத்தாயப்பாக ஆகஸ்ட் மாதம் 6ந்தேதி அரசியல் பிரிவு 370 நீர்த்துப்போக அறிவிக்கும் ஆணை! இதில், 370 வது பிரிவில் ஒரு அம்சம், இந்திய அரசியல் சட்டங்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீரில் செல்லுபடியாகும் எனக்கூறி, ”370ன் மற்ற பகுதிகளெல்லாம் நீர்த்துப் போயின” என அறிவிக்கப்பட்டது.
இப்படியாக, தலைகீழாக நின்று குறுக்கு மருக்குமாக ஓடி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிளக்கப்பட்டது, தரம் தாழத்தப்பட்டது, சிறப்புத் தகுதி பறிக்கப்பட்டது, தனிக் கொடி, தன்னாட்சி உரிமை மறுக்கப் பட்டது .
சங்கிகளும் அதன் நாயகர் மோடியும் மார் தட்டினர். பதுங்கி இருந்த பலரும் மோடி அரசை பாராட்டினர்!
நல்லோரும், உரிமைகளுக்காக போரிடுவோரும் எதிர்க் குரல் எழுப்பினர். காஷ்மீர் மக்கள் மீது அதிகார அழுத்தம் செலுத்தி, உரிமையற்றவர்களாக்கிய கொடுஞ் செயல் ஏற்க தக்கதல்ல.
இதை எதிர்த்து காஷ்மீர் மக்களும் மற்றும் பல ஜனநாயக ஆர்வலர்களும் உச்ச நீதி மன்றத்தை நாடினர். இப்பொழுது விசாரணை தொடரந்து நடக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னால் இருக்கும் கேள்விகள் :
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும், இந்திய ஒன்றியத்திற்கும் இடையில் அரசியல் பிரிவு 370 மூலம் பிணைக்கப்பட்ட உறவுமுறையை ஒன்றிய அரசு தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியுமா?
அவ்வாறு செய்வதை அரசியல் பிரிவு 370 தடுக்கவில்லையா?
தற்காலிகமாக அறிவிக்கப்பட்ட அரசியல் பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை 370 வது பிரிவை நீக்காமலேயே காலாவதியாகிவிட்டதால், (பிரிவு 370) நிரந்தர தகுதியை பெற்றுள்ளதா?
இம்மாற்றங்கள் நேர்மையாக முறையாக அரசியல் சாசன வழியில் கொண்டுவரப்பட்டனவா ? என்பது தான்.
தீர்ப்பு எவ்விதம் அமையும் என ஆருடம் கூறுவதை தவிர்த்து, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் சில உள்ளன.
நமது நாடு மாநிலங்களின் ஒன்றியம் என அரசியல் சட்டத்தில் குறிக்கப்பட்டிருந்தாலும், இங்கு கூட்டாட்சி முறை முறையாக பேணப்பட்டு, நடைமுறை படுத்தப்படவில்லை. ஒன்றியத்தின் அதிகாரங்கள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மெல்ல மெல்ல கூடிக் கொண்டே வந்தன. மாநில உரிமைகள் சிறிது சிறிதாக பறிக்கப்பட்டு வந்தன. இந்த வக்கிரப் போக்குகள் அரசியல் பிரிவு 370 பாதுகாப்பு இருந்த போதும் காஷ்மீரத்தையும் பாதித்தது.
காங்கிரஸ் அரசுகள் நேரு காலம் முதல் மன்மோகன் காலம் வரை பல முறை (12) அரசியல் பிரிவு 370 பலவீனப்படுத்தி உள்ளனர். காஷ்மீரத்தை பலவீனப்படுத்தினர் .
ஆனால், இன்றுள்ள மோடி அரசோ மத வெறுப்பை கையில் வைத்து கொண்டு, காஷ்மீர் மக்களையே சீரழிக்கும் வேலையில் சிறுமைப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளனர் .
இதன் வெளிப்பாடுதான் சிறப்புத் தகுதி நீக்கம், 370 நீக்கம், மாநிலத்தை தரம் தாழ்த்தி யூனியன் பகுதிகளாக உடைத்தல் ஆகியவை நடந்தேறியுள்ளன.
இதற்கு பாகிஸ்தான், தீவிரவாதம்,எல்லை கடந்த பயங்கரவாதம் என பலப் பல பூச்சாண்டிகளைக் காட்டி, காஷ்மீர் மக்கள் அனைவருமே ஜிகாதிகள் என்ற பிம்பத்தை பரப்பி, இஸ்லாமிய பெரும்பான்மை மாநிலத்தை இன்று மண்டியிட வைத்துள்ளனர்.
காஷ்மீரில் பிரிவு 35A ஐ நீக்குவது, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவை எல்லாம் நடப்பதற்கு 370 தடையாய் இருந்தது என்பதெல்லாம் பிற சேர்க்கையே!
மாநிலங்களுக்கு சுய ஆட்சியும், நியாயமான நிதிப்பங்கீடும், ஒன்றியத்தின் கீழ் அதிகார குவியலை நிறுத்தி, முறையான அதிகார பங்கீட்டையும் சட்டபூர்வமாக்குதலின் மூலமே இந்தியா பிரச்சினைகளின்றி முன்னேற முடியும்.