இராணுவ கிளர்ச்சிகளை ஆபிரிக்க இளைஞர்கள் கொண்டாடுவது ஏன்?

சேது சிவன்

பிரிக்க நாடுகளில் ஒன்றான கெபானில் (Gabon) சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் 3 வது முறையாக அலி பாங்கோ (Ali Bongo) வென்ற சில மணி நேரத்தில் இராணுவ கிளர்ச்சி நடந்தது.இக்கிளர்சியுடன் சேர்த்து 7 ஆபிரிக்க நாடுகளில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்பிரிக்கா இராணுவ சதியின் மையமாக மாறியுள்ளதாக ஆப்பிரிக்க மேல்தட்டு வர்க்கமும் ஊடகங்களும் கருதுகின்றன.இவர்கள் இராணுவ கிளர்ச்சியை வெறும் கலகமாக மட்டுமே பார்க்கின்றனரே தவிர நாட்டின் வரலாற்று பின்புலத்தில் இருந்து பார்க்க தவறுகின்றன.

மேலும் இவர்கள் தேர்தல் செயல்முறைகள் மூலம் (பிரான்ஸ் ஏகாதிபத்திய ஆதரவுடன்) அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட தலைவர்கள் மட்டுமே ஆட்சிக்கு தகுதியானவர்கள் என்று நம்புகிறார்கள். இதன் மூலம் நாடுகள் அரசியல் சுதந்திரத்தை பெற்றிருந்தாலும் பிரான்ஸ் நாட்டின் காலனித்துவ அடிமைகளாகவே உள்ளார்கள்.

நேரடி ஆட்சியை இராணுவம் மேற்கொள்வது ஏற்புடையதல்ல என்று அறிந்திருந்தாலும், ஆபிரிக்க மக்கள் இராணுவத்தின் நடவடிக்கைகளை வரவேற்கின்றனர். அதே போல ஒரு நாட்டின் இராணுவம் ஆட்சியை கவிழ்க்கும் போது அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளின் திட்டம் இருக்கும். ஆனால் ஆபிரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில், புர்கினா பாசோ (Burkina Faso), சாட் (Chad), மாலி (Mali) கினியா (Guinea), நைஜர் (Niger), கெபான் (Gabon) உள்ளிட்ட நாடுளில் மக்கள் ஆதரவுடன் நடந்த இராணுவ கிளர்ச்சியை கண்டு பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கதி கலங்கி போய் உள்ளன.

ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாடு

மேற்கத்திய நாடுகளில் கைப்பாவையான மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) இந்த நாடுகளின் கிளர்ச்சியை கண்டனம் செய்து கூட்டமைப்பில் இருந்து நீக்கியுள்ளன. ஆட்சிக் கவிழ்ப்பை கைவிட்டு மீண்டும் ஜனாதிபதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு அழுத்தம் தரப்படுகின்றன. அவர்களின் அமைதிப்படை நாட்டிற்குள் வரக்கூடாது என மக்கள் இராணுவத்திற்கு முழு ஆதரவாக களத்தில் இறங்கி எதிர்ப்புகளை பதிவிடுகிறார்கள்.

பொருளாதார கட்டுப்பாடு

இதற்கு முன்பும் ஆபிரிக்க நாடுகளில் இராணுவங்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. அதற்கு காரணம் பிரான்சிற்கு அடிபணியாமல் அந்நாட்டின் தலைவர்கள் மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற முற்படும் போது அங்கு இராணுவ கலகங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

ஆபிரிக்க நாடுகள் பணத்தை எப்படி செலவிடவேண்டும் இயற்கை வளங்களை யார் எடுப்பது என பிரெஞ்சு காலனிகள் இன்றும் தங்கள் முன்னாள் காலனித்துவ உடன்படிக்கையின் மூலம் இந்த நாடுகளை கட்டுப்படுத்துகின்றன. தங்கள் வெளிநாட்டு இருப்புகளில் 50 சதவீதத்தை பிரெஞ்சு கருவூலத்தில் வைப்பதற்கு கட்டாயப்படுத்துகின்றன. இந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் CFA ( Communauté Financière Africaine) நாணயத்திற்கு உத்தரவாதம் அளிக்க, இந்த பணம் பிரெஞ்சு அரசாங்கத்தால் “நம்பிக்கையின் அடிப்படை” என கூறி பறித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதார கொள்கை எப்படி இருக்க வேண்டும் என பிரான்ஸ் கட்டுப்படுத்துவதன் மூலம் இயற்கை வளங்களை வாங்கும் அல்லது முதலீடு செய்யும் போது பிரெஞ்சு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்னுரிமை பெறுவதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது. இதன் மூலம் நைஜரின் யுரேனியம், கெபானின் எண்ணெய் வளம் என ஆப்பிரிக்கா முழுவதும் வியாபாரம் என்ற பெயரில் பிரான்ஸ் சுரண்டுகிறது.

பதிலுக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவிகளை வளர்ச்சித் திட்டங்களுக்காக இல்லாமல் ஆயுதங்களை தந்தும், அந்நாட்டில் இராணுவத்தலையீடும் (இராணுவ தளங்களை அமைத்து கண்காணிக்கிறது) செய்து கொள்கிறது பிரான்ஸ்.

இதற்காகவே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி பதவி ஏற்ற சில நாட்களிள் ஆபிரிக்க நாடுகளுக்கு கட்டாயப் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவு ஜனாதிபதிகளை சந்திக்கும் நிகழ்வுகள் இயல்பாக நடக்கும்.

எதிர்ப்புகள் எழுந்தால் கொலை

ஒருமுறை, மாலியின் முன்னாள் பிரதம மந்திரி Moussa Mara, CFA பிராங்க் பயன்படுத்தும் நாடுகள் மிகவும் பிரபலமாகவில்லை என்றும் இது பிரான்ஸ் கட்டுப்பாட்டில் (Franc Zone)
உள்ள நாடுகளின் இறையாண்மையை அழிக்கிறது என்றும் குறிப்பாக நிதிக் கொள்கையை சுட்டிக்காட்ட சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை இது மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது என கூறியுள்ளார்.

ஆபிரிக்கத் தலைவர்கள் பிரான்ஸ்க்கு எதிராக செயல்பட்டால் அங்கு ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக இராணுவசதி நடத்தப்படும் அல்லது அந்நாட்டு ஜனாதிபதி கொலை செய்யப்படுவார். உதாரணமாக, டோகோ நாட்டின் முதல் ஜனாதிபதியான சில்வானஸ் ஒலிம்பியோ, வணிகத்திற்கு CFA பிராங்கிற்கு பதிலாக சொந்த நாட்டு நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்தபோது, இராணுவ சார்ஜென்ட் மூலம் கொலை செய்யப்பட்டார். மாலியின் முதல் ஜனாதிபதியான மோடிபோ கெய்டாவும் இதுபோல நாட்டின் வளர்ச்சிக்காக செயல்பட முனைந்த போது பிரான்ஸ் அவரது ஆட்சியை கவிழ்த்தது.

ஆப்பிரிக்க இளைஞர்களின் கோபமும் தவறான சித்தரிப்பும்

ஆபிரிக்க மக்கள்தொகையில் இளைஞர்கள் 70 சதவீதமாக உள்ளனர். முதலில், ஆபிரிக்க இளைஞர்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் மற்றும் இராணுவ ஆட்சிக் குழுக்களுக்கான அவர்களின் ஆதரவு ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாக இருக்கிறது என்று கூறப்படுவது எல்லாம் கட்டுக்கதை . கடந்த இரண்டு பத்தாண்டுகளாக ஆபிரிக்கா முழுவதும் எதேச்சதிகாரம் அதிகரித்து வருவதாகவும், தனிப்பட்ட சுதந்திரங்கள் குறைந்து வருவதாகவும் ஆய்வுகள் கூறியுள்ளன.

அழிக்கப்படும் ஜனநாயகம்

ஊழல் முறைகேடுகள், வாக்காளர்கள் மீதான அடக்குமுறை, வாக்குபதிவில் முறைகேடு என ஜனநாயக விரோத செயல்கள் மூலம் ஆட்சிக்கு வருவதே பிரான்ஸ் கட்டுப்பாட்டு ஆப்பிரிக்காவில் ஜனநாயகமாக உள்ளது. பல தேர்தல்கள் (சமீபத்தில் சியரா லியோன், கெபான் உட்பட) போட்டிகள், அடக்குமுறைகள் மற்றும் அரசியல் ரீதியான முடக்கங்கள் ஆகியவற்றால் சிதைக்கப்பட்டன.

மோசடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமே சட்டத்தின் ஆட்சியில் அமர அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் அதிகாரத்தை மையப்படுத்தி அரசு நிறுவனங்களை செயலிழக்க செய்து சட்டமன்ற, நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு அடிப்படைச் சுதந்திரங்களை நசுக்கி மக்கள் தம் உரிமைகளைக் கேட்கும் எல்லா வழியையும் பறித்தனர்.

சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர். போராட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதையும் சுதந்திரமாக கொள்ளையடிக்கின்றன

சமத்துவமின்மையின் தேசம்

ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சராசரியாக ஆசிரியர்களை விட முப்பது மடங்கு அதிகமாகவும், அமைச்சர்கள், மருத்துவர்களை விட நாற்பது மடங்கு அதிகமாகவும் சம்பளம் பெறுகின்றனர்.மேலும் பிரான்ஸ் நிறுவனங்களுடன் பொருளாதார உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட எதுவும் இல்லாத சூழலை கண்டு மக்கள் தெருக்களில் போராடினால் படுகொலை செய்யப்படுகிறார்கள். இணையதளத்தில் எதிர்ப்பை தெரிவிக்கும்போது இணையம் முடக்கப்படுகிறது. இளைஞர்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.
கடல் மற்றும் பாலைவனங்கள் வழியாக பயணிக்கும் போது பலர் மரணத்தை தழுவுகின்றனர். இது போன்று பல கொடுமைகளுக்கு பிரான்ஸ் ஏகாதிபத்தியம் மக்களை கொடுமையான சமத்துவமின்மையில் தள்ளுகிறது.

ஆபிரிக்கா முழுவதும், தேர்தல் ஜனநாயகம் ஒரு ஆடம்பரமான பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. இது பணக்காரர்களும் ஆதிக்கவாதிகளுக்கு மட்டுமே உரிமைகளை தருகிறது. ஏழைகள் அதற்காக வியர்வையையும் இரத்தத்தையும் சிந்துகிறார்கள் .

ஏகாதிபத்தியவாதிகள் ஏற்கனவே அவர்களிடமிருந்து அனைத்தையும் திருடி விட்டனர். ஆப்பிரிக்க இளைஞர்களுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரே உரிமை வாக்களிப்பது மட்டுமே. இந்நிலையில் கொடுமைகள் நிறைந்த அடக்குமுறை ஆட்சியை இராணுவம் தூக்கி எரியும் போது இளைஞர்கள் மக்கள் தங்களின் கொடூர வாழ்க்கை முறையில் இருந்து விடுபட ஒரு வழி கிடைப்பதை பார்த்து வீரர்களை உற்சாகமாக அவர்கள் கைகளில் முத்தம் கொடுத்து வரவேற்றனர்.

Tags: