வாச்சாத்தி வழக்கில் 215 பேரும் குற்றவாளிகளே!

வாச்சாத்தி மக்கள் இனிப்புகள் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

வாச்சாத்தி  கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தீர்ப்பு வெளியானதையடுத்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தர்மபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்ட செயலாளர் அம்புரோஸ், மாநில துணைசெயலாளர் கண்ணகி, மார்க்சிஸ்ட்  கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் அரூர் பி.குமார், பாப்பிரெட்டிப்பட்டி தி.வ.தனுசன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.வஞ்சி, மலை சங்க நிர்வாகி எஸ்.கே.கோவிந்தன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏ.நேரு, எஸ்.கே.கோவிந்தன் உள்ளிட்டோர் வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்றனர். உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

அப்போது வாச்சாத்தி  கிராம மக்கள் மற்றும் பெண்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்திற்கும் உணர்ச்சிப் பெருக்கோடு நன்றியை தெரிவித்தனர். “1992 ம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் வனத்துறையினர் எங்களை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தனர். எங்கள் கிராமத்தையே சேதப்படுத்தினர்.எங்களுக்கு உதவியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலைவாழ் மக்கள் சங்கமும் தான். அவர்கள் எங்களுக்காக போராடவில்லை என்றால் எங்கள் கிராமம் அன்றே அழிந்து இருக்கும். 30 ஆண்டுகாலம் எங்களுக்காகப் போராடி நீதிபெற்றுத் தந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எங்கள் கிராமத்திற்க்கு நேரில் வந்து விசாரித்த நீதிபதி ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அப்பெண்கள் கண்களில்நீர் ததும்பக் கூறினர்.

தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு – வன்கொடுமைக்கு உள்ளான  பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு

வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று அரசுத்துறைகளைச் சேர்ந்த  கூட்டுக்குழுவினர், மலைக் கிராம மக்கள் மீது கட்ட விழ்த்துவிட்ட அராஜகம், வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட மலைவாழ் பெண்களுக்கு தலா ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.  வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

கொடிய அட்டூழியம்

தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 1992-ம் ஆண்டு சுமார் 655 பேர் வசித்து வந்தனர். இவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

வாச்சாத்தி கிராமப் பகுதிகளில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஜுன் 20-ம் தேதி சந்தனமரம் வெட்டிக் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாகக் கூறி 155 வனத்துறையினர், 108 போலீஸார், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய கூட்டுக் குழுவினர் சோதனையிட்டனர். வீடு, வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த சில வீடுகள் மற்றும் ஏரிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அங்கிருந்த 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூன்று நாட்களாக அங்கேயே முகாமிட்ட இவர்கள், மலைவாழ் மக்கள் மீது பெரும் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். வீடுகள், உடைமைகளை சூறையாடியும், ஆடு, கோழிகளை பிடித்து அங்கேயே சமைத்து சாப்பிட்டும், ரேசன் கடையிலிருந்து உணவு தானியங்களை வீசியெறிந்தும்,  மண்ணெண்ணெய்யை குடிநீர் தொட்டியில் ஊற்றியும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இறுதியாக சந்தனக் கட்டை கடத்தியதாக 90 பெண்கள், 28 சிறுவர்கள், 15 ஆண்கள் என 133  பேரை கைது செய்து இழுத்துச் சென்றனர். இவர்களில் 18 பெண்களை இரவு முழுவதும் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். இன்னும் சொல்ல முடியாத பல சித்ரவதைகளுக்கு ஆட்படுத்தினர்.

அதிகாரத்தில் இருந்தவர்கள் அரங்கேற்றிய இந்த அராஜகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலையீட்டிற்குப் பிறகே வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு, மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாது, சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என அனைத்து மட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது.

19 ஆண்டுகள் நீடித்த போராட்டம்

வாச்சாத்தி மக்களோடு இணைந்து சுமார் 19 ஆண்டுகளாக நடத்திய இந்த சட்டப் போராட்டத்தின் பின்னணியில், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில், தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். குமரகுரு, கடந்த 2011 ஆம் ஆண்டு  செப்டம்பர் 29 அன்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில், 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7  ஆண்டு கடுங்காவலும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். மற்ற அனைவருக்கும் ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு வழக்கில் ஒரே நேரத்தில் அதிக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட வரலாற்றுத் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்தது. இது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. 

மேல்முறையீடு – விசாரணை

இந்நிலையில், அதிகபட்ச தண்டனை பெற்ற 27 பேர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை, நீதிபதி பி. வேல்முருகன் விசாரித்து வந்தார்.  விசாரணையின் ஒரு பகுதியாக, இவ்வழக்கு சம்பந்தமான இடங்கள் மற்றும் மக்களிடையே நேரில் விசாரணை செய்யவும் முடிவு செய்து அதன்படி கடந்த 2023 மார்ச் 4 அன்று வாச்சாத்தி கிராமத்திற்கே நீதிபதி பி. வேல்முருகன் நேரடியாக சென்றார்.  அங்கு சம்பவத்தில் தொடர்புடைய பகுதிகளாக கருதப்படும் பழங்குடிகள் தொடக்கப்பள்ளி, ஏரிப் பகுதி, ஆலமரம், தண்ணீர் தொட்டி, மலைப்பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தாலும், அவர்களிடம் வழக்கு சம்பந்தமாக எதுவும் பேசாமல், அது தவிர்த்த பிற கோரிக்கைகளை மட்டும் கேட்டுக் கொண்டார்.

தீர்ப்பை உறுதி செய்த நீதிபதி 

இந்தப் பின்னணியில், நீதிபதி பி. வேல்முருகன் செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமையன்று தனது தீர்ப்பை வழங்கினார். அப்போது, வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிபதி பி. வேல்முருகன், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளார்.  

அதே செப்டம்பர் 29, 1992 ஆம் ஆண்டு நடந்த வாச்சாத்தி சம்பவம் தொடர்பான வழக்கு 19 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்றுதான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின், அதே செப்டம்பர் 29 அன்று குற்றவாளிகளுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜன நாயக சக்திகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாச்சாத்தியில் உயர்நீதிமன்ற நீதிபதி வேல்  முருகன் கள ஆய்வு.

நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பு விவரம்

*குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 174 ஆவது குற்றவாளி மரணம் அடைந்து இருப்பதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.
*வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையில் 50 சதவிகிதத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளிடம் இருந்து பெற வேண்டும்.
*பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டது உறுதியாகி இருக்கிறது. எனவே மருத்துவ சிகிச்சை அளிக்க தவறியவர்களிடம் இருந்தும் இழப்பீட்டுத் தொகை பெறப்பட வேண்டும்.
*பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாதபட்சத்தில் சுயதொழிலுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
*வாச்சாத்தி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
*குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து இருந்தால் அதற்கேற்ப மீதமுள்ள காலத்துக்கும் தண்டனை அனுபவிக்க வகை செய்யவேண்டும்.
*பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராமத்தில் மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த கிராமத்தை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

Tags: