பலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போரை முடிவுக்குக் கொண்டுவருக!

லஸ்தீனம் மீதான இஸ்ரேலின்  ஆக்கிரமிப்புப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஆங்கில ஏடான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏட்டில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் வருமாறு: தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் வியக்கவைக்கும் விதத்தில் திடீர்த் தாக்குதலில் ஈடுபட்டதும், அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா பகுதியில் காட்டுமிராண்டித்தனமான முறையில் குண்டுகளை வீசி எதிர்த்தாக்குதல் தொடுத்திருப்பதும் – பலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வரலாற்றில் அதற்கு எதிராகப் பலஸ்தீன மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குழந்தைகள், பெண்கள் மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது

இந்தத் தலையங்கத்தை எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் (ஒக்ரோபர் 11), மோதல் ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பின்னர், 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் (இவர்களில் 155 பேர்  இராணுவத்தினர்), 2,700 பேர் காயம்  அடைந்திருக்கிறார்கள். பலஸ்தீனர்களின் காசா பகுதியில், இஸ்ரேல் வான்வழியாக குண்டுகள் பொழிந்து தாக்குதல் தொடுத்திருப்பதில், இதுவரை  1,055 மக்கள் இறந்திருக்கிறார்கள், 5,128 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையில்  17 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 80 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். ஹமாஸ் தாக்குதலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொது மக்கள் உயிர் இழந்திருப்பதும், காசாவில் குண்டுவீச்சு காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவைகளாகும்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முதலில் ஒப்புக் கொள்க!

அதே சமயத்தில், பலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குறித்து எதுவுமே கூறாது, இஸ்ரேல் மீது கொடூரமான முறையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக, உலகக் கோர்ப்பரேட் ஊடகங்களும், மேற்கத்திய ஆளும் வட்டாரங்களும் அவிழ்த்துவிடும் சரடுகள் நிராகரிக்கப்படவேண்டியதும் அவசியமாகும். ஹமாஸ் தாக்குதல், பல பத்தாண்டுகளாக நடந்துவரும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மற்றும் பலஸ்தீன மக்களை இஸ்ரேல் அடிமைப்படுத்தி வைத்திருத்தல் ஆகிய பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.

1967 யுத்தத்திலிருந்தே, மேற்குக்கரை  மற்றும் காசா பகுதிகள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கையகப்படுத்தப் பட்டு, கடந்த 56 ஆண்டுகளாக அவற்றின் ஆக்கிரமிப்பின் கீழ்தான் இருந்து வருகின்றன. சர்வதேச சட்டங்களின்படியும், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தீர்மானங்களின்படியும் இந்தப் பகுதிகள் இன்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளேயாகும். கடந்த சில ஆண்டுகளாக மேற்குக் கரையிலும், மற்றும் பல பகுதிகளிலும் பாதுகாப்பு அரண்களுடன் யூதர்கள் குடியேற்றங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலிடமிருந்து மேற்குக் கரையை அடைப்பதற்காக ஒரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. அங்கே நிற வெறி அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது. (An apartheid system has been instituted.) 2022இல் வலது அதிதீவிரவாதியான பெஞ்சமின் நேதன்யாஹூ அரசாங்கம் அமைந்தபின்னர், பலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறை உக்கிரமடைந்திருக்கின்றன. சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுள்ள வலது அதிதீவிரவாதக் குண்டர்கள், ஆட்சிபுரிபவர்களால் தங்களுக்கு எவ்விதத் தண்டனையும் கிடைக்காது என்ற தைரியத்துடன் பலஸ்தீனர்கள் வாழும் வீடுகளிலும், கிராமங்களிலும் புகுந்து அவர்களை விரட்டியடிக்கும் வேலைகளிலும், கொலை செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் பலஸ்தீனர்களின் வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றி இருக்கிறது. இந்த மோதல் ஏற்படுவதற்கு முன் இந்த ஆண்டில் மட்டும், பலஸ்தீன தினம் ஒன்றின்போது, 248 பலஸ்தீனர்கள் பாதுகாப்புப் படையினராலும், அங்கே வந்து குடியேறியிருப்பவர்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கிழக்கு ஜெருசலத்தில் அரங்கேறும் இனப்படுகொலை

ஜெருசலத்தில், பலஸ்தீனர்களின் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டு, அவர்களின் இல்லங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். கிழக்கு ஜெருசலத்தில் இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். முஸ்லீம்  உலகில் மூன்றாவது புனிதத்தலமாகக் கருதப்படும் அல்-அக்சா மசூதி வளாகத்தில் அதிதீவிர யூதக் கும்பல்களும், பாதுகாப்புப் படையினரும் ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை அடித்துநொறுக்கி இருக்கின்றனர். காசா பகுதியைப் பொறுத்தவரை, இஸ்ரேல் 2007 இல் தன்னுடைய இராணுவத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டபின்னரும், சுமார் 23 இலட்சம் பலஸ்தீனர்கள் குடியிருந்துவரும் அந்தப் பகுதியைத் தங்கள் முற்றுகைக்கு உட்படுத்தியே வைத்திருந்தது. கடந்த 16 ஆண்டுகளாக, காசா இஸ்ரேலின் இரக்கமற்ற முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவே இருந்து வந்திருக்கிறது. பலஸ்தீனர்கள் மத்தியில்  இந்த இரக்கமற்ற தடையை எதிர்க்கும் முயற்சிகள் ஏற்படும்போதெல்லாம், இஸ்ரேல் வான்வழியே அலை அலையாகக் குண்டுகளை வீசி மக்களை கொன்று குவித்து வந்தது. இத்தகைய “நரகப் பகுதியில்” இருந்துதான் ‘ஹமாஸ்’ வீரர்களை அணிதிரட்டி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது.        

பாலஸ்தீனர்கள் மனிதவிலங்குகளா?

உலகத்தின் மிகச்சிறந்த உளவுத்துறை என்று தன்னைப் பீற்றிக்கொண்டிருந்த இஸ்ரேல் உளவுத்துறையும் இராணுவமும் அதிர்ச்சியடைந்துள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தை வெல்லவே முடியாது என்கிற கட்டுக்கதையெல்லாம் கந்தல் கந்தலாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதத்தில், நேதன்யாஹூவும், அவருடைய எடுபிடிகளும் காசாவுக்கு எதிராக ஒரு முழுமையான போரை நடத்த முடிவு செய்துள்ளார்கள். நேதன்யாஹூவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அவர்கள் “காசாவின் எதார்த்தநிலையை மாற்றப்” போகிறார்களாம். இஸ்ரேல் இராணுவ அமைச்சர், காசா பகுதிக்குள் எரிபொருள், உணவு அல்லது மின் விநியோகம் அளிக்கப்படக்கூடாது என்று முழுமையாக முற்றுகைக்கு உட்படுத்தி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அவர் காசாவில் உள்ள “மனித விலங்குகளுக்கு” எதிராகப்  போராட அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஐ.நா. கண்டனத்தையும் மீறி இஸ்ரேல் வெறித் தாக்குதல்

வான்வழி குண்டுவீச்சில் கடந்த நான்கு நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சுமார் 900 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளார்கள். பல பகுதிகளில் மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உணவு இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் தலைவர், இந்த முற்றுகையை “ஒரு கூட்டு தண்டனை” (“a collective punishment”) என்றும், சர்வதேச சட்டங்களின்படி ‘போர்க் குற்றம்’ (“war crime”) என்றும் குறிப்பிட்டிருக்கிறார். காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தைக் குவித்து வருகிறது, விரைவில் தரைவழியேயும் தாக்குதல் நிச்சயமாகும். ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படவிருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் பலஸ்தீனர்களை அழித்து ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோதிலும், கடந்த எழுபதாண்டு காலமாக விடுதலைக்காகப் போராடி வரும் பாலஸ்தீன மக்கள் ஒருபோதும் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தைக் கை விட்டுவிட மாட்டார்கள். பலஸ்தீன மக்களின் மற்றொரு சுற்று எதிர்ப்புப் போராட்டத்துக்கு இது இட்டுச்செல்லும்.

அம்பலமான அமெரிக்காவின் இருதேசக் கொள்கை

இஸ்ரேலுக்கு பிரதான ஆதரவாளராக இருக்கும் அமெரிக்கா, பலஸ்தீனர்களைப் படுகொலை செய்வதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முன்வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவும் அதன் மேற்கத்திய அடிவருடி நாடுகளும் பலஸ்தீனர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதைத் தடுப்பதற்காக எதுவுமே செய்திடவில்லை. இரு தேசக்  கொள்கை குறித்து அவர்கள் உதட்டளவில் சேவை செய்த போதிலும், உருப்படியாக எதையும் செய்திடவில்லை.

அமெரிக்காவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் நரேந்திர மோடி

இந்த மோதலில், நரேந்திர மோடி, அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிரொலித்து, பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்திருக்கிறார். தாங்கள் “இஸ்ரேலுக்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதாகப்” பிரகடனம் செய்திருக்கிறார்.  பலஸ்தீனர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்தோ  மற்றும் இரு தேசக்கொள்கை குறித்தோ எதுவும் கூறவில்லை. பலஸ்தீனர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கும் வரையிலும், பலஸ்தீன மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கும் வரையிலும், இஸ்ரேலுக்கோ, மேற்கு ஆசியாவுக்கோ நிரந்தர அமைதி ஏற்பட முடியாது. காந்திஜியின் தலைமையில் தேசிய இயக்கக் காலத்திலிருந்தே, இந்தியா எப்போதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறது. இதனை மீண்டும் வலியுறுத்த வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயமாகும்.

மூலம்: Israel-Gaza War: End the Occupation

தமிழில்: ச.வீரமணி

Tags: