உடனடியாக பலஸ்தீனியர்கள் மீதான போரை நிறுத்துங்கள்

லஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து 19 ஆவது நாளாக குண்டுவீசி கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. குடிநீர், மின்சாரம், உணவு செல்லும் வழிகளை அடைத்ததுடன், மருத்துவமனைகளையும் கூட குறிவைத்து இஸ்ரேல் தாக்கி அழித்து வருகிறது. தொடரும் பயங்கரம் காசா பகுதியில் 2704 குழந்தைகள், 1584  பெண்கள் உள்பட 6546 பேர்களை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (24.10.2023) மட்டும் 350 குழந்தைகள் உட்பட 704 பேரைக் கொன்றது. 17 ஆயிரத்து 439 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இஸ்ரேலின் மனிதாபிமான மற்ற தாக்குதலால், காசாவில் உள்ள 10 இலட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.  50 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை” என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு ஆயுதத்திற்கு இணையாக 12 ஆயிரம் தொன் வெடி பொருட்களை பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்தப் பின்னணியிலேயே, போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று  இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் (António Guterres) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நாவில் உரை

ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் செவ்வாய்க்கிழமை (24.10.2023) ஐ.நா சபையில் ஆற்றிய உரையின் பகுதிகள் வருமாறு:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை ஒவ்வொரு மணிநேரமும் மோசமாகி வருகிறது. காசாவில் ஏற்பட்டுள்ள போர், பிராந்தியம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளது. பலஸ்தீன சமூகங்களை மேலும் பிரிப்பது அங்கு நிலைமையை கொதிநிலைக்கு கொண்டு சென்று  அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வேண்டுமென்றே கொலை செய்வது, பாதிப்பை ஏற்படுத்து வது மற்றும் பொதுமக்களைக் கடத்துவது அல்லது பொது மக்கள் இலக்குகளை நோக்கி  ரொக்கெட்டுகளை ஏவுதல் ஆகிய எதையும் நியாயப்படுத்த முடியாது. அனைத்து பணயக்கைதிகளும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும். அவர்களை உடனடியாக  நிபந்தனைகள் இல்லாமல் விடுவிக்க வேண்டும். 

ஹமாஸின் தாக்குதல்கள் காரணமற்றது அல்ல 

ஹமாஸின் தாக்குதல்கள் காரணமின்றி  நடக்கவில்லை என்பதை அங்கீகரிக்க வேண்டியது முக்கியம். பலஸ்தீன மக்கள் 56  ஆண்டுகளாக மிக மோசமான ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தங்கள் நிலம் ஆக்கிரமிப்பாளர்களால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதையும் வன்முறையால் பாதிக்கப்பட்டதையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்; அவர்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது; அவர்களின் மக்கள் இடம் பெயர்ந்தனர்; அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அவர்களின் அவலநிலைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கை மறைந்து வருகிறது. இதற்காக ஹமாஸின் பயங்கர  தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. அந்த பயங்கரமான தாக்குதல்கள் மூலம் பலஸ்தீன மக்களின்  மீதான தண்டனையையும் நியாயப்படுத்த முடியாது.

போர் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்

அனைத்து நாடுகளும்  சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை நிலை நிறுத்தி மதிக்க வேண்டும். பொது மக்களைக் காப்பாற்ற  இராணுவ நட வடிக்கைகளை கவனமாக கையாள வேண்டும். இன்று 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் மருத்துவமனைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். காசா மீதான இஸ்ரேல்  இராணுவத்தின்  இடைவிடாத குண்டு வீச்சால், அவர்களின் வாழ்விடமும் அழிந்து அதிகளவிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த அழிவு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. 

ஐநா அதிகாரிகளுக்கு இரங்கல் 

ஐக்கிய நாடுகளின் நிவாரண  மற்றும் பணிகள் நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்த ஐநா அதிகாரிகள் 35 பேர் இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு  இரங்கல் செலுத்திய ஐ.நா பொது செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், ‘கடந்த இரண்டு வாரங்களில்  குண்டுவீச்சில் 35 ஐ.நா அதிகாரிகள் கொல்லப்பட்டனர்’ என  வருத்தம் தெரிவித்தார். “இதுபோன்ற பல கொலைகளுக்கும் நான் கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். எந்தவொரு போரிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. பொதுமக்களைப் பாதுகாப்பது என்பது  அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தக் கூடாது என்பதையும் உள்ளடக்கியது தான்’’ என்றார்.

பொதுமக்களின் மீது குண்டு வீசுவது ‘பாதுகாப்பு’ அல்ல 

“குடிமக்களைப் பாதுகாப்பது என்பது, தங்குமிடம், உணவு, தண்ணீர், மருந்து, எரிபொருள் எதுவும் இல்லாத காசாவின் தெற்கு நோக்கி  10 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு கட்டளையிடுவதும், அவர்கள் செல்லும்போது தொடர்ந்து அங்கேயே குண்டுகளை வீசுவதும் அல்ல” என இஸ்ரேலின் போர்க்குற்றத்தை மையப்படுத்தி பேசினார். “எரிபொருள் இல்லாமல், உதவி வழங்க முடியாது, மருத்துவமனைகளுக்கு மின்சாரம் இருக்காது, குடிநீரை சுத்திகரிக்கவோ அல்லது உறிஞ்சி எடுக்கவோ முடியாது. காசாவின் மக்கள் தொகை தேவைகளுக்கு ஏற்ற வகையில் தொடர்ச்சியான உதவிகள் தேவைப்படுகின்றன. அந்த உதவிகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். “இந்த துன்பங்களை முடிவுக்கு கொண்டு வரவும், உதவிகளை எளிதாக பாதுகாப்பாக வழங்கவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும், உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கான எனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்றார் அவர். “நாடுகளுக்கு இடையேயான அணிசேர்க்கை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை ஆகியவை பெரும் விளைவுகளை தூண்டி வருகின்றன. இந்நிலையில் நாம் யூத எதிர்ப்பு, முஸ்லிம் மக்களுக்கு எதிரான மதவெறி மற்றும் அனைத்து வகையான வெறுப்பு சக்திகளுக்கும் எதிராக நிற்க வேண்டும்” என்றும் கூறினார்.

‘ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல’

மாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல என துருக்கி நாட்டின் நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று  (25.10.2023) ஜனாதிபதி  எர்டோகன் (Recep Tayyip Erdoğan) கூறினார். அவரது உரையில் ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழுஅல்ல, அவர்கள் தங்களின் நிலத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை நடத்தும் ஒரு விடுதலை அமைப்பு  என்று குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி  நாடாளுமன்றத்தில் எர்டோகன் ஆற்றிய இந்த உரையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும்  காசா மீதான தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்  என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் “இஸ்ரேல் மற்றும் உலக நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இஸ்ரேலுக்கு மேற்குலக  நாடுகள்  நிறைய கடன்பட்டுள்ளன. எனவே ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக நீங்கள் கருதலாம். ஆனால் துருக்கி  உங்களுக்கு கடன்பட்டிருக்கவில்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பல்ல, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடும் முஜாஹிதீன் குழு!  (விடுதலை அமைப்பு)” என கூறினார். மேலும் மனிதாபிமான உதவிக்காக ரஃபா எல்லை திறக்கப்பட வேண்டும். போரை விரைந்து முடிவுக்கு கொண்டுவர  வேண்டும் எனவும் எர்டோகன் வலியுறுத்தினார்.

Tags: