சர்வதேச சமூகத்தினரே மனச்சாட்சி விழிப்புடன் இருந்தால் யுத்தத்தைத் தடுத்து நிறுத்துங்கள்!
காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் குண்டு வீசி, குழந்தைகள், பெண்களைக் கூட விடாமல் கொன்று குவிக்கும் நிலையில், இந்த போர்க்குற்றங்களை சர்வதேச சமூகம் தலையிட்டுத் தடுக்க வேண்டும் என்று காசா மருத்துவர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தவெறி பிடித்த இஸ்ரேல் இராணு வம், 36 ஆவது நாளாக பலஸ்தீனத்தின் மீது கொடூர யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை 11 ஆயிரத்து 078 பலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளது. காசாவின் அல்-ஷிபா (al-Shifa) மருத்துவமனையில் உள்ள புதைக்குழியில் 100 உடல்களை அடக்கம் செய்திருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் தொடர்ந்து மூன்று நாட்களாகக் குண்டு வீசி வருகிறது. இதனால், மருத்துவமனைக்குள் அம்புலன்ஸ்கள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் தடையாக உள்ளது. நாங்கள் அல்-ஷிபா வளாகத்துக்குள் சிக்கியுள்ளோம்” என்று பலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
காசாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிபா மருத்துவமனையில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல் கித்ரா, “இன்குபேட்டருக்குள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று இறந்துவிட்டது. அங்கு 45 குழந்தைகள் உள்ளன” என்று கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவம் அல்-ஷிபா மருத்துவமனை மீது வெள்ளைப் பாஸ்பரஸைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாக பலஸ்தீன சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த இரண்டு நாட்களில் காசாவில் உள்ள 1 இலட்சம் பலஸ்தீனிய மக்கள் தெற்கு பகுதியை நோக்கி நகர்ந்துள்ளதாக இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கான் யூனிஸில் உள்ள அல்-நாசர் மருத்துவமனைக்கு வெளியே நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, காசாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மிகுந்த வேதனையுடன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ‘போர்க் குற்றங்கள்’ அனைத்தையும் நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் (International community) வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இப்போது உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்களுடைய மனசாட்சி விழித்திருக்கிறது என்றால், தயவுசெய்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும். மருத்துவமனைகள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய போர்க் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முன்வராத உலகின் எந்தவொரு அரசியல்வாதியும், தன்னுடைய கரங்களில் இரத்தக்கறை படிந்திருப்பதை மறந்துவிடக் கூடாது.
தற்போது காசா நகரில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனை முற்றுகை இடப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லை. தண்ணீரும், மின்சார வசதியும் கிடையாது. மருத்துவமனைகளின் கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால், எங்களால் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்க முடியவில்லை. தற்போது போர் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான போர்க் குற்றங்களை நாம் தொடர முடியாது.” இவ்வாறு வேதனையுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரான்ஸ் ஜனா திபதி இம்மானுவேல் மேக்ரான் ஒரு செய்தியாளர் சந்திப்பில், “காசாவில் குழந்தைகள், பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும். பொதுமக்கள் மீது குண்டு வீசுவதற்கு எந்த நியாயமும் இல்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த மரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியதா? என்பதற்குப் பதிலளிக்க மறுத்துவிட்ட அவர், “நான் நீதிபதி இல்லை. ஒரு நாட்டுடைய தலைவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.