பன்முக ஆளுமை கொண்ட அரும் பெரும் தலைவர்!
-அ.பாக்கியம்

ஒரு சிகப்பு சிங்கத்தின் கர்ஜனை ஓய்ந்தது! சிறை, தலை மறைவு வாழ்க்கை, துப்பாக்கிச் சூடுகள், தடியடிகள், போராட்டக் களங்கள், சட்டமன்ற பணிகள் என எண்ணற்ற அனுபவங்கள்! தோழர் சங்கரய்யாவின் வரலாறு, தமிழக வரலாற்றிலிருந்தும், பொதுவுடமை இயக்க வரலாற்றில் இருந்தும் பிரிக்க முடியாதது.
ஆளுகிறவர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்படமாட்டார். மக்களை யார் வஞ்சிக்கிறார்களோ, அவர்களுக்கு எதிராக சமரசமற்ற முறையில் போராடக் கூடியவர்.
தனது ஒன்பதாவது வயதில் பகத்சிங் தூக்குத் தண்டனை விதித்ததை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆரம்பித்த அரசியல் வாழ்க்கை நூறாண்டு காலம் தொடர்ந்தது. தோழர் சங்கரய்யா தாத்தா ராமசாமி அவர்கள் பகுத்தறிவு சிந்தனையாளர். தனது மகனின் திருமணத்தை தமிழ் ஆசிரியர் அழகிரிசாமி தலைமையில் நடத்தினார். உறவினர்கள் புறக்கணித்தனர். தோழர் சங்கரய்யா இந்தப் பின்னணியில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் மற்றும் பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றவர்.
அவரது கல்லூரி வாழ்க்கை சுதந்திரப் போராட்ட களமாக அமைந்துவிட்டது. 1936 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கம் நாடு முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக மாணவர்களை திரட்டியது. தோழர் சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களை அணி திரட்டினார். அவர் ஆரம்பித்த மாணவர் சங்கத்திற்கு சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம் என்ற வாசகங்களை முன் வைத்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தின் மீது வெள்ளை அரசு கடுமையான தாக்குதலை நடத்தியது. ஆறு மாணவர்களை தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தோழர் சங்கரய்யா தலைமையில் நடந்த போராட்டம் மக்களை ஈர்த்தது. தோழர் சங்கரய்யா கிளர்ச்சியை உருவாக்கக் கூடிய முறையில் துண்டு பிரசுரத்தை எழுதினார். ”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இரத்த ஆறு ஓடுகிறது, மண்டை உடைப்பு, எலும்புகள் முறிப்பு” என்று அவர் எழுதிய துண்டு பிரசுரம் போராட்ட தீயை பற்ற வைத்தது. வெகுண்ட மாணவர்கள் மதுரை மேல மாசி வீதியில் திரண்டனர். மதுரையின் மாசி வீதி மாணவர்களின் போராட்ட வீதியாகவே அன்றாடம் காட்சியளித்தது. அதற்கு, தோழர் சங்கரய்யாவின் கிளர்ச்சி காரணமாக அமைந்தது.

சங்கரய்யாவின் சிந்தனை, விடுதலைப் போராட்டத்தின் சிந்தனையாகவே இருந்தது. 1938 இல் மகாலட்சுமி தொழிற்சாலையில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்று பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் தலைமை ஏற்று கைதானார். அவர் வழக்கு நடந்த பொழுது தோழர் சங்கரய்யா நீதிமன்றம் சென்று கவனித்தார். முத்துராமலிங்க தேவரையும் சந்தித்தார். அவர் போராட்டத்தையும், படிப்பையும் தொடர்வதற்கான உற்சாகமளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டம் வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்த பொழுது, தோழர் சங்கரய்யா மாணவர்களை திரட்டி கோயில் வாசலில் நின்று வழி அனுப்பி வைத்தார். 1939 ஆம் ஆண்டு நேதாஜி அவர்கள் மதுரைக்கு வந்தார்! தோழர் சங்கரய்யா தலைமையில் ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பும் சென்ட்ரல் திரையரங்கில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தோழர் சங்கரய்யா,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அந்தக் கூட்டத்தில் அனல் தெறிக்கும் பேச்சுக்களால் விடுதலை தீயை எரிய வைத்தனர்.
1941 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை ஆதரித்து அமெரிக்கன் கல்லூரி மாணவர்களை களத்தில் இறக்கினார். காவல்துறை தோழர் சங்கரய்யாவை கைது செய்தது. தோழர் சங்கரய்யா இறுதியாண்டு பிஏ தேர்வு எழுத வேண்டும். இரண்டு வாரங்கள் இருந்த நிலையில், 18 மாதம் சிறைத் தண்டனையை பெற்றார். நான் வேலைக்காக படிக்கவில்லை, விடுதலை தான் என்னுடைய முதல் இலக்கு என்று படிப்பை கைவிட்டு சிறை தண்டனையை ஏற்றுக் கொண்டார். தந்தையின் கனவு வழக்கறிஞராக வேண்டும். ஆனால், தோழர் சங்கரய்யா உழைப்பாளி மக்களின் வழக்கறிஞராக தனது இறுதி காலம் வரை இருந்தார்.
வேலூரில் சிறை வாழ்க்கையை உறுதியுடன் மேற்க் கொண்டார். 1943 ஆம் ஆண்டு வேலூர் சிறையில் 19 நாள் உண்ணாவிரதம் இருந்தனர். பத்தாவது நாளில் பலரும் சோர்வடைந்து மயக்கம் உற்றனர். தோழர் சங்கரய்யா ‘தாய்’ நாவலைப் படித்துக் கொண்டிருந்தார். சிறை அதிகாரி கேட்ட பொழுது, ”நான் அமெரிக்கன் கல்லூரி மாணவன். எனவே, சோர்வடைய மாட்டேன்” என்று பதில் அளித்தார்.
சிறைச்சாலையில் காங்கிரஸ்காரர்களுக்கு ‘ஏ வகுப்பு’ கம்யூனிஸ்டர்களுக்கு ‘பி வகுப்பு’ என்று பாரபட்சமாக நடத்தினர். தோழர்கள் ஜீவானந்தம், வி பி சிந்தன், பி சீனிவாச ராவ் போன்றவர்கள் இருந்தனர். இதை எதிர்த்து அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அனைவரும் மொட்டை அடிக்கும் போராட்டத்தை நடத்தி உள்ளனர். வேலூர் சிறையில் இருந்த 200க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகளை இணைத்து அமைப்பை உருவாக்கினார்கள்.

வேலூர் சிறையில் இருந்து ஏ கே கோபாலன் தப்பிச் சென்றதால், தோழர் சங்கரய்யாயும் மற்றும் சிலரையும் ராஜமுந்திரி சிறைக்கு மாற்றினார்கள். சில மாதங்களுக்கு பிறகு பலரும் விடுதலையானார்கள். தோழர் சங்கரய்யா மட்டும் தனிமை சிறையில் ஆறு மாதங்கள் இருந்து காமராஜரின் முயற்சியால் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். செப்டம்பர் மாதம் காந்தி உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது நெல்லையில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். வேலூர் சிறையை கம்யூனிஸ்டுகள் கல்விச் சாலைகளாக மாற்றினார்கள்! பல காங்கிரஸ் ஊழியர்கள் கம்யூனிஸ்டுகளாக மாறினார்கள்! காங்கிரஸ் தலைமை பயந்து வெள்ளை நிர்வாகத்திடம் நிர்பந்தம் கொடுத்து, சங்கரையா உட்பட பலரையும் கேரளாவின் கண்ணனூர் மாவட்ட சிறைக்கு மாற்றிவிட்டார்கள். அங்கே கையூர் தியாகிகள் நான்கு பேரும் தூக்கிலிடப்படுகிற பொழுது தோழர் சங்கரய்யாஅந்த சிறைச்சாலையில் இருந்தார்.
1946 ஆம் ஆண்டு உணவு தானியங்களை கள்ளச் சந்தைக்காரர்கள் பதுக்கினார்கள். மக்கள் பட்டினியால் தவித்தனர். தோழர் சங்கரய்யா உட்பட கம்யூனிஸ்டுகள், பதுக்கிய உணவு தானியங்களை கைப்பற்றி மக்களுக்கு விநியோகித்தனர். இதனால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பொய் சாட்சிகள் உடைக்கப்பட்டு விடுதலையானார்கள்.
இந்தியா விடுதலை அடைந்த பிறகும் தோழர் சங்கரய்யா போன்றவர்கள் சிறைச்சாலைக்கு செல்வது சகஜமாக இருந்தது 1962 இந்திய சீன மோதல் காலத்தில், ‘யுத்தம் வேண்டாம், பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்’ என்ற கோரிக்கைகளை சொன்னதற்காக ‘சீன ஏஜெண்டுகள்’ என்றெல்லாம் கைது செய்யப்பட்டதோழர் சங்கரய்யாவின் சுதந்திரப் போராட்ட வடுக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். போராட்டமும், சிறையும் தான் அவருடைய சுதந்திர போராட்ட கால வாழ்க்கையாக இருந்தது. புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ‘வாய் மொழி வரலாறு’ என்ற தலைப்பில் பிரபல சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்ட நினைவுகளை பதிவு செய்து வைத்துள்ளது. இதில் பி.சி. ஜோசி, பி.ராமமூர்த்தி, பி.டி. ரணதிவே, இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் வரிசையில் தோழர் சங்கரய்யாவும் இடம் பெற்றுள்ளார்.

மதுரை மாநகரத்தில் 1943 லிருந்து 47 ஆம் ஆண்டு வரை கட்சி வளர்ச்சியில் தீவிர பங்காற்றினார். மக்களை ஈர்க்கக் கூடிய முறையில் பேசக் கூடியவர். தெருமுனைகளில் செங்கொடியை கரகத்தில் குத்தி, கரகாட்டம் ஆடுவார்கள். கூட்டம் சேர்ந்தவுடன் தோழர் சங்கரய்யா உரை நிகழ்த்துவார். அவை கட்சியின் கொள்கைகளை எளிய மக்களுக்கும் எடுத்துரைத்து ஈர்க்கும் பேச்சுக்களாக இருக்கும். பல்வேறு தலைவர்கள் தலைமறைவாக இருந்த போது அவர்களை மதுரைக்கு வர வைத்து ரகசியமாகத் தங்க வைக்கும் கட்சிப் பணிகளை ஆற்றியுள்ளார். 1946 ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி மதுரைக்கு வந்தார். தோழர் சங்கரய்யா தலைமையில் வைகை ஆற்றில் பொதுக் கூட்டம். வைகை கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. 1946 ஆம் ஆண்டு கப்பற்படை எழுச்சி போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார். 1953 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாடு மதுரையில் நடைபெற்றது. தோழர் சங்கரய்யா தலைமையிலான மதுரை கட்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியது. மக்கள் மாநாடாகவே அது அமைந்திருந்தது.
தோழர் சங்கரய்யா சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதில் மட்டுமல்ல, பத்திரிக்கை ஆசிரியராகவும் பரிணமித்து உள்ளார் 1954 ஆம் ஆண்டு மாநிலப் பணிகளுக்கு வந்து ‘ஜனசக்தி’யின் பொறுப்பாசிரியராக பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1966ஆம் ஆண்டு ‘தீக்கதிர்’ வார ஏடு வெளிவந்தது அதன் ஆசிரியராக தோழர் சங்கரய்யா பொறுப்பேற்றுக் கொண்டார். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பொழுது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். 1995 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக செயல்பட்டார். 1961 ஆம் ஆண்டு முதல் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்து செயலாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

சட்டமன்றத்தில் தனது பேச்சாற்றலால் ஆட்சியாளர்களை பிரச்சினையின் மீது கவனம் செலுத்த வைத்துள்ளார். கையில் குறிப்புகள் இல்லாமல் சொல்ல வரும் கருத்தை தெளிவான முறையில் எடுத்துச் சொல்வதை கண்டு அனைவரும் வியந்து போவார்கள். 1957 ஆம் ஆண்டு மதுரை கிழக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1967ஆம் ஆண்டு மதுரை மேற்கில் வெற்றி பெற்றார். 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கில் வெற்றி வாகை சூடினார். 1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொழுது நகர்ப்புறங்களில் இருந்த ரேஷன் கடைகளை கிராமப்புறங்களிலும் தொடர்ந்து செயல்படக்கூடிய முறையில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சில இடையூறுகளை தகர்த்து கிராமப்புற ரேஷன் கடைகள் அமலாவதற்கு காரணமாக அமைந்தார். தோழர் சங்கரய்யா சட்டமன்ற பணிகள் தமிழக சட்டமன்றத்தின் மாண்புகளை உயர்த்தியது.
தோழர் சங்கரய்யா கலை இலக்கியத்தில் ஆர்வம் உடையவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னணி தலைவர். இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் இலக்கியங்களில் இருந்து மக்களிடம் பேச வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்துவார். விடுதலைப் போரில் வீழ்ந்த மலர்களே என்ற மதுரை மணவாளனின் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம் கண் கலங்குவார்.
”உள்ளத்தில் உண்மை யொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்ற பாரதியாரின் கவிதை வரிகளை அடிக்கடி எடுத்துரைப்பார்.

1922 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி நரசிம்முலு, ராமானுஜம் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். பெற்றோர்கள் சூட்டிய பெயர் பிரதாப் சந்திரன். தாத்தா தனது பெயரான சங்கரய்யா என்ற பெயரையே அவருக்கு சூட்டி விட்டார். 1947 செப்டம்பர் 18 ஆம் தேதி மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தோழர் பி ராமமூர்த்தி தலைமையில் தோழர் நவமணி அவர்களை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார். மத மறுப்பு திருமணமாக இது அமைந்தது. தோழர் சங்கரய்யா நவமணி தம்பதியினருக்கு ஒரு மகளும் இரு மகன்களும் உள்ளனர்.
அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நான் அவரை பேட்டி கண்டேன். மிக நெடிய வரலாற்றை அதில் பதிவு செய்து உள்ளார். அப்போதும், அதற்குப் பிறகு அவருடைய வாழ்க்கைச் சுருக்கமான ‘சங்கராயணம்’ என்ற புத்தகத்தை கொடுக்கச் சென்ற பொழுதும், ”சிங்காரவேலரின் சிந்தனைகளை சென்னையில் வெற்றிகரமாக அமலாக்குவதற்கான அமைப்புகளை உருவாக்க வேண்டும் மாணவர்கள், வாலிபர்கள், பாலர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்களை இயக்கத்துக்குள் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உழைக்கும் மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்” என்று கூறிய வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.