இத்தனை அவலங்களுக்கு என்ன காரணம்?
–சாவித்திரி கண்ணன்
ஒரு மழை, வெள்ளம், புயல் வந்தால், நம் நவீன சென்னையின் உண்மையான யோக்கியதை பல் இளித்து விடுகிறது! இந்தியாவின் முதன் முதல் மாநகராட்சி! கழிவு நீர் தங்குவதற்கே வாய்ப்பில்லாத அருமையான இயற்கை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட சென்னை இத்தகு அவலங்களை சந்திக்க நேர்ந்தது ஏன்?
ஒரு காலத்தில் லண்டனின் தேம்ஸ் நதியைப் போல ஓடிய கூவம், ஆரணியாறு -கொற்றலை, அடையாறு, பாலாறும், கோவலமும் வந்து சேரும் பக்கிங்காம்.. போன்ற பெரிய ஆறுகள்!
ஓட்டேரி, விருகம்பாக்கம், மாம்பலம்..என 20 க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்களைக் கொண்ட பெரிய கால்வாய்கள்,
சென்னையிலும், அதைச் சுற்றிலும் இருந்த நூற்றுக்கணக்கிலான ஏரிகள், குளங்கள்!
இவற்றை இணைக்கும் 500 க்கும் மேற்பட்ட அழகிய சிறிய ஓடைகள்!
இவை அனைத்துமே கடைசியில் கடலில் கடக்கும் வண்ணம் இயற்கையாகவே அமைந்த சிறப்பான நீர்வழித்தடங்கள் கொண்ட அபூர்வ நகரம் ஏன் பெருமழையில் பரிதவிப்புக்கு உள்ளாகிறது..?
மழை நீர் முறையாக செல்ல வழியில்லாமல் தேங்கிய தண்ணீர், வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்! வெளியே வர இயலாத மக்கள், கழிவுகள் கலந்த தண்ணீர், சின்னாபின்னமான சாலைகள்.., இருளில் சிக்குண்ட நகரம், தகவல் தொடர்பு சாதனங்கள் செயலற்று போன அவலம்… என ஒவ்வொரு பெரு வெள்ளத்திலும் அதே அனுபவங்களை சந்திக்கிறோமேயன்றி, அந்த நிலைமையில் இருந்து மீண்டெழ முடியவில்லை.
ஏனென்றால், நமது நாடு ஒரு சிவில் சமூகத்திற்கான பண்புகளை இழந்த சீக்குபிடித்த சமூகத்திற்கான குண நலன்களை கொண்டுள்ளது!
மன்னராட்சிக் காலங்களிலும் பின்னர் காலனியாதிக்க காலங்களிலும் இருந்த நீர் மேலாண்மை என்ற உன்னத சமூகப் பண்பாட்டை சீரழித்து நிற்கும் சமூகமாக உள்ளது.
# விதிமுறைகள், வரையறைகள் மீறிய கட்டுமானங்கள்!
# ஏரி, குளங்களுக்கு செல்லுகின்ற நீர் வழித் தடத்தினை வழி மறித்து உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள்!
# நகருக்குள் ஆங்காங்கே இருந்த ஏரி, குளங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட குடியிருப்புகள்!
# ஒரு சாலை அல்லது தெருவுக்குள் எந்த அளவுக்கு கட்டுமானங்களை அனுமதிக்க வேண்டுமோ.. அதை மீறி பன்மடங்கு அனுமதிக்கும் விதிமுறை மீறல்கள்!
# மக்கள் தொகை பெருக்கத்தையும், நகரங்களை நோக்கி வருபவர்களையும் கட்டுப்படுத்த திரானியற்ற அரசுகள்!
இதனால் சாதாரணமாகவே நகரத் தெருக்கள் சாக்கடைகளாகின்றன!
இதனால் தான் இந்த பெருமழை மற்றும் மிக் ஜாம் புயலுக்கு பல லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டி சூழல் உருவானது! 19 பேர் இறக்க நேர்ந்தது! பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 61 ஆயிரத்து சொச்சம் நிவாரண முகாம்கள் தேவைப்பட்டுள்ளன! சென்னையில் மட்டுமே சுமார் 20,000 களப் பணியாளர்கள் மீட்பு பணிகளுக்கு தேவைப்பட்டுள்ளனர்! இது தவிர மாநகராட்சி, மின்சாரத் துறை பணியாளர்கள் இரவு, பகலாக தூக்கமின்றி, சாப்பிட நேரமின்றி சுற்றிச் சுழன்று ஓட நேர்ந்த அவலம்! அதாவது பிரச்சினை வராமல் தவிர்ப்பதற்கு நிரந்தரத் தீர்வை நோக்கி நகரவொல்லை என்ற வருத்தம் இருந்தாலும், வந்தவுடன் தீவிரமாக களப்பணியாற்றிய வகையில் இந்த அரசும், அதன் களப்பணியாளர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, ‘கூவம் ஆற்றை தூய்மையாக்குகிறேன்’ என்று கொட்டிய கோடிகள் பல நூறு! பக்கிங்காம் கால்வாயை பண்படுத்த செய்யப்பட்ட செலவுகள் கணக்கு வழக்கில்லை! அடையாறு கால்வாயை அழகுபடுத்த செய்யப்பட்ட செலவுகளுக்கு அளவில்லை! தற்போதைய ஆட்சியில் கூட மழை நீர் கால்வாய்க்கு செய்யப்பட்ட செலவு 4,000 கோடிகள்! சென்ற ஆட்சியிலும் இதே போல செலவுகள் செய்யப்பட்டன!
இவை எல்லாம் காண்டிராக்டர்களையும், ஒப்பந்த நிறுவனங்களையும், உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் பெரும் கோடீஸ்வர்களாக்கியதே தவிர, செய்யப்பட்ட செலவுகளுக்கான நோக்கங்களை நிறைவேற்றவில்லை. மனசாட்சியற்ற அரசியல் தலைமையும், அதிகார வர்க்கமும் கைகோர்க்கும் போது இன்னும் எவ்வளவு செலவழித்தாலும் நிரந்தரத் தீர்வு கிடைக்காது! மழை நீர் வடிகால் குழாய் பணிகள் முழுமையடையாமல் அரைகுறையாக பல இடங்களில் 75 சதமானதாகவும், 90 சதமானதாகவும் போடப்பட்டு அப்படியே நிற்கிறது. அடைக்கப்பட்ட கழிவுகளை எடுத்து அப்புறப்படுத்தாமல் அப்படியே அங்கேயே போட்டுவிட்டு போகும் அவலம் தொடர்ந்து கொண்டே உள்ளது.
நகரம் நாளும், பொழுதும் வரைமுறையின்றி விரிவடைந்தும், கடும் நெருக்கடிகளுக்கும் ஆளாகிறது! அரசு அமைப்புகள் எல்லா விதிமுறைகளை மீறல்களையும் அனுமதித்துக் கொண்டே உள்ளது. இதற்கு உடந்தையாகும் அதிகாரிகள் ஒருபோதும் தண்டிக்கப்படுவதே இல்லை.
மேலும் ‘கிரேட்டர் சென்னை’ என்று மேன்மேலும் விரிவாக்கம் செய்து சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகளையும் விழுங்கும் செயல்பாடுகள் கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இயற்கையை, நீர் நிலைகளை அழிக்கும் தொழில் மயமாக்கம் உடனே கைவிடப்பட வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த பெருமழையின் போது இதைவிடக் கூடுதல் உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் மக்கள் எதிர்கொள்ள நேரிடும்.
சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இயற்கை பேரிடர் வந்தால், குறிப்பாக மழை வெள்ளம் வந்தால், என்னென்ன செய்ய வேண்டும் எனத் தீவிரமாக களப்பணியாற்றி எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் 365 பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை தந்தார் கர்ம வீரர் திருப்புகழ்! நீர் மேலாண்மை நிபுணர்கள் ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதிநாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கொண்ட நிபுணர் குழு அரசிடம் அறிக்கை தந்தது! அதை வாங்கி அப்படியே வைத்துவிட்டார்களா..? தெரியவில்லை. அதை பொதுவெளியில் கூட வைக்கவில்லை.
முதலமைச்சர் அதை படித்தாரா? அதிகாரிகளிடம் விவாதித்தாரா? எந்தத் தகவலும் இல்லை. வெ. இறையன்பு அவர்கள் தலைமை செயலாளராக இருக்கும் வரை அதை செயல்படுத்திட கடுமையாக பாடுபட்டார். ஆனால், ஏனோ இன்று வரை முழுமைப்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே முழுமையான வெற்றி கைகூடும். முதல் அமைச்சர் வழிகாட்டுதலில், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் லட்சிய நோக்குடன் கைகோர்க்க வேண்டும். அது நடக்கவில்லை. அதை சாத்தியப்படுத்த உறுதி வாய்ந்த அரசியல் தலைமை தேவை! அது இன்றைக்கு இல்லை என்பது தான் வருத்தமாக உள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரியை ஒழுங்காக பாரமரித்து இருந்தாலே தென்சென்னை சிறப்பாக பாதுகாக்கப்படும். உண்மையைச் சொல்வதென்றால், 15,000 ஹெக்டேர் கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் 80 சதவிகிதம் பேராசை கொண்ட அரசியல் சக்திகளாலும், அதிகார வர்க்கம் மற்றும் கார்ப்பரேட்களாலும் ஈவு இரக்கமின்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!
சரியாகச் சொல்வதென்றால், நிரந்தரத் தீர்வுகள் ஏற்படாமல் இந்த அவலங்களை எப்போதும் பொன்முட்டையிடும் பொக்கிஷங்களாகப் பேணவே இவர்கள் விரும்புகிறார்களோ… என்றும் வேதனை ஏற்படுகிறது!
என்ற போதிலும் இந்த அதிகார அரசியல் குரூரங்களை எல்லாம் கடந்து, ஒவ்வொரு இயற்கை பேரிடரும் மனித நேயத்தை தரிசிக்கும் வாய்ப்பாகவும் அமைகிறது!