அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு!

சமஸ்

யோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் பங்கேற்பதில்லை என்று அறிவித்ததன் மூலம் தன்னுடைய வரலாற்றுக் கடமையைச் செய்துள்ளது காங்கிரஸ். நாடு முழுவதையும் மதம்சார் உளவியல் அலையில் தள்ளி, இந்நிகழ்வைத் தாம் கனவு காணும் ‘இந்துத்துவ சாம்ராஜ்யத்துக்கான கால்கோள் விழா’ போன்று முன்னகர்த்திவருகிறது பா.ஜ.க; அதன் செயல்திட்டத்துக்கு எதிரே உறுதிபட நிற்கத் துணிந்ததன் மூலம் காந்தி, நேருவை உள்ளடக்கி இந்த நாட்டின் அரசியலுக்கு மத நல்லிணக்கப் பாதையைச் செப்பனிட்டு தந்த தன்னுடைய முன்னோடிகளின் வரலாற்றுப் புகழைக் காத்திருக்கிறது காங்கிரஸ்.

நாட்டின் கணிசமான மக்களையும் அரசியல் களத்தையும் மதவாதப் பைத்தியம் பீடித்திருக்கும் நிலையில், இத்தகைய முடிவானது, தேர்தல் களத்தில் கட்சிக்குப் பாரதூர விளைவுகளை உண்டாக்கலாம் என்ற சூழலிலும் அதற்கு காங்கிரஸ் முகம் கொடுத்திருப்பது துணிச்சலானது. கட்சிக்குள் பல தரப்புக் குரல்கள் எழுந்தபோதிலும், உறுதியாக ஒரு முடிவை எடுத்த அளவில் காங்கிரஸ் தலைவர் கார்கேவும் அதன் இன்றைய வழிகாட்டி சோனியாவும் காலமெல்லாம் போற்றப்படுவர். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கை மிகவும் நாசூக்கானது என்றாலும், அதன் எதிரியைத் துல்லியமாகத் தாக்குகிறது. “நமது நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பா.ஜ.கவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கிவருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலைத் திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டும், ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்!”

மோடி ஆட்சியின் கீழ் டெல்லி வந்த பிறகான இந்தப் பத்தாண்டுகளில், அரசியலில் மதம் சார்ந்த விவகாரங்களைக் கையாளுவதில் காங்கிரஸ் மிகக் குழப்பமான முடிவுகளை எடுத்தது. கட்சியின் முதல் குடும்பமான சோனியாவும், ராகுலும் மதச்சார்பின்மை விவகாரத்தில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியோடு இருந்தார்கள் என்றாலும், கட்சியின் பல முன்னணித் தலைவர்கள் பல விஷயங்களிலும் பா.ஜ.கவைப் பின்பற்ற விரும்பினர். பல மாநிலங்களில் மென்போக்கு இந்துத்துவத்தை காங்கிரஸ் கையாண்டது. பல விவகாரங்களில் அது சறுக்கியது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான நிரலாக அயோத்தி ராமர் கோயில் திறப்பைத் திட்டமிட்டு, அதற்கேற்ப காய் நகர்த்திவரும் பா.ஜ.கவுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பதில் எதிர்க்கட்சிகள் இடையே ஒரு குழப்பம் நிலவிவந்தது அப்பட்டமாக வெளிப்பட்டது. நிகழ்வைப் புறக்கணிக்கும் முதல் அறிவிப்பை கம்யூனிஸ்ட்டுகள் வெளியிட்டனர். நாட்டின் பழம்பெரும் கட்சியின் முடிவு எல்லோராலும் எதிர்நோக்கப்பட்டது. தாமதமானாலும், சின்ன அளவிலான எதிர்வினைதான் என்றாலும்கூட வரவேற்கத்தக்க முடிவை காங்கிரஸ் இப்போது எடுத்துள்ளது.

அரசியலையும் மதத்தையும் பிரித்து அணுகும் பாதை நோக்கி அடுத்தடுத்து, ஏனைய எதிர்க்கட்சிகளும் உறுதியாகப் பயணப்பட காங்கிரஸின் முடிவு உத்வேகம் தரக் கூடும்.

அயோத்தி ராமர் கோயில்

இந்திய புராண மரபில் ‘ராமர்’ தொன்மம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடு. சகோதரர்கள் இடையேயான பிளவைத் தடுக்கவும், குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும், சமூகத்தின் அமைதிக்காகவும் ஆட்சியதிகாரத்தை மறுத்து வனம் செல்லும்  ராமரைத் தியாகத்துக்கான முன்னுதாரணமாக்கியே கதை கூறுவர். நேர் எதிராக இந்து – முஸ்லிம் சகோதரர்கள் இடையே பிளவை உண்டாக்கி, இந்தியக் குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைத்து, சமூக அமைதியின்மையின் மூலமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாறு சங்க பரிவாரத்தினுடையது. இவர்கள் ராமரை இழிவுக்குள்ளாக்கியவர்கள். 

அயோத்தி ராமர் கோயிலுக்கும் ஆன்மிகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முழுக்கவும் சங்க பரிவாரத்தின் அரசியல் பிரகடனச் சின்னம். ஆட்சியைத் தன் வசம் வைத்திருப்பதால், அரசதிகாரங்களை வளைத்து, தனக்கேற்றபடி கட்டுமானத்தை எழுப்பி அதற்கு ‘கோயில்’ என்று ஆர்எஸ்எஸ்ஸும் பா.ஜ.கவும் பெயரிடுவதாலேயே அது கோயில் ஆகிவிடாது. அறவுணர்வு கொண்ட இறை நம்பிக்கையாளர்களால் அது, பலருடைய உயிர்களைக் கலவரங்களின் வழி பலி வாங்கிய பாவத்தின் பீடமாகவும், இந்தியாவின் சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்டு வளர்க்கப்பட்ட வெறுப்பின் சின்னமாகவுமே என்றும் பார்க்கப்படும்.

அரசியலில் இன்று உருவாக்கப்பட்டிருக்கும் தற்காலிக மதவாத அலைகளுக்குள் இந்த வரலாற்று உண்மையைப் புதைத்துவிட முடியாது. இந்திய ஜனநாயகத்தின் அத்தனை தூண்களும் பாபர் மசூதியின் இடிப்புக்காகவும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் என்றைக்கும் அவமானத்தைச் சுமந்தே தீர வேண்டும்.

பிரதமர் மோடியும் பா.ஜ.கவும் சங்க பரிவாரங்களும் இன்னும் பெரும் சத்தத்தை உருவாக்கலாம்; பேரிரைச்சலின் மத்தியில் இன்னும் வலுவான மத அலைகள் எழலாம். எதுவாயினும் சரி, இந்நாட்டின் குடிமக்கள் நம்முடைய அரசமைப்பு சொல்லும் உயரிய விழுமியங்களை மேலும் இறுகப் பற்றிக்கொள்வோம், மதநல்லிணக்கத்தை மேலும் உரக்கப் பேசுவோம்; பிளவு அரசியலை உறுதிபட எதிர்க்க ஜனநாயக அரசியல் சக்திகளுக்கான தார்மிக பலத்தை அவர்களுக்குத் தருவோம்!

Tags: