இஸ்ரேலுக்கு ஆதரவாக ஊதப்படும் பொய்ச் செய்திகள்
“காஸா யுத்தம் குறித்து பல செய்திகள் மிகவும் வெட்ககரமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு அதன் ஊடக அமைப்புகளால் சரிபார்க்கப்படாமல் இங்கே வருகின்றன”.
இஸ்ரேல் ஹமாஸ் போரின் போது காஸாவிலிருந்து வந்த சில மேற்கத்திய ஊடகத்தின் செய்திகளை மறுத்து பேசுகையில் என்.ராம் இப்படி குறிப்பிட்டார். “தி இன்டர்செப்ட்” (The Intercept) என்ற ஊடகத்தின் பகுப்பாய்வின் உள்ளடக்கத்தை மேற்கோள் காட்டி அவர்,
“இத்தகைய செய்திகள் இஸ்ரேலுக்கு சாதகமாக இருந்தன. தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times), தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post), மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம் (Los Angeles Times) போன்ற மேற்கத்திய ஊடகங்களுக்காக பணியாற்றியவர்கள் இஸ்ரேல் நலன்களுக்கு அடிபணிந்து இத்தகைய செய்தியை வெளியிட்டனர்” என்றும் குறிப்பிட்டார்.
“காஸா மற்றும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் குறித்த ஊடகங்களின் சித்தரிப்புகள் எப்படி இருந்தன” என்ற தலைப்பில் சென்னையில் உள்ள ஆசிய இதழியல் நிறுவனம் (Asian College of Journalism – ACJ) ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய என். ராம், காஸாவில் செய்தி சேகரிக்கும் பணிக்கு சென்ற நூற்றுக்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானோர் அரேபியர்கள்தான், மேற்கத்திய நாட்டினர் அல்ல” என்றும் சுட்டிக்காட்டினார்.
மக்கள் மனநிலையைக் கட்டமைப்பது
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஊடகங்கள் சுதந்திரமானவை, கருத்துக்கள் பன்முகத்தன்மையும் பன்மை தன்மையும் உடையன என்று கூறப்பட்டாலும் பிரச்சார நோக்கத்தில் பணிபுரியும் ஊடகங்களும் அங்கே உள்ளன. நோம் சாம்ஸ்கி மற்றும் டேவிட் எஸ் ஹர்மன் (Noam Chomsky and Edward S. Herman) எழுதிய ‘இசைவு உற்பத்தி’ – அதாவது, அநியாயங்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ‘மக்களின் மனநிலையைக் கட்டமைப்பது’ (Manufacturing Consent) நூலை மேற்கோள்காட்டி என்.ராம் இப்படி குறிப்பிட்டார். ஊடகத்தைப் பற்றிய சிந்தனை நோம் சாம்ஸ்கி காலத்துக்கும் முந்தையது.
இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஊடகவியலாளர்களில் ஒருவரான வால்டர் லிப்மேன் ஊடகங்கள் குறித்த சிந்தனைகளின் முன்னோடி ஆவார். இவருடைய இரண்டு படைப்புகள்: “சுதந்திரமும் செய்தியும் (1920)” மற்றும் சார்லஸ் மெர்சுடன் அவர் இணைந்து எழுதிய “செய்தியை பரிசோதிப்பது” என்ற நூல்கள் ரஷ்யப் புரட்சியை ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு எப்படி திரித்து செய்தி வெளியிட்டது என்ற உண்மையை உலகிற்கு காட்டின. அச்செய்திகள் உண்மையுடன் எவ்வளவு முரண்பட்டு நின்றன என்பதை ஆதாரத்துடன் அந்த நூல் வெளியிட்டதை சுட்டிக்காட்டி னார்.
உண்மைச் சம்பவங்கள் குறித்த சித்தரிப்புகளை வெளியிடுவதில் பிரச்சார பீரங்கிகள் எப்படி உண்மையைத் திரிக்கின்றன என்பது இலக்கியங்கள் வழியாகவும் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் என்.ராம் விவரித்தார். ஆங்கில மொழி பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் அல்லது இந்திய மொழிகளின் செய்தி ஊடகங்கள் இந்த முரண்பாடுகளை எப்படி அணுகுகின்றன? குறிப்பாக காஸாவின் நிலவரங்கள் குறித்து மேற்கத்திய ஊடகங்களின் சித்தரிப்புகளை வரி மாற்றாமல் அப்படியே பிரதி எடுக்கின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.
‘நியூஸ் லாண்டரி’ என்ற இணைய இதழில் வெளிவந்த” ஒரு சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்து செய்தி வெளியிடும் இந்தியாவின் ஊடக கலாச்சாரம்” குறித்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்திய அவர், பிரண்ட்லைன் நவம்பர் 17 இதழில் காஸாவில் இனப்படுகொலை என்ற தலைப்பில் முகப்பு கட்டுரையை வெளியிட்ட ஆசிரியர் வைஷ்ணா ராயை பாராட்டினார்.
சமூக வலைதளங்களில் வைஷ்ணா ராய் இதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத் தக்கது. பலஸ்தீனர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்தது, மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிகிச்சை பெற்று வந்த பெண்கள், முதியவர்கள், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் என அனைவரையும் கொன்று குவித்தது ஒரு போர்க் குற்றம் என்றும் என்.ராம் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டினார். போர் குற்றங்கள் ஒரு முழுமையான, நடுநிலைமையான, சுயேச்சையான விசாரணையின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டிய தாகும்.
மேலும் இவை சிக்கல்கள் நிறைந்தவை. எனவே, சட்டப்பூர்வமாகவும் நிறுவப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார். பொதுமக்கள், குடிமக்கள், உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட நிறுவனங்களை குறிவைப்பது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுவதாகும். இந்த செயல்கள் போர்க்குற்றம் என்றும் அவர் கூறினார்.
முடிவில்லா ஆக்கிரமிப்பு, நிரந்தர நெருக்கடி
இக்கருத்தரங்கில், முன்னாள் வெளியுறவு அதிகாரி ராகேஷ் சூட் பேசுகையில், ‘இஸ்ரேலின் கடந்த 25 ஆண்டுகால வலதுசாரி அரசுகள், ‘இரு நாடுகள்’ என்ற தீர்வை ஒதுக்கியே வைத்தன. அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் இதை வேடிக்கை பார்த்தன” எனக் குற்றம்சாட்டினார். பெருகிவரும் அகதிகளின் பிரச்சனையால் ஐரோப்பிய ஒன்றியம் பிளவுண்டு கிடக்கும் நேரத்தில், இந்த காஸா மீதான யுத்தம், இஸ்ரேல்- அமெரிக்கா இடையிலான உறவுக்கு ஏற்பட்டுள்ள ஒரு கடுமையான சோதனைக் களமாகும்.
அமெரிக்காவின் கவனத்தை இந்தப் போர் வெகுவாக சிதைக்கும். இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் மிகவும் கவலை கொள்ள வைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மூன்று நாடுகள் தீர்வு, ஒரே நாடு தேர்வு முதலானவற்றை நிராகரித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய நாடுகள் குறித்த ஆய்வு மையத்தின் தலைவர் பி.ஆர். குமாரசுவாமி இஸ்ரேல் – பலஸ்தீன மோதலுக்கு முற்றுப்புள்ளி, ‘இரு நாடுகள்’ என்ற தீர்வு மட்டுமே என கூறினார். தி பெனின்சுலா (The Peninsula Foundation) அறக்கட்டளையின் தலைவர் ஏர் மார்ஷல் மாதேஸ்வரன்,
“இன்றைய புவிசார் அரசியல் சூழலில், அரசியல் நலன்கள் இரக்க மற்ற பொருளாதார நலன்களால் நிர்வகிக்கப்படுகின்றன. சுரண்டலைத் தீவிரப்படுத்தும் பெரும் வல்லரசு நாடுகளின் மேலாதிக்க கொள்கைகளும் இதில் பின்னிப் பிணைந்துள்ளன. உலகின் ரவுடிகளாக இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் நலன்களைப் பாதுகாக்கும் புற காவல் நிலையமாக இஸ்ரேல் செயலாற்றிக் கொண்டுள்ளது” எனவும் குறிப்பிட்டார். காஸாவை விட்டு இஸ்ரேல் வெளியேறியதாக கருதப்பட்டாலும் 2005 ஆம் ஆண்டில் இருந்தே பலஸ்தீன மக்கள் முற்றுகையிடப்பட்டு வந்துள்ளனர்.
இஸ்ரேலின் கொடுங்கோன்மையில் இருந்து அவர்கள் இன்னும் விடுதலை பெறவில்லை என்று கருத்தரங்கத்தின் விவாதத்தை துவக்கிய ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழின் சர்வதேச விவகார ஆசிரியர் ஸ்டான்லி ஜானி குறிப்பிட்டார். ஆசிய இதழியல் கல்லூரியின் தலைவர் சசிகுமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.