பாரதிய ஜனதாக்கட்சியை வீழ்த்துவதே குடியரசு தின உறுதிமொழி

ந்திய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த நாள். இந்தியா குடியரசாக நிலைபெற்ற நாள். 29.08.1947 அன்று அரசியலமைப்பு சட்டத்துக்கான வரைவு குழு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டது. சுமார் 3 வருடங்களில், அரசியல் நிர்ணய சபையில் 166 நாட்கள் விவாதத்திற்கு பின்னர்  24.01.1950 அன்று 308 உறுப்பினர்களும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்த மகத்தான ஆவணத்தில் கையெழுத்திட்டனர். இரு நாட்கள் கழித்து 26 அன்று அரசியலமைப்பு சட்டம் அமுலுக்கு வந்ததன் மூலம் இந்தியா  குடியரசாக- அதாவது மக்களாட்சியாக நிலை பெற்றது.

அண்ணல் அம்பேத்கரின் எச்சரிக்கை!
அரசியல் நிர்ணய சபையின் இறுதி நாள் கூட்டத்தில்  25.11.1949 அன்று தனது உரையில் டாக்டர் அம்பேத்கர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்: “1950 ஜனவரி 26 அன்று நாம் முரண்பாடுகள் கொண்ட ஒரு வாழ்வில் நுழைய போகிறோம். அரசியலில் நாம் சமத்துவம் பெற்றிருப்போம்.

ஆனால் சமூக வாழ்விலும் பொருளாதார வாழ்விலும் அசமத்துவம் பெற்றிருப்போம்.” இந்திய சமூகத்தில் முரண்பாடுகள் உள்ளன எனத் தெளிவாக டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்.

இந்த முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை எனில் நாம் பல நாட்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பாக இருக்காது எனவும் அவர் எச்சரித்தார். எனவே அரசியலமைப்பு சட்டம் முழு அர்த்தத்துடன் அமுலாக்கப்பட சமூக மற்றும் பொருளாதார அசமத்துவங்கள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. 

மனுஸ்மிருதியை முன்னிறுத்தும் இந்துத்துவாவாதிகள்
இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டம் அளித்த அரசியல் சமத்துவத்தைக் கூட சிதைப்பதற்கு சங் பரிவாரமும் மோடி அரசாங்கமும் கடுமையாக முயன்று வருகின்றன. உண்மையில் அரசியலமைப்பு சட்டத்தை  ஒரு போதும் சங்பரிவாரம் அங்கீகரித்தது இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:

“பாரதத்தின் புதிய அரசியலமைப்பு சட்டத்தின் மோசமான அம்சம் என்னவெனில் பாரதியம் குறித்து அதில் எதுவுமே இல்லை என்பதுதான்”.

“வேதங்களுக்கு பிறகு மனுஸ்மிருதிதான் இந்து தேசத்துக்கு மிகவும் வணக்கத்துக்குரிய புனித ஆவணமாகும்” அரசியலமைப்பு சட்டம் குறித்து 30.11.1949 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ‘ஓர்கனைசர்’ பத்திரிகை கீழ் கண்டவாறு எழுதியது:

“ஆனால் நமது அரசியலமைப்பு சட்டத்தில் பழமையான பாரதத்தில் இருந்த தனித்துவமான அம்சம் குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை.

ஸ்பார்ட்டாவின் லைகுர்குஸ் மற்றும் பெர்சியாவின் சொலனுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே எழுதப்பட்டவை மனுவின் சட்டங்கள். மனுஸ்மிருதியில் எழுதப்பட்ட மனுவின் சட்டங்கள் இன்றளவும் உலகம் முழுதும் பாராட்டுதல்களையும் அடிபணிதலையும் விளைவிக்கிறது; ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் நமது அரசியலமைப்பு பண்டிதர்களுக்கு மனுஸ்மிருதி ஒரு பொருட்டாகவே இல்லை.”

மனுஸ்மிருதிக்கு நேர் எதிரானது
மனுஸ்மிருதி யாருக்கு உத்வேகம் அளித்தது? ஜெர்மானிய தத்துவவாதி நீட்சேக்கு! நீட்சே யாருக்கு உத்வேகம் அளித்தார்? ஹிட்லருக்கு. ஹிட்லர் மூலம் யார் உத்வேகம் பெற்றனர்? சங் பரிவாரத்தினர். தொ டக்கம் முதலே சங் பரிவாரத்தினர் நமது அரசியலமைப்பு சட்டத்தை அங்கீகரிக்கவில்லை. அவர்களின் உறுதியான நிலைப்பாடு இந்தியாவின் சட்டங்களுக்கு பொருத்தமான ஆவணம் மனுஸ்மிருதி மட்டும் தான் என்பதே! ஆனால் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் மனுஸ்மிருதிக்கு நேர் எதிரானது. மனுஸ்மிருதி பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகிறது. பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக வரையறுக்கிறது. ஆனால் நமது அரசியலமைப்பு சட்டம் மதம்/ சாதி/ இனம்/ பாலினம்/ மொழி எனும் எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் சமம் என கூறுகிறது. மனுவின் சட்டங்களை நிலைநிறுத்துவதற்கு தடையாக உள்ள அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க சங் பரிவாரத்தினர் முயல்கின்றனர். 

நான்கு தூண்கள்

நமது அரசியலமைப்பு சட்டத்தின் நான்கு தூண்கள் ஜனநாயகம்/ கூட்டாட்சி தத்துவம்/ மதச்சார்பின்மை/ பொருளாதார இறையாண்மை ஆகும்.  இந்த நான்கு தூண்களையுமே அடித்து நொறுக்கிட மோடி அரசு முயல்கிறது. ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வெளிப்படையாக சிதைக்க முயன்றால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் மறைமுகமான சிதைவு வேலைகளில் சங் பரிவாரம் ஈடுபடுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தை வெறும் எலும்புக்கூடாக மட்டும் வைத்துக் கொண்டு அதன் உயிரையும் இரத்தத்தையும் நரம்புகளையும் அகற்றிவிடுவது என்பது அவர்களின் திட்டம். அரசியலமைப்பு சட்டம் சிறந்த ஆவணம் என்றாலும் அது தானாக அமுலாவதில்லை. அதனை அமுலாக்க அரசு நிர்வாக அமைப்புகள் தேவை. அந்த அமைப்புகளை இந்துத்துவாவுக்கு ஆதரவாக மாற்றிவிட்டால் அரசியலமைப்பு சட்டம் தானாக முடங்கிவிடும்.  

அந்த நோக்கத்துடன்தான் நீதித்துறையை, தேர்தல் ஆணையத்தை, இன்னபிற அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களை தன்வயப்படுத்தி சீர்குலைக்க  சங்பரிவாரம் முயற்சிக்கிறது.  இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என கூறுகிறது நமது அரசியலமைப்பு சட்டம். வளமான மாநிலங்கள் இல்லாமல் வலிமையான இந்தியா இல்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக பலவீனமான மாநிலங்கள்தான் வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கும் என சங் பரிவாரத்தினர் மதிப்பிடுகின்றனர். எனவே மாநிலங்களின் அதிகாரங்களை பல வழிகளில் பறிக்கின்றனர். 

ஒரு இனத்துக்கான ஜனநாயகமா?

தேசப்பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்ட பொழுதும், இந்தியா தன்னை மதம்  சார்ந்த தேசமாக அறிவிக்கவில்லை. பிரிவினைக்கு  பின்பும் கோடானுகோடி முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவை தேர்ந்தெடுத்தனர்.

ஏனெனில் மதம் சார்ந்த பாகிஸ்தானைவிட மதம் சாராத இந்தியா சிறந்தது என அவர்கள் எண்ணினர். அந்த  வழியில் வந்த முஸ்லீம்களை துன்புறுத்தும் அனைத்து செயல்களையும் மோடி அரசின் உதவியுடன் சங் பரி வாரத்தினர் செய்கின்றனர். ராமர் கோவில் தொடக்க விழாவின் பொழுது பல மசூதிகளிலும் தேவாலயங்களிலும் காவி கொடிகள் ஏற்றப்பட்டன.

சமீப காலங்களில் முஸ்லீம்கள் மட்டுமல்லாது கிறித்துவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். 2023 இல் மட்டும் சுமார் 600 தாக்குதல்கள், அதாவது ஒரு நாளைக்கு இரண்டு தாக்குதல்கள் கிறித்துவர்களுக்கு எதிராக நடந்துள்ளன. சங் பரிவாரம் அமுலாக்க முயல்வது சிறுபான்மை மக்களுக்கு எதிராக “ஒரு இனத்துக்கான ஜனநாயகம்” (Ethnic Democracy) என வகைப்படுத்துகிறார் கிறிஸ்டோபர் ஜெபர்லெட் எனும் ஆய்வாளர். இதனை இஸ்ரேலில் நிலவும் சூழலுடன் ஒப்பிடுகிறார்.

ஆனால் யூத மத வெறியை அடிப்படையாகக் கொண்ட சியோனிசம் கூட யூதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இல்லை. இந்துத்துவா சித்தாந்தம்  இந்துக்களிடையே ஏற்றத்தாழ்வை முன்வைக்கும் வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே இந்து ராஷ்ட்ரம் இந்து இனத்துக்கான ஜனநாயகத்தை கூட முழுமையாக முன்வைப்பதாக கூற இயலாது. சங் பரிவாரம் முன்வைக்கும் இந்துத்துவா சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்துக்களிலேயே பிற்படுத்தப்பட்ட/ தலித்/ பழங்குடி இனமக்களுக்கும் எதிரானது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்வைக்கும் அனைத்து முக்கிய அம்சங்களையும் சிதைக்க சங் பரிவாரம் முயல்கிறது. அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை நனவாக்க அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்துக்காகவும் தேர்தல்களில் பா.ஜ.க.வை தோற்கடிக்க நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது இந்த குடியரசு தினத்தில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி ஆகும்.

Tags: