பாரதிய ஜனதாக்கட்சி அரசை பயங்கொள்ள வைத்துள்ள விவசாயிகள்!

-சாவித்திரி கண்ணன்

தோ பகை நாட்டு எதிரிகளை எதிர்கொள்வது போல விவசாயிகளின் போராட்டத்தை எதிர் கொண்டுள்ளது மத்திய பா.ஜ.க அரசு! இரும்புத் தடுப்புகள், துணை இராணுவப் படைகள்! மூன்று மாநில காவல்துறையினர்..எதுவும் பலிக்கவில்லையே! எல்லாவற்றையும் முறியடித்து, வீரா ஆவேசமாக விவசாயிகள் களத்தில் நிற்கின்றனர்;

நேற்று (13.02.2024) காலை பஞ்சாபிலிருந்தும், உபியில் இருந்தும், ஹரியானாவில் இருந்தும்  விவசாயிகள் தங்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ பேரணியை தொடங்கினர்.

விவசாய சங்கங்களின் கொடிகளை ஏந்தியபடி டிராக்டர் மற்றும் தள்ளு வண்டிகளில், ஆறு மாதத்திற்கான உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், படுக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தும் மன உறுதியோடு விவசாயிகள் பேரணியைத் தொடங்கினர்.

முன்னதாக இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கும் முன்பு கடந்த சில மாதங்களாக விவசாய சங்கத்தின் முன்னணி தலைவர்கள் கேரளா, உத்தரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குச் சென்று அந்தந்த மாநில விவசாயிகளிடம் போராட்டம் பற்றி விரிவாக விளக்கிப் பேசி, ஒன்றுதிரட்டியது  குறிப்பிடத்தக்கது.

ஹரியானா அரசாங்கம் 15 மாவட்டங்களில் 144  தடை உத்தரவு பிறப்பித்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றாக கூடுவதைத் தடைசெய்துள்ளது ! மேலும், ‘டிராக்டரோ, தள்ளுவண்டியோ எதையும் நடமாட அனுமதிக்க மாட்டோம்’ எனக் கூறியுள்ளது.

விவசாயிகள் ஒருவரை ஒருவர் தொடர்பெடுத்துப் பேசுவதை தடுக்கும் வண்ணம் டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் இணையம் மற்றும் குறுந்தகவல் சேவைகள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. எல்லைகளின் முக்கிய சாலை களில் வலுவான தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர்.

டெல்லியை நோக்கி வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்த டெல்லியை சுற்றியுள்ள அனைத்து எல்லைகளிலும் போலீஸ், துணை இராணுவப் படை கம்பெனி வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வகையில் 114 கம்பெனி துணை ராணுவப்படையினர் விவசாயிகளை தடுக்கும் பணியில் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கம்பெனியில் குறைந்தபட்சம் சுமார் 250 வீரர்கள் வரை இருப்பார்கள். இது தவிர ஹரியானா, டெல்லி, உ.பி போலீசாரும் பல்லாயிரக்கணக்கில் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆங்காங்கே கலவரத் தடுப்புக்காகப் பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனங்களை வேறு தயார் நிலையில் வைத்துள்ளனர்! விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டு பா.ஜ.க அரசு இப்படி பயப்படுவானேன்?

போராட வரும் விவசாயிகளை போர்க்கள எதிரி போல பாவித்து செய்யப்பட்டுள்ள தடுப்பு அட்டூழியங்கள்!

விவசாயிகளின் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் என்னென்ன தீய செயல்பாடுகள் நடந்துள்ளன பாருங்கள்:

சாலையின் ஓரங்களில் பெரிய, பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன! இந்தக் குழியில் வாகனங்கள் விழுந்தால் மீள்வது சிரமமாம்!

சாலையில் பெரிய பெரிய ஆணிகளை அடித்து நிறுத்தி உள்ளனர். இவை விவசாயிகள் வரும் வாகன டயர்களை கிழித்து நார் நாராக்கிவிடவாம்!

சாலைகளின் நடுவில் வாகனங்கள் மேற்கொண்டு முன்னேறாதபடிக்கு சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட கொன்கிரீட் தடுப்புகளாம்! மற்றும் வலுவான இரும்பு முள் தடுப்புக் கம்பிகளாம்!

கிரேன்கள் உட்பட தடுப்புகளை பயன்படுத்தி டெல்லி எல்லையில் தடுப்புகள் அமைத்து கடுமையான நடவடிக்கைகளை  மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்டு உள்ளது.

இப்படியாக பாதைகளை மூடியும், தடுத்தும் காவல்துறை செய்த நடவடிக்கைகளால் டெல்லியில் மிகக் கடுமையான போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால், ”விவசாயிகள் போராட்டமே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்” என்ற செய்தியை ஊடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறது ஒன்றிய அரசு.

இத்தனையையும் மீறி வருவோர்களை சமாளிக்க கண்ணீர் புகை குண்டுகளை வேறு வீசியுள்ளனர்! இத்தனை சோதனைகளையும் கடந்து சுமார் 10,000 விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானா எல்லையான சாம்பூவில் கூடியுள்ளனர்! வான் அதிரும் கோஷங்களை எழுப்பிக் கொண்டுள்ளனர். இதே போல சங்கூரில் இருந்து வரும் கன்னூரி எல்லையிலும், டப்வாலி எனப்படும் சிர்சா எல்லையிலும் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் குவிந்துள்ளனர். ஓரிடத்தில் மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் விவசாயிகளோடு தன்னை இணைத்துக் கொண்டார்.

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைகளை கொன்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணிகள் மற்றும் முட்கம்பிகளைப் பயன்படுத்தி பேரணியை தடுத்துள்ளார்கள் ஹரியானாவின் போலீஸ் அதிகாரிகள்! அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருக்ஷேத்ரா மற்றும் சிர்சாவில் பல இடங்களில் இந்த அட்டூழியங்கள் செய்யப்பட்டுள்ளன!

இதனையெல்லாம் முன்கூட்டியே யூகித்துவிட்ட சில நூறு விவசாயிகள் முன் கூட்டியே நான்கு நாட்கள் முன்னதாக புறப்பட்டு சிறு குழுக்களாக டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். டெல்லிக்குள் வந்து நகரில் இருக்கும் குருத்வாராக்கள், தர்மசாலாக்கள், ஆசிரமங்கள், விருந்தினர் மாளிகைகளில் தங்கி கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. போராட்டக் களத்தில் டிராக்டர்களை விவசாயிகள் தங்குமிடங்கள் போல மாற்றிக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளனராம்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில் பல இடங்களில் கலவர தடுப்பு வாகனங்கள், தண்ணீர் பீரங்கி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு இருந்தன. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன! ஆயினும் விவசாயிகள் அசரவில்லை. சில இடங்களில் பெரும் திரளான விவசாயிகள் ஒன்று சேர்ந்து கான்கிரீட் தடுப்புகளை உடைத்து வீசி எறிந்தனர்! விவசாயிகளின் வீராவேசம் கண்டு காவல்துறையினர் விதிர்விதித்து நின்றுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என பா.ஜ.க வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், பத்தாண்டு ஆட்சியில் அதைக் கூட நிறைவேற்றாமல் வஞ்சித்துவிட்டது.

இந்நிலையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற,

  • குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்.
  • நலிந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் முதிய வயதில் வாழ்வாதாரத்திற்கான ஓய்வூதியம் தர வேண்டும்.
  • விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • சென்ற முறை நடந்த டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் மீது போட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
  • லக்கிம்பூர் கெரியில் கொடூரமான முறையில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிக் கொலை செய்தவர் மீது நடவடிக்கை வேண்டும். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்ததைத் தொடர்ந்தே இத்தகையை ஒரு சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2020 ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சுமார் ஓராண்டு காலம் விவசாயிகள் வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தியதும், அதில் சுமார் 700 விவசாயிகள் உயிர் இழந்ததும் நாம் அறிந்த வரலாறு தான்! அதிலும் குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் காட்டிய தீரம் கொஞ்ச, நஞ்சமன்று!

ஓராண்டுக்குப் பிறகு பா.ஜ.க அரசு பேச்சு வார்த்தை நடத்தி விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்பதாக சொல்லியதன் பேரில் போராட்டத்தை திரும்ப பெற்றனர் விவசாயிகள். ஆனால், கொடுத்த உறுதி மொழிகளை பா.ஜ.க அரசு நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது. ஆகவே அதே போன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா, உ.பி, கேரளா, தமிழ்நாடு விவசாயிகள் கையில் எடுத்து களத்தில் இறங்கி விட்டனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா மற்றும் இடதுசாரி விவசாயச் சங்கங்கள் உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்து, களம் இறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: