விவசாயிகள் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டது ஏன்?
–விவேகானந்தன்
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் மீண்டும் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். உணவுப் பொருட்கள், துணிமணி, மருந்துகள் என 6 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் ட்ராக்டரை எடுத்துக் கொண்டு மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் போராட்டத்தை நிறைவு செய்த போது அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை நிறைவேற்றுங்கள் என்று விவசாயிகள் முழங்கி வருகிறார்கள்.
60க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம்!
டெல்லியின் சிங்கு எல்லை பகுதியில் 7 கி.மீ தூரத்திற்கு சாலையில் ஏராளமான கொன்கிரீட் தடுப்புகளைக் கொண்டும், முள்வேலி தடுப்புகளை அமைத்தும், இரும்புக் கம்பிகளைக் கொண்டும், தொடர் காவல்துறை சாவடிகளை அமைத்தும் விவசாயிகளை உள்ளே விடாமல் தடுத்து வருகின்றனர். ஹரியானாவின் காகர் ஆற்றின் மீதான பாலத்தையும் அரசு மூடியுள்ளது. சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுப் பாதைகளில் விவசாயிகள் உள்ளே வரக் கூடும் என்பதால் ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு பள்ளங்களை காவல்துறையினர் தோண்டி வருகிறார்கள்.
பஞ்சாப்-ஹரியானா இடையிலான ஷம்பு எல்லைப் பகுதியில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேற ஆரம்பித்துள்ளனர். காவல்துறையினர் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்ணீர் புகை குண்டு வீசும் ட்ரோன்களால் ஆபத்து!
இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு ஹரியானா காவல்துறையினர் ட்ரோன்களைப் (Drone) பயன்படுத்தி கண்ணீர் புகை குண்டுகளை விவசாயிகள் மீது வீசியுள்ளனர். இது சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுவரை கண்காணிப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ட்ரோன்களை முதல்முறையாக மக்கள் போராட்டத்தில் குண்டுகளை வீசுவதற்காக பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஹரியானாவில் விவசாயிகளின் பயிர்களை கண்காணிப்பதை எளிமையாக்குவதற்காகவும், உரங்களை தூவுவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ட்ரோன்கள் தற்போது விவசாயிகளையே குறிவைத்து களமிறக்கப்பட்டிருக்கின்றன. குண்டுகளை வீசக் கூடிய ட்ரோன்கள் என்பவை பார்டர் செக்யூரிட்டி (Border Security) விவகாரங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில், மக்கள் போராட்டத்தில் அவை பயன்படுத்தப்பட்டது சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக போராட்டங்களில் மக்களை கலைப்பதற்காக மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள் போன்ற நடைமுறைகள் பயன்படுத்தப்படும். ஆனால் ட்ரோன்களைப் பொருத்தவரை அவை ரிமோட் மூலம் குறிவைத்து அடிக்கக் கூடியவை என்பதால் ட்ரோன் பயன்பாடு என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக மாறியுள்ளது. விவசாயிகளில் குறிப்பிட்ட சில நபர்களைக் குறிவைத்துத் தாக்கும் அபாயம் இதில் இருக்கிறது என்பதுதான் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. விவசாயிகளில் பலர் கண்ணீர் புகைகுண்டுகளை எதிர்கொள்ளும் வகையில் பிரத்யேகமான மாஸ்க்களை அணிந்துகொண்டும், ஈரச் சாக்குகளை துணைக்கு வைத்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய சங்கங்களின் கோரிக்கை இதுதான்!
இப்போராட்டத்தினை அரசியல் சார்பற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பும், கிசான் மஸ்தூர் மோர்ச்சா என்ற அமைப்பும் இணைந்து நடத்தி வருகிறது. நாங்கள் புதிய கோரிக்கைகள் எதையும் கேட்டு இங்கு வரவில்லை. நாங்கள் கடந்த முறை டெல்லியில் போராடியபோது மத்திய அரசாங்கம் எங்களுக்கு என்ன வாக்குறுதியைக் கொடுத்ததோ அந்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லிதான் நாங்கள் போராட வந்திருக்கிறோம். அரசாங்கம் சொன்னதை செய்யவில்லை என்பதால்தான் நாங்கள் மீண்டும் டெல்லியை நோக்கி கிளம்பியுள்ளோம் என்கிறார்கள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்.
விவசாய விளைபொருட்களுக்கான MSP எனும் குறைந்தபட்ச ஆதார விலையினை சட்டப்பூர்வமாக அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. இதனை செய்வதாக கடந்த முறை மத்திய அரசாங்கம் உறுதி அளித்ததாகவும் ஆனால் அதனை செய்ய மறுப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலை அளவினை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரதரத்னா கொடுத்துவிட்டு அவரது பரிந்துரையை நிறைவேற்ற மறுப்பது சரியா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள்.
விவசாயிகள் தங்களின் விலை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல், அதனை சாலைகளில் கொண்டுவந்து கொட்டி அழுவதை நாம் பல காலமாக செய்திகளில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் டெல்லியை நோக்கி திரண்டு கொண்டிருக்கும் விவசாயிகளின் உறுதியாக இருக்கிறது.
விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தினை உறுதி செய்வது, ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கக் கூடாது, கடந்த முறை போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, கடந்த முறை விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது, லக்கிம்பூர் பகுதியில் போராடிய 4 விவசாயிகளை மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் கார் மூலம் ஏற்றிக் கொன்றதாக குற்றம்சாட்டப்படும் வழக்கில் தண்டனை அளிப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளும் அரசாங்கத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தலைவர்கள் கண்டனம்!
அரசாங்கம் அமைத்த குழுவுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் MSP-யை உறுதி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும் இந்த நாட்டிற்கே உணவினை அளிக்கும் விவசாயிகள் மீது மோடி அரசு சர்வாதிகாரப் போக்கோடு நடந்து கொள்வதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகள் கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு தாக்கப்படும்போது, எப்படி நாடு முன்னேறும் என்று விவசாயிகள் மீதான தாக்குதலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
விவசாயிகளின் எழுச்சியை தடுக்க முடியுமா?
விவசாயிகள் யாரும் போராடக் கூடாது என்று காவல்துறையினர் கிராமங்களுக்குச் சென்று வாகனங்கள் மூலம் அறிவித்துக் கொண்டிருப்பதாகவும், மக்களின் வீடுகளில் எச்சரிக்கை போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். டிராக்டர்கள் மூலம் விவசாயிகள் கிளம்புவதால் பெட்ரோல் பங்க்-களில் விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என உரிமையாளர்களிடம் கூறப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் ட்ராக்டர்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றால் அதனை பறிமுதல் செய்வோம் என எச்சரிப்பதாகவும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இத்தனை தடைகளையும் உடைத்துக் கொண்டு விவசாயிகளின் போராட்டம் டெல்லியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இரவு பஞ்சாப் – ஹரியானா எல்லையில் முகாமிட்ட விவசாயிகள் தற்போது டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட அடக்குமுறைகள் வந்தாலும் விவசாயிகளின் எழுச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்க முடியாது என்பதை கடந்த முறை விவசாயிகளின் போராட்ட வெற்றி நிரூபித்துக் காட்டியது. அரசு இதனை நினைவில் கொள்வது முக்கியம்.