இன்று சிவப்பு புத்தக தினம்
-என்.குணசேகரன்
CPI(M) மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர் லெனின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு இந்த ஆண்டு சிவப்பு புத்தக தினமான இன்று (21.02.2024) ‘புரட்சியின் துருவ நட்சத்திரம் தோழர் லெனின்’ நூல் வாசிப்பு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
வாசிப்பு என்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணமாக தோழர் லெனினே வாழ்ந்து காட்டியுள்ளார். நூல் வாசிப்புக்கு லெனினே சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மேலோட்டமான வாசிப்பு அல்லது வாசிப்பு இல்லாத வாழ்க்கை என மனித வாழ்க்கை இயங்கி வரும் நிலையில் லெனின் வாழ்க்கையிலிருந்து அவரது வாசிப்பை அறிவது அவசியம்.
மார்க்சுடன் “ஆலோசனை”
லெனின் மனைவி குரூப்ஸ்கயா, லெனினது வாசிப்பினை உடனிருந்து கண்டவர். அவரே அதிக வாசிப்பு கொண்ட மார்க்சிய அறிஞர். மார்க்சின் எழுத்துக்களை லெனின் எவ்வாறு பயின்றார் என்பதை குரூப்ஸ்கயா விளக்கியுள்ளார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துக்களை திரும்பத் திரும்பப் படிப்பதும், அவற்றின் மீதான தனது குறிப்புகளை எழுதுவதும் லெனினது வழக்கமாக இருந்தது.
புரட்சிக்குப் பிறகு சோவியத் அரசு அமைந்த பிறகும் லெனின் வாசிப்பை கைவிடவில்லை.
தற்போது பலர் அதிகமான வேலைச்சுமை இருப்பதால் படிக்க இயலவில்லை என்று சமாதா னம் கூறுவதை கேட்டு வருகிறோம். ஆனால், மானுட வரலாற்றை புரட்டிப் போட்ட வர்க்கப்புரட்சியை முன்னெடுத்த போதும், வரலாறு கண்டிராத ஒரு பாட்டாளி வர்க்க அரசை நிறுவி நிர்வாகத்தை நடத்திய போதும் லெனின் வாசிப்பைக் கைவிடவில்லை.
சோவியத் அரசின் தலைவராக அவர் பணியாற்றிய போது, லெனினது அலுவலக அறைக்கு செல்பவர்கள், அவர் மார்க்ஸ் நூலை படித்துக் கொண்டிருக்கிற காட்சியை கண்டு பதிவு செய்துள்ளனர். இன்னமும் மார்க்ஸ் நூலை அவர் படிக்கவில்லையா என்ற கேள்வி சிலருக்கு எழக்கூடும். அவர் தனது 20 வயது எட்டும் போதே, மார்க்சிய அடிப்படையிலான நூல்களை உள்வாங்கி படைப்புக்களை உருவாக்கும் திறன் படைத்தவராக இருந்தார்.
பிறகு ஏன் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் நூல்களை மீண்டும் மீண்டும் லெனின் படித்தார்?
லெனினே ஒரு முறை அதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சமகாலத்தில் எழுகிற மிகவும் சவாலான பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டறிய மார்க்சுடன் “ஆலோசிக்க” (consult ) வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று லெனின் குறிப்பிட்டார்.
சமகால நிகழ்வுகள் எழுப்பும் சவால்களை பாட்டாளி வர்க்க இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக மார்க்ஸ்- ஏங்கல்சோடு “ஆலோசிக்க” லெனின் அவர்களது நூல்களை தொடர்ந்து வாசித்தார். அதனால்தான் குரூப்ஸ்கயா, “…லெனின், மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்தவராக மட்டும் இருக்கவில்லை; அவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் இருந்தார்” என்கிறார்.
இந்த வகையிலான வாசிப்பிற்கு இளம் தலைமுறையைப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் லெனின் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இளைஞர்களிடையே பேசுகிறபோது அவர் அளித்த பிரசித்தி பெற்ற அறிவுரைதான், “கற்றிடுக! கற்றிடுக! கற்றிடுக!”. இதனை மூன்று முறை கூறி, கம்யூனிசத்தை கசடற கற்க அவர் வலியுறுத்தினார்.
பயனற்ற வாசிப்பு அல்ல!
லெனினது வாசிப்பு பயனற்ற பொழுதுபோக்கு வாசிப்பு அல்ல; சமூக மாற்ற இலட்சியத்தை அடைவதற்கு தேவையான அனைத்தையும் அவர் கற்றறிந்தார். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, லெனின் தலைமையிலான சோவியத் அரசு தனது முன்னுரிமை கடமையாக நாடு முழுவதும் மின்மயமாக்குவதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வந்தது. குறுகிய காலத்தில் ரஷ்ய நகரங்கள், கிராமங்கள் முழுவதும் மின்சாரம் கொண்டு செல்லும் மாபெரும் குறிக்கோளோடு லெனின் செயல்பட்டு வந்தார்.
அப்போது அவரை சந்தித்த எழுத்தாளர் ஹெ.ஜி. வெல்ஸ் லெனினது திட்டங்களை குறிப்பிட்டு, “உலகத்திலேயே இன்று அதிகமாக கனவு காண்கிறவர் லெனின்” என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். அவரது திட்டங்கள் நடைமுறைக்கு வராது; வெறும் கனவாகவே முடியும் என்கிற தன்மையில் வெல்ஸ் அவ்வாறு கூறியிருந்தார்.
ஆனால் குறிப்பிட்ட காலத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் அரசு அதை நிறைவேற்றியது என்பது வரலாற்று உண்மை. இந்தப் பணி நிகழ்ந்து கொண்டிருக்கிறபோது மின்மயமாக்கல் குறித்த ஏராளமான நூல்களையும் லெனின் வாசித்தார். ஒருமுறை நிபுணர் ஒருவர் தனது ஒரு புத்தகத்தோடு அவரை சந்தித்தார். அந்த நிபுணரை அங்கேயே அமரச் செய்து, அவர் அளித்த புத்தகத்தை ஒரே மூச்சில் லெனின் வாசித்து முடித்தார்.
அதன் உள்ளடக்கத்தைப் பற்றி அவரோடு அதிக நேரம் விவாதித்தார். புரட்சிக்காகவும், கட்சி கட்டுதல், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு மார்க்சிய கல்வி போதித்தல், சோசலிசத்தை கட்டியமைத்தல் போன்ற பல தேவைகளுக்காக வாழ்நாள் முழுவதும் வாசிப்பை மேற்கொண்டு வந்தார். இதனால் அவருக்கு வெகுவேகமாக வாசிக்கும் பயிற்சி வசமாகி இருந்தது.
இயக்கவியல் வாசிப்பு
இதேபோன்று மற்றொரு எடுத்துக்காட்டையும் கூறலாம். முதலாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்யாவில் நிலைமைகள் மோசமாக இருந்த சூழலில் லெனின் மாபெரும் வாசிப்பு பணிகளை மேற்கொண்டார். இது ஏதோ அன்றாடப் பணிகள் இல்லாத காரணத்தினால் மேற்கொண்ட வாசிப்பு அல்ல; உலகச் சூழல், ரஷ்ய சூழல் அனைத்தையும் இயக்கவியல் வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்து சரியான வியூகங்களை வகுப்பதற்காக அவர் வாசிப்பில் ஈடுபட்டார்.
குறிப்பாக ஜெர்மானிய தத்துவஞானி ஹெகலின் தத்துவத்தை வாசித்தார். ஹெகலின் இயக்கவியல் வழிமுறை பற்றிய ஆய்வை மேற்கொண்டார். “தர்க்கவியலின் விஞ்ஞானம்” என்கிற ஹெகலின் நூலை அவர் வாசித்து ஏராளமான பக்கங்கள் குறிப்பு எடுத்தார். அவர் ஹெகலை வாசிப்பது முதன் முறையல்ல. முன்பே வாசித்து இருந்தாலும் கூட, இயக்கவியல் பயிற்சியில் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கும், சமகால நிலைமைகளின் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு பாட்டாளி வர்க்க வியூகங்களை உரு வாக்குவதற்கும் அவர் ஹெகலை வாசித்தார்.
எனவே அவருக்கு இது ஒரு மறுவாசிப்புதான். காரல் மார்க்ஸ் பயன்படுத்திய இலண்டன் மியூசியம் நூலகம், சுவிட்சர்லாந்து நூலகம் ஆகியவற்றில் இருந்த நூல்களை அந்த நூலகங்களுக்கு சென்று பல மணி நேரம் செலவிட்டு லெனின் வாசித்தார். அந்த சமயத்தில் அவரை யாரும் அங்கு அடையாளம் காணவில்லை. அது மட்டுமல்ல, அடுத்த சில மாதங்களில் அவர் உலகிலேயே ஒரு மிகப்பெரும் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்பதையும் அந்த நூலகத்தில் இருந்த யாரும் அறியவில்லை! அவர் எழுதிய ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி, அரசும் புரட்சியும், ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம் உள்ளிட்ட பல நூல்களை எழுதுவதற்கு பல்லாயிரக்கணக்கில் ஆதாரங்களை திரட்டினார்.
ஏராளமான நூல்கள், கட்டுரைகளை வாசித்தார். அவருடைய மிக முக்கியமான தத்துவ பங்களிப்பான “பொருள்முதல்வாதம்: அனுபவவாத விமர்சனம்” என்கிற நூலுக்கு அவர் 1000 இற்கும் மேற்பட்ட நூல்கள், கட்டுரைகள் என வாசிப்பை மேற்கொண்டு ஏராளமான ஆதாரங்களைத் திரட்டினார். தோழர் லெனினது எழுத்துக்கள் 45 தொகுதிகளாக, ஒவ்வொன்றும் 650 பக்கங்கள் கொண்டவையாக வெளிவந்துள்ளன. அவருடைய ஒவ்வொரு நூலுக்கும் இணைக்கப்பட்டுள்ள நூல் பட்டியலை படித்தால் பெரிய பிரமிப்பு ஏற்படுகிறது.
எந்த ஒரு நிர்ணயிப்பு, கருத்தாக்கம், முடிவுகளை எழுதுவதாக இருந்தாலும் அவர் தரவுகளை ஏராளமாகத் திரட்டுவார். அதன் பிறகு, தான் வந்தடைந்த கருத்தாக்கம் சரியானதா என்பதை மார்க்ஸ் – ஏங்கல்ஸ் நூல்களை மையமாக வைத்து, அதனை உரசிப் பார்ப்பார். பிறகுதான் அதற்கு எழுத்தால் வடிவம் கொடுப்பார். இந்த கடுமையான முயற்சிகள்தான் லெனினியம் என்கிற சித்தாந்தத்தை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருந்தது.
அதனால்தான், இன்றும் மார்க்சிய – லெனினியம் மனித விடுதலைக்கு ஒரே தீர்வாக அமைந்துள்ளது.
மார்க்சிய – லெனினியம் கற்போம்!
சிவப்புப் புத்தக தின வாசிப்பு இயக்கம் வெல்லட்டும்!