தமிழ்நாட்டு நிறுவனங்கள் பா.ஜ.கவில் கொட்டிய கோடிகள் – பகுதி 2

விவேகானந்தன்

த்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கும், சோதனைக்கும் உள்ளானதற்குப் பிறகு பாரதிய ஜனதாக்கட்சிக்கு நிதி அளித்துள்ள மற்றும் நிதி அளிப்பதை அதிகரித்துள்ள 15 நிறுவனங்களின் பட்டியலை இக்கட்டுரையின் முதல் பாகத்தில் பார்த்தோம்.

இப்பாகத்தில் ‘நியூஸ் லாண்ட்ரி’ (News Laundry) மற்றும் ‘தி நியூஸ் மினிட்’ (The News Minute) ஆய்வின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் பற்றிய விவரத்தினையும், இதர நிறுவனங்களைப் பற்றியும் பார்ப்போம்.

16). ஐலேப்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (ILABS Technologies Private Limited)

ஐலேப்ஸ் என்பது ஹைதராபாத்தை மையப்படுத்திய ஒரு முதலீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக  குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீனிவாச ராஜூ இருக்கிறார்.

2019 மே மாதத்தில் டிவி 9 சேனலின் சி.இ.ஓ வாக இருந்த ரவி பிரகாஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை மீறி சேனலின் இயக்குநர்கள் நடந்து கொள்வதாகவும், அதன் பங்குகள் மற்றும் சொத்துகளில் முறைகேடுகள் நடப்பதாக ஸ்ரீனிவாச ராஜூவை மையப்படுத்தி குற்றம் சாட்டினார்.

அதே மாதத்தில் ஐலேப்ஸ் நிறுவனம் பா.ஜ.கவிற்கு 5 கோடி இந்திய ரூபா நன்கொடை அளித்தது.

17). மைக்ரோ லேப்ஸ் (Micro Labs)

பெங்களூருவை மையப்படுத்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் திலீப் மற்றும் ஆனந்த் சுரானா சகோதரர்களால் நடத்தப்படுகிறது. இந்நிறுவனம் 2015-16 நிதி ஆண்டில் பா.ஜ.கவிற்கு 21 இலட்சம் இந்திய ரூபாய் நன்கொடை அளித்தது. 2017-18 இல் அது 43 மடங்கு அதிகரித்து 9 கோடி ரூபாயை மைக்ரோ லேப்ஸ் பா.ஜ.கவிற்கு அளித்தது. 2018-19 இல் 3 கோடியும், 2019-20 இல் 50 இலட்சமும் அளிக்கப்பட்டது.

2020 முதல் 2022 வரையிலான கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் 350 கோடி டோலோ 650 வகை மாத்திரைகளை விற்று 400 கோடி வருமானம் பார்த்தது மைக்ரோ லேப்ஸ் நிறுவனம்.

2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அந்த நிறுவனம் பா.ஜ.கவிற்கு எந்த நன்கொடையும் அளிக்கவில்லை. 2022 ஜூலை மாதத்தில் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தோடு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. 300 கோடி இந்திய ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் இந்நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு 1000 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான அன்பளிப்புகளை இலவசமாக வழங்கியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அதன்பிறகு பா.ஜ.கவிற்கு மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் 2 கோடி இந்திய ரூபாய் நிதியை நன்கொடையாக அளித்தது. செப்டம்பர் 2022 இல் மைக்ரோ லேப்ஸ் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் இந்திய மருந்துக் கூட்டமைப்பினால் நீக்கப்பட்டது.

18). சலர்புரியா சத்வா குழுமம் (Salarpuria Sattva)

இந்நிறுவனம் பெங்களூரை மையப்படுத்திய பிஜாய் அகர்வாலுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் மற்றும் கன்சல்டிங் நிறுவனமாகும். கடந்த ஆண்டுகளில் இக்குழுமத்தின் பல நிறுவனங்கள் பாஜகவிற்கு நன்கொடை அளித்து வந்துள்ளன.

2018-ம் ஆண்டு அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் இக்குழுமம் வந்தது. அதன்பிறகு 2020-21 நிதி ஆண்டில் 3 கோடி இந்திய ரூபாய் இக்குழுமத்தின் சார்பில் பா.ஜ.கவிற்கு அளிக்கப்பட்டது. மேலும் இக்குழுமத்தின் மற்றுமொரு துணை நிறுவனமான எஸ்.பி.பி.எல் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 60 இலட்சம் இந்திய ரூபாய் அளிக்கப்பட்டது.

2021-22 இல் இக்குழுமத்தின் மேலும் ஒரு துணை நிறுவனம் பா.ஜ.கவிற்கு 4 கோடி இந்திய ரூபாய் நன்கொடை வழங்கியது.

நவம்பர் 2022 இல் இக்குழுமம் மீண்டும் அமுலாக்கத்துறையின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு 49.99 கோடி இந்திய ரூபாய் வங்கி இருப்பு முடக்கப்பட்டது. அதே ஆண்டில் இக்குழுமத்தின் இரண்டு துணை நிறுவனங்கள் மூலமாக பா.ஜ.கவிற்கு 5.25 கோடி இந்திய ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

19). கே.பி.சி ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் (KPC Projects Ltd)

இது ஆந்திராவை மையப்படுத்திய அனில் குமார் என்பவரின் கட்டுமான நிறுவனமாகும். 2021 டிசம்பர் மாதத்தில் தெலுங்கானாவின் தற்போதைய முதலமைச்சரும், அப்போதைய காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி இந்த நிறுவனத்தால் கட்டப்பட்ட மாவீரர் நினைவகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக விசாரணை கோரினார்.

அதனையடுத்து இந்நிறுவனம் பா.ஜ.கவிற்கு 1 கோடி இந்திய ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு பா.ஜ.கவிற்கு அந்நிறுவனம் வழங்கிய நன்கொடை 5 இலட்சம் இந்திய ரூபாய் என்று குறைந்து போனது.  அதன்பிறகு டிசம்பர் 2023 இல் அந்நிறுவனத்தின் மீது ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

20). பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (Brigade Enterprises Ltd)

இது பெங்களூரை மையப்படுத்திய ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். 2016 ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்திற்குரிய வகையில் அதிக பரிவர்த்தைகள் இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டதாக 2017 நவம்பர் மாதம் இக்குழுமம் வருமான வரித்துறையின் சோதனைகளுக்கு உள்ளானது.

அதன்பிறகு பா.ஜ.கவிற்கு  2018 இல் 1.6 கோடி இந்திய ரூபாயும், 2019 இல் 2 கோடி இந்திய ரூபாயும் இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.

21). பி.ஜி.ஆர் மைனிங் (BGR Mining Infra)

ஹைதராபாத்தை மையப்படுத்திய இந்நிறுவனம் பி.ஜி.ரெட்டியால் துவங்கப்பட்டது. NTPC அதிகாரிகளுக்கு ஹவாலா வழியாக இலஞ்சங்கள் வழங்கியதாக இந்நிறுவனத்தின் இயக்குநர் ரோஹித் பத்தினா மற்றும் அவரது உதவியாளர் பிரபாத் குமார் ஆகியோர் மீது 2017 இல் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

ஜூலை 2019-ல் NTPC சி.பி.ஐ-யின் வழக்கினை காரணம் காட்டி சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட்டில் பி.ஜி.ஆர்-க்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை இரத்து செய்தது. இந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்ட 5 மாதத்தில் பி.ஜி.ஆர் குழுமம் பா.ஜ.கவிற்கு 5 கோடி இந்திய ரூபாய் நன்கொடை வழங்கியது.

2023 பெப்ரவரி மாதத்தில் 20,400 கோடி மதிப்புள்ள சுரங்க ஒப்பந்தத்தினை NTPC இந்நிறுவனத்திற்கு வழங்கியது.

22). விசாகா இண்டஸ்ட்ரீஸ் (Visaka Industries)

இந்நிறுவனம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் விவேக் வெங்கடசுவாமிக்கு சொந்தமான நிறுவனமாகும். அவர் ஓகஸ்ட் 2019 இல் பா.ஜ.கவில் இணைந்தார். நவம்பர் 1, 2023 அன்று பா.ஜ.கவிலிருந்து ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த சில நாட்களில் அவர் மீது அமுலாக்கத்துறையின் சோதனை நடத்தப்பட்டது. தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலையொட்டி ஹைதராபாத்திலிருந்து சென்னூருக்கு பணத்தை அவரது குழுவினர் அனுப்பி வைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவர் பா.ஜக.வில் இருந்தபோது, 2020-21 நிதி ஆண்டில் 3.005 கோடி இந்திய ரூபாயும், 2021-22 நிதி ஆண்டில் 3 கோடி இந்திய ரூபாயும் விசாகா இண்டஸ்ட்ரீஸ் சார்பாக பா.ஜ.கவிற்கு அளிக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு நாம் பார்க்க உள்ள நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை:

23). எஸ்.என்.ஜே டிஸ்டில்லரிஸ் (SNJ Distilleries)

தமிழ்நாட்டில் செயல்படும் மதுபான உற்பத்தி நிறுவனமான எஸ்.என்.ஜே டிஸ்டில்லரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.என்.ஜெயமுருகன் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நெருக்கமானவராக பார்க்கப்பட்டவர். அவருக்கு சொந்தமான இடங்களில் ஓகஸ்ட் 2019 அன்று வருமான வரித்துறையினரால் சோதனைகள் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு நான்கு மாதம் கழித்து அந்நிறுவனத்திலிருந்து பா.ஜ.கவிற்கு 1.05 கோடி இந்திய ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதி ஆண்டு 2021 மார்ச் மாதத்தில் 6 கோடி இந்திய ரூபாய் பா.ஜ.கவுக்கு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரல் 2021 இல் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது அந்நிறுவனம். அதற்கு அடுத்த நிதி ஆண்டான 2022-23 இல் எஸ்.என்.ஜே நிறுவனத்திலிருந்து 5 கோடி இந்திய ரூபாய் Prudent Electoral Trust மூலமாக பா.ஜ.கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

24). கிரிஸ்டி ஃபிரைட்கிராம் (Christy Friedgram)

நாமக்கல்லைச் சேர்ந்த உணவு பதப்படுத்தும் நிறுவனமான இந்நிறுவனம் தமிழ்நாடு முழுதும் மதிய உணவுத் திட்டத்திற்கான பொருட்களை விநியோகிக்கிறது. இந்த நிறுவனம் 2017-18 நிதி ஆண்டில் 1 கோடி இந்திய ரூபாயை பா.ஜ.கவிற்கு அளித்துள்ளது.

ஜூலை 2018 இல் இந்நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 1300 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும், 2400 கோடி இந்திய ரூபாய் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதே ஆண்டில் பா.ஜ.கவிற்கு 1.96 கோடி இந்திய ரூபாயை நன்கொடையாக இந்நிறுவனம் அளித்திருக்கிறது.

மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3.82 கோடி இந்திய ரூபாயை பா.ஜ.கவிற்கு இந்நிறுவனம் அளித்திருக்கிறது.

25). ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Future Gaming and Hotel Services Pvt Ltd)

லாட்டரி நிறுவனமான இந்நிறுவனம் கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது. மே 2019 இல் இந்நிறுவனத்துக்கு சொந்தமான 70 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் 2021 இல் இந்நிறுவனத்தின் சார்பில் Prudent Electoral Trust-க்கு 100 கோடி இந்திய ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது. Prudent Electoral Trust தனது பெரும்பங்கு 84% நன்கொடையை பா.ஜ.கவிற்கே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

2022-23 இல் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் 5 கோடி இந்திய ரூபாயை நேரடியாக பா.ஜ.கவிற்கு வழங்கியது.

26). KALS டிஸ்ட்டில்லரிஸ் (KALS Distilleries)

தமிழ்நாட்டின் முக்கிய மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமானது. டாஸ்மாக்கிற்கு விலை குறைவான மது வகைகளை அதிகம் சப்ளை செய்யக் கூடிய நிறுவனமாக இந்நிறுவனம் இருக்கிறது.

ஓகஸ்ட் 2019 இல் இந்நிறுவனம் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளானது. அதற்கு அடுத்த ஆண்டு 2020-21 இல் இந்நிறுவனம் பா.ஜ.கவிற்கு 5 கோடி ரூபாய் அளித்திருக்கிறது. 2021-22 இல் மேலும் 3 கோடி இந்திய ரூபாயை பா.ஜ.கவிற்கு வழங்கியது.

இந்நிறுவனத்தின் உரிமையோடு தொடர்புடைய ரங்கநாயகி ஏஜென்சி எனும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த நிறுவனம் 2021-22 இல் 2 கோடி இந்திய ரூபாயை பா.ஜ.கவிற்கு அளித்துள்ளது.

27). லலிதா ஜூவல்லரி (Lalithaa Jewellery)

சென்னையைச் சேர்ந்த கிரண் குமாருக்குச் சொந்தமானது லலிதா ஜூவல்லரி. இந்நிறுவனம் மார்ச் 2021 இல் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளாகியுள்ளது. நூற்றுக்கணக்கான கோடிகள் கணக்கில் காட்டாத பணம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அதன்பிறகு 2021-22 இல் லலிதா ஜூவல்லரி 1 கோடி இந்திய ரூபாயை பா.ஜ.கவிற்கு அளித்திருக்கிறது.

28). ராம்கோ குழுமம் (Ramco Group)

ராம்கோ குழுமம் தமிழ்நாட்டின் முக்கியமான சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமாகும். 2015 இல் இந்நிறுவனம் சி.பி.ஐயின் விசாரணை வளையத்திற்குள் வந்தது.

அதன்பிறகு 2020 டிசம்பரில் Competition Commission of India (CCI) ரெய்டு நடத்தியது. ராம்கோ உள்ளிட்ட பல சிமெண்ட் நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு சரிந்தன. அதன்பிறகு மூன்று மாதத்தில் மார்ச் 16, 2021 அன்று 2 கோடி இந்திய ரூபாயை பா.ஜ.கவிற்கு அளித்துள்ளது ராம்கோ குழுமம். மேலும் 2022-23 இல் 50 இலட்சம் இந்திய ரூபாயை பா.ஜ.கவிற்கு வழங்கியது.

29). சென்னை கிரீன்வுட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Chennai Green Woods Pvt Ltd)

இந்நிறுவனம் ராம்கி குழுமத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனமாகும். இதன் தலைவராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பியான அயோத்யா ராமி ரெட்டி இருக்கிறார். ஜூலை 6, 2021 அன்று ராம்கி குழுமத்துக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

2022-23 நிதி ஆண்டில் இந்நிறுவனம் பா.ஜ.கவிற்கு 1 கோடி இந்திய ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.

30). எம்.ஜி.எம் குழுமம் (MGM Group)

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் மனுவேல் ஞானமுத்து என்பவரால் தொடங்கப்பட்டது. பொழுதுபோக்கு, மதுபான உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என பல துறைகளில் இக்குழுமம் செயல்பட்டு வருகிறது.

இக்குழுமம் பல முறை புலனாய்வு நிறுவனங்களின் சோதனைக்கு உள்ளானது. அதன் தற்போதைய சேர்மேன் எம்.ஜி.எம்.மாறன் அவரது சொத்துகளை இந்தியாவிற்கு வெளியே நகர்த்துவதாகவும், சைப்ரஸ் தீவில் குடியுரிமை பெற்றுவிட்டதாகவும் 2016 இல் அமுலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்டார். டிசம்பர் 2021 இல் அமுலாக்கத்துறை எம்.ஜி.எம் மாறனின் 293.31 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது.

நவம்பர் 2023-ல் அமலாக்கத்துறை எம்.ஜி.எம் மாறன் மற்றும் எம்.ஜி.எம் ஆனந்துக்கு சொந்தமான 100% சதவீத பங்குகளை கட்டுப்பாட்டில் எடுத்தது.

ஏப்ரல் 2021 இல் எம்.ஜி.எம் குழுமம் 1 கோடி இந்திய ரூபாயை பா.ஜ.கவிற்கு நன்கொடையாக வழங்கியது. அடுத்த ஆண்டு அவர்களின் மதுபான நிறுவனத்தின் மூலம் 40 இலட்சம் இந்திய ரூபாய் பா.ஜ.கவிற்கு வழங்கப்பட்டது.

‘நியூஸ் லாண்ட்ரி’ மற்றும் ‘தி நியூஸ் மினிட்’ இணைந்து வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை நாடு முழுதும் பல அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

Tags: