தோழர் ஜோசப் ஸ்டாலின் நினைவு நீடூழி வாழ்க!

ஏ.எம்.கோதண்டராமன்

தோழர் ஸ்டாலின் ஒரு மாபெரும் மார்க்சிய-லெனினியவாதியாக விளங்கினார். மாபெரும் தலைவர் லெனினின் மகத்தான சீடராகவும், வாரிசாகவும் அவர் விளங்கினார். லெனின் தலைமையின் கீழ் வளர்க்கப்பட்ட அவர், லெனினுடைய இலட்சியக் கனவுகளை நிறைவேற்ற  தமது வாழ்நாள்  முழுவதையும்  அர்ப்பணித்துக் கொண்டார்.

புகழ் மிக்க, சரியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைக் (போல்ஷ்விக் கட்சியை) கட்டியமைப்பதிலும், மகத்தான ஒக்ரோபர் புரட்சியை நடத்துவதிலும் தோழர் லெனின் தலைமையில் அவர் தனது பங்கை ஆற்றினார். தோழர் லெனின் மறைவுக்குப் பிறகு தமது நாட்டில் சோசலிசப்  புரட்சியை  நிறைவேற்றுவதற்கும்,  சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கும்  ஸ்டாலின் தலைமை தாங்கினார். உலகெங்கும் உள்ள புரட்சிகர இயக்கங்களை ஆதரித்தார். முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ருசிய பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுக்கும் தலைவராக இருந்தார். தோழர் லெனின் மறைவிற்குப் பிறகு கட்சிக்கும், அரசுக்கும் தலைமை தாங்கி, அவற்றை ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல்களிலிருந்தும், உள்நாட்டு பிற்போக்காளர்களின் தாக்குதல்களிலிருந்தும் பாதுகாத்தார்.

மகத்தான மார்க்சிய-லெனினியவாதியான ஸ்டாலின் லெனினுடையபோதனைகளை   துணிச்சலுடனும்,  திடமாகவும் பாதுகாத்தார். லெனினுடைய போதனைகளுக்கு தனது அப்பழுக்கற்ற அர்ப்பணிப்பையும், விசுவாசத்தையும் காட்டினார். தனது எண்ணற்ற தத்துவ நூல்களின் மூலம் மார்க்சிய-லெனினிய  கருவூலத்திற்கு அழியாப் பங்கினை வழங்கியுள்ளார்.

தோழர் ஸ்டாலின் ஒரு மகத்தான பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதியுமாவார்.   ஒடுக்கப்பட்ட  நாட்டு மக்களின்  புரட்சிகரப் போராட்டங்களுக்கு அவர் ஆதரவு தந்து, ஊட்டமளித்தார். இந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கப் பேருதவிப் புரிந்தார். 1943 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அகிலம் கலைக்கப்படும் வரை அதற்கு அவர் தலைமை தாங்கினார். அது கலைக்கப்பட்டப் பிறகு கம்யூனிஸ்ட் தகவல் அகலத்தின் (Communist  Information  Bureau) பணிகளுக்கு வழிகாட்டினார். பட்டாளி வர்க்கத்தையும் மக்களையும் பாதுகாக்கும் ஒரு போராளி என்ற முறையில் ஹிட்லரின் பாசிசத்தை தோற்கடிப்பதற்குத் தலைமை தாங்கினார்.

அவர் சோவியத் மக்களின் மாபெரும் சுய தியாகத்தை வளர்த்ததாலும், சோவியத் மக்களுக்கும் உலகத்திலுள்ள  போராடும் அனைத்து மக்களுக்கும் இடையில் ஒரு நெருக்கமான கூட்டுறவை ஏற்படுத்தியதாலும், இத்தோடு அல்லாமல் பாசிச முகாமிற்கும் பிற ஏகாதிபத்திய முகாமிற்கும் இடையிலான முரண்பாட்டைச் சரியாகப் பயன்படுத்தி ஒரு சரியான பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கியதாலும் அவரால் இரண்டாவது உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்தை முறியடிக்க முடிந்தது. ஏகாதிபத்திய விருந்திற்கு நாற்காலிகள் நிரம்பிவிட்டபோது, விருந்திற்கு கடைசியாக வந்த விருந்தாளியாக ஹிட்லரின் பாசிசம் இருந்தது. எனவே அது அப்போருக்கு ஊற்றுக்கண்ணாகவும்,  அப்போரில் ஆக்கிரமிப்பாளனாகவும்   இருந்தது. இதை ஸ்டாலின் சரியாகப் பகுப்பாய்வு செய்து ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியை அமைத்து அதற்குத் தலைமை தாங்கினார்.

ஹிட்லரின் பாசிசத்தை எதிர்த்து பிற ஏகாதிபத்தியங்களுடன் சேருவது சரியா என வினாவெழுப்பிய வறட்டுத் தத்துவ நிலையை அவர் மேற்கொண்டிருந்தால், ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியை அமைத்து அதற்குத் தலைமை தாங்குவதற்கு அவர் தவறியிருந்தால் சோசலிஸ்ட் சோவியத் யூனியனுக்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்கும் என்ன கதி நேர்ந்திருக்கும்? சோவியத் யூனியன் சீரழிந்து இரட்டை அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டிருக்கும்; ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைப் புரட்சியும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும்.  எனவேதான் ஹிட்லரின் பாசிசத்தைத் தோற்கடித்தது, மனித குலம் முழுவதற்கும் அவர் ஆற்றிய அருமையான, அழியாத் தொண்டாய் அமைந்தது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தோழர் ஸ்டாலின் சோவியத் யூனியனைப் புதுப்பிக்கும் பணிக்கு தலைமை தாங்கினார். சோசலிச முகாமைச் சேர்ந்த புதிதாகத் தோன்றிய மக்கள் ஜனநாயகக் குடியரசுகளுக்கு தக்க நேரத்தில் உதவியளித்து வழிகாட்டினார். மற்ற நாடுகளின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு பேராதரவைத் தந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்டாலின் திரிபுவாதத்தையும், சந்தர்ப்பவாதத்தையும்   இடது சந்தர்ப்பவாதத்தையும்  எதிர்த்துப் போராடிய ஒரு மாபெரும் போராளியாவார். மார்க்சிய- லெனினியத்தின் தூய்மையையும், பாட்டாளிவர்க்க சர்வதேசிய கோட்பாடுகளையும்  பாதுகாப்பதற்காகப்  போராடினார். அவர் எப்போதும் கொள்கைகளுக்காகப்  போரிட்டார்.  எனவேதான் அவர் மார்க்சிய-லெனினியவாதிகளின் நினைவில் நீங்கா நிலை பெற்றார்.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியையும், சோவியத் நாட்டில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் பலவீனப்படுத்தி அழித்துவிட்டு முதலாளித்துவத்தை மீட்பதற்காக டிராட்ஸ்கி, புகாரின், காமினோவ், ராடெக் போன்றோர் செய்த குழிபறிப்பு வேலைகளையும், சதிகளையும் அவர் தகர்த்தெறிந்தார். ஸ்டாலின் கட்சியைக் கட்டியமைப்பதற்கான கோட்பாடுகளைப் பாதுகாத்தார். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டையும், பாட்டாளிவர்க்கத் தொகையின் அதிகரிப்பையும், கட்சியை போல்ஷ்விக்மயமாக்குவதையும் அவர் ஆதரித்தார். உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதற்கும், வளர்ப்பதற்கும் கவனமாக உதவிபுரிந்தார். நவீன திரிபு வாதத்தை எதிர்த்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவர் தலைமை தாங்கினார். அமெரிக்காவைச்  சேர்ந்த பிரௌடர் என்பவரின் திரிபுவாதத்தை நிராகரிப்பதற்கான தத்துவப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். பிறகு டிட்டோவின் திரிபுவாதம் தலைதூக்கியபோது அதை எதிர்த்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தலைமைத் தாங்கினார்.

மாபெரும் மார்க்சிய-லெனினியவாதியான ஸ்டாலின் ஏகாதிபத்தியவாதிகளாலும், உலக சந்தர்ப்பவாதிகளாலும் மிகவும்  வெறுக்கப்பட்டார்.   தோழர்  ஸ்டாலின்  மறைந்த பிறகு குருசேவ்,  பிரஷ்னேவ்  துரோக  கும்பல்  சதித்தனமாக கட்சியையும், அரசு அதிகாரத்தையும் கைப்பற்றியது. இத்துரோகக் கும்பல்  கட்சியையும், ஆட்சியையும்   கைப்பற்றிய  பிறகு, முதலாளித்துவத்தை மீட்பதற்காகவும், முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதற்காகவும்,  அவர்கள் எடுத்த முதல் நடவடிக்கை தோழர் ஸ்டாலினை  நிராகரித்து  புழுதிவாரி  தூற்றியதுதான். ஆகவே தான், திருத்தல்வாதக் கும்பலைப் பற்றி பேசும்போது, மார்க்சியத்தின் இரண்டு போர் வாள்களான லெனின், ஸ்டாலின் ஆகிய இருவரில் ஸ்டாலின் என்ற போர் வாளை கீழே வீசி எறிந்து விட்டார்கள். மற்றொரு வாளான லெனினை பூஜைப் பொருளாக்கி நடைமுறையில்   லெனினியத்திற்குத்  துரோகம் இழைத்தார்கள் என்று மாவோ கூறினார். இறுதியாக சோவியத் அரசை ஒரு சமூக ஏகாதிபத்தியமாகவும் மாற்றி அமைத்துவிட்டார்கள்.

தோழர் ஸ்டாலின் 1879 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள் ஜோர்ஜியாவைச் சேர்ந்த டிபிலிஸ் மாநிலத்தில் உள்ள கோரி என்னும் நகரில் பிறந்தார். 1898 ஆம் ஆண்டில் ருசிய சமுக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் டிபிலிஸ் நகர அமைப்பில் அங்கத்தினராய் சேர்ந்தார்.

விரைவில் பாட்டாளிவர்க்கப்  புரட்சிக்கானப்  போராட்டத்தில் தோழர் ஸ்டாலின் தலைவராக முன்னுக்கு வந்தார். கட்சியைக் கட்டும் பணியில் மிகத் தீவிரமாக செயல்பட்டார். ஜார் ஆட்சியின் மிகக் கொடிய அடக்கு முறைக்குக்கிடையில்  1901 ஆம் ஆண்டு டிபிலிஸ் நகரில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மே தினப் பேரணிக்குத் தலைமை தாங்கினார். ஜோர்ஜியாவிலிருந்து முதலாவது சட்ட விரோதமான கம்யூனிஸ்ட் செய்தித்தாளை நடத்தினார். 1905 இல் “கட்சியிலுள்ள வித்தியாசங்களைப் பற்றிய ஒரு சிறு விளக்கம்” (Briefly About the disagreement in the Party)) என்னும் தனது கட்டுரையின் மூலம், மென்ஷ்விக்  தத்துவத்தை  எதிர்த்து போராட்டத்தைத் துவக்கியதன் வாயிலாக, மார்க்சியத்தைப் பாதுகாத்துப் பரப்பும் பணியை மேற்கொண்டார். 1903 ஆம் ஆண்டிலிருந்து 1917 ஆம் ஆண்டு வரையிலான புரட்சிகர காலப் பகுதியில் தோழர் ஸ்டாலின் ஜார் ஆட்சியால் ஏழு முறை கைது செய்யப்பட்டார். ஆறு முறை நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்படுவதிலிருந்து ஐந்து முறை தப்பிச் சென்றார். சிறையிலிருந்தபோதும்,  நாடு கடத்தப்பட்ட நேரத்திலும் ஸ்டாலின் தனது புரட்சிகரப் பணிகளை நிறுத்தவில்லை. சிறையும், நாடு கடத்தலும் அப்புரட்சியாளரின் பணியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

1906, 1907 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற (R.S.D.L.P.) ருசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மாநாடுகளில் பங்கு கொண்டார். 1912 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிராகில் நடந்த (R.S.D.L.P.)  ருசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் மாநாட்டில் அவரால் பங்குகொள்ள இயலவில்லை. இருப்பினும் அவர் போல்ஷ்விக் மத்திய கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1917 ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின் ஏழாவது மாநாட்டில் கொள்கை நிர்ணயக் குழுவிற்கு (பொலிட் பீரோ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1917 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தோழர் லெனின் ஒளிந்து இருக்க நிர்பந்திக்கப்பட்டப்  பிறகு, தோழர் ஸ்டாலின் கட்சியின் மத்தியக் கமிட்டியின் பணிகளை வழி நடத்திச் சென்றார். கட்சியின் மையப் பத்திரிகையை (Central Organ of the Party) நடத்தும் பொறுப்பையும் ஏற்றார். 1917 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 24 ஆம் நாள் கட்சியின் மத்திய செய்தித்தாளில் எழுதிய தலையங்கத்தில் தற்காலிக முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கியெறியுமாறு ஒரு அறைகூவல் விடுத்தார். புரட்சி துவங்கியது. 25 ஆம் நாள் மாலை அரசு அதிகாரம் சோவியத்துகளின் கைவசம் வந்தது. கட்சியின் பல துறைகளில் பணியாற்றிய தோழர் ஸ்டாலின் 1922 ஆம் ஆண்டு ஏப்ரலில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷ்விக்) மத்திய கமிட்டியினுடைய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லெனினினுடைய  சீடரும், உண்மையாகப்  பின்பற்றியவரும், அவருடைய லட்சியப் பயணத்தை தொடர்ந்தவருமான ஸ்டாலின் 1924-ஆம் ஆண்டு, ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மறைந்த பிறகு ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவ்வாண்டிலேயே தோழர் ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள்  (Foundation of Leninism)  என்னும் ஒரு முக்கியமான தத்துவ நூலைப் படைத்து வெளியிட்டார். சோவியத் அதிகாரத்தை உருக்குலையச் செய்து முதலாளித்துவத்தை மீட்டு, சோவியத் மக்களை அடிமைப்படுத்தும் முயற்சியில் டிராட்ஸ்கியம் தொடுத்த தாக்குதலிலிருந்து மார்க்சிய லெனினியத்தின் தூய்மையைப் பாதுகாக்க தோழர் ஸ்டாலினின் அந்நூல் பேராயுதமாக விளங்கியது.

1926 ஆம் ஆண்டில் தோழர் ஸ்டாலின், லெனினியத்தின் பிரச்சினைகளைப் பற்றி (On the Problems of Leninism)   என்ற ஒரு தத்துவ நூலை வெளியிட்டார். அந்நூல் டிராட்ஸ்கியத்தையும் அதன் மிச்ச சொச்சங்களையும் தரைமட்ட மாக்குவதற்காகத் தொடர்ந்து நடத்திய தத்துவப் போருக்கு பேருதவியாய் அமைந்தது.

1938 ஆம் ஆண்டில், தோழர் ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக் கட்சி)யின் வரலாறு என்னும் நூலை வெளியிட்டார். இப்புத்தகம் சர்வ தேசியப் பாட்டாளி வர்க்கத்திற்கு கிடைக்கப் பெற்ற அரியதொரு போராட்டத்தின்  அனுபவத் தொகுப்பான களஞ்சியமாகக் கிடைக்கப் பெற்றது. இப்புத்தகத்தின் வெளியீடு போல்ஷ்விக் கட்சியின் தத்துவ வாழ்விலும், சர்வ தேசிய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும்  கூட ஒரு மைல் கல்லாக அமைந்தது. புதிய சூழ்நிலைமைகளில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமாக மார்க்சியம் வளர்ந்ததையும், மகத்தான அக்டோபர் புரட்சியின் வெற்றியால் மார்க்சியம் பரவி வளர்ந்ததையும், ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தத்தின் மார்க்சியத்தையும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்னும் புத்தகம் எடுத்துக் காட்டிற்று.

தோழர் ஸ்டாலின் ஆசிய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் மீது மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்தினார். அந்த நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு தலைமை தாங்குவதற்கு பாட்டாளி வர்க்க முன்னணியை உருவாக்குவதற்காகப் பெருமளவு பாடுபட்டார். தோழர் ஸ்டாலினால் வகுக்கப்பட்ட தேசிய இனக்கொள்கை தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கும், தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையை ஒழிப்பதற்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்ந்தது.

ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைப்பதற்காக போராடியும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை திடப்படுத்தியும், இதன் வாயிலாக சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு வலிமை மிக்க தளப்பிரதேசத்தை ஏற்படுத்தியதின் மூலமாகவும் உலகப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிக்கும், தேசிய விடுதலை இயக்கத்திற்கும் ஒரு அரிய பங்கினையாற்றினார். விவசாய கூட்டுப் பண்ணை முறை ஏற்படுத்தியது, நாட்டை மின் மயமாக்கியது, சோசலிச தொழில் நிர்மாணம் செய்தது ஆகிய அனைத்தும் அவர் தலைமையில் நடைபெற்றது.

மார்க்சியமும் மொழியியலும் (Marxism and Linguistics)  ருசியாவில் சோசலிசத்தின் பொருளாதாரப் பிரச்சனைகள் (Economic Problems of Socialism in the U.S.S.R) போன்ற தனது தத்துவ நூல்களின் மூலமாகவும், தேசிய இன பிரச்சினையைப் பற்றிய தனது எழுத்துக்களின் மூலமாகவும் மார்க்சிய-லெனினிய  கருவூலத்திற்கு ஸ்டாலின் தனது பங்கை வழங்கியுள்ளார்.

மார்க்சிய-லெனினியத்திற்கு  ஸ்டாலின் தனது பங்கை ஆற்றியிருப்பினும், அவருடைய உலகக் கண்ணோட்டத்தில்  இயங்கு மறுப்பியல் கூறுகள் (Metaphysics)   இருந்தனவென்றும், அதுவே அவர் சோசலிச சமுதாயத்தில் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் பிழைகளாக அமைந்தன என்றும் மாவோ கூறுகிறார். ஸ்டாலினின் உலகக் கண்ணோட்டத்தையும் சோசலிச சமுதாயத்தில் முரண்பாடுகளை அவர் கையாண்ட முறையைப் பற்றியும் மாவோ பின்வருமாறு விமர்சிக்கிறார்:

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்னும் நூலில் ஸ்டாலின் மார்க்சிய இயக்க இயலைப் பற்றி ஒரு விளக்கம் அளித்து இருக்கிறார். இவ்விளக்கத்தில் மார்க்சிய இயக்க இயல் நான்கு முதன்மையானக் கூறுகளைப் பெற்றிருப்பதாகக் கூறுகிறார். முதற்கூறைப் பற்றி அளித்திருக்கிற  விளக்கத்தில் பொருட்கள் பரஸ்பரமாக தொடர்பு கொண்டுள்ளன என்று கூறும் பொழுது, ஏதோ பொருட்கள் காரணமின்றி தொடர்பு கொண்டிருப்பதைப் போன்றும், ஒரு பொருளுக்குள் உள்ள இரண்டு முரண்பட்ட கூறுகளுக்கிடையில் பரஸ்பரத்தன்மை இல்லாதது போன்றும் ஸ்டாலின் நினைப்பதாக மாவோ விமர்சனம் செய்திருக்கிறார். அடுத்து நான்காவது கூறாக எல்லாப் பொருட்களுக்கும் உள்ளேயுள்ள அக முரண்பாடுகளைப் பற்றி ஸ்டாலின் விளக்குகிறார். இதைப் பற்றி விளக்கும் போது இரண்டு முரண்பட்ட கூறுகளின் ஒற்றுமையைப் பற்றி எடுத்துக் கூறாமல், எதிர்மறைகளுக்கிடையிலான   போராட்டத்தைப் பற்றி மட்டுமே ஸ்டாலின் விளக்கி கூறினார் என்று மாவோ விமர்சனம் செய்துள்ளார். இயக்கவியலின் அடிப்படையான விதியின்படி, அதாவது, முரண்பட்ட கூறுகளின் ஒற்றுமையைப் பற்றிய அடிப்படையான விதியின் படி, முரண்பட்ட கூறுகளுக்கிடையில் ஒரே சமயத்தில் போராட்டமும் இருக்கிறது; ஒற்றுமையும் இருக்கிறது. குறிப்பிட்ட சூழ்நிலையில் அவைகள் தாமாகவே ஒன்று மற்றொன்றாக மாறுகிறது என்றும் மாவோ எடுத்துக் காட்டியுள்ளார். எனவே ஸ்டாலினின் சிந்தனையில் இயங்கு மறுப்பியல் இருந்தது என்றும் அவர் அதையே பலர் பின்பற்றுமாறு போதித்தார் என்றும் மாவோ விமர்சித்திருக்கிறார்.

சோவியத்  யூனியனில்  தொகுக்கப்பட்ட  தத்துவ அகராதியில் “ஒத்த தன்மை” பற்றிய குறிப்பிலே ஸ்டாலினின் கண்ணோட்டம் பிரதிபலிக்கிறது. அதில் ஒத்த தன்மையைப் பற்றி பின்வருமாறு கூறப்படுகிறது.

“யுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் இடையிலும், முதலாளியத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலும், வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலும் இதைப் போன்ற பிற நிகழ்ச்சிப் போக்குகளிலும் ஒத்த தன்மை இருக்க முடியாது. ஏனெனில் அவை அடிப்படையிலேயே ஒன்று மற்றொன்றுக்கு எதிரானதாகவும், பரஸ்பரமாக விலகி இருப்பதாகவுமே இருக்கிறது.”

இப்படி கூறுவது அடிப்படையில் எதிர் எதிரான நிகழ்வுகளுக்கிடையில் மார்க்சிய கண்ணோட்டத்தில்  ஒத்த தன்மை இல்லை என்றும், மேலும், அவை பரஸ்பரமாக தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும், குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒன்று மற்றொன்றாக மாற இயலாதவை என்றும் பொருளாகும் என மாவோ எடுத்துக் காட்டி விட்டு, இது முற்றிலும் தவறானது என விமர்சனம் செய்திருக்கிறார்.

சோசலிச சமுதாய அமைப்பில் (Socialist System) உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்தி சக்திகளுக்கும் இடையிலும், கட்டுமானத்திற்கும் பொருளாதார அடிப்படைக்கும் இடையிலும் முரண்பாடு நிலவுகிறது என்பதை நீண்ட நாள் வரை ஸ்டாலின் மறுத்து வந்தார் என்று மாவோ கூறுகிறார். அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பு தான், ருசியாவில் (U.S.S.R) சோசலிசத்தின் பொருளாதார பிரச்சனைகள் என்னும் தமது நூலில், சோசலிச சமுதாயத்தில் உற்பத்தி உறவுகளுக்கும், உற்பத்தி சக்திகளுக்கும் இடையிலும், கட்டுமானத்திற்கும் பொருளாதார அடிப்படைக்கும் இடையிலும் முரண்பாடு நிலவுகிறது என்பதை மிகத் தயக்கத்துடன் குறிப்பிடுகிறார் என்றும், பிழையான கொள்கைகளும் பொருத்தமற்ற முறையில் (தகாத முறையில்) விட்டுக் கொடுப்பதும்  தொல்லைகளுக்கு கொண்டுபோகும் என்பதை ஏற்றுக் கொள்கிறார் என மாவோ எடுத்துக் காட்டியுள்ளார். அப்போதும் கூட அனைத்துக்கும் முக்கியமான ஒரு பிரச்சனையாக சோசலிச சமுதாயத்தில் உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்தி சக்திகளுக்கும் இடையிலான முரண்பாட்டையும், கட்டுமானத்திற்கும் பொருளாதார அடிப்படைக்கும் இடையிலான முரண்பாட்டையும் குறித்த பிரச்சினையை முன் வைக்கவில்லை. சோசலிச சமுதாயத்தை உந்தி முன்னுக்கு கொண்டு செல்கின்ற அடிப்படையான முரண்பாடுகள் அவை தான் என்பதையும் ஸ்டாலின் உணரவில்லை என்றும் மாவோ விமர்சனம் செய்திருக்கிறார்.

சோசலிச சமுதாயத்தில் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளையும், மக்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் எவ்வாறு கையாள்வது என்பதை சோவியத் அனுபவத்தையும், தோழர் ஸ்டாலினின் தத்துவ நிலைபாட்டையும் விமர்சன ரீதியாக அறிவதன் மூலமாகவே மாவோ இயக்க இயலை சீனாவின் குறிப்பான நிலைக்கு ஏற்ப பிரயோகப்படுத்தினார்; பொதுவாக மார்க்சிய இயக்க இயலை செழுமைப்படுத்த தனது பங்கையாற்றினார்.  சோசலிச சமுதாயத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தவும், முதலாளித்துவ மீட்பை முறியடிப்பதற்காகவும், சோசலிச சமுதாயத்தில் வர்க்க முரண்பாடுகளைத்  தீர்வு காண்பதற்கும் ஒரு போராட்ட வடிவமாக கலாச்சாரப் புரட்சி என்னும் போராட்டத்தை மாவோ வளர்த்தெடுத்தார்.

எல்லாவிதமான திரிபுவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் தோழர் ஸ்டாலினின் நினைவை வெறுத்தாலும்,  அவர் மரணமடைந்த தருணத்தில், அவர் தான் உலகப் பாட்டாளி வர்க்கத்தினருக்கும், மக்களுக்கும் நேசத்திற்கு உரிய தலைவராக இருந்தார். தோழர் ஸ்டாலின் மார்க்சிய-லெனினியத்தையும் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும் பாதுகாத்தார்; புரட்சியின் நலனுக்காகவே வாழ்ந்தார்.

தோழர் ஸ்டாலின், லெனினின் மகத்தான சீடர்; ஒரு மாபெரும் மார்க்சிய-லெனினியவாதி;  கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர். ஏகாதிபத்தியத்தையும், திரிபுவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் மற்றும் பாசிசத்தையும் எதிர்த்துப் போராடிய மாபெரும் போராளி.

எல்லா திரிபுவாதத்தையும்,  சந்தர்ப்பவாதத்தையும்  முறியடித்து மார்க்சிய-லெனினியத்தின்  தூய்மையைப் பாதுகாக்க ஸ்டாலின் போராடினார். இன்று மார்க்சிய-லெனினியத்தின் மீது திருத்தல்வாதமும், சந்தர்ப்பவாதமும் தொடுத்திருக்கும்   தாக்குதலை முறியடித்து, மார்க்சிய-லெனினியத்தை பாதுகாக்கவே ஸ்டாலின் நாம் என்றென்றும் கொண்டாடுகிறோம்.

சோவியத் யூனியனில் லெனினும், ஸ்டாலினும் பாட்டாளி வார்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினர். ஸ்டாலின் அப்பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப்  பாதுகாக்க  தம் வாழ்நாள்  முழுவதையும் அர்ப்பணித்தார். சோவியத் திரிபுவாத துரோகிகளான குருஷேவ், பிரஷ்னேவ் கும்பல் அதை சீர்குலைத்து, சமூக ஏகாதிபத்தியமாக மாற்றி அதை சோவியத் மக்களுக்கும், உலக மக்களுக்கும், நமது நாட்டிற்கும் எதிரியாக மாற்றியுள்ளனர். இந்தியப் புரட்சியை நிறைவேற்றி, இந்திய மண்ணிலிருந்து சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை விரட்டியடிப்பதன் மூலம் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி, சோவியத் நாட்டில் மீண்டும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதற்கு நமது பங்கையாற்ற ஸ்டாலின் நினைவு நாளில் சூளுரைப்போம்.

(இக்கட்டுரை 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாத ‘சமரன்’ இதழில் வெளியானது.)

Tags: