டொலரின் ஆதிக்கத்தை வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை! – பகுதி 3

பாஸ்கர் செல்வராஜ்

இந்திய தற்சார்புக்கு முன்வைக்கும் நான்கு சுழற்சிகள்

1. அடிப்படை சிலிக்கான் சுழற்சி
2. கலப்பு எரிபொருள் சுழற்சி
3. எரிபொருள் உணவுச் சுழற்சி
4. இணைத்தியக்கும் இணையச் சுழற்சி

அரச முதலாளித்துவத்தின் அடிப்படையிலான சிலிக்கான் சுழற்சி

துருப்பிடிக்காத இரும்பைப்போல சிலிக்கான் அடிப்படை உற்பத்தி மாற்றம் பெற்று வருகிறது. அதன் உற்பத்திக்கான நுட்பமும் அதனை அடைவதற்கான திறனுள்ளவர்களும் நமக்கு தேவை. அரசு இலாப நோக்கற்று அடிப்படை சிலிக்கான் சீவல்கள், மைக்ரோ சில்லுகள் (microchips) உற்பத்தி சங்கிலியை ஏற்படுத்தி திறன் உருவாக்கப் பயிற்சியை வழங்கி அதன் அடித்தளத்தில் சூரிய மின்னாற்றல் தகடுகள் (solar panels) , சில்லுகள் (chips) உற்பத்தி வளர்வதன் மூலம் இத்துறையில் தற்சார்பை எட்டுவது.

மரபுமரபுசாரா கலப்பு எரிபொருள் சுழற்சி Four cycles of self-reliance

எரிபொருளில் நிலவும் ஏகாதிபத்திய, பார்ப்பனிய ஏகபோகம் அதன் விலைகளைத் திரித்து நமது உழைப்பைச் சுரண்டி, சமூக மாற்றத்திற்குத் தடையாக நிற்கிறது. இதற்குத் தீர்வாக ஓரிடத்தில் நிலையாக நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு நடக்கும் மின்சார உற்பத்தியைப் பல இடங்களிலும் சூரிய மின்னாற்றல் பண்ணைகளை நிறுவி எரிபொருளுக்கும் வழங்கலுக்கும் ஆகும் செலவைக் குறைத்து, பயன்பாட்டு அளவையும் திறனையும் கூட்டுவது… இதனை சோடிய மின்கல உற்பத்தியைப் பெருக்கி சேமித்து இரவுநேர தேவைக்குப் பயன்படுத்துவது.

எண்ணெயில் நடக்கும் போக்குவரத்தை முதலில் எரிவாயுவில் இருந்து உருவாகும் ஐதரசனுக்கும் லித்திய மின்கலத்துக்கும் மாற்றுவது. பின்பு தாவர, விலங்கு விவசாய உற்பத்திப் பொருட்களின் வழியில் இயற்கை உரங்கள், மீத்தேன் உற்பத்தியைப் பெருக்கியும் கடல்நீரை மின்னாற்பகுத்தலின் வழி நீரியத்தின் (Hydrogen) உற்பத்தி திறனைக் கூட்டியும் எரிவாயு இறக்குமதியைக் குறைத்து, வண்டிகளை இயக்க சோடிய மின்கலங்களின் தரத்தைக் கூட்டியும் எரிபொருளில் தற்சார்பை எட்டுவது.

உற்பத்தி இயக்கத்துக்கான எரிபொருள்-தாவர-ஊன் உணவுச் சுழற்சி

தற்கால பிரச்சினைகளான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் முறையான வேலைவாய்ப்பின்மைக்குமான தீர்வு, விவசாய உற்பத்தி பெருக்கமும் தொழில்மயமாக்கமும் தான். Four cycles of self-reliance

இதற்கு நிலையற்ற பருவமழையை நம்பிய விவசாய உற்பத்தியை நவீன நுட்பங்கள் கொண்டு நிலைப்படுத்தி விலைவாசியைக் கட்டுப்படுத்தி ஆண்டு முழுவதும் சீரான வருமானம் கிடைக்கச் செய்வது.

அதற்கு இப்போதிருக்கும் பழமையான கால்வாய், வாய்க்கால், வரப்பு பாசனத்தை நவீன நீர்த்தேக்கம், குழாய், சொட்டுநீர் பாசனத்துக்கு மாற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது.

அதன்மூலம் நீருள்ள நன்செய் பகுதிகளில் சூரிய மின்னாற்றல் தகடுகளாலான குடில்கள் அமைத்து, அந்த ஆற்றலில் இறைச்சிக்கான ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, பதப்படுத்தி அவற்றின் கழிவுகளில் இருந்து மீத்தேன், இயற்கை உரங்கள் என உற்பத்தி செய்து  எரிபொருள் – மாமிச உணவுச் சுழற்சியை உருவாக்குவது.

நீர் குறைவான புன்செய் பகுதிகளில் விவசாய கூட்டுறவு சூரிய மின்னாற்றல் பண்ணைகள் அமைத்து, அதன் நிழலிலும் அதைச் சுத்தம் செய்வதற்கான நீரிலும் தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் என உற்பத்தி செய்து, அவற்றின் கழிவுகளில் இருந்து எரிவாயு, இயற்கை உரங்கள் என்பதான எரிபொருள் – தாவர உணவுச் சுழற்சியை உருவாக்குவது. இந்த இரு வகையான எரிபொருள் – உணவுச் சுழற்சிகளைச் செயல்படுத்துவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கி முறையான வேலைவாய்ப்பைப் பெருக்கி விவசாய வளர்ச்சியுடன் கூடிய தொழில்துறை வளர்ச்சியை எட்டுவது.

உற்பத்தி, மூலதனம், மனிதவளம் மற்றும் வணிகத்தை இணைத்தியக்கும் இணையச் சுழற்சி

மனிதர்களையும், பொருள்களையும் இணைத்து அதன்மூலம் உருவாகும் தரவுகள் புதிய உற்பத்திக் காரணி. இந்தத் தரவுகளை உருவாக்கும் இணையம் பொழுபோக்குக்கானது அல்ல; உற்பத்தி பெருக்கத்துக்கானது.

எல்லா உற்பத்தி காரணிகளுக்கும் மூலமான மனிதவள காரணியை புதிய விலைமதிப்புமிக்க சிலிக்கான் நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயமாக்கி வளர்ச்சியடைய வைத்து, இல்லாத மற்ற உற்பத்திக் காரணிகளை அடைவது நமது மூலவுத்தி (Strategy).

அந்த மனிதவள மேம்பாட்டுக்கு உணவு, கல்வி, மருத்துவ உற்பத்தி இவையெல்லாம் முக்கியம். மேலும் வணிக சேவைகளில் பதுக்கல் மற்றும் ஊகபேர சூதாடிகளை வெளியேற்றி, அரசின் இருப்பை நிலைநாட்டி, மனிதவளப் பெருக்கத்தை உறுதி செய்வதும் முக்கியமானதாகும்.

அதற்கு உணவு, எரிபொருள் உற்பத்தி மற்றும் வழங்கல், வானிலை கண்காணிப்புக்கான செயற்கைக்கோள், வானிலை வரைபட இணைய சேவைகளிலும் அரசு இயங்குவது தேவையானதாக இருக்கிறது. உணவு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கான இணைய, இணையதள வணிக சேவைகளிலும் அரசு ஈடுபட்டு சேவையை வழங்குவதும் முக்கியமானது. இதன் திறனையும் அளவையும் தரத்தையும் கூட்ட இத்துறைகளை இயந்திரமயமாக்குவது அவசியம்.

இதற்கான சில்லுகள், மின்னணு சாதனங்கள், தரவு சேமிப்பகத் தேவைகளை அரசு மற்றும் தனியார் சிலிக்கான் உற்பத்தி மையங்கள் அளிப்பது. தொடர்ந்து அவற்றின் தரத்தையும் திறனையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொள்வதன் மூலம் சமூகம் தரவுகளைப் பாதுகாத்து சிலிக்கான் உற்பத்தியில் தற்சார்பை எட்டுவது. இவையெல்லாம் முக்கியமானதாக இருக்கிறது.

நான்கு சுழற்சிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள்

சிலிக்கான் சீவல்கள் மற்றும் சில்லுகள் உற்பத்திக்கு புறக்கோடி ஊதாப் பதிவச்சு இயந்திரங்கள் (EUV), மீத்தூய்மையான ஐதரசன் புளூரைடு (99.999999% HF), சில்லுகள் வடிவமைப்பு, பரிசோதித்தல், அடுக்குதல் மற்றும் இயக்கத்துக்கான மென்பொருள்களை உள்ளடக்கிய உற்பத்தி சங்கிலி தேவை.

கலப்பு எரிபொருள் சுழற்சிக்கு சூரிய மின்தகடுகள், எண்ணெய், எரிவாயு இறக்குமதி முனையம், எரிவாயுவை நீரிய வாயுவாக மாற்றும் நுட்பம், நீரிய எரிபொருளில் இயங்கும் வண்டிகளுக்கான நுட்பம், லித்தியம் மற்றும் சோடிய மின்கலத் தொழில்நுட்பங்கள் வேண்டும்.

எரிபொருள்-ஊன் உணவு சுழற்சிக்கு சூரிய மின்தகடுகளான குடில்கள், அதிக பால், இறைச்சிக்கான ஆடு, மாட்டினங்கள், இயந்திரமயமாக்கப்பட்ட பராமரிப்பு, பதப்படுத்துதல், கழிவு சேகரிப்பு, இணையமயமாக்கப்பட்ட கண்காணிப்பு என ஒருங்கிணைந்த கட்டமைப்பு வேண்டும்.

எரிபொருள்-தாவர உணவு சுழற்சிக்கு சூரியமின் தகடுகளுடன் இணைக்கப்பட்ட சொட்டுநீர் பாசனக் கட்டமைப்பு, அதிக விளைச்சலுக்கான வீரிய விதைகள், இந்தக் கட்டமைப்புக்கு ஏற்ற நடவு, அறுவடை இயந்திரங்கள், பதப்படுத்தும் கட்டமைப்புகள் வேண்டும்.

இணைத்தியக்கும் இணைய சுழற்சிக்கு நிலையான பொருள்களை மெதுவான தடையற்ற செயற்கைக்கோள் இணையம் மூலம் இணைத்து, இத்தரவுகளைச் சேகரித்து, பகுத்தாய்ந்து வேகமாகச் செயல்பட தனித்துவமான  5G இணையமும் ஒருங்கிணைந்த இணையதள வணிக, கல்வி, மருத்துவ கட்டமைப்புகளும் வேண்டும்.

ரஷ்யாவுடான அரச முதலாளித்துவ வணிகம்

வானியல், சிலிக்கான் தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒன்றான ரஷ்யாவிடம், சில்லுகள் (chips) உற்பத்தியை அறிமுகப்படுத்தி பயிற்றுவிக்க அடிப்படையான மைக்ரோ சில்லுகள் (microchips) உற்பத்தித் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் வானிலை, வரைபட தொழில்நுட்பங்கள், எரிவாயு, கனிமவள மூலப்பொருட்கள் மற்றும் வலுவான அறிவியல் தொழில்நுட்ப அடித்தளம் இருக்கிறது.

பரந்து விரிந்த நிலப்பரப்பில் வாழும் குறைவான மனிதர்களால் செறிவான சந்தை இல்லாமை, போரினால் ஏற்பட்டு இருக்கும் மனிதவளப் பற்றாக்குறை, மேற்குலக நாடுகளின் மூலதன தொழில்நுட்பப் பொருட்களின் இறக்குமதித் தடை ஆகியவற்றால் அவர்களால் சில்லுகள், வண்டிகள், பொறியியலாக்கப் பொருள்களைப் போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாமல் பெருமளவில் இறக்குமதி செய்கிறார்கள்.

நம்மிடம் மாபெரும் சந்தையும் மனிதவளமும் இருக்கிறது. இந்தியாவுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்து கிடைத்த ரூபாயை என்ன செய்வதென்று தெரியாமல் ரஷ்யா அப்படியே வைத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனத்தைத் துவக்கி எரிபொருள் முனையம், வழங்கல் கட்டமைப்புகளை அவர்களுடன் இணைந்து ஏற்படுத்துவதன் மூலம் ஒன்றிய ஆதிக்கத்தை வீழ்த்தி விலைகளைத் தீர்மானிக்கும் ஆற்றலை நாம் பெறலாம். அதன்போக்கில் ரூபாயின் மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை நோக்கி நகரலாம்.

சில்லுகள், நீரிய உற்பத்தி கூட்டுக்கான அறிவியல் தொழில்நுட்ப வளாகங்களை நிறுவி, இவற்றின் உற்பத்திக்கான தொழில்நுட்ப தன்வயமாக்க நடவடிக்கைகளை வேகப்படுத்தி, உற்பத்தித் தொழிற்சாலைகளை நிறுவலாம். தமிழக அரச நிறுவனங்கள் வழியான நேரடி தங்க, கனிம இறக்குமதிகளை ஊக்கப்படுத்தி நமது மக்களின் மீதான தங்கச் சுரண்டலைத் தடுத்து தமிழகத்தை இப்பொருள்களுக்கான ஒரு வணிக மையமாக மாற்றலாம்.

சுருக்கமாக அவர்களிடம் மைக்ரோ சில்லுகள் தொழில்நுட்பமும் எரிபொருள் கனிம மூலப்பொருள்களும், ரூபாய் மூலதனமும் இருக்கிறது. நம்மிடம் சந்தையும் மனிதவளமும் இருக்கிறது. அவர்களுக்கும் நமக்கும் தேவையான சில்லுகள், பொறியியலாக்க பொருள்கள், மரபுசாரா எரிபொருளில் இயங்கும் போக்குவரத்துக்கான வண்டிகளை உற்பத்தி செய்து நாமும் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கும் ஏற்றுமதி செய்து இத்துறைகளில் தற்சார்பை எட்டுவது.

ஜப்பான், மேற்குடனான தனியார் சந்தை வணிகம்

மகிழுந்துகள், பொறியியல், இரசாயனப்பொருள்கள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெர்மனிய, ஜப்பான் நிறுவனங்கள் சீன நிறுவனங்களின் விலை குறைவான மிகத் தரமான மின்மகிழுந்துகள், சூரியமின் தகடுகளுடன் போட்டியிட முடியாமல் தோல்வியடைகின்றன.

காரணம் சீனர்கள் இவ்வுற்பத்தியை இயந்திரமயமாக்கி விலையைக் குறைத்து தரத்தைக் கூட்டியது. சீனாவுடன் இவர்கள் இணைவதைத் தடுத்துக்கொண்டே அமெரிக்காவின் ரெஸ்லா (Tesla) மின்கல ஒத்துழைப்பைப் பெற்று மேற்குலக சந்தையை ஆக்கிரமிக்க முனைந்ததும் இந்நாடுகளின் மாற்று நீரிய போக்குவரத்து நுட்பத்தைச் சந்தைப்படுத்த விடாமல் தடுத்ததும் இவர்கள் பின்தங்க முக்கியமான காரணமாகும்.

சில்லுகள், சூரியமின் தகடுகள், நீரிய போக்குவரத்து நுட்பங்கள் இவற்றின் உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் வேதிப்பொருள்கள் மட்டுமல்ல; இவ்வுற்பத்தியை எந்திரமயமாக்க எந்திரன்களையும் இவர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், இவற்றுக்கான நிலமும், சந்தையும் இல்லை.

முக்கியமாக உற்பத்திக்கான மலிவான ரஷ்ய எரிபொருளை அமெரிக்கர்கள் போரைப் பயன்படுத்தி தடுத்து இவர்களை அமெரிக்காவுக்கு நகர்த்த முற்படுகிறார்கள். ஆனால், அங்கு தொழிலாளர்கள் செலவு அதிகம். Four cycles of self-reliance

நம்முடைய மாபெரும் நிலம், மனிதவளம், சந்தையுடன் மலிவான ரஷ்ய எரிபொருளையும் மேற்குலக ஜப்பானிய நுட்பத்தையும் இணைக்கும்போது நமக்குத் தேவையான எல்லா நுட்பங்களும் மூலதன பொருள்களும் தடையின்றி கிடைக்கும். அது மூவருக்கும் பயன்தரும் வெற்றியாக இருக்கும்.

அதன்மூலம் தென்னகம் உலகின் முக்கிய உற்பத்தி மையமாக மாறி முழுமையான தொழில்மயமாக்கத்தை எட்டி, உலக ஏற்றுமதியில் முக்கிய இடத்தைப் பிடித்து, அதனால் பெருகும் மூலதன வலிமையில் நாம் இந்நுட்பங்களில் தற்சார்பை எட்டி நகரமயமாகி சமூக மாற்றத்தைச் சாதிக்கலாம்.

சீனாவுடனான அரச முதலாளித்துவ வணிகம்

உலகப் போர்களின் முடிவில் உலக உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு இருபத்தெட்டு விழுக்காடு. இந்த உற்பத்தி வலிமைதான் உலக நாடுகள் அதன் தலைமையை ஏற்க காரணம்.

இப்போது அது பதினொரு விழுக்காடாக வீழ்ந்திருப்பதும் போர்களால் அதன் பொருளாதாரம் நலிந்திருப்பதும் இப்போர்களில் இருந்து விலகி நின்ற சீனா, உலக உற்பத்தியில் முப்பது விழுக்காட்டைப் பிடித்திருப்பதும் இன்றைய உலகில் அமெரிக்க, சீனா நாடுகளின் இடத்தையும் எதிர்கால உலகில் இவர்களின் இடம் எத்தகையதாக இருக்கும் என்பதையும் நாம் ஊகிக்க புரிந்துகொள்ளப் போதுமானது.

உலகின் எந்த நாடும் சீனர்களின் உதவியின்றி உற்பத்தியைச் செய்ய முடியாத நிலையில் ஒன்றியம் மேற்குலகக் கைப்பாவையாகி சீனர்களுடன் மோதுவது எந்த அறிவார்ந்த அரசும் செய்யத் துணியாத செயல்.

சீனாவின் தற்போதைய வலுவான ஐம்பது கோடி நடுத்தர வர்க்கம் மென்மேலும் பெருகும். உற்பத்தி வலிமைமிக்க அவர்களின் இன்றைய மாபெரும் இறக்குமதி பன்றி வளர்ப்புக்கான சோயா. அவர்களின் இன்றைய விலைவாசி வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் இந்த இறைச்சியின் விலைகள் வீழ்ந்திருப்பது. இது அவர்களின் தேவையையும் நுகர்வு வலிமையையும் நாம் அறியப் போதுமானது.

மக்கட்தொகை வீழ்ச்சியடைந்து வரும் அதேநேரம் உற்பத்தி சங்கிலியின் உயர்தொழில்நுட்பப் பொருள் உற்பத்திக்கு மாறிக்கொண்டிருக்கும் அவர்கள் அதிக தொழிலாளர்களைக் கோரும் இறைச்சி உள்ளிட்ட உணவு உற்பத்தியில் ஈடுபட முடியாது. விலங்கின் ஒவ்வொரு பகுதியையும் சுவைத்து உண்ணும் ஊன் உணவுப் பிரியர்களான அவர்களிடம் ஆய்வக இறைச்சியை அரசு திணிக்கவும் முடியாது.

நமக்கு தேவையான வீரிய தாவர விதைகள், விலங்கினங்கள் மற்றும் சூரியமின் தகடுகளுடன் மின்னணு கண்காணிப்பு தொழில்நுட்பங்களை இணைக்கும் திறனும் துறைமுகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் திறனும் அவர்களிடம் இருக்கிறது.

விவசாய உற்பத்தியில் நமது அரசு நிறுவனங்கள் அவர்களின் அரசு சார்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி இந்நுட்பங்களைப் பெற்று இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருள் உற்பத்தி சங்கிலியைக் கட்டமைத்து நமது ஊட்டச்சத்து பிரச்சினையைத் தீர்த்து அவர்களுக்கு ஏற்றுமதி செய்யும் சந்தை வாய்ப்பைப் பெற்று இத்துறைகளில் நாம் தற்சார்பை எட்ட முடியும்.

இவை எல்லாம் நினைத்த மாத்திரத்தில் இன்றே செய்து முடிக்கும் எளிதான செயல்கள் அல்ல. நீண்டகால இடைவிடாத உழைப்பையும் ஆயிரமாயிரம் இடர்களையும் எதிர்கொள்ளக் கோருவது. இதெல்லாம் ஆகும் காரியமல்ல; அடுத்த ஐந்தாண்டு ஆட்சிக்கு அனல் பறக்க சில அறிவிப்புகளைச் செய்து ஆட்சியைப் பிடிக்கும் வழியைப் பார்ப்போம் என்று கிளம்பினால் அதற்கு அடுத்த ஆட்சி நிச்சயம் உங்களுடையதாக இருக்காது.

எனவே, நீடித்து நிலைத்து நிற்கும் நிலையான ஆட்சிக்கு இந்தப் பொருளாதார மாற்றங்கள் மக்களுக்குக் கொண்டுவரும் பலன்களை முன்வைத்த “முறையான வேலை தரமான வாழ்வு” போன்ற எளிய அரசியல் முழக்கங்களின் வழியாக மக்களை அணி திரட்டி கிழக்கையும் மேற்கையும் அரசியல் செயல்திறத்துடன் அணுகி தற்சார்பை எட்டி சமூக மாற்றத்தைச் சாதிப்பதே உண்மையான அரசியல் கட்சிக்கும், உறுதியான அரசியல் தலைமைக்கும், செயல்திறன்மிக்க நிர்வாகத்துக்குமான இலக்கணம் என்றறிக.

இந்த நான்கு சுழற்சிகள் ஏன் சரியானது? அதற்கு முன்வைக்கும் வாதங்கள் என்ன?

அடுத்த கட்டுரையில் காணலாம்…

உக்ரைன் – பலஸ்தீனப் போர்கள், நொருங்கும் அமெரிக்க ஆதிக்கம், இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 1

இந்தியாவின் தற்சார்பு சமூக மாற்ற விடுதலை – என்ன செய்ய வேண்டும்?- பகுதி 2

Tags: